ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French ruling elite brays for war in Syria amid US-UK threats against Russia

ரஷ்யாவுக்கு எதிரான ஐக்கிய இராஜ்ஜியம்-அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு மத்தியில் பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு சிரியாவில் போருக்காக ஓலமிடுகிறது

By Alex Lantier
15 March 2018

முன்னாள் பிரிட்டிஷ் உளவாளியான சேர்ஜி ஸ்கிரிபால் மர்மமான முறையில் நஞ்சூட்டப்பட்டதன் பின்னர், பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே ரஷ்யாவுடன் உறவுகளைத் துண்டிப்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், பிரெஞ்சு ஆளும் உயரடுக்கில் போர்க் கொள்கை தொடர்பான ஒரு விவாதம் எழுந்து கொண்டிருக்கிறது.

இந்த விவாதம் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் உள்ள இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கையை உள்ளடக்கியதாக இருக்கிறது. பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கட்டாய இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்புக்கு நெருக்குதலளித்து வருகின்ற நிலையில், கட்டாய சேர்ப்பு இராணுவங்கள் நிலைநிறுத்தப்படத்தக்க போர்களுக்கான நிலைமைகளை நேட்டோ உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மேயின் மிரட்டல்கள் காட்டுவதைப் போல, சம்பவங்கள் மத்திய கிழக்கிலான போரை நோக்கி மட்டுமல்ல, அணு-ஆயுத வல்லமை கொண்ட ஒரு எதிரியான ரஷ்யாவுடனும் ஒரு மோதலை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

பிரான்சில் நடக்கும் விவாதமானது, ஸ்கிரிபால் விவகாரத்தில் எந்த உருப்படியான விசாரணையும் நடைபெறும் முன்னதாகவே ரஷ்யாவுடனான ஒரு மோதலைத் தீவிரப்படுத்துவதற்கு மே எடுத்திருக்கும் முடிவின் பின்னாலிருக்கும் அரசியல் பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டுகிறது. இன்னும் தெளிவுபடுத்தப்படாத இந்த சம்பவத்தில் தீர்ப்பு கூறுவதற்கு விரைவதற்குப் பின்னால், ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த கன்னைகள் ரஷ்யா, துருக்கி மற்றும் சிரியாவைக் குறிவைத்து ஒரு இராணுவத் தீவிரப்படுத்தலை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதற்கு வேலை செய்து கொண்டிருக்கின்றன.

முதல் சமிக்கை முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டிடம் -இவர் 2013 இல் ரஷ்யா எதிர்த்தாலும் சிரியா மீது நேட்டோ போர் தொடுப்பதற்கு அழுத்தமளித்தார், அதன்பின் அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டாம் என்று முடிவெடுத்ததன் பின்னர் ஒரு அவமானகரமான பின்வாங்கலை அவர் மேற்கொள்ள நேரிட்டது- இருந்து திங்களன்று மாலை வந்தது. மக்கள்வெறுப்பைச் சம்பாதித்ததன் காரணமாக மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட வேண்டாம் என்ற முன்னுதாரணமற்ற முடிவை எடுத்து சென்ற ஆண்டில் பொதுவாழ்க்கையில் இருந்து ஓய்வெடுத்து வந்த அவர், Le Monde இல் போருக்கு அழைப்பு விடுப்பதுடன் தனது ஓய்வில் இருந்து திரும்பி வந்திருக்கிறார்.

ஹாலண்ட் இலக்குகளின் திகைப்பூட்டும் ஒரு பட்டியலை முன்வைத்தார். மக்ரோனின் கொள்கையை மறைமுகமாக குத்திக்காட்டிய அவர், ரஷ்யா குறித்தும் துருக்கி மற்றும் சிரியாவுடனான அதன் தொடர்புகள் குறித்தும் எச்சரித்தார்: “ரஷ்யா பல ஆண்டுகளாக மறுஆயுதபாணியாகிக் கொண்டிருக்கிறது, அது அச்சுறுத்துமேயானால், அதுவும் அச்சுறுத்தப்பட்டாக வேண்டும். சிரியாவில் உள்ள நமது குர்துக் கூட்டாளிகள் மீது குண்டுவீசுவதற்கு துருக்கியை அனுமதிப்பதன் மூலமாக, மாஸ்கோ நேட்டோவை பிளவுபடுத்தவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதிகப்பட்சம் ஒரு வருட காலத்திற்கு முன்பாக, விளாடிமிர் புட்டினுக்கு [ரஷ்ய ஜனாதிபதி] துருக்கியின் ஜனாதிபதி ரிசெப் தயீப் எர்டோகனுக்குப் பயன்படுத்துவதற்கு போதுமான கடுமையான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது. இப்போதோ, இந்த இரண்டு நாடுகளும் சிரியாவை பிரிப்பதில் உடன்பாடு கண்டிருக்கின்றன.”

பணயத்தில் இருப்பது சிரியா மட்டுமல்ல, உலக ஒழுங்கும் அதில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நிலையும் கூடத்தான் என்பதை ஹாலண்ட் வலியுறுத்தினார்: “பஷார் அல்-அசாத்திற்கு [சிரிய ஜனாதிபதி] எவ்வாறு பதிலளிப்பது என்பதை விடவும், விளாடிமிர் புட்டினுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதே பிரச்சினையாகும்... அபாயத்தின் முழு வீச்சையும் மேற்கு உணர்ந்தாக வேண்டும்.” புட்டினுடனான பேச்சுவார்த்தைக்கு மக்ரோன் விடுத்திருக்கும் அழைப்புகளை மறைமுகமாகக் குறிப்பிட்ட ஹாலண்ட், “புட்டினுடன் பேசுவது” என்பதன் அர்த்தம் “அவர் தனது நலன்களை எந்தத் தடைகளுமற்று முன்னெடுக்க அனுமதிப்பது” என்று அர்த்தமாகி விடக்கூடாது என்றும், ட்ரம்ப் முன்கணிக்க முடியாதவராக இருப்பதால் “நடவடிக்கை எடுக்கின்ற பொறுப்பு பிரான்ஸ், ஐரோப்பா மற்றும் நேட்டோவுக்கு” உரியதாக இருப்பதாகவும் மேலும் சேர்த்துக் கொண்டார்.

ரஷ்யாவைத் தாண்டி, சிரியாவில் கூத்தா மற்றும் அஃப்றின் பகுதிகளில் சிரிய மற்றும் துருக்கி விமானங்களுக்கு எதிராக வான் தடை மண்டலங்களை அமல்படுத்துவதற்கு, அதாவது இந்தப் பகுதிகளில் அந்த விமானங்கள் பறந்தால் அவற்றை சுட்டுவீழ்த்துவதற்கு, அழைப்பு விடுத்த அவர் பின்வருமாறு வினவினார், “நமது சொந்த கூட்டாளிகள் மீது தாக்குதல்கள் நடத்துகின்றதென்றால் துருக்கி நமக்கு என்னவிதமான கூட்டாளி?” மக்ரோனைக் குறிவைத்து அவர் மேலும் சேர்த்துக் கொண்டார், “நமது கூட்டணியின் அடிப்படையில் குர்துகளை நான் ஆதரித்தேனென்றால், அவர்களை இப்போதைய சூழ்நிலையில் அப்படியே விடக்கூடாது. பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சி மீது நான் கடுமை காட்டினேன் என்றால், எப்போதும் காட்டி வந்திருக்கிறேன் என்றால், அவர் தனது அரசியல் எதிராளிகளை அழித்தொழிப்பதற்கும் சொந்த நாட்டு மக்களை கொல்வதற்கும் அனுமதிக்கப்படக் கூடாது.”

ஹாலண்டின் கருத்துக்களுக்கு மக்ரோனிடம் இருந்து, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது முதலான அவரது செயல்வரலாற்றைப் பாதுகாக்கும் கடுமையான பதிலடி வந்தது: ”சென்ற மே மாதத்தில் இருந்து, பேச்சுவார்த்தையை மீட்டெடுப்பதன் மூலமாக, உடந்தையாக இல்லாமல் அதேசமயத்தில் பயனுள்ளதான விதத்தில், பிரான்ஸ் ஒரு சீரான மற்றும் ஒத்திசைவான கொள்கையைப் பின்பற்றி வந்திருக்கிறது. சிரியாவில் முந்தைய ஆண்டுகளில், ரஷ்யாவுடன் முழுப் பேச்சுவார்த்தை இல்லாதிருந்தமையானது நம்மை முன்னேற அனுமதித்திருந்ததா என்ன?”

2013 இல் களப் போரை அவர் தொடங்காத போது இப்போது அதற்கு அழைப்பு விடுப்பதற்காக ஹாலண்டின் மீது மக்ரோன், அவரின் பெயர் குறிப்பிடாமல், தாக்கினார்: “நாம் தெளிவாக இருக்க வேண்டும், பிரான்ஸ் சிரியாவில் இராணுவரீதியாக களத் தலையீடு செய்யாது. இன்று பாடமெடுக்கும் சிலர் இதே முடிவுகளையே எடுத்தனர் என்றே நான் நம்புகிறேன்.”

இருந்தபோதிலும், துருக்கியுடனான மோதலுக்கு ஆலோசனையளிக்கும் ஒருவர் தனது கேபினட்டிலேயே இருப்பதை மக்ரோன் விரைவில் காண நேரிட்டது. ஹாலண்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த வெளியுறவு அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன், அஃப்றின் இல் துருக்கியின் தலையீட்டை விமர்சனம் செய்தார், அவர் அறிவித்தார்: “IS க்கு எதிரான போராட்டம் தான் Levant பிராந்தியத்தில் நமது இராணுவத் தலையீட்டுக்கு பிரதான காரணமாகும். அது ஒரு தேசிய பாதுகாப்பு முன்னுரிமையாகும், துருக்கியின் நடவடிக்கையானது இறுதியில் சிரியாவில் எஞ்சியிருக்கும் IS படைகள் மீதான அழுத்தத்தை பலவீனப்படுத்தும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.”

Journal de Dimanche, பத்திரிகை ஸ்கிரிபால் விவகாரத்தில் “ஐரோப்பிய பதிலிறுப்பு” ஒன்றுக்கு அழைப்புவிடுத்தது, ஐரோப்பிய ஒன்றியம் மாஸ்கோவுக்கு எதிரான இலண்டனின் நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நெருக்குதலளித்தது. அது எழுதியது, “மாறாக பிரான்சும் ஜேர்மனியும் புட்டினுடன் ‘மனம் திறந்து’ விவாதிக்கின்றன, அவை அமைதியாக இனியும் இருக்க முடியாது. ரஷ்யா இத்தகைய நடத்தையைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளாக இன்னும் ஆழமான விரிசல்களை உண்டுபண்ண நாம் அனுமதிக்கக் கூடாது. இத்தாலி, கிரீஸ், ஹங்கேரி மற்றும் பிற சிறு நாடுகள் இன்னும் கூடுதலாய் ஊதாரித்தனமாக இருப்பதற்கு மாஸ்கோவினால் தூண்டில் போடப்பட்டு வருகின்றன. ஐரோப்பா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால் -இணையம் மற்றும் எரிசக்தி விடயங்களில் மட்டுமல்ல- அது ஒற்றுமையுடன் அதனைச் செய்தாக வேண்டும்.”

ஆளும் உயரடுக்கில் ஒரு கடுமையான மோதல் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. நேற்று, வலதுசாரி முன்னாள் பிரதமர் ஜோன்-பியர் ராஃபரான், மேயை விமர்சனம் செய்ததோடு இராணுவப் பதட்ட சாத்தியம் குறித்து எச்சரித்தார்.

அவர் தெரிவித்தார்: “விசாரணையின் எந்த முடிவுகளும் கிடைக்கும் முன்பே, ஒரு உறுதியான குற்றச்சாட்டை மேற்கொள்வதற்குத் தேவையான மிகத் துல்லியமான விடயங்கள் கிடைக்கும் முன்பே, திருமதி தெரசா மே இந்த எதிர்வினையில் வெகுதூரம் சென்றுவிட்டதாகவே நான் நம்புகிறேன்....பிரிட்டிஷ் மக்களை எச்சரிக்கை செய்து அவர்களின் கருத்துக்கு விண்ணப்பம் செய்வதற்கு திருமதி. தெரசா மே ‘நாங்கள் தாக்கப்பட்டால் பதில் கொடுப்போம்’ என்று கூறும்போது, இயல்பாகவே ரஷ்யர்களும் ‘நீங்கள் பதில்கொடுத்தால், நாங்களும் உங்கள் பதிலுக்கு பதில் கொடுப்போம்’ என்பார்கள். இதுதான் பதட்டத்தை அதிகரிப்பது என்பது, இதுதான் அபாயகரமானது.”

இளைஞர்களும் தொழிலாளர்களும் எச்சரிக்கப்பட்டாக வேண்டும்: இந்த விவாதத்தில் எந்த அரசியல்வாதிகளுமே சமாதானத்தை விரும்புபவரில்லை. இவர்கள் அனைவருமே பாரிய எண்ணிக்கையிலான மக்களை வெளிநாடுகளுக்கு சண்டையிட அனுப்ப விருப்பம் கொண்டவர்கள். மக்ரோன் கட்டாய இராணுவச் சேர்க்கைக்குத் திரும்பவும், மாலியில் போரை தீவிரப்படுத்தவும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்; ராஃபரான் பிரதமராக இருந்தபோது பிரான்சின் ஐவரி கோஸ்ட் தலையீட்டையும் ஆப்கானிஸ்தான் மீதான நேட்டோ ஆக்கிரமிப்பில் பங்கெடுப்பையும் மேற்பார்வை செய்தவராவார். அவர்கள் உடன்பாடு எட்டாமலிருப்பது ஏகாதிபத்தியப் போர்களை நடத்த வேண்டுமா என்பதில் அல்ல, மாறாக அவற்றை நடத்துவதற்கான சிறந்த மூலோபாயம் எது என்பதிலாகும்.

ஐரோப்பிய ஒன்றியத் தயாரிப்புகளுக்கு எதிரான அமெரிக்காவின் வர்த்தகப் போர் மிரட்டல்கள் மற்றும் நேட்டோவிலிருந்தும் அமெரிக்காவில் இருந்தும் சுயாதீனமான ஒரு ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஆகியவற்றில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நிலவுகின்ற கடுமையான மோதல்களை இந்த விவாதம் பிரதிபலிக்கிறது.

ஒரு ஜேர்மனி-பிரான்ஸ் அச்சு, ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தலைமை நடத்துவதான மக்ரோனின் திட்டம், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற கூட்டாளிகளைக் குரோதமாக்குவதாக கவலை கொண்டிருக்கின்ற ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளது கண்ணோட்டங்களையே ஹாலண்டின் விமர்சனங்கள் பிரதிபலிக்கின்றன. கிழக்கு உக்ரேனில் ரஷ்ய-ஆதரவுடனான படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரேன் போராளிகளுக்கு ஆயுதமளிக்க அச்சுறுத்துவது போன்ற ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கக் கொள்கை மிக அபாயகரமானது என்று கருதுகின்ற, அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் சுயாதீனமான இராணுவ நடவடிக்கை எடுக்கத் திறம்படைத்ததாக இருக்க வேண்டும் என நம்புகின்ற பிரிவின் சார்பாக மக்ரோன் பேசுகிறார்.

மக்ரோனின் ஒரு பேர்லின்-பாரிஸ் அச்சுக்கான திட்டங்களுக்குரிய முட்டுக்கட்டைகள் துரிதமாக கண்முன் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வாரத்தின் பின்பகுதியில், ஜேர்மனியில் புதிதாக அமர்த்தப்பட்டிருக்கும் மாபெரும் கூட்டணி அரசாங்கத்தின் அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளுக்காக பாரிஸ் வரும்போது, அவை ஒரு சோதனைக்கு முகம்கொடுக்கவிருக்கின்றன.

நேற்று Frankfurter Allgemeine Zeitung இடம் பேசிய மக்ரோன், பேர்லினிடம் இருந்து உதவிக்கு விண்ணப்பித்தார். “ஜேர்மனி அசைந்து கொடுக்கவில்லை என்றால், எனது திட்டங்களின் ஒரு பகுதி தோல்விகாணும் தலைவிதிக்குள்ளாகும்” என்று அவர் FAZயிடம் தெரிவித்தார். “நாம் முழுக்க ஒருவர் இன்னொருவரை சார்ந்திருக்கிறோம். ஜேர்மனி இல்லாமலோ அல்லது ஜேர்மனிக்கு எதிராகவோ ஒரு ஐரோப்பியத் திட்டம் வெற்றி மகுடம் சூட முடியும் என்று ஒரு நொடியும் கூட நான் நம்பவில்லை”. பேர்லின் மற்றும் பாரிஸிலால் தலைமை கொடுக்கப்படும் ஒரு ஐரோப்பிய ஒன்றியம் இராணுவவாத, அகதிகள்-விரோதக் கூட்டாக இருக்கும் என்பதையும் தெளிவாக்கிய மக்ரோன் பின்வருமாறு அறிவித்தார்: “ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கில் புலம்பெயர்ந்தவர்களை நாம் உள்ளே கொண்டுவந்து கொண்டே இருக்க முடியாது.”