ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French president Macron to end lifetime job guarantee for public sector workers

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் பொதுச்சேவைத் துறை தொழிலாளர்களுக்கு வாழ்நாள் வேலை உத்தரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரவிருக்கிறார்

By Francis Dubois
5 February 2018

நாஜி ஆக்கிரமிப்பில் இருந்தான விடுதலைக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட பொதுச்சேவைத் துறை (fonction publique) தொழிலாளர்களது உரிமைகளுக்கான சட்டரீதியான ஷரத்தை துடைத்தெறியும் நோக்கத்துடன், வியாழனன்று பிரான்சின் பிரதமர் எட்வார்ட் பிலிப்பும் பொது நிதித் துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மானனும் பொதுச்சேவைத் துறை தொழிலாளர்கள் மீது ஒரு மிகப்பெரும் தாக்குதலை பிரகடனப்படுத்தினர்.

“இந்தத் திட்டமானது, பொதுச்சேவைத் துறை தொழிலாளர்களைச் சுற்றியுள்ள கடைசி பாதுகாப்பு கவசங்களையும் உடைத்தெறியும் நோக்குடனானது, அத்துடன் அத்தனை பொதுச்சேவைத் துறை தொழிலாளர்களுக்கும், வேலை பெறும்போது, வாழ்நாள் வேலைவாய்ப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் எனும் சித்தாந்தத்தின் முடிவையும் குறித்து நிற்கிறது” என்று வலது-சாரி தினசரி Le Figaro எழுதியது. இந்தத் தாக்குதல்கள், போலிஸ் மற்றும் உளவுப் படையினருக்கு, இராணுவத்தினருக்கு அல்லது அரசு அதிகாரத்துவத்தின் உயர் பதவியில் உள்ளவர்களுக்குப் பொருந்தாது, மாறாக பாரிய எண்ணிக்கையிலான பொதுச்சேவைத் துறை தொழிலாளர்களுக்கே பொருந்தும் என அந்த இரண்டு அமைச்சர்களும் அறிவித்தனர்.

பிரான்சில் பொதுச்சேவைத் துறை தொழிலாளர்களது அந்தஸ்தில் இருக்கும் கிட்டத்தட்ட 4 மில்லியன் தொழிலாளர்களை அவர்கள் நேரடியாக குறி வைத்திருக்கின்றனர். அத்தொழிலாளர்களது வேலைநிலைமைகளை ஆளுகை செய்கின்ற இந்த “சட்ட ஷரத்து” சோசலிஸ்ட் கட்சி மற்றும் வலது-சாரி அரசாங்கங்கள் இரண்டினாலுமே சம விதமான தாக்குதல்கள் மூலமாக ஏற்கனவே அரிக்கப்பட்டு விட்டிருந்தாலும் கூட, இப்போது வரையும், வாழ்நாள் வேலைவாய்ப்பு, உத்தரவாதமான அடிப்படை ஊதியம், சீரான பதவி உயர்வு மற்றும் சீரான ஊதிய அதிகரிப்புகள் ஆகியவை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு உத்தியோகபூர்வமாக உத்தரவாதமளித்து வருகிறது.

அது ஓய்வுவிடுப்புகளை (congés), ஓய்வுபெறுவதற்கான எளிமையான நிபந்தனைகளை அல்லது அபராதமில்லாத முன்கூட்டிய ஓய்வுபெறல்களையும் அளிக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பாக வரையிலும் கூட, பொதுச்சேவைத் துறை தொழிலாளர்கள் தனியார் துறை தொழிலாளர்களை விட மூன்றாண்டுகள் முன்பே ஓய்வு பெற்று வந்தனர். வேலைநிறுத்தம் செய்வதற்கும் அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளில் இணைவதற்கும் அவர்களுக்கு உத்தரவாதமான உரிமை இருந்தது.

பிலிப் மற்றும் டர்மானன் அறிவித்துள்ள நடவடிக்கைகளில் “ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களை” (contractuels) பாரிய அளவில் பணியமர்த்துவதும் அடங்கும், இவர்கள் பொதுச்சேவைத் துறை தொழிலாளர்களை பிரதியிடுவர், ஆனால் பொதுச்சேவைத் துறை தொழிலாளருக்குரிய உரிமைகள் மறுக்கப்படுவர். அதேநேரத்தில், அடிப்படையில் வரம்பற்ற எண்ணிக்கையிலான “விருப்ப ஓய்வு”க்கான ஒரு திட்டமானது பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க நோக்கம் கொண்டிருக்கிறது, அவர்கள் தனியார் துறையில் வேலை தேட வேண்டியிருக்கும். 2020க்குள்ளாக பொதுச்சேவைத் துறை ஊதியங்களில் அரசு 4.5 பில்லியன் யூரோக்கள் (5.6 பில்லியன் டாலர்கள்) வரை குறைப்பதற்கு இது அனுமதிக்கும்.

இந்த திட்டம் எந்தத் துறையையுமே விட்டுவைக்கப் போவதில்லை. குறிப்பாக ஆசிரியர்கள், சுகாதாரப் பராமரிப்பு தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் சேவைகளில் இருப்பவர்கள் உள்ளிட “மறுஒழுங்கிற்கு” என்று குறிக்கப்பட்டுள்ள சேவைகள் கடும் பாதிப்புக்குள்ளாக இருக்கின்றன. இப்போது வரை, பொதுச்சேவைத் துறை வேலை வெட்டுகள், வேலையை விட்டு அகல்பவர்களுடன் மட்டுப்பட்டுத்தப்பட்டதாய் இருந்து வந்திருந்தது, அதாவது ஓய்வுபெற்று விட்டவர்களது இடத்தில் அவர்களை பிரதியிட புதிய தொழிலாளர்கள் அமர்த்தப்படாது இருந்து வந்தார்கள்.

”தகுதி ஊதியம்” (merit pay) அறிமுகம் செய்யவும் அரசாங்கம் நோக்கம் கொண்டுள்ளது, இது ஒரு குறிப்பிட்ட வேலைக் காலத்திற்கு நிலையான ஒரு ஊதியத்திற்கு உள்ள உரிமையை அகற்றுகின்ற ஒரு நச்சு மாத்திரை ஆகும். இது பொதுச்சேவைத் துறை தொழிலாளர்களிடையே ஐக்கியத்தை உடைப்பதற்காக, அவர்களுக்கு எதிரான ஒரு நிதிரீதியான சவுக்காக பயன்படுத்தப்பட இருக்கிறது. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுச்சேவை நிர்வாகத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு, அரசாங்கம் “முடிவுகளது பலாபலன்களை” (indicators of results) கோருகிறது, அதன்மூலம் அது தொழிலாளர்களின் “திருப்பியளிப்பை” (ஆக, இறுதியில், அவர்களின் சம்பளத்தை) அளவிட சாத்தியமாக்கும், இவ்வாறாக அத்தொழிலாளர்கள் தொடர்ச்சியான அழுத்தத்தின் கீழ் வைக்கப்படுவர்.

செயலூக்கத்துடன் தயாரிக்கப்பட்டு வரும் நிலையிலும் கூட பரவலாக விவாதிக்கப்படாமலிருக்கும் இன்னொரு நடவடிக்கை என்னவென்றால், பொதுச்சேவைத் துறை தொழிலாளர்கள், பல்வேறு பொதுச்சேவைத் துறை நிறுவனங்கள் மற்றும் நிர்வாகங்கள் மேற்கொள்ளும் வேலையை தனியார்மயமாக்குவதாகும். “தனியார் துறை அதற்கான இடத்தை எங்கெல்லாம் காண முடியுமோ” அங்கெல்லாம் இந்தத் தனியார்மயமாக்கங்கள் நடைபெற வேண்டும் என்று அரசாங்கத்தின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் கிறிஸ்டோஃ கஸ்டானர் சென்ற மே மாதத்தில் தெரிவித்தார். பொதுச்சேவைத் துறை சேவைகள் “நிறுவனங்கள் செய்வதைப் போல, தம்மை விரைவாக மறுஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்” என்று துனிசியாவில் இருந்து, வியாழனன்று மக்ரோன் வலியுறுத்தினார்.

புகையிரத தொழிலாளர்களின் சட்ட ஷரத்து மட்டுமல்ல, உதாரணமாக, அவர்களின் ஓய்வூதியத் திட்டமும் கூட ஒடுக்கப்படவிருக்கிறது. புகையிரத தொழிலாளர்களின் சட்டப்பிரிவிலான மாற்றம் அவர்களது சிறப்பு ஓய்வூதியத் திட்டத்தின் மீதான ஒடுக்குமுறையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று செப்டம்பர் முதலாக மக்ரோன் வலியுறுத்தி வருகிறார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட சமூகப் பயன்களது ஒரு பரந்த எண்ணிக்கை அழிப்பதற்காக இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. “வணிக நடைமுறையின் அம்சங்கள் ... இறுகிப் போனவற்றால் அமலாக்கம் செய்யப்பட முடியாதிருப்பதால்” இந்த சட்டப்பிரிவு சீரமைக்கப்பட வேண்டியதாயிருந்தது என வியாழனன்று மக்ரோன் தெரிவித்தார்.

1945 இல் நாஜிசம் தோற்கடிக்கப்பட்டதன் -இது இறுதியில் 1917 ரஷ்யப் புரட்சி வரை பின்னோக்கி செல்வதாகும்- பின்னர் தொழிலாளர்கள் பெற்ற அடிப்படை சமூகப் பலன்களை ஐரோப்பிய நிதிப் பிரபுத்துவம் குறிவைத்துக் கொண்டிருந்தது என கிரீசில் ஐரோப்பிய ஒன்றியம் கொடூரத் தாக்குதல்கள் நடத்திய சமயத்தில் WSWS செய்த பகுப்பாய்வினை இது ஊர்ஜிதம் செய்கிறது.

மக்ரோனின் தாக்குதல் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்துடன் கண்டத்தின் ஆளும் உயரடுக்கினர் நடத்துகின்ற ஒரு பரந்த மோதலின் பகுதியாகும். மிகப்பெரும் ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரமான ஜேர்மனியில், ஜேர்மனியின் மறு இராணுவமயமாக்கத்திற்கும் அதன் வல்லரசு அரசியலுக்கான மீள்வருகைக்கும் நிதியாதாரம் திரட்ட தொழிலாள வர்க்கத்தின் மீது பாரிய தாக்குதல்களை நடத்தக் கூடிய ஒரு “மெகா கூட்டணி” அரசாங்கத்திற்கு தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பல ஆண்டுகளாக செல்வத்தை தொழிலாளர்களிடம் இருந்து பெரும் செல்வந்தர்களுக்கு இடம்மாற்றுவதற்கு தலைமை வகித்திருந்த சமூக ஜனநாயக மற்றும் பழமைவாதக் கட்சிகளது ஒரு புதிய கூட்டணி அரசாங்கம் அமர்த்தப்படுவதை, சமீபத்திய நாட்களில் நடைபெற்று வருகின்ற ஜேர்மன் உலோகத் துறை மற்றும் வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்களின் சக்திவாய்ந்த வேலைநிறுத்தங்கள் இப்போதைக்கு திறம்பட்ட விதத்தில் தடுத்து நிறுத்தி வைத்திருக்கின்றன. சனிக்கிழமையன்று இலண்டனில், வலது-சாரி பிரெக்ஸிட் ஆதரவு அரசாங்கத்தினால் தேசிய சுகாதார சேவையின் (NHS) மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதலுக்கு எதிராக பத்தாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். NHS என்பது பிரிட்டனில் தொழிலாள வர்க்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பெற்ற இன்னுமொரு அடிப்படையான தேட்டமாகும்.

ஆளும் கட்சிகளுக்கு எதிரான ஒரு வெகுஜன இயக்கத்தை தடுப்பதற்காக, தொழிலாளர்களது கோபத்தைத் தணிப்பதையே முக்கியமான நோக்கமாகக் கொண்டு ஜேர்மன் தொழிற்சங்கங்கள் செயல்படுவதைப் போல, பிரான்சின் தொழிற்சங்கங்களுக்கும் பொதுச்சேவைத் துறை தொழிலாளர்களைப் பாதுகாத்து மக்ரோனுக்கு சேதம் விளைவிக்கும் எந்த நோக்கமும் கொண்டிருக்கவில்லை. தொழிற்சங்கத் தலைவர்களுக்கு, இந்தத் தாக்குதலின் வரலாற்றுப்பெரும் அளவு குறித்து நன்கு தெரியும், அவர்கள் அதிர்ச்சியடைந்தது போலவும் அவமதிக்கப்பட்டது போலவும் காட்டும் எதிர்வினைகள் முற்றிலும் கபடவேடமாகும். இவர்கள்தான் சென்ற ஆண்டில் மக்ரோனுக்கு வாக்களிக்கக் கோரினர், பொதுச்சேவைத் துறை மீதான ஒரு தாக்குதலுக்கு அவர் கொண்டிருந்த திட்டங்கள் குறித்து இவர்களுக்கு முன்பே நன்கு தெரியும், தொழிலாளர் சட்டம் மீதான தாக்குதல் குறித்து அவருடன் இவர்கள் முன்பு பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததைப் போலவே, இத்தாக்குதல் குறித்தும் செப்டம்பர் முதலாக இவர்கள் அவருடன் விவாதித்து வந்திருக்கின்றனர்.

உலகச் சந்தையில் தமது “சொந்தநாட்டு” முதலாளி வர்க்கத்தின் போட்டித்திறனை பாதுகாப்பது, அந்த நோக்கத்திற்காக தொழிலாளர்களது நலன்களைத் தியாகம் செய்வது என்ற அவர்களது தேசியவாத வேலைத்திட்டம் அடிப்படையில் மக்ரோனின் அதே வேலைத்திட்டமே ஆகும். அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை சர்வதேசரீதியாக ஐக்கியப்படுத்துவதற்கு உயிர்ப்பான எதிர்ப்பு காட்டுகின்றனர்.

சமூகப் பாதுகாப்புடன், பொதுச்சேவைத் துறை சட்டப் பிரிவானது, அக்டோபர் 1946 ல் விடுதலையின் (Liberation) சமயத்தில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியால் அறிமுகம் செய்யப்பட்ட முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்றாகும். ஐரோப்பாவெங்கிலும் மதிப்பிழந்து விட்டிருந்த பாசிச முதலாளித்துவ வர்க்கங்களுக்கு எதிரான பாட்டாளி வர்க்கப் புரட்சியை மூச்சுத்திணறடிக்கும் ஸ்ராலினது கொள்கையை நியாயப்படுத்துவதற்கு இச்சீர்திருத்தங்களை அது பயன்படுத்தியது. இப்போது ஒரு சுதந்திர-சந்தை ஜனாதிபதியின் தலைமையிலான ஒரு பிற்போக்குத்தனமான அரசாங்க சூழ்ச்சிக்கூட்டத்திடம் சரணடைவதன் மூலமாக, ஸ்ராலினிஸ்டுகளும், சமூக ஜனநாயகவாதிகளும் மற்றும் தொழிற்சங்கங்களும் அச்சட்டப் பிரிவை திட்டவட்டமாக அழிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு தேட்டத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு போராட்டமானது, இறுதி ஆய்வில் முதலாளித்துவ வர்க்கத்துடனான ஒத்துழைப்புக்கு இட்டுச் செல்கின்ற அத்தனை தேசிய அடிப்படையிலான முன்னோக்குகளின் திவால்நிலை, மற்றும் ஐரோப்பாவெங்கிலும் தொழிற்சங்கங்களிடம் இருந்து சுயாதீனப்பட்ட வகையில் போராட்டங்களை சர்வதேசரீதியாக ஒழுங்கமைப்பது ஆகிய இரண்டின் ஒரு ஐந்தொகை அறிக்கையை தீட்டுவதை அவசியமாக்குகிறது. தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கும் ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தைக் கட்டியெழுப்புவதற்குமான ஒரு உண்மையான சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டமே இந்தப் போராட்டத்திற்கான அடிப்படையாக இருக்கக் கூடியதாகும்.