ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French president Macron prepares to privatize railways

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் புகையிரதசேவையை தனியார்மயமாக்க தயாரிப்பு செய்கிறார்

By Anthony Torres
13 February 2018

பொதுத் துறை தொழிலாளர்களுக்கு வாழ்நாள் வேலை உத்தரவாதங்களை முடிவுக்குக் கொண்டுவரவிருப்பதை அறிவித்த பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் புகையிரதசேவை தொழிலாளர்களுக்கும் இதே உத்தரவாதங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார். இது, இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாஜி ஆக்கிரமிப்பில் இருந்தான விடுதலையின் போது நிலைநாட்டப்பட்ட இன்னுமொரு சமூக உரிமையாகும்.

பிரெஞ்சு புகையிரதசேவையை தனியார் போட்டிக்காய் திறந்து விடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கட்டளையிட்டதன் மத்தியில் புகையிரத போக்குவரத்தின் ஒரு மூலோபாய மறுநோக்குநிலை குறித்து, அக்டோபரில் பிரதமர் எட்வார்ட் பிலிப்பினால் அமைக்கப்பட்ட குழுவின் ஒரு அறிக்கையை, ஏர் பிரான்சின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜோன்-சிறில் ஸ்பினெற்றா (Jean-Cyril Spinetta) தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகள் 2023 டிசம்பர் 25 முதலாக பிராந்திய புகையிரதசேவை போக்குவரத்தும், 2020 டிசம்பர் 14க்குள்ளாக அதிக-வேக இரயில்களும் (TGV) தனியார் போட்டிக்குத் திறந்து விடப்பட எதிர்பார்க்கப்படுகின்றன. SNCF க்கான (பிரெஞ்சு தேசிய புகையிரத சபை) ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளையை பிரெஞ்சு உள்நாட்டு சட்டமாக மாற்றுவதற்கான ஒரு மசோதாவை பிரெஞ்சு அதிகாரிகள் வரைவு செய்து கொண்டிருக்கின்றனர்.

ஸ்பினெற்றாவின் அறிக்கை இன்னும் வெளியிடப்பட்டிருக்கவில்லை, ஆயினும், மக்ரோனால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்ற பல்வேறு தெரிவுகளைக் குறித்து Le Parisien ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறது. ‘SNCF இல் சமூக மோதலின் அதிகப்பட்ச ஆபத்து’ என்ற தலைப்பிலான அதன் கட்டுரையில், SNCF தனியார்மயமாக்கப்படும் சாத்தியத்தை அது குறிப்பிடுகிறது. தொழிற்துறை மற்றும் வணிகத்தன்மையுடைய பொதுச்சேவை நிறுவனம் (Public Establishment of Industrial and Commercial character - EPIC) என்ற அதன் நடப்பு அந்தஸ்து, அது போட்டிக்கு இடைஞ்சலாக இருப்பதாகக் கருதுகின்ற ஐரோப்பிய ஒன்றியத்தால் அச்சுறுத்தல் பெறுகின்றது என்கிறார் சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் பிரதிநிதியான ஜில் சவாரி. இது SNCFக்கு திவால்நிலையில் இருந்து அதனைப் பாதுகாக்கின்ற ஒரு சகலவிதத்திலுமான உத்தரவாதத்தை அளிக்கிறது. அது Caisse des dépôts [அதாவது பிரெஞ்சு அரசாங்கத்தின்] பகுதியான உரிமை கொண்ட ஒரு தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டால், அது பொதுத் துறை அந்தஸ்தை பாதுகாத்துக் கொள்கின்ற அதேநேரத்தில் ஐரோப்பிய விதிமுறைகளுக்கும் இணங்கியதாய் இருக்கும்.”

SNCF இன் தனியார்மயமாக்கமானது, புகையிரதசேவை தொழிலாளர்களுக்கான சட்டப்பிரிவு ஒழிக்கப்படுவதுடன் கைகோர்த்து நடக்கவிருக்கிறது.

Le Parisien குறிப்பிடுகிறது, “இது மிகவும் வெடிப்பான பிரச்சினையாகும். 1950 உத்தரவாணை ஒன்றின் அடிப்படையில், இப்பிரிவு தொழிலாளர் சட்டத்தை பூரணப்படுத்தியது, ஊதியங்கள், விடுமுறைகள், தொழில் பதவிப்படிநிலைகள், மற்றும் தொழிற்சங்க சட்டம் ஆகியவை தொடர்பாக புகையிரதசேவை தொழிலாளர்களுக்குத் தனியான விதிகளை வரையறை செய்கிறது. இது புகையிரதசேவை தொழிலாளர்களுக்கு வாழ்நாள் வேலை உத்தரவாதமளிக்கின்ற ஒரு அனுகூலமான சட்டஷரத்தாகும்....இது ஒருவிதத்தில் ஆண்டுதோறும் SNCFக்கான ஊதியங்களுக்கான ஒதுக்கீடை தானாக 2.4 சதவீதம் வரை உயர்த்தக் கூடிய புகையிரத தொழிலாளர்களது  ஒரு புனிதமான சட்டப்பிரிவெனும் தடைக்கட்டை தகர்த்தெறிவதாகும்....”

ஆரஞ்சு (முன்னாளில் பிரான்ஸ் டெலிகாம்) மற்றும் அஞ்சல் அலுவலகத்தில் போல, இந்த சட்டப்பிரிவானது SNCF இன் புதிய பணியமர்த்தங்களுக்காய் ஒடுக்கப்படலாம், அதன் உள்ளடக்கம் அகற்றப்படலாம், அல்லது ஒட்டுமொத்தமாக அகற்றப்படலாம். சென்ற கோடையில் மக்ரோன் இவ்வாறு அறிவித்தார்: “உங்களைப் பாதுகாப்பது என்பதன் அர்த்தம் உங்களது சட்டப்பிரிவையோ அல்லது உங்களது நேற்றைய வேலையையோ பாதுகாப்பது என்பதல்ல, மாறாக ஒரு தனிநபராக உங்களது நாளைய வேலையை நீங்கள் பெற இயலும் வண்ணம் உங்களைப் பாதுகாப்பது என்பதாகும்.”

புகையிரதசேவையில் சுதந்திரமான போட்டி குறித்த கட்டளையை திணிப்பதற்காக, மக்ரோன் SNCF இன் கடன்களை அரசு வாங்குவதற்கு கடுமையான நிபந்தனைகளை விதித்து தொழிலாளர்களை மிரட்ட முயற்சித்தார். “வெளிப்படையாகப் பேசுவோம், நாங்கள் கடன்களை வாங்கினால் SNCF எந்த புதிய சமூக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள விருப்பத்துடன் இருக்கிறது? என்பதைக் கேட்போம்…. சீர்திருத்தங்கள் விடயத்தில், சட்டப் பிரிவுகள் விடயத்தில், நெகிழ்வுத்தன்மை விடயத்தில், ஓய்வூதியங்கள் விடயத்தில் SNCF இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம்.”

புகையிரதசேவை தொழிலாளர்களது சட்ட அந்தஸ்தை அகற்ற நடவடிக்கை எடுப்பதன் மூலமாக, 2019க்காய் அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய வெட்டுக்களுக்கும் மக்ரோன் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார். உண்மையில், ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், பிரான்சில் இருக்கக் கூடிய கிட்டத்தட்ட 30 வகையான வெவ்வேறு ஓய்வூதியத் திட்டங்களுக்குப் பதிலாக ஒன்றுபட்டு போகும்போது பெற்றுக் கொள்ளத்தக்கதான ஒரு ஓய்வுதிய முறையைக் கொண்டு பிரதியிட வாக்குறுதியளித்தார். இவ்வாறாக, 2007 இல் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் கீழ் ஏற்கனவே வெட்டப்பட்டிருந்த புகையிரதசேவை தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமானது அழிக்கப்படவிருக்கிறது, ஒட்டுமொத்த மக்களின் ஓய்வூதியங்களும் ஒரே அடி-மட்ட அளவிற்கு வெட்டப்பட இருக்கிறது.

புகையிரதசேவை தொழிலாளர்களது சட்ட உரிமையை அகற்றுவதற்கான திட்டங்கள் ஐரோப்பாவெங்கிலும் 1917 அக்டோபர் புரட்சிக்கும் 1945 இல் நாஜிசத்தின் மீதான வெற்றிக்கும் பிந்தைய காலத்தில் தொழிலாள வர்க்கத்தால் சாதிக்கப்பட்டிருந்த சமூக தேட்டங்கள் அனைத்தின் மீதும் ஐரோப்பாவெங்கிலும் தொடுக்கப்படுகின்ற ஒரு பரந்த தாக்குதலின் பகுதியாகும். எல்லாவற்றிற்கும் மேலாக இது ஐரோப்பிய மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் ஒரு ஆழமான மற்றும் தப்பிக்கமுடியாத நெருக்கடியின் விளைபொருளாகும். பல பிரெஞ்சு நிறுவனங்களை போல, உலகப் போட்டிக்கு முகம்கொடுத்தநிலையில் துரிதமாக தோல்விகண்டு வருகின்ற SNCF இன் உற்பத்தித் திறனையும் போட்டித்திறனையும் ஊக்குவிப்பதற்காக என்ற பிரச்சாரத்தோடு புகையிரதசேவை தொழிலாளர்களது சட்டப்பாதுகாப்பை தகர்த்தெறிவதற்கு அரசாங்கம் நோக்கம் கொண்டிருக்கிறது.

லியோன் புளூம்மின் அரசாங்கம் 1937 இல் ஒரு அரசு-தனியார் கூட்டு நிறுவனமாக SNCF ஐ உருவாக்கியது, அதன் 51 சதவீதம் அரசு-உரிமையானதாக இருந்தது, அதன்மூலம் தனியார் புகையிரதசேவை உரிமையாளர்களது பில்லியன் கணக்கான ஃபிராங்குகள் இழப்பை பொதுமக்கள் தலையில் கட்டியது. அதேசமயத்தில், அவரது அரசாங்கம் ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பிரான்சின்ஸ்கோ ஃபிராங்கோவின் பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எதிரான ஸ்பானியத் தொழிலாளர்களது புரட்சிகரப் போராட்டங்களை தனிமைப்படுத்தி, அத்துடன் பிரான்சிலும் வேலைநிறுத்தங்களை கொடூரமாக ஒடுக்கியது. இந்த எதிர்ப்புரட்சிகர கொள்கை முற்றிலும் திவாலானதாக மூன்று வருடங்களுக்குப் பின்னர், பிரான்சின் மீதான நாஜிக்களின் படையெடுப்பின் மூலமாகவும் பிரெஞ்சு முதலாளித்துவம் நாஜிக்களுடன் ஒத்துழைத்ததன் மூலமாகவும் நிரூபணமானது.

நாஜி ஆக்கிரமிப்புக்கான எதிர்ப்பில் புகையிரதசேவை தொழிலாளர்கள் ஒரு முக்கியமான பாத்திரம் வகித்தனர். யூதர்களை அல்லது எதிர்ப்புப் போராளிகளை மரண முகாம்களுக்கு அனுப்ப நாஜிக்களுக்கு SNCF உதவிக் கொண்டிருந்த நிலையில், புகையிரதசேவை தொழிலாளர்களது முக்கியமான பிரிவுகள் எதிர்ப்பில் இணைந்து கொண்டன. சுமார் 800 SNCF தொழிலாளர்கள் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமைக்காக நாஜிக்களால் சுடப்பட்டனர். சுமார் 1,200 பேர் சதி அல்லது கீழ்ப்படியா செயல்களுக்காக வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர், 2,361 பேர் தோட்டாக்களால், கண்ணிவெடிகளால் அல்லது வான்வழி குண்டுவீச்சுகளின் மூலமாய் கொல்லப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனியை சோவியத் ஒன்றியம் தோற்கடித்ததற்குப் பின்னரும் பிரான்ஸ் விடுதலை பெற்றதற்குப் பின்னரும், பொதுத் துறை தொழிலாளர்கள் மற்றும் புகையிரதசேவை தொழிலாளர்களின் இந்த சட்ட அந்தஸ்துகளுக்கு உத்தரவாதம் அளிக்கப் பெற்றிருந்தது. இப்போது கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுக்குப் பின்னர், புகையிரதசேவை தொழிலாளர்களின் மீதான மக்ரோனின் தாக்குதல்கள் இந்த சமூக உரிமைகளை அகற்றுவதற்கு நோக்கம் கொண்டிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் போது ஸ்தாபிக்கப்பட்ட சமூக உரிமைகளுக்கு எதிரான இந்தத் தாக்குதலானது ஸ்ராலினிசத்தின் மீதான, குறிப்பாக விடுதலையின் சமயத்தில் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மேற்கொண்ட வர்க்க-ஒத்துழைப்புவாதக் கொள்கையின் மீதான ட்ரொட்ஸ்கிச விமர்சனத்தின் இன்னுமொரு வரலாற்றுவழியான ஊர்ஜிதப்படுத்தலாகும். அது முதலாளித்துவ வர்க்கத்தை அதிகாரத்தில் விட்டு வைத்ததோடு, முதலாளித்துவத்தை தூக்கிவீசி சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் ஒரு போராட்டத்தை தடுத்துநின்ற மட்டத்திற்கு, இந்த சமூக உரிமைகள் எதுவுமே உண்மையில் பாதுகாப்புடன் இருந்திருக்கவில்லை.

புகையிரதசேவை தொழிலாளர்களுக்கு எதிரான மக்ரோனின் தாக்குதலானது, தசாப்தங்களாக கட்டவிழ்ந்து வருகின்ற வர்க்கப் போராட்டத்தின் சமரசமற்ற தன்மையை சுட்டிக்காட்டுகிறது. நாஜிக்களின் கீழும் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் கீழும், முதலாளித்துவம் இரண்டாம் உலகப் போரின் போதும் ஆயிரக்கணக்கான புகையிரதசேவை தொழிலாளர்களைப் படுகொலை செய்தது; இன்று தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலமாக, ஆளும் வர்க்கமானது இந்தத் தொழிலாளர்களின் கல்லறைகளின் மீது எச்சில் உமிழ்ந்து கொண்டிருக்கிறது.

2008 நிதி நெருக்கடிக்குப் பின்னர் வங்கிப்பிணையெடுப்புகளின் மூலமாக டிரில்லியன் கணக்கான யூரோக்களை தனக்குத்தானே கையளித்துக் கொண்ட நிதியப் பிரபுத்துவமானது ஐரோப்பாவெங்கிலும் அடிப்படை சமூக உரிமைகள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரும் பொருளாதாரமான ஜேர்மனியில், ஜேர்மனியின் மறுஆயுதபாணியாகலுக்கு தொழிலாளர்களை நிதியளிக்கச் செய்வதற்காக தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தத் தயாரிப்பு செய்கின்ற விதமாக ஒரு பழமைவாதிகள்/சமூக ஜனநாயக “பெரும் கூட்டணி” அரசாங்கத்தை ஒன்றுகூட்ட ஆளும் உயரடுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. கிரீஸில், “தீவிர இடதுகளது கூட்டணி”யின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸின் போலி-இடது அரசாங்கமானது அரக்கத்தனமான ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

தொழிலாளர்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்கவும், தொடர்ச்சியான வங்கிப் பிணையெடுப்புகளின் சமயத்தில், சொல்லப்படாத பில்லியன் கணக்கான யூரோக்களை ஆளும் உயரடுக்கினர் குவித்த அதேநேரத்தில், நீண்டகாலமாய் தேங்கி நிற்கின்ற தமது ஊதியங்களை மேம்படுத்துவதற்கும் போராடுவதற்கு விரும்புகின்றனர். ஆயினும், போலி-இடதுகளையும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும் -இது மக்ரோன் அவமதித்து விட்டதாக ஒருபுறம் புகார் தெரிவித்துக் கொண்டே அதேசமயத்தில் அவருடனும் வணிகக் குழுக்களுடனும் தாக்குதல்களை பேச்சுவார்த்தை நடத்துகிறது- எதிர்த்து மட்டுமே இது செய்யப்பட முடியும்.

இந்த சக்திகள் மக்ரோனையோ அல்லது ஐரோப்பாவெங்குமான வேறெந்த பிற்போக்கு அரசாங்கங்களையுமோ தடுத்து நிறுத்தப் போவதில்லை. தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்டு, ஐரோப்பாவெங்கிலும் தொழிலாளர்களது போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சர்வதேச போராட்டத்தை நடத்துகின்ற தொழிலாள வர்க்கத்தின் அமைப்புகள் உருவாக்கப்படுவது இதற்கு அவசியமாக இருக்கிறது. தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கும் ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தைக் கட்டியெழுப்புவதற்குமான ஒரு வேலைத்திட்டத்திற்காகப் போராடுகின்ற தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர முன்னணிப் படையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டுவதற்கான ஒரு உண்மையான சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டமே இந்தப் போராட்டத்திற்கான அடிப்படையாகும்.