ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Germany’s incoming interior minister announces police state measures, mass deportations

ஜேர்மனியில் பதவியேற்க உள்ள உள்துறை அமைச்சர் பொலிஸ் அரசு நடவடிக்கைகள், பரந்தளவிலான நாடு கடத்தல்கள் பற்றி அறிவிக்கிறார்

By Christoph Vandreier 
13 March 2018

அங்கேலா மேர்க்கெலும் அவரது அமைச்சரவையும் புதனன்று பதவியேற்பதற்கு முன்பாகவே, ஹோர்ஸ்ட் ஷீஹொவர் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம், CSU), புதிய அரசாங்கத்தின் பிற்போக்குத்தன குணாம்சத்தை மீள் உறுதி செய்துள்ளார். Bild am Sonntag பத்திரிகையில், இந்த நியமிக்கப்பட்ட உள்துறை மற்றும் உள்நாட்டு மந்திரி, “மிகுந்த உறுதியான நாடுகடத்தல்களுக்கான ஒரு பெரும் திட்டத்தை” வழங்கியதோடு, பரந்தளவிலான கண்காணிப்பு மற்றும் பிற பொலிஸ் அரசு நடவடிக்கைகள் குறித்தும் அறிவித்தார்.

இந்த பெரும் கூட்டணி, அதன் இராணுவவாத மற்றும் சமூக வெட்டுக்கள் குறித்த கொள்கை மீதான எந்தவொரு எதிர்ப்பையும் மிருகத்தனமாக நசுக்குவதற்கு தயாரிப்பு செய்து வருகிறது என்பதை அதன் ஆக்கிரோஷமான தொனியும் தொலைநோக்குத் திட்டங்களும் தெளிவுபடுத்துகின்றன.

அகதிகளை பெருமளவில் வெளியேற்றுவதற்கான ஷீஹொவரின் இந்த திட்டங்கள், கூட்டணி உடன்படிக்கையில் ஏற்கனவே கூறப்பட்டிருந்ததற்கு முற்றிலும் மாறானவையாக இருந்தன. CSU தலைவர் பரந்த நாடுகடத்தலுக்கான ஒரு கருத்தொருமித்த திட்டத்தை அறிவித்தபடி, 2017 இல் நாட்டை விட்டு வெளியேற உத்திரவிடப்பட்டிருந்த 200,000 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரில் வெறும் 24,000 பேர் மட்டுமே நாடுகடத்தப்பட்டனர் என்றபோது, அவர் இந்த சூழ்நிலையை எப்படி மாற்ற விரும்புகிறார் என்று Bild கேள்வி எழுப்பியது.

“பதவியேற்ற உடனேயே, அகதிகளுக்கான புகலிட நடைமுறைகள் மற்றும் அவர்களை மிகவும் உறுதியுடன் நாடுகடத்துவது தொடர்பான ஒரு பெரும் திட்டத்தை அபிவிருத்தி செய்ய அனைத்து ஊழியர்கள் மற்றும் துணை அதிகாரிகள் உடனான ஒரு சந்திப்பை நான் மேற்கொள்வேன்” என்றும், மேலும் அதன் மூலம் “அகதிகளை அவர்களது தாய்நாடுகளுக்கு திருப்பியனுப்பும் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

இத்தகைய திட்டங்களுக்கு சட்டங்களில் ஒரு அடிப்படையான கடுமையான நிலைப்பாடு இருக்க வேண்டியது அவசியம் எனவும் தெரவித்தார். நாட்டை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட 200,000 புலம்பெயர்ந்தோரில் பெரும்பான்மையினரது உறைவிடம் சட்டரீதியாக அல்லது மனிநேய அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது, மேலும் அவர்களை வெளியேற்றுவதும் சட்டத்தின் மூலமாகவே தடை செய்யப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை, 2016 இறுதியில், நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டவர்களில் பாதி பேர் அகதிகளாக இல்லை அல்லது புகலிடம் தேடுபவர்களாகவும் இல்லை, மாறாக அவர்களது வதிவிட அனுமதிகள் காலாவதியாகிவிட்டிருந்தன அல்லது அவர்கள் ஜேர்மன் குடிமக்களை மணமுடித்தவர்களாக இருந்தனர். எஞ்சியோர், 2017 ஆம் ஆண்டு ProAsyl அமைப்பின் படி, மூன்றில் ஒரு பங்கினர் மட்டும், அதாவது கிட்டத்தட்ட 30,000 பேர் மட்டும், இங்கிருக்க அனுமதிக்கப்படவில்லை, அதாவது, அவர்கள் நாட்டை விட்டு அவசரமாக வெளியேற வேண்டியிருந்தது. இது, உண்மையாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையான 24,000 க்கு மிக நெருக்கமானதாக இருந்தது.

ஷீஹொவர் அகதிகளை வெளியேற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு அழைப்பு விடுப்பாராகில், அது, அங்கு இருப்பதற்கான தற்காலிக உரிமை கொண்ட அல்லது உறைவிட தகுதியுடைய ஒட்டுமொத்த அகதிகளின் வெளியேற்றத்திற்கான திட்டமாகவே இருக்கும், ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் அவர்களது தாய் நாட்டிலேயே அவர்கள் ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்தனர். ஷீஹொவர் தலைமையிலான பவேரிய மாநில அரசாங்கம் ஏற்கனவே இந்த ஆண்டு, அகதிகளை ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்த கூட்டாட்சி மாநிலங்களை வழிநடத்துகிறது. இது தொடர்பாக சட்ட ரீதியான தடைகள் முறையாக நீக்கப்பட்டுள்ளன, உதாரணமாக, உடனடியாக தங்களது அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க இயலாத அகதிகளை “பிடிவாதமாக அடையாள நிராகரிப்பாளர்கள்” என்று கருதி கண்மூடித்தனமாக வகைப்படுத்துவதிலும் மற்றும் நாடுகடத்துவதிலும் சட்ட ரீதியான தடைகள் குறுக்கிடாது. இது இப்போது பெருமளவில் விரிவுபடுத்தப்படும்.

கூடுதலாக, அகதிகளுக்கான தடுப்பு முகாம்களை உருவாக்குவதற்காக கூட்டணி உடன்படிக்கையில் எட்டப்பட்ட தீர்வு சில மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். “அதற்கு ஒரு வருடம் அல்லது அதற்கு கூடுதலாக காலம் எடுத்துக்கொள்ளப்படக் கூடாது” என்று அமைச்சர் தெரிவித்தார். இத்தகைய முகாம்களில், அவர்களது புகலிடம் கோரும் விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் வரை மட்டுமே அவர்களை அகதிகளாக குறித்துவைக்க வேண்டும். அவர்களை சமுதாயத்திலிருந்து விலக்கியும், அடிப்படை உரிமைகளற்றவர்களாகவும் வைக்கவேண்டும்.

சமுதாயத்தில் பலவீனமானவர்களுக்கு எதிரான இத்தகைய கொடூரமான நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்கள் மீதான ஒரு தாக்குதலாகவே உள்ளன. எந்தவொரு குற்றமும் சாட்டப்பட்டவர்களாக இல்லாமல் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டால், அது அனைத்து அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும் எதிரானதாக மாறுவதற்கான முன்னுதாரணமாக அமையும்.

ஷீஹொவர் அது குறித்து எந்தவித சந்தேகத்தையும் விட்டுவைக்கவில்லை. அவர், பவேரியாவில் ஏற்கனவே நடைமுறையில் இருப்பது போன்று, ஜேர்மனி முழுவதுமான ஒரு “வலுவான அரசை” ஸ்தாபிக்க விரும்புகிறார். இதன் முடிவாக, ஜேர்மனி முழுவதிலும் அனைத்து “நெருக்கடியான இடங்களிலும்” “தீவிரமான வீடியோ கண்காணிப்புகளை” அமைப்பதற்கு அவர் விரும்புகிறார், இது ஒட்டுமொத்த மக்கள் மீதான முறையான கண்காணிப்புக்கு வழிசெய்யும் எனவும் கருதுகிறார்.

இது குறித்து மேலும், 7,500 புதிய மத்திய பொலிஸ் அதிகாரிகளை பணியமர்த்துவதற்கும், ஒரு “பூஜ்ய-சகிப்புத்தன்மை” கொள்கையை நிறைவேற்றுவதற்கும் அவர் அறிவித்தார். இதுபோன்ற பூஜ்ய-சகிப்புத்தன்மை மூலோபாயம் என்பது, பொலிஸை நிலை நிறுத்துவதையும், மற்றும் அற்பமான குற்றங்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வதையும் பெருமளவு அதிகரிப்பதாகும். இது, மாநகரில் ஒரு பொலிஸ் அரசின் கட்டமைப்புகளை உருவாக்கிய நியூயோர்க்கின் வலதுசாரி மேயர் ருடால்ப் ஜூலியானியால் பிரபலமடைந்தது.

பவேரிய நிலைமைகளை ஜேர்மனி முழுவதுமாக உருவாக்க வேண்டும் என்ற ஷீஹொவரின் சபதம் இது சம்பந்தமான ஒரு கடும் எச்சரிக்கையாகவே உள்ளது. அவரது ஆட்சியின் கீழ், கடந்த ஆண்டு ஜூலையில், ஜேர்மன் வரலாற்றில் மிகுந்த நீண்டகால தாக்கத்தை  கொண்ட பாதுகாப்பு சட்டத்தை பவேரியா நிறைவேற்றியது. ஏனைய விடயங்களை விட, இது சந்தேகத்திற்குரிய நபர்களை காலவரையின்றி காவலில் வைப்பதற்கான சாத்தியக்கூறை உள்ளடக்கியது.

எந்த குற்றமும் செய்யாதவர்களுக்கும் நீதிபதியின் விருப்பப்படி ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்; ஒரு நபரின் நடத்தையில் குற்றம் புரிந்ததற்கான ஒரு “ஸ்தூல நிகழ்பாடு” கண்டறியப்பட்டால், அதுவே  அதற்கு போதுமானது. தொழிலாளர்களின் இயக்கத்தின் பல்லாயிரக்கணக்கான தலைவர்களை ஒரு சில மாதங்களுக்குள் பாதிப்புக்குள்ளாக்கியதான, 1933 இல் நாஜிக்கள் அறிமுகப்படுத்திய “பாதுகாப்பு காவலில் வைத்தல்” என்பதை விட இது எந்த வகையிலும் குறைவானது இல்லை.

ஷீஹொவரை உள்துறை மந்திரியாக்குவதற்கும், அவரது துறையை விஸ்தரிப்பதற்குமான இந்த முடிவானது, ஏனைய விடயங்களுக்கு மத்தியில், “தாயகம்” (Heimat) என்ற அதன் தலைப்பு உட்பட, ஆரம்பத்தில் இருந்து, பெரும் கூட்டணியின் ஒரு திட்டமிட்ட முடிவாகவே இருந்தது. CSU தலைவர், உள்நாட்டிலும், அகதிகள் அரசியலிலும் மற்றும் ஜேர்மன் வரலாற்றில் முன்னோடியில்லாத ஒரு பொலிஸ் அரசை உருவாக்க முனைவதிலும் ஒரு கடும்போக்காளராகவே அறியப்படுகிறார். Bild க்கு அவரளித்த பேட்டி, எவ்வளவு விரைவாகவும், தீவிரமாகவும் இந்த கொள்கையை அவர் செயல்படுத்துவார் என்பதை தெளிவுபடுத்துகிறது. 

ஷீஹொவரின் தொலைநோக்கு திட்டங்கள் பெரும் கூட்டணியின் குணாம்சத்தை விளக்குகிறது. கடந்த தேர்தலில் தோல்வியுற்ற மற்றும் ஜனநாயகம் சார்ந்த சட்டபூர்வ தன்மையை கொண்டிராத இரு கட்சிகளால் அமைக்கப்படும் ஒரு கூட்டணி, மறு ஆயுதமயமாக்கல், இராணுவவாதம் மற்றும் சமூக வெட்டுக்கள் ஆகியவற்றின் மீதான ஒரு அதிதீவிர வலதுசாரி வேலைத்திட்டத்தை பின்தொடரவுள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் பரவலான நிராகரிப்பை இது சந்திக்கின்ற நிலைமைகளின் கீழ், அரசாங்கம் பொலிஸை பலப்படுத்துவதோடு, ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்கின்றது, மேலும் எந்தவொரு எதிர்ப்பையும் ஒடுக்குவதற்கு சமூகத்தில் பலவீனமானவர்கள் மீது தாக்குதலையும் நடத்துகிறது.