ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The 2018 Munich Security Conference and the emerging conflict between the US and Europe

2018 மூனீச் பாதுகாப்பு மாநாடும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே மேலெழுந்து வரும் மோதலும்

Alex Lantier
22 February 2018

கடந்த வாரயிறுதியில் நடந்துமுடிந்த மூனீச் பாதுகாப்பு மாநாடு (MSC) ஏகாதிபத்திய சக்திகளுக்கும், ரஷ்யா மற்றும் சீனாவுக்கும் இடையே அதிகரித்து வருகின்ற, வன்முறையாக வெடிக்கக்கூடிய மோதல்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருந்தது. உலகம் அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஏற்படக்கூடிய ஒரு போருக்கு எந்தளவுக்கு நெருக்கத்தில் உள்ளது என்பதை மூனிச் பாதுகாப்பு மாநாட்டின் முதன்மை அறிக்கை எடுத்துக்காட்டியது, இது தலைவர் வொல்ஃப்காங் இஷிங்கரின் அறிமுக உரையில் உள்ளடங்கி இருந்தது, அவர் எச்சரித்தார் “உலகம் ஒரு முக்கியமான மோதலின் விளிம்புக்கு நெருக்கமாக —மிக மிக நெருக்கமாக!— வந்துள்ளது,” அந்த அறிக்கை வட கொரியாவுக்கு எதிரான அமெரிக்க போர் அச்சுறுத்தல்கள், சீனாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுடனான கருத்து முரண்பாடுகள் மற்றும் ஈரானுடன் அமெரிக்காவின் மோதல் ஆகியவற்றை பட்டியலிட்டதன் மூலம் இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்தியது.

இருப்பினும் ரஷ்யா, சீனா மற்றும் ஈரானின் வடிவில் ஒரு பொதுவான "வெளி அச்சுறுத்தல்" குறித்த எல்லா பேச்சுக்களும் இருந்தாலும், ஒரு சுதந்திரமான ஐரோப்பிய இராணுவ ஆற்றலை உருவாக்குவதற்கான திட்டங்களை மையப்படுத்தி இருந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே விரிவடைந்து வரும் பிளவால் மூனீச் பாதுகாப்பு மாநாடு குணாம்சப்பட்டிருந்தது. நிரந்தர கட்டமைப்புக்கான கூட்டுறவு (PESCO) உடன்படிக்கையால் தொடங்கி வைக்கப்பட்ட இது, “அதிக ஐரோப்பிய, அதிக இணைப்புடன், அதிக ஆற்றலுடன், எதிர்காலத்திற்கான ஐரோப்பிய ஆயுதப்படை படைகளைக் கட்டமைத்தல்,” என்ற மூனீச் பாதுகாப்பு மாநாட்டு இரண்டாம் ஆவணத்தில் விவரிக்கப்பட்டது.

இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஏகாதிபத்திய உலகின் ஆதிக்க சக்தியாக வாஷிங்டன் மேலெழுந்த பின்னர், அது உருவாக்கிய உலக முதலாளித்துவ அமைப்புகள் வரலாற்றுரீதியில் வேகமாக உடைந்து வருகின்றன என்பதை மறைப்பது சாத்தியமில்லை.

வெறும் ஒன்பது மாதங்களுக்கு முன்னர், நேட்டோ ஒரு காலாவதியான அமைப்பு என்ற தமது கருத்தை அறிவித்து ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு விடையிறுக்கையில், பேர்லின் இப்போது வாஷிங்டனிடம் இருந்து ஒரு சுதந்திரமான வெளியுறவு கொள்கையைப் பின்பற்றுகிறது என்றார். அப்பெண்மணி கூறினார், எதிர்வரவிருக்கும் காலத்தில், “நமக்காக நாம் சண்டையிட வேண்டியிருக்கும்,” என்றார்.

பேர்லின் மற்றும் பாரீஸ் தலைமையிலான 2018 மூனீச் பாதுகாப்பு மாநாட்டில் அறிவிக்கையில், அமெரிக்க மேலோதிக்கத்தில் உள்ள நேட்டோ கட்டமைப்புகளுக்காக [ஜேர்மனி] அதன் சொந்த நடவடிக்கைகளை இனியும் அது கட்டுப்படுத்தி கொள்ளாது என்றும், அதன் சொந்த போர் எந்திரத்திற்கு நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை வருடந்தோறும் செலவிட்டு, ஒரு சுதந்திரமான உலக சக்தியாக ஆவதற்கு செயல்படும் என்றும் அறிவித்தார். மூனீச் பாதுகாப்பு மாநாட்டுக்கு முன்னதாக, பேர்லின் மற்றும் மாட்ரிட் இரண்டுமே இராணுவச் செலவினங்களை இரட்டிப்பாக்கும் திட்டங்களை அறிவித்திருந்தன, மேலும் 2018-2024 க்கான 300 பில்லியன் யூரோ இராணுவ வரவு-செலவு திட்டத்தை பாரீஸ் அறிவித்தது. அணுஆயுதங்களுக்கு பல பத்து பில்லியன் கணக்கில் செலவிட இருப்பதும் இந்த 35 சதவீத உயர்வில் உள்ளடங்கும்.

இராணுவ செலவை அதிகரிக்குமாறும் மற்றும் உலகை கண்காணிக்கும் சுமையில் ஐரோப்பா அதன் பங்கை ஏற்குமாறும் அமெரிக்கா விடுத்த கோரிக்கைகளைச் சாதகமாக்கி கொண்ட ஐரோப்பிய ஒன்றிய சக்திகள், இப்போது ஒரு புதிய பல-துருவ உலகில் தங்களுக்குரிய சரியான இடத்தை எடுத்துக்கொள்ளுமென அவை அறிவித்தன. மூனீச் பாதுகாப்பு மாநாட்டு அறிக்கை குறிப்பிட்டது: “இந்த தாராளவாத ஒழுங்கமைப்பில் உள்ள ஏனைய பங்குதாரர்கள் சர்வதேசவாத ஆங்கிலோ-சாக்சோன்களின் செல்வாக்கைக் குறைக்க முயலுவார்கள் என்பதே 'அமெரிக்கா முதலிடத்தில்' மற்றும் பிரிட்டன் வெளியேற்றம் ஆகியவற்றிற்கு ஏற்படக்கூடிய முதல் விளைவாக இருக்கும்… ஆசிய-பசிபிக்கில் புதுப்பிக்கப்பட்ட 'நான்முக கூட்டு' [அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா] போன்ற, தாராளவாத ஜனநாயகங்களின் மற்ற குழுக்கள் செய்யக் கூடியதைப் போலவே, ஐரோப்பிய ஒன்றியம் ஒருங்கிணைந்து இந்த தாராளவாத சர்வதேச ஒழுங்கமைப்பை ஸ்திரப்படுத்துவதில் பாத்திரம் வகிக்கும்.”

ஐரோப்பிய ஒன்றியத்தை ஓர் உலக சக்தியாக ஆக்குவதற்கான மூனீச் பாதுகாப்பு மாநாட்டு அறிக்கையின் முன்மொழிவுகள், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உடனான கூட்டணியில் செயல்பட்டு, கிறிஸ்துவ ஜனநாயக கட்சிகள் மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் ஒரு புதிய பெரும் கூட்டணி அரசாங்கம் அமைக்க உத்தேசித்து ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கையில் அதன் எதிரொலிப்பைக் காண்கிறது. இந்த உடன்படிக்கை, பால்கன்கள், ரஷ்யா, துருக்கி, ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, பாரசீக வளைகுடா மற்றும் வட ஆபிரிக்கா என ஐரோப்பிய ஒன்றியம் மேலாளுமை செலுத்துவதற்கு மலைப்பூட்டும் இடங்களை வரைந்தளிக்கிறது. அதாவது ஹிட்லர் வெற்றியின் உச்சத்தில் இருந்த போது, மூன்றாம் குடியரசு நோக்கம் கொண்டிருந்ததை விட மிகப் பெரியளவிலான செல்வாக்கு பகுதிகளைக் கட்டமைக்க ஐரோப்பிய ஒன்றியம் நோக்கம் கொள்கிறது. பிரான்சில் கட்டாய இராணுவச் சேவைக்குத் திரும்புவதற்கான மக்ரோனின் அழைப்பும் மற்றும் சிரியாவில் குண்டுவீசுவதற்கான அவரது அச்சுறுத்தல்களும், மிகப் பெரியளவிலான ஆயுதங்களுடன் இந்நோக்கங்களைப் பின்தொடர்வதற்கான ஐரோப்பிய ஒன்றிய திட்டங்களைச் சமிக்ஞை செய்கின்றன.

இத்திட்டங்கள் அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டீஸின் ஒரு செய்தி தொடர்பாளரிடம் இருந்து ஓர் எச்சரிக்கையை தூண்டியது. முன்மொழியப்பட்ட சில நடவடிக்கைகள் "நேட்டோவிலிருந்து ஆதாரவளங்கள் அல்லது தகைமைகளையும் நீக்கிக் கொள்ளும்" அபாயத்தைக் கொண்டுள்ளது என வாஷிங்டன் கவலைக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய இராணுவ கூட்டறவு நேட்டோ கூட்டணியுடன் போட்டியிடாதென எழுத்துப்பூர்வ உத்தரவாதங்களை மாட்டீஸ் அவரே ஐரோப்பிய சக்திகளிடம் கேட்டார்—இதை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துவிட்டது.

1991 இல் ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், உலக விவகாரங்களில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தைப் பேணுவதற்கு அமெரிக்க கொள்கை சவாலுக்கிடமற்ற இராணுவ அந்தஸ்தைப் பயன்படுத்தி வந்துள்ளது. அமெரிக்க திட்ட வகுப்பாளர்கள், 1992 ஆவணம் ஒன்றில், வாஷிங்டன் அதன் “சாத்தியமான போட்டியாளர்களிடம் அவர்கள் மிகப் பெரிய பாத்திரம் வகிக்கவோ அல்லது மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை ஏற்கவோ வேண்டாமென" அவர்களை சமாதானப்படுத்தி வைக்க வேண்டும், மற்றும் “நமது தலைமைக்குச் சவால் விடுப்பதில் இருந்தும் அல்லது ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பை மாற்ற முயல்வதில் இருந்தும் அவர்களை அதைரியப்படுத்துமாறும்" வலியுறுத்தி இருந்தனர்.

இது தோல்வியடைந்துள்ளது. பேர்லின்-பாரீஸ் அச்சின் அடிப்படையில், ஐரோப்பிய ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் சக்தி வாய்ந்த கன்னைகள், உலக மேலாதிக்க சக்தியாக கேள்விக்கிடமில்லாததாக இருந்த வாஷிங்டனின் பாத்திரத்திற்கு பகிரங்கமாகவே இப்போது சவால்விடுத்து வருகின்றன.

இத்தகைய இராணுவ பதட்டங்களுக்கு இடையே, அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் கடுமையாக மோசமடைந்துள்ளன. ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையில் அமெரிக்காவின் மாற்றத்தை ஏற்க வேண்டும் அல்லது புதுப்பிக்கப்பட்ட தடையாணைகளை முகங்கொடுக்க வேண்டுமென்ற அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கையுடன் ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் உடன்பட மறுக்கின்றன, இவை ஈரானுடனான ஐரோப்பிய பெருநிறுவனங்களின் பில்லியன் டாலர் மதிப்பிலான வணிகத்தை பாதிக்கும். ஈரான் அணுசக்தி உடன்படிக்கை மீது மூனீச் பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல் அப்பட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அறிவித்தார்: “நாம் இந்த உடன்படிக்கையை ஒருமித்துத்தானே விவாதித்தோம். நாங்கள் இதை விட்டுக்கொடுக்க மறுக்கிறோம், அவ்வாறு நாங்கள் செய்ய மாட்டோம். அதற்கு பதிலாக, நாங்கள் எங்களின் அமெரிக்க நண்பர்களுக்கு கூறுவது இந்த உடன்படிக்கையைத் தோல்வியடைய விடாதீர்கள் என்பது தான்.”

எஃகு மீதான அமெரிக்காவின் 24 சதவீத வரிவிதிப்பு மறும் அலுமினியம் மீது 7.7 சதவீத வரி குறித்த அச்சுறுத்தல்களை ஐரோப்பிய ஆணைக்குழுவும் கண்டித்துள்ளதுடன், அமெரிக்க ஏற்றுமதிகள் மீது அதேபோன்ற நடவடிக்கை எடுக்க அச்சுறுத்தியது. அந்த அச்சுறுத்தல் மீதும் மற்றும் அமெரிக்காவுக்குள் தொழில்நுட்ப துறை முதலீட்டை ஈர்ப்பதை ஊக்குவிக்க பெருநிறுவன வரிகளை குறைப்பதென்ற ட்ரம்பின் நகர்வுகள் மீதும் தங்களின் ஒருமித்த விடையிறுப்பை விவாதிக்க, மூனீச் பாதுகாப்பு மாநாடு முடிந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர்கள் ஒன்றுகூடினர்.

ஜேர்மனியின் முன்னணி வணிக பத்திரிகை Handelsblatt கருத்துரைத்தது: “போர்கள் சிலவேளைகளில் தவறுதலாக தொடங்குகின்றன. சான்றாக, வரலாற்றாளர்கள் பெரும்பாலும் முதலாம் உலகப் போருக்கு முன்னோடியாக இருந்த நிலைமையை தூக்கத்தில் நடப்பவர்களின் தடுமாற்றத்துடன் ஒப்பிடுகிறார்கள். இது வர்த்தக போர்களில் இருந்தும் வேறுபட்டதல்ல. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவுக்கு இடையே இப்போது நடந்து வரும் வாய்வழி மீள்ஆயுதமயப்படுத்தல், ஒரு பகிரங்க வர்த்தக போராக, மலிவு விலை எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீதான மோதல்களாக தீவிரமடையும் அபாயமும் உள்ளது.”

வர்த்தகமும் இராணுவமும் பிரிக்கவியலாதவாறு பிணைந்துள்ளன. சந்தைகள் மற்றும் மூலோபாய செல்வாக்குக்கான ஓர் ஈவிரக்கமற்ற சண்டை, செல்வசெழிப்பான முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே கட்டவிழ்ந்து வருகின்றன. இந்த சண்டை போருக்கு இட்டுச் செல்லாமல் நீண்டகாலத்திற்கு இவ்வாறே தொடருமென நினைப்பது, வரலாற்றுக்கு எதிராக பெரும் பந்தயம் கட்டுவதாக இருக்கும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், முதலாம் உலக போருக்கும் மற்றும் அக்டோபர் 1917 புரட்சிக்கும் இட்டுச் சென்றதைப் போலவே, உலகை மீண்டும் பிளவுபடுத்த, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான ஓர் ஈவிரக்கமற்ற சண்டை எழுவதை, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ளது.

சர்வதேச தொழிலாள வர்க்கமே, திவாலான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு மாற்றீடாக எழும் சக்தியாக இருக்கும்.

ஏகாதிபத்திய போர் முனைவானது உலகெங்கிலும் பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தீவிரமடைந்து வரும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியுடன் கை கோர்த்து செல்கின்றன, அவர்களின் பார்வையில் முதலாளித்துவ அமைப்புமுறை அதிகரித்தளவில் மதிப்பிழந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க இளைஞர்கள் முதலாளித்துவத்திற்கு மாற்றாக கம்யூனிசம் அல்லது சோசலிசத்தை விரும்புவதாகவும், ஐரோப்பிய இளைஞர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இப்போதைய இந்த சமூக ஒழுங்கமைப்புக்கு எதிரான ஒரு பாரிய மேலெழுச்சியில் அவர்கள் இணையக்கூடும் என்பதையும் கடந்த ஆண்டு கருத்துக்கணிப்புகள் கண்டறிந்தன.

இந்த சம்பவங்கள் எல்லாம், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை முதலாளித்துவத்தின் இறுதி வெற்றியல்ல என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) வலியுறுத்தலை நிரூபிக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டில் தலைசிறந்த மார்க்சிஸ்டுகள் கண்டறிந்த முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளை —அதாவது உலக பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையே, மற்றும் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் தனியுடைமைக்கும் இடையிலான முரண்பாடுகளை—முதலாளித்துவம் கடந்து விடவில்லை. அதற்கு பதிலாக, தசாப்த காலமாக நெருக்கடியால் சீரழிக்கப்பட்ட பொருளாதாரங்களில் இருந்து, உறிஞ்சி எடுக்கப்பட்ட நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை, ஆளும் உயரடுக்குகள் உலகளாவிய ஒரு புதிய போர் முனைவிற்காக செலவிட்டு வருகின்றன.

தொழிலாளர்கள் மற்ற நாடுகளின் அவர்களது சகோதர சகோதரிகளிடம் இருந்து தங்களைப் பிளவுபடுத்திக் கொள்ளக் கூடாது. ரஷ்ய புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி 1934 இல், ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்து ஓராண்டுக்குப் பின்னர், குறிப்பிட்டவாறு, “போர் வரைபடத்தை அல்ல, மாறாக வர்க்க போராட்ட வரைபடத்தைப் பின்தொடர்வதே" நமது பணி என்றார். எதிர்விரோத போர் எந்திரங்களுக்கு நிதி வழங்குவதற்காக பின்பற்றப்படும் சமூக சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராகவும், போருக்கு எதிராகவும், ஏற்கனவே, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தினுள் பாரிய எதிர்ப்பு உள்ளது. ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதே தீவிரமடைந்து வரும் முதலாளித்துவ நெருக்கடிக்கு அவசியமான விடையிறுப்பாகும்.