ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

IG Metall union shuts down strike by hundreds of thousands in Germany

IG Metall தொழிற்சங்கம் ஜேர்மனியில் நூறாயிரக் கணக்கானோரின் வேலைநிறுத்தத்தை முறியடித்தது

By Christoph Vandreier
7 February 2018

இவ்வாரம் ஒரு புதிய மகா கூட்டணி (CDU/SPD) அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்ற நிலையில், அதற்கு முன்னதாக IG Metall தொழிற்சங்கம் செவ்வாயன்று, ஜேர்மனி எங்கிலுமான உலோகத்துறை, வாகனத்துறை மற்றும் மின்துறைகளைச் சேர்ந்த நூறாயிரக் கணக்கான தொழிலாளர்களின் வேலைநிறுத்த நடவடிக்கையை முடக்க நகர்ந்தது.


பேர்லினில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம்

ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக நடத்தப்பட்ட கூலிகள் மற்றும் சலுகை வெட்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் பெருநிறுவனங்கள் இலாபங்களைக் குவித்துக் கொண்டிருக்கையில், அத்தொழிற்சங்கம் உண்மையான வரையறைகளில் தொழிலாளர்களின் கூலிகளைக் குறைக்கும் மற்றும் இரண்டாண்டுகளுக்கு வேறெந்த வேலைநிறுத்தங்களுக்கும் தடைவிதிக்கும் ஓர் ஒப்பந்தத்திற்கு உடன்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் சம்பளங்கள் மற்றும் நிலைமைகளை மேம்படுத்தும் உத்தேசம் அத்தொழிற்சங்கத்திற்கு ஒருபோதும் இருந்ததில்லை என்பதை அந்த உடன்படிக்கை தெளிவுபடுத்துகிறது. அதற்கு பதிலாக அது, சம்பளங்கள் வீழ்ச்சி அடைந்து வருவதன் மீது தேங்கி நிற்கும் கோபம், ஒரு நாடு தழுவிய வேலைநிறுத்த இயக்கத்தை நோக்கி செல்வதிலிருந்தும், இவ்வாறான ஒரு இயக்கம் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிக்கு (SPD) இடையிலான மற்றொரு கூட்டணி அரசாங்கம் அமைவதை ஆபத்துக்குட்படுத்தலாம் என்றவொரு நிலையில், அத்தகைய இயக்கத்தை தடுக்க முயன்றது.

மற்றொரு சுற்று சம்பள-வெட்டுக்கள் திணிக்கப்படுவதற்கு நிலவும் பரந்த எதிர்ப்புக்கு இடையே, நடைமுறையளவில் உத்தரவாணை மூலம் திணிக்கப்படக் கூடிய இந்த புதிய ஒப்பந்தம் தொடர்பாக, இதுவரையில் நடைமுறையில் இருந்ததுபோல் அதன் மீது வாக்களிக்கவும் கூட தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட போவதில்லை.

சீமென்ஸ், ஜெனரல் எலெக்ட்ரிக், ஓப்பல் மற்றும் பம்பார்டியர் ஆலைகள் பாரியளவில் வேலைநீக்கங்களைத் திணிப்பதற்கு திட்டமிட்டிருப்பதற்கு இடையே, 27 மாத காலம் நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்த காலகட்டத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதில் இருந்து தடுக்கப்படுவார்கள்.

இராணுவ மீள்ஆயுதமயப்படுத்தலுக்கும், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை இன்னும் கூடுதலாக செல்வம் கொழிக்க செய்யவதற்குமான அதன் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்காக, மகா கூட்டணி தயாரிப்பு செய்து வருகின்ற புதிய சுற்று சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கு முன்னால், இத்தொழிற்சங்கம் தொழிலாளர்களின் கைகளை கட்டிப் போட முயல்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கான அந்த ஒப்பந்தம் வெறும் 4.3 சதவீத கூலி உயர்வு வழங்குகிறது, இதன் அர்த்தம், தொழிலாளர்களின் கூலிகள் பணவீக்க விகிதத்திற்கு ஏற்றமாதிரி மட்டுமே இருக்கும். பணவீக்கமோ வரவிருக்கும் நாட்களில் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. நடைமுறையளவில் சம்பள வெட்டு என்பதே இதன் அர்த்தமாக இருக்கும். இந்த கூலி குறைப்பை ஈடுகட்ட, இத்தொழிற்சங்கம் அற்ப பண கொடுப்பனவிற்கு உடன்படுகிறது, இதையுமே "கடுமையான பொருளாதார நிலை" என்று கூறி பெருநிறுவனங்கள் கைவிரித்து விடமுடியும்.

இறுதி உடன்படிக்கையோ, கடந்த மாதம் முதலாளிமார்கள் முன்வைத்ததை  காட்டிலும் மிகவும் மோசமாக உள்ளது. அத்தொழிற்சங்கம் உத்தியோகபூர்வமாக கோரிய ஆண்டுக்கு 6 சதவீத சம்பள உயர்வுடன் ஒப்பிடுகையில், அந்நேரத்தில், முதலாளிமார்கள் 27 மாத காலத்திற்கு 6.8 சதவீதம் அல்லது ஆண்டுக்கு 3 சதவீதம் வழங்க முன்வந்தார்கள்.

ஒரு பகுதி கூலி நஷ்டஈட்டுடன் ஒரு தொழிலாளி தானாக முன்வந்து வேலை நேரங்களைக் குறைத்துக் கொள்வதற்கான அதன் நிஜமான கோரிக்கையைக் கூட IG Metall எதிர்மாறான விதத்தில் மாற்றிக் கொண்டுள்ளது. தொழிலாளர்கள் இரண்டாண்டுகளுக்கு தங்களின் வாராந்தர வேலை நேரத்தை 28 மணி நேரங்களாக குறைத்துக் கொண்டாலும் கூட, அவர்களுக்கு எந்த நஷ்டஈடும் கிடைக்காது.

இதற்கும் கூடுதலாக, "தொழில் திறமை வாய்ந்த தொழிலாளர்களின் பற்றாக்குறை" இருப்பதாகக் கூறி, நிறுவனங்கள் அவற்றின் தொழிலாளர்களை  வழமையான வாராந்தர 35 மணி நேரங்களுக்கும் கூடுதலாக வேலை செய்ய வைக்க முடியும்.

ஆண்டாண்டுகளாக கூலி-வெட்டுக்களும் மற்றும் வேலையிட பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்கனவே ஜேர்மன் பெருநிறுவனங்களது இலாபங்களைப் பெருக்கி உள்ளதுடன், ஐரோப்பாவிலேயே மிகவும் சமநிலையற்ற மிகப்பெரிய நாடாக ஜேர்மனியை ஆக்கியுள்ளன.

வரவிருக்கும் மகா கூட்டணி அரசாங்கம் தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் நலன்கள் மீதான தாக்குதலை மட்டும் தொடராது, மாறாக ஐரோப்பா எங்கிலும் கூலி-வெட்டுக்களுக்கு ஒரு முன்மாதிரியை அமைக்கும்.

அதேநேரத்தில், புதிய அரசாங்கம் ஒரு பாரிய மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்தின் மூலமாக ஐரோப்பிய ஒன்றியத்தை உலகெங்கிலும் போர்களைத் தொடுக்க தகைமை கொண்ட ஓர் "உலக சக்தியாக" மாற்றும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு பொருளாதார கூட்டணி என்பதிலிருந்து ஓர் இராணுவ கூட்டணி என்பதாக மாற்ற முனைகிறது.

தொழிலாளர்கள் மீது இந்த விட்டுகொடுப்புகளின் ஒப்பந்தத்தைத் திணிக்க முயல்வதன் மூலம், ஜேர்மன் தொழிற்சங்கங்கள் அவற்றின் பாகத்திலிருந்து, சமூக ஆதாரவளங்களைத் தொடர்ந்து தொழிலாள வர்க்கத்திடமிருந்து போர் எந்திரம் மற்றும் பங்குச்சந்தைகளுக்குத் திருப்பி விடுவதை உறுதிப்படுத்துவதற்காக செயல்பட்டு, அந்த பிற்போக்குத்தனமான மற்றும் தொழிலாள வர்க்க விரோத வேலைத்திட்டத்தின் முக்கிய உடந்தையாளர்களாக தங்களை எடுத்துக்காட்டி உள்ளன.

அந்த ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக, ஜேர்மன் தொழிற்சங்க சம்மேளனத்தின் (DGB) தலைவர் ரெய்னர் ஹாஃப்மான், Funke ஊடக குழுமத்துடனான ஒரு பேட்டியில் அந்த மகா கூட்டணியின் புதிய பதிப்புக்கு தொழிற்சங்கங்களது ஆதரவை அழுத்தமாக வலியுறுத்தினார். “SPD ஆல் மட்டுமே ஒரு நிலையான அரசாங்கத்தை உறுதிப்படுத்த முடியும்,” “அது பொறுப்புறுதியை எதிர்நோக்க வேண்டும்” என்றவர் அறிவித்தார்.

ஜேர்மனியில் மட்டுமல்ல, ஐரோப்பா எங்கிலும் கடுமையான ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளைத் திணித்ததன் மூலமாக, தொழிலாளர்களின் கூலிகளை வெட்டிய, கடந்த மகா கூட்டணி அரசாங்கத்தின் "கடந்த நான்காண்டு கால" “சாதனைகளையும்" ஹாஃப்மான் பாராட்டினார்.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியமும் சமூக ஜனநாயகக் கட்சியும் கூட்டாக அவற்றின் மொத்த வாக்குகளில் 14 சதவீதத்தை இழந்து, கடந்த தேர்தல்களில் படுமோசமான வாக்குகளைப் பெற்றிருந்த போதும், ஹாஃப்மான் புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுப்பதை பலமாக எதிர்த்தார், ஏனென்றால் "SPD இன்னும் அதிகமாக வாக்குகளை இழந்து", அது ஒரு மகா கூட்டணி அமைவதை இன்னும் கடினமாக்கிவிடும்.

இதே எதேச்சதிகார பார்வை ஜேர்மன் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்திலும் வெளிப்படுகிறது, அதில் தொழிற்சங்கங்கள், அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு, பாரிய எதிர்ப்பு மற்றும் போர்குணத்திற்கு முன்னால் விட்டுக்கொடுப்புகளைத் திணிக்க முயன்று வருகின்றன.

தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொண்டு, சாமானிய குழுக்களை அமைத்துக் கொள்வதற்கு அப்பால், தொழிலாளர்களுக்கு தங்களின் கூலிகள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அங்கே வேறெந்த வழியும் இல்லை. இந்த போராட்டம் புதிய தேர்தல்களுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei) அழைப்பிலிருந்து பிரிக்கவியலாததாகும், இதில் சிக்கன கொள்கைகள், சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதற்கான போராட்டத்துடன் இணைத்த ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்குப் பின்னால் தொழிலாளர்கள் அணிதிரள வேண்டும்.