ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Political crisis erupts in the Maldives

மாலைதீவில் அரசியல் நெருக்கடி வெடிக்கிறது.

By Rohantha De Silva 
7 February 2018

மாலைதீவின் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் திங்களன்று, ஜனநாயக உரிமைகளுக்கு தற்காலிக தடைவிதித்தும் மற்றும் இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கைதுசெய்து 15-நாள் அவசரகால நிலையை பிரகடனம் செய்தார். முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் மற்றும் எட்டு ஏனைய அரசியல் தலைவர்கள் உட்பட, சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு பிப்ரவரி 1 அன்று வெளியான உச்ச நீதிமன்ற உத்தரவின் பிரதிபலிப்பாகவே இந்த கடுமையான நடவடிக்கை இருந்தது.

மாலைதீவில் நிலவும் இந்த சமீபத்திய அரசியல் கொந்தளிப்பு, யாமீன் அரசாங்கத்திற்கும் அமெரிக்க சார்பு நஷீத் தலைமையிலான பாராளுமன்ற எதிர்க்கட்சிக்கும் இடையில் ஆழமடைந்து வரும் மோதலின் ஒரு பகுதியாக உள்ளது. இந்நிலையில், சீனாவிற்கு எதிரான அமெரிக்க மற்றும் இந்திய புவிசார் அரசியல் சூழ்ச்சிகளுக்கு இணங்க, பெய்ஜிங் உடனான நெருக்கமான மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளை நஷீத் எதிர்ப்பதோடு, யாமீன் அரசாங்கத்தை பதவி நீக்குவதற்கும் போராடி வருகிறார்.

நஷீத் நேற்று, இந்திய இராணுவத் தலையீட்டிற்கு அழைப்பு விடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவ்வறிக்கை, “நீதிபதிகளையும்  அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்காக, இந்திய அரசாங்கம், அதன் இராணுவ ஆதரவுடனான ஒரு தூதரை இங்கு அனுப்பிவைக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்,” எனத் தெரிவித்தது. மேலும் அவர், மாலை தீவு அரசாங்க அதிகாரிகளின் நிதிரீதியான அனைத்து கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளையும் அமெரிக்கா தடைசெய்ய வேண்டுமென வலியுறுத்துவதோடு, இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் “நாம் அவரை (யாமீன்) நீக்க வேண்டும்.” என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறார்.

மாலைதீவு எதிர்க்கட்சிக்கு ஆதரவாக கடந்த வியாழனன்று வெளியான ஏகமனதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு யாமீன் அரசாங்கத்திற்கு ஒரு பெரும் அடியாக இருந்தது. கடந்த வார உத்தரவிற்கு முன்பு வரை உச்ச நீதிமன்றம் யாமீனின் சர்வாதிகார ஆட்சியை ஆதரித்தது. எதிர்தரப்பு பிரச்சாரத்தை ஆதரித்த அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கடுமையான அழுத்தத்திற்கு விடையிறுப்பே இந்த தீடீர் திருப்பமாகும்.

இந்த உச்ச நீதிமன்ற உத்தரவு, இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நஷீத் போட்டியிடுவதை தடுக்கும் தற்போதைய சட்டத் தடைகளை நீக்கும். மேலும், நஷீத் மற்றும் ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து “அரசியல் ரீதியான நோக்கமுடைய விசாரணைகளை நடத்துவதற்கு” வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் தேவைக்கு அதிகமாகவே ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளனர் என இது அறிவித்தது.

இந்த உத்தரவு, 12 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களது பதவிகளையும் மீட்டுக்கொடுத்தது. கடந்த ஆண்டு எதிர்தரப்பிற்கு அவர்கள் மாறிய பின்னர் யாமீனின் முற்போக்கு கட்சியால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இது எதிர்தரப்பிற்கு ஒரு அறுதிப் பெரும்பான்மையை வழங்கும் ஒரு நகர்வாக இருந்தது.

தனது அரசியல் உயிர்ப்பிழைப்புக்காக போராடும், யாமீன், சிறப்பு தொலைக்காட்சி உரை ஒன்றில், “ஒரு அரசு செயல்படும் தகமைக்கு   ஒரு தடையாக” நீதிமன்ற தீர்ப்பு இருந்தது என அறிவித்தார். இந்த கடும் நடவடிக்கையை நியாயப்படுத்தி, அவரது அரசாங்கத்திற்கு எதிராக இருக்கும் ஒரு “ஆட்சிக்கவிழ்ப்பு சதியை” அம்பலப்படுத்துவதற்காகவே அவசரகால நிலை பிரகடனம் தேவையாக இருந்தது என்று கூறினார்.

அவசரகால நிலை அறிவிக்கப்பட்ட உடனேயே, பாதுகாப்பு படை உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து, தலைமை நீதிபதி அப்துல் சாயீத் மற்றும் மற்றொரு நீதிபதி அலி ஹமீத் ஆகியோரை கைது செய்தது. மேலும், யாமீனின் சகோதரரும், 1978 இல் இருந்து 2011 ஆம் ஆண்டு வரை நாட்டின் சர்வாதிகார ஆட்சியாளராக இருந்தவருமான அப்துல் காயூம் மவுமூனும் கைது செய்யப்பட்டார்.

அவசரகால நிலை உத்தரவு பாதுகாப்பு படைகளுக்கு பொதுவாக கைதுசெய்யும் மற்றும் தடுக்கும் அதிகாரங்களை வழங்கும், நீதித்துறை அதிகாரத்தை கட்டுப்படுத்தும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதான தடைகளை அகற்றும் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடல் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தல் போன்றவற்றையும் தடைசெய்யும். காவல்துறையினரும், இராணுவத்தினரும் எதிர்தரப்பு ஆதரவாளர்களை எதிர்த்து போராடுபவர்கள் மீது தடியடி பிரயோகத்தையும், மிளகுப்பொடி தூவுதலையும் ஏற்கனவே பயன்படுத்தியிருந்தனர்.

நேற்றிரவு பிற்பகுதியில் மாலைதீவு அரசாங்கம், எஞ்சியுள்ள மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடந்த வியாழக்கிழமை உத்தரவை ரத்து செய்துள்ளதாக அறிவித்தது. ஒரு அறிக்கையில் நீதிபதிகள், “ஜனாதிபதி எழுப்பிய கவலைகளை கருத்தில்கொண்டு” அவர்கள் உத்தரவை பின்வாங்கியதாக அறிவித்தனர்.

யாமீன், எதிர்கட்சித் தலைவர் நஷீதை பொய் குற்றச்சாட்டின் பேரில்  13 வருடங்கள் சிறையில் அடைத்தார், அது ஒரு முன்னாள் தலைமை நீதிபதியை தன்னிச்சையான முறையில் பதவி நீக்கம் செய்தது தொடர்பானது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அழுத்தத்தின் கீழ் ஜனவரி 2016 இல் நஷீத் விடுதலை செய்யப்பட்டார். அதற்கு பின்னர் எதிர்க்கட்சியும் யாமீனை வெளியேற்றும் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் இருந்து ஆதரவைப் பெற அடித்தளம் அமைப்பதில், நஷீத், யாமீனின் கீழ் மாலைதீவு பெய்ஜிங்கின் “காலனித்துவ நாடாக” மாறக்கூடிய தறுவாயில் உள்ளதாக அறிவிக்கிறார். மேலும், சீனா, மாலைதீவின் நிலத்தையும், முக்கிய உள்கட்டமைப்பையும் “வாங்கி வருகிறது” என்பதோடு, “எங்களது இறையாண்மையையும் கிட்டத்தட்ட வாங்கி வருகிறது” என்றவர் கூறுகிறார்.

நேற்று இந்திய வெளியுறவு அமைச்சகம், அவசரகால நிலை அறிவிப்பு, மற்றும் “மக்களின் அரசியலமைப்பு உரிமைகள் மீதான இடைக்காலத் தடை” போன்றவற்றினால் அது “குழப்பமுற்று” இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. இருப்பினும், இராணுவத் தலையீடு செய்யுமாறு நஷீத் விடுத்த அழைப்பிற்கு இன்று வரை புது தில்லி பதிலளிக்கவில்லை.

மாலைதீவின் ஜனநாயக உரிமைகள் பற்றி இந்தியாவுக்கு எந்தவொரு கவலையும் இல்லை. மாறாக, புது தில்லி இந்த பிராந்தியத்தில் வலிமைமிக்க நாடாக மாறுவதில் தான் உறுதியாக உள்ளது. அதாவது இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை கீழறுப்பதாகும்.

4,00,000 ற்கு சற்று கூடுதலான மக்கள்தொகை கொண்ட 1192 சிறிய தீவுக்கூட்டங்களில் ஒன்றாக மாலைதீவுகள் இருந்தாலும், இது இந்திய பெருங்கடலின் மூலோபாயமுள்ள இடமாக அமைந்துள்ளது. எரிசக்தி மற்றும் கனிம பொருட்கள் விநியோகங்களை அணுகுவதற்கு சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பயன்படுத்திய, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து தென் கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா வரையில் பரந்தகன்ற முக்கிய கடல் பாதைகளில் இது அமைந்துள்ளது.

சீனாவுடனான மாலைதீவுகளின் நெருங்கிய உறவுகள் பற்றி, அதிலும் குறிப்பாக கடந்த டிசம்பரில் பெய்ஜிங்குடன் மேற்கொள்ளப்பட்ட அதன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றி இந்தியா பலமுறை கவலையை தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்திடம் மீள்உறுதி செய்வதற்காக புது தில்லிக்கு வெளியுறவு மந்திரி முகமது ஆசிமை யாமீன் அனுப்பினார். ஆனால் அதனால் எவ்வித பயனும் கிடைக்கவில்லை.   

அமெரிக்க சார்பு Carnegie இந்திய சிந்தனை குழாமின் தலைவர் கான்ஸ்டன்டினோ சேவியர் Hindustan Times பத்திரிகையில் நேற்று எழுதிய கட்டுரையில் இந்தியாவை தலையிடுமாறு அழைப்பு விடுத்தார். “மாலைதீவுகள் ஸ்திரப்பாட்டிற்கு திரும்புவதன் ஒரு பகுதியாக இந்தியா இருக்க வேண்டுமென்றால், அது கடுமையாக பங்காற்ற வேண்டும்” என்ற தலைப்பிடப்பட்ட கட்டுரை, “மத்தியஸ்தத்தை நிலைநிறுத்தும், சிவப்பு கோடுகள் மீதான தெளிவான இலக்குகளை வைக்கும், மற்றும் தண்டனைக்குரிய நடவடிக்கைகள் உடனான தூண்டுதல்களை சமன்படுத்தும் வகையில் தில்லி தொடர்ச்சியான அழுத்தத்தை செயல்படுத்த வேண்டும். மிகத் தீவிரமான சூழ்நிலையில், இந்தியா ஒரு இராணுவத் தலையீட்டை செயல்படுத்த முடியும்” என அறிவித்தது.  

அவசரகால நிலை பிரகடனத்திற்கு பதிலளித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழு பின்வருமாறு எச்சரித்தது: “மாலைதீவு அரசாங்கமும் இராணுவமும் சட்டத்தின் தீர்ப்பையும், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களையும் மதிக்க வேண்டும். உலகமே கண்காணித்துக் கொண்டிருக்கிறது.” எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையிலடைத்து மனித உரிமைகளை நசுக்குகின்ற யாமீனை விமர்சித்து அமெரிக்க வெளியுறவுத் துறையும் இதேபோன்ற செய்தியை வெளியிட்டது.

புது தில்லி போன்றே, வாஷிங்டனும் அதன் மூலோபாய நலன்களுக்கு சேவையாற்றும் ஒரு மேற்கத்திய சார்பு அரசாங்கத்தை மாலைதீவுகளில் நிறுவுவதற்கே மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது. ஜனாதிபதி ட்ரம்ப், ஆசியா முழுவதும் சீனாவிற்கு எதிரான முந்தைய ஒபாமா நிர்வாகத்தின் மோதல் கொள்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.

வாஷிங்டனின் ஆக்கிரோஷமான நகர்வுகளை எதிர்கொள்ள சீனா மாலைதீவுடன் நெருக்கமான உறவை வளர்த்துள்ளது. அதன் இலட்சியமான ஒரே பாதை ஒரே இணைப்பு (One Belt One Road-OBOR) திட்டம், யுரேசிய நிலப்பரப்பையும், அத்துடன் ஆப்பிரிக்காவையும் நிலம் மற்றும் கடல் இரு மார்க்கமாகவும் இணைக்கும் உள்கட்டமைப்பின் ஒரு பெரும் விரிவாக்கத்திற்கு உதவுகிறது. யாமீன் இந்த திட்டத்திற்கான தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் பெய்ஜிங், மாலைதீவில் நிலவும் சூழ்நிலையை நெருக்கமாக கவனித்துக் கொண்டிருப்பதாக அறிவித்தது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷு, “(மாலைதீவில்) தொடர்புடைய கட்சிகள் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலமாக வேறுபாடுகளை தீர்க்க முடியும்” என்று தெரிவித்தார்.

மாலைதீவின் ஆளும் உயரடுக்கினர் இடையேயான தீவிர உட்பூசல்களும் மற்றும் நிலவும் அரசியல் நெருக்கடியும், அமெரிக்கா சீனாவிற்கு எதிரான அதன் மூலோபாய உந்துதலை தீவிரப்படுத்தும் நிலையில், இந்திய-பசிபிக்கில் தீவிரப்படும் பூகோள-அரசியல் போட்டியை கூர்மையான கவனத்திற்கு கொண்டுவருகிறது.