ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s reign of terror on California immigrants

கலிபோர்னிய புலம்பெயர்ந்தோர் மீது ட்ரம்பின் பயங்கர ஆட்சி

Eric London
27 February 2018

கலிபோர்னியாவின் நாபா உள்ளாட்சியில் கடந்த வாரயிறுதி ஞாயிற்றுக்கிழமை காலையில், Armando Nunez Salgado என்ற ஒரு கட்டுமான தொழிலாளியின் 14 வயது மகள், புலம்பெயர்வு மற்றும் குடியேற்ற அமலாக்கத்துறையால் (ICE) அவர் தந்தை இழுத்து செல்லப்படுவதைக் கண்ணீர் விட்டவாறு கேமராவில் பதிவு செய்தார். அந்த அதிகாரிகள் இலக்கத் தகடு இல்லாத அவர்களின் கார்களை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு, அந்த குடும்பம் இருந்த வீட்டின் பின்புற கதவு வழியாக உட்சென்று, அவரை கைது செய்தனர்.

“கேமராவை நிறுத்தாவிட்டால், இவரை நாங்கள் எங்கே அழைத்து செல்கிறோம் என்பதை உனக்கு கூற மாட்டோம்,” என்று ஒரு ICE முகவர் Nunez இன் மகள் Isabel க்கு கூறுவதும் தெளிவாக அந்த ஒளிப்பதிவில் கேட்க முடிகிறது.

தாங்கள் ஆபத்தானவர்கள் என்பதை அறிய செய்ய வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கம் என்றாலும், ICE அதிகாரிகள் வடக்கு கலிபோர்னியா எங்கிலும் ஞாயிறன்று இன்னும் பத்து பேரையும் கைது செய்தனர். திரையரங்கங்கள், டாகோ கடைகள், மற்றும் பல பொது இடங்களுக்கும் வருபவர்களின் கண்களில் படும் வகையில், அவற்றின் முன்னால் அவர்கள் ஒன்றுகூடினார்கள். இந்த காட்சிப்படுத்தல், பீதியைத் தூண்டியதோடு, வேட்டையாடல் நடப்பதாக அப்பகுதி எங்கிலும் தவறான வதந்திகளை பரவ செய்தது.

ஞாயிறன்று கைது நடவடிக்கைகளுக்கு முன்னதாக வெள்ளிக்கிழமையே, முன்னொருபோதும் இல்லாத வகையில் ஓக்லாந்து நகரசபை தலைவர் Libby Schaaf ஒரு பொது எச்சரிக்கை விடுத்தார், சான் பிரான்சிஸ்கோ-ஓக்லாந்து வளைகுடா பகுதி எங்கிலும் உடனடியாக ICE துறையின் சோதனைகள் நடக்க உள்ளதாக அறிவித்தார். புலம்பெயர்வு மற்றும் குடியேற்ற அமலாக்கத்துறை "அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஆரம்பித்து, ஓக்லாந்து உட்பட வளைகுடா பகுதியில் ஒரு நடவடிக்கை மேற்கொள்ள தயாராகி வருகிறது,” என்று பெயர் வெளியிட விரும்பாத ஓர் உள்ஆதார நபர் தெரிவித்ததாக, ஒரு பத்திரிகை செய்தியில் அப்பெண்மணி தெரிவித்தார். புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்படவில்லை என்றால், கலிபோர்னியா "இந்நாட்டில் யாரும் இதுவரை பாத்திராத குற்றத்தை பார்க்கும்" என்று ட்ரம்ப் வியாழனன்று தெரிவித்த பின்னர்தான் Schaaf இன் இந்த அறிவிப்பு வந்திருந்தது.

நாபாவை மையமாக கொண்ட பண்ணை தொழிலாளர்களுக்கான இலாப நோக்கற்ற Casa de Guanajuato அமைப்பின் இயக்குனர் Angel Calderon உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) கூறுகையில், புலம்பெயர்ந்தோர் மத்தியில் பதட்டங்கள் உச்சபட்சமாக அதிகரித்துள்ளது என்றார். “அதிகாரிகள் எங்களைப் பயமுறுத்துவதற்காக, மெக்சிகன் வர்த்தகர்களை உளவு பார்ப்பதாக வதந்திகள் உள்ளன,” என்றார். “இங்கே நாங்கள் 40 ஆண்டுகளாக வாழ்கிறோம், இதுபோன்று நான் ஒருபோதும் பார்த்ததில்லை. நிஜமாகவே மிகவும் பயமாக உள்ளது,” என்றார்.

இந்த பயத்திற்கு உண்மையிலேயே அடித்தளம் உள்ளது. 2017 நிதியாண்டில் புலம்பெயர்வு மற்றும் குடியேற்ற அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை, மலைப்பூட்டும் அளவிற்கு 143,470 வரையில், நாடெங்கிலும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது — இது நியூ யோர்க்கின் சிராகியூஸ் அல்லது கலிபோர்னியாவின் பசடெனாவின் மொத்த மக்கள்தொகைக்கு சமம்.

இதுபோன்ற பயங்கரங்கள் அமெரிக்காவில் அன்றாடம் நடந்து வருகின்றன என்ற உண்மை, தேசிய பெருநிறுவன பத்திரிகைகளில் வெளியாவதே இல்லை, இந்த வாரயிறுதி கைது நடவடிக்கைகளும் கூட முற்றிலும் வெளியிடப்படவில்லை.

அதன் பங்கிற்கு, ஜனநாயகக் கட்சி ட்ரம்பின் புலம்பெயர்வு-விரோத கொள்கையை எதிர்க்க மறுக்கிறது. DACA பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான இம்மாத விவாதத்தின் போது, ஜனநாயகக் கட்சியினர் எல்லை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை ஆர்ப்பரித்து, அமெரிக்கா-மெக்சிகோவுக்கு இடையே சுவர் எழுப்பவும், ICE மற்றும் CBP (குடியேற்றம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு) இவற்றினது அளவையும் பலத்தையும் பெருமடங்கு அதிகரிக்கவும் உடன்பட்டனர். தகுதியுடைய புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் வருவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் (DACA) விடயத்தில் ஜனநாயகக் கட்சி இதுவரையில் ஒன்றும் அறிவிக்கவில்லை, மேலும் DACA திட்டத்தை ட்ரம்ப் இரத்து செய்தததற்கு தற்காலிகமாக தடைவிதித்து திங்களன்று உச்சநீதிமன்றம் அறிவித்த தீர்ப்பானது, அத்திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள 1.8 மில்லியன் மக்களின் நீண்டகால நிலைமையை நடைமுறையளவில் பாதுகாப்பதில் ஒன்றும் செய்துவிடவில்லை.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனநாயகக் கட்சியினர் மக்களை வெளியேற்றும் ட்ரம்பின் நடவடிக்கைகளுடன் உடன்படுகின்றனர் — அனைத்திற்கும் மேலாக, ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி பராக் ஒபாமாவே அவரது இரண்டு பதவிகாலத்தின் போது, அதற்கு முந்தைய எந்த ஜனாதிபதியையும் விட அதிகமாக, 2.7 மில்லியன் பேரை நாட்டை விட்டு வெளியேற்றினார். ஜனநாயகக் கட்சியினர் அவர்களின் முழு சக்தியையும் அவர்களது பாசாங்குத்தனமான ரஷ்ய-விரோத வேட்டையாடலின் மீது குவித்துள்ளனர், அந்த அணுஆயுதமேந்திய நாட்டுடன் போரைத் தூண்டும் அபாயம் ஏற்று, ட்ரம்ப் ரஷ்யாவுக்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை ஏற்குமாறு செய்ய அவரை நிர்பந்திப்பதே அதன் இலக்காக உள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம், அரசியலமைப்பையே விலை கொடுத்தாவது அரசியல் பழிவாங்கும் ஓர் அடாவடித்தனமான நடவடிக்கையில், கலிபோர்னியா மாநிலத்தை இலக்கில் வைத்துள்ளது. கலிபோர்னியா கடந்த ஆண்டு "புகலிட மாநில" சட்டமசோதா ஒன்றை நிறைவேற்றியது, அதாவது ஒரு நீதிமன்ற உத்தரவாணை இல்லாமல் மாநில அமைப்புகள் மத்திய புலம்பெயர்வுத்துறை அதிகாரிகளுக்கு புலம்பெயர்வோர் குறித்த தகவல்களை வழங்குவதைத் தடுக்கிறது. மாநிலந்தழுவிய சட்டமசோதா மற்றும் இதுபோன்ற உள்ளாட்சி "புகலிட நகர" சட்டமசோதாக்கள் வெறும் கண்துடைப்புகள் என்பதோடு, மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகள் மற்றும் நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தடுப்பதில் இவை ஒன்றும் செய்வதில்லை என்றாலும் கூட, புலம்பெயர்ந்த மக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதில் ஒரு சிறிய முட்டுக்கட்டையை அமைத்ததற்காக ட்ரம்ப் நிர்வாகம் அம்மாநிலத்தை தண்டித்து வருகிறது.

ஜனவரி தொடக்கத்தில், ICE இயக்குனர் தோமஸ் ஹோமன் அந்த சட்டமசோதா நிறைவேற்றியதன் மீது சவால்விடுத்தார். “கலிபோர்னியாவை இறுக்கி பிடிக்கப்பட வேண்டும்,” என்றார். “இன்னும் நிறைய சிறப்பு முகவர்களையும், இன்னும் நிறைய வெளியேற்றும் அதிகாரிகளையும் அவர்கள் பார்க்க இருக்கிறார்கள்…" என்று, அந்த புகலிட நகர சட்டங்களில் கையெழுத்திட்ட அல்லது நிறைவேற்றிய அதிகாரிகளுக்கு கூறிய ஹோமன், “இந்த அரசியல்வாதிகளில் சிலர் மீது நாம் குற்றங்களைப் பதிவு செய்யத் தொடங்க வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

அதற்கு பின்னர் விரைவிலேயே, ICE, நிறைய வாடிக்கையாளர்களைக் கொண்ட நீண்ட நேரம் திறந்திருக்கும் சிறிய ரக 7-Eleven வீட்டுச்சாமான் மளிகை கடைகளில் பெருவாரியாக வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பயமுறுத்துவதற்காக, நாடெங்கிலுமான சுமார் ஒரு நூறு 7-Eleven வீட்டுச்சாமான் கடைகளைச் சோதனையிட்டது, கலிபோர்னியாவில் இருந்தவைகளும் இதில் உள்ளடங்கும். பெப்ரவரி மத்தியில் ஐந்து நாட்களில், ICE விரைவிலேயே தெற்கு கலிபோர்னியா முழுவதிலும் சோதனையிட்டு, 200 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரைக் கைது செய்தது.

சான் ஜோஸை மையமாக கொண்ட SIREN (புலம்பெயர்ந்தோர் உரிமைகள் & கல்வி வலையமைப்பு சேவைகள்) அமைப்புக்கான அபிவிருத்தி மற்றும் தகவல் தொடர்பு மேலாளர் Erik Schnabel உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறுகையில், “கலிபோர்னியா இலக்கில் வைக்கப்பட்டு வருகிறது என்பது உண்மையிலேயே தெளிவாக தெரிகிறது. அச்சமூட்டுவது, மிரட்டுவது இதுதான் ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தேசம் என்பது முற்றிலும் தெளிவாக உள்ளது,” என்றார்.

ட்ரம்பும் அவரது பாசிசவாத கூட்டாளிகளும் 40 மில்லியன் பேர் வசிக்கும் ஒரு மாநிலமான கலிபோர்னியாவை இலக்கில் வைத்துள்ளனர், ஏனென்றால் மொத்தத்தில் தேசியளவில் ஆவணமற்றவர்களில் சுமார் ஒரு கால்வாசிப் பேர், 2.5 மில்லியனுக்கும் அதிகமான ஆவணமற்றவர்கள் அங்கே உள்ளார்கள். கலிபோர்னிய அரசு பள்ளியில் படிக்கும் எட்டு குழந்தைகளில் ஒன்று ஓர் ஆவணமற்ற பெற்றோரின் குழந்தையாக இருக்கும், DACA திட்டத்தின் பலன்களைப் பெறும் அந்நாட்டின் 700,000 பேர்களில் 200,000 க்கும் அதிகமானவர்கள் அம்மாநிலத்தில் வசிக்கின்றனர். அம்மாநிலம் 2016 தேர்தல்களில் 2 க்கு 1 என்ற அளவில் ட்ரம்புக்கு எதிராக வாக்களித்தது.

மத்திய அரசின் மிரட்டும்ரீதியிலான நடவடிக்கைகள், புலம்பெயர்ந்தோர் உழைப்பை மிகப் பெரியளவில் சுரண்டுவதைப் பலமாக சார்ந்துள்ள அம்மாநில பொருளாதாரத்தைக் கீழறுக்க நோக்கம் கொண்டுள்ளது. அச்சமூட்டல் மற்றும் பதட்டத்தைப் பரப்பும் இந்த முயற்சிகளானது, புலம்பெயர்ந்தோரை, நிரந்தரமாக சமூகத்தின் விளிம்போரத்தில் ஆழ்ந்த வறுமைப்பட்ட அடிமட்ட வர்க்க வாழ்க்கை வாழ்பவர்களாக மாற்றுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. நாடு கடத்துவதற்கான வேட்டையாடல்கள் குறித்த அச்சத்தில் புலம்பெயர்ந்தோர், அவர்களின் குழந்தைகளைக் குறைவாகவே பள்ளிக்கு அனுப்பக்கூடும், மருத்துவ பிரச்சினைகளுக்கோ அல்லது அவசர தேவைகளுக்கோ மருத்துவ உதவிகளைக் குறைத்துக் கொள்ளலாம், அரசு உதவிகளையும் கூட குறைத்துக் கொள்வதாக இருக்கலாம், குற்றங்களைக் குறித்து பொலிஸிற்கும் தகவல் அளிப்பதைக் குறைத்துக் கொள்வார்கள், அல்லது வேலைக்கோ அல்லது அங்கே இங்கே பக்கத்தில் செல்வதற்கோ கூட வீடுகளை விட்டு வெளியேறாமல் இருந்துவிடக்கூடும்.

புலம்பெயர்ந்தோரின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலானது, ஒருவரின் சட்டப்பூர்வ அந்தஸ்து என்னவாக இருந்தாலும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் பேராபத்தான பாதிப்புகளைக் கொண்டுள்ளது. ஜன்னல் கண்ணாடிகள் அடைக்கப்பட்ட அடையாள குறியீடு இல்லாத கார்களில் அரசே மக்களைக் கடத்தி செல்லும் ஒரு சமூகத்தில், தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எந்த வழியும் இல்லை. ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் உத்தியோகபூர்வ அரசு கொள்கையாக ஆகியுள்ள இனவாதமும், தேசியவாதமும் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தும் ஒரு முயற்சியாகும்.

ஆளும் உயரடுக்கின் வெளிநாட்டவர் விரோத போக்கு முற்றிலும் அமெரிக்காவிற்கே உரிய நோய் அல்ல. முன்னெப்போதையும் விட அதிகமானவர்கள் —2015 இல் 65.3 மில்லியன் பேர்— அவர்களின் வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக இடம்பெயர்ந்தப்பட்டுள்ளனர் என்றாலும், ஆளும் வர்க்கங்கள் ஒவ்வொரு நாட்டிலும் அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை, மிகவும் பலவீனமான மற்றும் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக திருப்பி விட முயன்று வருகின்றன.

ஐரோப்பாவில் உள்ள அதிவலது கட்சிகள், சமூக ஜனநாயகக் கட்சிகளது சிக்கனக் கொள்கை மீதான பரந்த வெறுப்பை வெளிநாட்டவர் விரோத போக்குகளுக்குள் திசை திருப்பிவிடுகின்றது என்பதோடு, பெரிய முதலாளித்துவ கட்சிகளுமே அதன் வேலைதிட்டத்தை ஏற்று வருகின்றன. ஜேர்மனியில், இடைக்கால பெரும் கூட்டணி உடன்படிக்கையானது, நவ-நாஜி கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) ஆதரிக்கும் புலம்பெயர்வு கட்டுப்பாடுகளை உள்ளடக்கி உள்ளது. இத்தாலியில், நடக்க உள்ள மார்ச் 4 இல் தேர்தல், பாசிசவாதிகள் புலம்பெயர்ந்தோரை வீதிகளிலேயே தாக்கி வருகின்ற நிலைமைகளின் கீழ் மற்றும் முதலாளித்துவ கட்சிகள் அனைத்தும் அவற்றின் வெளிநாட்டவர் விரோத எண்ண ஓட்டத்தை நிரூபிக்க முண்டியடித்து கொண்டிருக்கின்ற நிலைமைகளின் கீழ், நடக்க உள்ளது.

புலம்பெயர்வோர்களைப் பாதுகாக்க முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் காலங்கடந்து உயிர்வாழும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டம் அவசியமாகும், உலக பொருளாதாரத்தைப் பகுத்தறிவார்ந்த விதத்தில் ஒழுங்கமைக்கவும் மற்றும் உலகில் வசிப்போரின் சுதந்திரமான நகர்வுக்கும் இந்த அமைப்புமுறை தான் முக்கிய முட்டுக்கட்டையாக உள்ளது. தேசிய-அரசு அமைப்புமுறையை ஒழித்து, பெருநிறுவன இலாபத்திற்காக அல்லாமல் உலக மக்களின் தேவைக்காக உலக பொருளாதாரத்தை மாற்றக்கூடிய சோசலிச புரட்சியால் மட்டுமே, மக்கள் அனைவருக்கும், துஷ்பிரயோகம் குறித்தோ அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவோமோ என்ற பயமில்லாமல், மகிழ்ச்சியாக, உலகெங்கிலும் பயணிப்பதற்கான தங்களின் ஜனநாயக உரிமைக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.