ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump considers “bloody nose” strike on North Korea

வட கொரியா மீது "இரத்தக்களரி தண்டனை" தாக்குதலை ட்ரம்ப் பரிசீலிக்கிறார்

Peter Symonds
6 February 2018

ட்ரம்ப் நிர்வாகம் அல்லது அதற்குள் இருக்கும் ஒரு சக்தி வாய்ந்த இராணுவ-உளவுத்துறை கன்னை, வெள்ளியன்று தென் கொரியாவில் தொடங்க உள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளை அடுத்து, அல்லது சாத்தியமானால் அப்போதே கூட, வட கொரியா மீது ஒரு முன்கூட்டிய இராணுவ தாக்குதலுக்கு அழுத்தமளித்து வருகிறது.

“இரத்தக்களரி தண்டனை" (bloody nose) எனும் தெரிவு —அதாவது வட கொரிய அணுஆயுத ஏவுகணை தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மீது ஒரு மட்டுப்படுத்த தாக்குதல் என்பது—பியொங்யாங் ஆட்சியைப் பயமுறுத்தும் என்றும், அணுஆயுதங்களைக் கைவிடுவதற்கான வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு அடிபணியச் செய்ய அதை மிரட்டுமென்றும் கூறப்படுகிறது.

ஆனால் ஆத்திரமூட்டல் எதுவுமில்லாத நிலையில் அமெரிக்க ஆக்கிரோஷம், அடிபணிய செய்வதற்கு பதிலாக, கணக்கிடவியலாத விளைவுகளோடு ஏறத்தாழ நிச்சயமாக பதில் நடவடிக்கைகளைத் தூண்டிவிடலாம். அணுஆயுதங்கள் உடனடியாக பயன்படுத்தப்படாவிட்டாலும் கூட, விரைவிலேயே சீனா மற்றும் ரஷ்யா போன்ற அணுஆயுத சக்திகளை உள்ளிழுக்கக்கூடிய ஒரு மோதலில், முதல் நாளிலேயே தென் கொரியாவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே பத்தாயிரக் கணக்கில் இருக்குமென மதிப்பிடப்படுகிறது.

இவ்வாறிருக்கையிலும் கூட, வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க பாதுகாப்பு-உளவுத்துறை எந்திரத்தின் உயர்மட்ட அதிகாரிகளிடையே துல்லியமாக இதுபோன்றவொரு பொறுப்பற்ற காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை தான் விவாதிக்கப்பட்டும், கலந்துரையாடப்பட்டும், தயாரிக்கப்பட்டும் வருகிறது. உயர்மட்ட இராணுவ-வெளியுறவுத்துறை கொள்கை வட்டாரங்களில், இத்திட்டங்களின் முன்னேறிய நிலை, அவை உருவாக்கி கொண்டிருக்கும் பயம் மற்றும் எதிர்ப்பிலிருந்து நன்கு தெரிய வருகிறது.

தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதர் விக்டர் சா (Victor Cha) வட கொரியா மீதான ஒரு முன்கூட்டிய தாக்குதலை எதிர்த்து குரல் கொடுத்ததும், கடந்த வாரம், ட்ரம்ப் நிர்வாகம் திடீரென அவரை தூக்கிவீசியது. அதற்கடுத்து வாஷிங்டன் போஸ்டில் கருத்துரை ஒன்றை எழுதி வெளிப்படையாக இறங்கிய சா, ஓர் அமெரிக்க தாக்குதல் தென் கொரியாவில் உள்ள 230,000 அமெரிக்கர்களை —பிட்ஸ்பேர்க் அல்லது சின்சின்னாட்டி போன்ற மத்திய ரக நகரத்திற்கு சமாந்தரமான ஜனங்களை— ஆபத்திற்குட்படுத்தும் என்று எச்சரித்தார்.

செனட் ஆயுத சேவைகள் குழுவில் அமர்ந்துள்ள மார்டின் ஹெயின்ரிச் உள்ளடங்கலாக 18 ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் கையெழுத்திட்டு கடந்த வெள்ளியன்று ட்ரம்புக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம், சா வெளியிட்ட கவலையையே வெளிப்படுத்தியது. இராஜாங்க விருப்பத் தெரிவுகள் செயலிழந்து போவதற்கு முன்னரே இராணுவ நடவடிக்கையில் இறங்குவது "முற்றிலும் பொறுப்பற்றது" என்பது மட்டுமல்ல, மாறாக அதற்கு "அரசியலமைப்பு அடித்தளமோ அல்லது சட்டபூர்வ அதிகாரமோ" இருக்காது என்றது அறிவித்தது.

ஒரு குறிப்பிட்ட விதமான மட்டுப்படுத்தப்பட்ட, முன்கூட்டிய தாக்குதல் [வட கொரிய தலைவர்] கிம் யொங்-யுன்னிடம் இருந்து ஒரு தீவிர விடையிறுப்பைச் சந்திக்காது என்று நம்புவது மிகவும் விளையாட்டுத்தனமானது,” என்று அக்கடிதம் எச்சரித்தது. செனட் ஆயுதச் சேவை குழுவின் ஜனவரி 30 விளக்கவுரையில் கலந்து கொண்டிருந்த ஒவ்வொரு வல்லுனரும், “‘இரத்தக்களரி தண்டனை' மூலோபாயம் அதிக அபாயங்களைக் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள்” என்பதை அது சுட்டிக்காட்டியது.

போருக்கு நிஜமான எதிர்பை வெளிப்படுத்துவதற்கு பதிலாக, ஜனநாயகக் கட்சியினரின் அக்கடிதம், உடனடியாக மிகப் பெரிய அபாயத்தைப் பிரதிநிதித்துவம் செய்வது ரஷ்யாவா சீனாவா என்பதன் மீது அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தினுள் நடந்து வரும் ஆழ்ந்த விவாதத்தின் பாகமாக உள்ளது. 2016 இல் ஜனாதிபதி போட்டியின் போது ரஷ்யாவுடன் ட்ரம்ப் நயவஞ்சகமான கூட்டு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகள் மீது அவருக்கு எதிராக தீவிரமடைந்து வரும் பிரச்சாரம், வட கொரியா மற்றும் சீனாவிற்கு பதிலாக முதலில் ரஷ்யாவை மத்தியில் நிறுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

மோசமான பொருளாதார நெருக்கடி, பங்குச்சந்தையின் ஏற்றயிறக்கம் மற்றும் சீரழிந்து வரும் வாழ்க்கை நிலைமைகளுக்கு தொழிலாள வர்க்கத்திடையே அதிகரித்து வரும் எதிர்ப்பு ஆகியவற்றை முகங்கொடுத்து வருகின்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் ஸ்திரமற்றத்தன்மையோடு, வெளியுறவுக் கொள்கை மீது நடந்து வரும் கடுமையான அரசியல் உட்பூசல்களும் சேர்ந்துள்ளன. இவற்றால் போர் நடத்தப்படாமல் போகலாம் என்பதற்குப் பதிலாக, இத்தகைய கூர்மையான அரசியல் மற்றும் சமூக பதட்டங்களை ஒரு வெளிப்புற எதிரிக்கு எதிராக திருப்பிவிடும் பெரும்பிரயத்தன முயற்சியில் வட கொரியா மீது ஓர் இராணுவ தாக்குதலை ட்ரம்ப் தொடங்கக்கூடும்.

வட கொரியாவுடனான மோதலை சமாதானமான முறையில் தீர்க்கும் நேரம் கடந்து சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார். வட கொரியாவை விட்டோடி வந்தவர்களைக் கடந்த வெள்ளியன்று சந்தித்த ட்ரம்ப் —இதுவே கூட ஒரு சமாதானமான தீர்வைப் பலவீனப்படுத்தும் ஓர் ஆத்திரமூட்டல் என்பதோடு— வட கொரியாவை எதிர்கொள்ள தவறியதற்காக முந்தைய நிர்வாகங்களை மீண்டும் குறைகூறி, “எங்களுக்கு வேறு வழி இல்லை,” என்று அப்பட்டமாக அறிவித்தார்.

துணை-ஜனாதிபதி மைக் பென்ஸ் குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களுக்காக தற்போது தென் கொரியா செல்கிறார், என்றாலும் அவரது இந்த பயணத்தை அலாஸ்காவில் உள்ள அமெரிக்க ஏவுகணை தகர்ப்பு தளங்களைப் பார்வையிடவும், ஜப்பானிய மற்றும் தென் கொரிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவும் பயன்படுத்துவார். வட கொரியா மீது "அதிகபட்ச அழுத்தம்" அளிக்கும் அமெரிக்க நடவடிக்கையில் எந்த தளர்வும் இருக்காது என்பதை உறுதிப்படுத்துவதற்கே பென்சின் இந்த பயணம் என்பதை வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தினார். “இதற்கு முன்னரே இவை அனைத்தையும் நாங்கள் பார்த்துவிட்டோம்,” என்று கூறிய அந்த அதிகாரி, “வடக்கிற்கு நிறைய அவகாசத்தை வழங்கிய, பயனற்ற பேச்சுவார்த்தை காலத்திற்கு இட்டுச் சென்ற வடக்கின் போலிநயவுரை உடனான முயற்சிகளை இதற்கு முன்னரே நாங்கள் பார்த்துவிட்டோம்,” என்று கூறினார்.

ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளுக்குப் பின்னர், அமெரிக்காவும் தென் கொரியாவும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள Foal Eagle மற்றும் Key Resolve எனப்படும் பாரிய கூட்டு போர் சாகசங்களைத் தொடரும். கடந்த ஆண்டு பயிற்சிகளில் வட கொரியா உடனான போர் ஒத்திகை என்பது வெகு குறைவாகவே மூடிமறைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் குறிப்பிடத்தக்க கப்பற்படையின் பிரசன்னம் மற்றும் அதிநவீன அமெரிக்க போர்விமானங்கள் ஆகியவற்றுடன், 300,000 க்கும் அதிகமான துருப்புகள் ஈடுபட்டன. கொரிய தீபகற்பத்தை எளிதாக தாக்கும் தொலைவில் குவாமில், பென்டகன் சமீபத்தில்தான் அதன் அணுஆயுதமேந்தக்கூடிய B-52 மற்றும் B-2 மூலோபாய குண்டுவீசிகளை நிலைநிறுத்தியது.

விக்டர் சா அவரது வாஷிங்டன் போஸ்ட் கருத்துரையில் குறிப்பிடுகையில், “இரத்தக்களரியான மூக்குடைப்பு" தாக்குதல் மட்டுமே பரிசீலனையின் கீழ் இருக்கும் ஒரே இராணுவ விருப்பத் தெரிவு அல்ல என்பதை சுட்டிக் காட்டியிருந்தார். “நூறாயிரக் கணக்கான அமெரிக்கர்களை இல்லையென்றாலும், பத்தாயிரக் கணக்கான அமெரிக்கர்களை கொல்லக்கூடிய ஒரு போராக தீவிரமடையாமல், [வட கொரிய] அச்சுறுத்தலைக் கையாளும் ஒரு சக்தி வாய்ந்த இராணுவ தெரிவும் உள்ளது,” என்றவர் எழுதினார். முற்றுமுழுதான ஓர் அணுஆயுத தாக்குதல் மற்றும்/அல்லது பதிலடி கொடுக்கும் வட கொரியாவின் தகைமையை இல்லாதழிக்கும் அணுஆயுதமல்லாத தளவாடங்களுடன் தாக்குதல் என்பதே ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலுக்கு இருக்கும் ஒரே இராணுவ மாற்றீடாகும்.

இராணுவ அர்த்தத்தில் கூறுவதானால், கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட ட்ரம்ப் நிர்வாகத்தின் அணுஆயுத தோரணை மீதான ஆய்வறிக்கை, அதுபோன்றவொரு தாக்குதலையே முன்னிறுத்திக் காட்டுகிறது. அது குறிப்பிடுகிறது, அமெரிக்கா மீதோ அல்லது அதன் கூட்டாளிகள் மீதோ வட கொரியாவின் எந்தவொரு அணுஆயுத தாக்குதலையும் "ஏற்றுக் கொள்ள முடியாது என்பதோடு, அது அந்த ஆட்சியின் முடிவில்தான் போய் முடியும். கிம் ஆட்சி அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி தப்பிப்பதற்கான எந்தவொரு சூழலும் அங்கே இல்லை.”

ஒரு பிழையோ அல்லது தவறான கணக்கீடோ வட கொரியாவை "முழுமையாக அழிக்க" ட்ரம்ப் உத்தரவிடுவதற்கு இட்டுச் செல்லும் அபாயம், ஓர் அணுஆயுதந்தாங்கிய ஏவுகணை வந்து கொண்டிருக்கிறது என்று கடந்த மாதம் ஹவாய் இல் வெளியான தவறான எச்சரிக்கை ஒலியால் எடுத்துக்காட்டப்பட்டது. அனைத்திற்கும் மேலாக, வியட்நாமில் நேரடி அமெரிக்க இராணுவ தலையீட்டுக்கு சாக்குபோக்காக பயன்படுத்தப்பட்ட 1964 டொன்கின் வளைகுடா சம்பவம் போன்று, போரை நியாயப்படுத்த சம்பவங்களை இட்டுக்கட்டும் நீண்ட வரலாறை அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டுள்ளது.

வட கொரியா மீதான எந்தவொரு முன்கூட்டிய அமெரிக்க இராணுவ தாக்குதலும் உலகெங்கிலும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி, ஒரு கொந்தளிப்பான போர்-எதிர்ப்புணர்வைத் தூண்டும். ஆனால் ஏற்கனவே பரந்தளவில் நிறைந்துள்ள போர் எதிர்ப்புணர்வானது, போருக்கு மூலகாரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக திரும்பிய ஒரு சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.