ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Fifteen years since the launching of the Iraq War

ஈராக் போர் தொடங்கியதில் இருந்து பதினைந்து ஆண்டுகள்

Patrick Martin
21 March 2018

இற்றைக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், மார்ச் 20-21, 2003 இரவு, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆயுதப்படைகள் 26 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு நாடான ஈராக் மீது சட்டவிரோதமான மற்றும் தூண்டுதலற்ற ஒரு படையெடுப்பைத் தொடங்கின. ஈராக்கிய நகரங்கள் மீது குண்டுகளும் ஏவுகணைகளும் மழையென பொழியத் தொடங்கி, டாங்கிகளும் குண்டு துளைக்காத இராணுவ வாகனங்களும் குவைத் எல்லையைக் கடந்து உள்நுழைந்த போது, அமெரிக்க ஜனாதிபதி டபிள்யூ- புஷ் ஓர் ஆக்கிரமிப்பு போரை ஆரம்பித்து வைத்தார், அதன் பேரழிவுகரமான விளைவுகள் இப்போதும் உலக அரசியலை வடிவமைத்து வருகின்றன.

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ஈராக்கிய மக்கள் மீதான அந்த படுகொலை தாக்குதலின் விளைவுகளை "சமூக படுகொலை" என்று, அதாவது நவீன நாகரீகத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் திட்டமிட்டு அழிக்கும் ஒன்றாக விவரித்தது (பார்க்கவும்: "ஈராக்கிய ஆக்கிரமிப்பும்—ஒரு சமூகத்தின் படுகொலை"). புஷ்ஷை அடுத்து வந்த ஜனநாயகக் கட்சியின் பராக் ஒபாமாவால் அது தொடரப்பட்டு, நீடிக்கப்பட்டதன் ஒரு நேரடி விளைவை, இப்போது அதுபோன்ற பேரழிவுகளை சிரியா, லிபியா மற்றும் யேமனில் பார்க்கலாம். இப்போது டொனால்ட் ட்ரம்ப் ஈரானையும் மற்றும் வட கொரியாவையும் அந்த பட்டியலில் சேர்க்க அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்.

பிரௌன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது விவகாரங்களுக்கான வாட்சன் பயிலகம் வழங்கும், போர் திட்ட செலவுகளின் நடப்பு ஒப்பீட்டின்படி, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களால் மொத்தம் 370,000 பேர் நேரடியாகவும், 800,000 பேர் மறைமுகமாகவும் கொல்லப்பட்டனர் (இந்த கணக்கின் மொத்தத்தில் பெருவாரியானது ஈராக்கைச் சாரும்). உயிரிழந்தவர்களைக் குறித்த ஆய்வுகள் மற்றும் பிற பொது சுகாதார முறைகளின் அடிப்படையிலான மற்ற மதிப்பீடுகள், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 2.4 மில்லியன் அளவுக்கு உயர்த்துகின்றன.

ஈராக்கிய போரானது திட்டமிட்ட மற்றும் வெளிப்படையான பொய்களின் அடிப்படையில் ஜனாதிபதி புஷ் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயரால் தொடங்கப்பட்டது: அதாவது, ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹூசைன் உலக மக்களையே அச்சுறுத்தும் "பாரிய பேரழிவு ஆயுதங்கள்" வைத்திருந்ததாகவும்; அவர் நியூ யோர்க் மற்றும் வாஷிங்டன் மீது 9/11 பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய ஒசாமா பின் லேடனின் அல் கொய்தா இயக்கத்துடன் கூட்டணி வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது.

1980 களில் ஈரான்-ஈராக் போரின் போது ஈரானுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளால் அவருக்கு வழங்கப்பட்ட, ஏற்கனவே வைத்திருந்த, இரசாயன ஆயுதங்களைத் தவிர அதற்கு கூடுதலாக ஹூசைன் வேறெதுவும் வைத்திருக்கவில்லை என்பதே உண்மை, இது ஏகாதிபத்தியத்தின் பிரச்சாரகர்களுக்கு அப்போது மிக நன்றாகவே தெரியும். அடிப்படை வசதிகளும் குறைந்த அவரது அணுஆயுத திட்டம் அமெரிக்க மற்றும் ஐ.நா. மேற்பார்வையின் கீழ் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. ஹூசைன் அல் கொய்தாவின் சுன்னி அடிப்படைவாதிகள் மீது சமரசமற்ற விரோதம் கொண்டவராவார், அதற்காக அவர்கள் அவரது மதசார்பற்ற தேசியவாத ஆட்சியைத் தூக்கியெறிய முனைந்திருந்தனர்.

உலக சோசலிச வலைத் தளம் விளக்கியவாறு, உலகிலேயே மிகக்கூடிய வளம்மிக்க நாடுகளில் ஒன்றான ஈராக்கின் எண்ணெய் ஆதாரவளங்கள் மீது கட்டுப்பாட்டை பெறுவதும், உலகின் பெரும்பான்மை எண்ணெய் ஏற்றுமதிகளுக்கு ஆதாரமாக விளங்கும் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு மேலாளுமை மிக்க மூலோபாய இடத்தை அடைவதும், அவ்விதத்தில் வாஷிங்டன் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் அதன் முக்கிய போட்டியாளர்களது எண்ணெய்க்கான ஜீவநாடியை இறுக்கிப்பிடிக்க அது வாய்ப்பளிக்கும் என்பதே அப்போரின் நிஜமான நோக்கமாக இருந்தது.

சர்வதேச சட்டத்தைப் பொறுத்தமட்டில், ஈராக் மீதான அமெரிக்க-பிரிட்டன் படையெடுப்பானது, ஓர் இறையாண்மை கொண்ட நாடான ஈராக்கின் உரிமைகளை ஆணவத்துடன் அநியாயமாக மீறிய ஒரு குற்ற நடவடிக்கையாகும். நாஜிகளின் அடிப்படை குற்றமாக இருந்த யூத இனப்படுகொலை உட்பட அதிலிருந்து தான் மற்ற எல்லா குற்றங்களும் பெருக்கெடுத்தன என்பதால், ஆக்கிரமிப்பு போரை திட்டமிட்டதும் மற்றும் தொடங்கியதும் நாஜிக்களின் தலையாய குற்றம் என்று அறிவித்த நூரெம்பேர்க் தீர்ப்பாயம் வரைந்த கோட்பாடுகளுக்கு அடித்தளத்தில் பார்த்தால், புஷ், பிளேயர், துணை ஜனாதிபதி செனி மற்றும் கொலின் பவெல், டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் மற்றும் கொண்டாலிசா ரைஸ் போன்ற கூட்டாளிகள் அனைவரையும் போர் குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டி, அவர்களின் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்.

இவர்களுடன் ஒன்றாக இணைந்து கொண்ட ஊடக பண்டிதர்களும் பதிப்பாசிரியர்களும், இவர்கள் புஷ் நிர்வாகத்தின் பொய்களைப் பரப்பியதோடு, பாரிய போர் எதிர்ப்புணர்வை ஒடுக்கும் ஓர் ஒருமித்த திட்டமிட்ட முயற்சியில், போர் பிரச்சாரத்துடன் அமெரிக்க மக்கள் கருத்தைக் குழப்பினர். “பாரிய பேரழிவு ஆயுதம்" குறித்த அதிகாரபூர்வ வாதங்களுக்கு பிரதான வடிகாலாக சேவையாற்றிய பத்திரிகையாளர் ஜூடித் மில்லருடன் (Judith Miller) சேர்ந்து, நியூ யோர்க் டைம்ஸ் முன்னணிப் பாத்திரம் வகித்தது, அதேவேளையில் கட்டுரையாளர் தோமஸ் ப்ரீட்மன், “எண்ணெய்க்காக போர் நடத்துவதில் [அவருக்கு] எந்த பிரச்சினையும் இல்லை" என்று அறிவித்தார். வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ரிச்சார்ட் கோஹன், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவை முன்னால் —ஈராக்கிய இரசாயன ஆயுத கையிருப்புகள் குறித்து ஜோடிக்கப்பட்ட "ஆதாரத்தின்" அடிப்படையில்— போருக்குள் இறங்குவதைத் தவிர "வேறு தெரிவு இல்லை" என்று கொலின் பவெல் முன்வைப்பது "மிகவும் பலமானது, மிகவும் உடன்பாடானது" என்று உற்சாகத்துடன் அறிவித்தார்.

பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான ஊடகங்களின் சுயதிருப்தியிலான அனுதாபிகளுக்கு முற்றிலும் முரண்பட்ட வகையில், உலக சோசலிச வலைத் தளம் புஷ் நிர்வாகத்தின் பொய்களைத் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தியதுடன், அதேவேளையில் அமெரிக்க-பிரிட்டன் தாக்குதலுக்கு முந்தைய பல மாதங்களில், போர்க் குரலுக்கு எதிராக, பத்து மில்லியன் கணக்கான மக்களால், உலகெங்கிலும் நடத்தப்பட்ட முன்னொருபோதும் இல்லாத மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மக்களின் போர் எதிர்ப்புணர்வை ஊக்குவித்து வந்தது.

WSWS இன் தலைமை பதிப்பாசிரியர் டேவிட் நோர்த், மார்ச் 21, 2003 இல் பிரசுரித்த ஓர் அறிக்கையில், பெரிதும் நிராயுதபாணியான ஒரு நாட்டின் மீதான தூண்டுதலற்ற தாக்குதலை, செப்டம்பர் 1939 இல் போலாந்து மீதான நாஜி தாக்குதலுடன் ஒப்பிட்டார், அதேவேளையில் நாஜிக்கள் போலவே, புஷ் நிர்வாகமும் பேரழிவில் முடியும் நடவடிக்கையின் போக்கை தொடங்கி இருப்பதாக குறிப்பிட்டுக் காட்டினார். நோர்த் பின்வருமாறு எச்சரித்தார்:

“தொடங்கியுள்ள மோதலின் ஆரம்ப கட்ட விளைவுகள் என்னவாக இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் பேரழிவுடன் முன்சென்று கொண்டிருக்கிறது. அதனால் உலகை அடிமைப்படுத்த முடியாது. அது மத்தியக் கிழக்கின் பெருந்திரளான மக்கள் மீது காலனியாதிக்க தளைகளை மீண்டும் திணிக்க முடியாது. அது, அதன் உள்சிக்கல்களுக்கு போரின் ஊடாக ஒரு நம்பகமான தீர்வைக் காண முடியாது. அதற்கு பதிலாக, போரால் தோற்றுவிக்கப்படும் முன்கண்டிராத சிக்கல்களும் மற்றும் அதிகரிக்கும் எதிர்ப்பும் அமெரிக்க சமூகத்தின் உள் முரண்பாடுகள் அனைத்தையும் இன்னும் அதிகமாக தீவிரப்படுத்தும்,” என்று குறிப்பிட்டார்.

இந்த எச்சரிக்கை முற்றிலுமாக நிரூபணமாகி உள்ளது. போரின் தாக்கம் அமெரிக்க சமூகத்தை நாசமாக்கி வருகிறது. மீண்டும், குறிப்பிட்டு கூறுவதானால், நவம்பர் 2017 இன் போர் செலவு திட்ட அமைப்பால் பிரசுரிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, நடப்பு நிதியாண்டின் இறுதி வாக்கில், செப்டம்பர் 2018 இல், அமெரிக்க பெடரல் அரசாங்கம் 9/11 போர்களுக்குப் பின்னர் 5.6 ட்ரில்லியன் டாலர் செலவிட்டிருக்கும் அல்லது அதற்கு பொறுப்பேற்றிருக்கும் என்பதோடு, அதில் பெரும்பான்மை ஈராக்கில் செலவிடப்பட்டிருக்கும், போரில் சண்டையிட்ட முன்னாள் சிப்பாய்களின் எஞ்சிய வாழ்க்கைக்காக அவர்களுக்கான மருத்துவ மற்றும் பாதிப்பு செலவுகளும் இதில் உள்ளடங்கும்.

அனைத்திற்கும் மேலாக, புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் போர் செலவுகளுக்காக செல்வந்தர்கள் மீது வரிவிதிக்காமல், கடன் வாங்கி நிதி வழங்கியிருந்தனர், இதன் விளைவாக மத்திய அரசிற்கு வட்டி செலவுகளே 8 ட்ரில்லியன் டாலராக இருக்கும், இது போருக்கான நிஜமான செலவைக் காட்டிலும் அதிகமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க மக்கள் மீதும் உலகின் மீதும் அது திணிக்கப்பட்டுள்ள போர்களிலிருந்து வந்த மேலதிக வருமானத்தின் பெரும்பகுதியை வோல் ஸ்ட்ரீட் அறுவடை செய்யும்.

ஈராக்கில் 4,800 அமெரிக்க சிப்பாய்கள் கொல்லப்பட்டனர் என்ற போதும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக செல்கின்றன. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு பணி நிமித்தமாக அனுப்பப்பட்ட இரண்டு மில்லியன் சிப்பாய்களில் ஒரு மதிப்பீட்டின்படி ஒரு மில்லியன் பேர் நிவாரண உதவிகளுக்கு பதிவு செய்துள்ளதுடன், புற அதிர்ச்சிக்குப் பிந்தைய மனஅழுத்த சீர்குலைவு மற்றும் புற அதிர்ச்சியால் உண்டான மூளை காயங்களால் பாதிக்கப்பட்டுள்ள நூறாயிரக் கணக்கானவர்கள் உட்பட, அத்தகையவர்கள் பாதிப்புக்கான நல உதவிகளைப் பெற்று வருகின்றனர்.

ஒட்டுமொத்தமாக இதற்கு சமஅளவில் அமெரிக்க சமூகத்தின் மீது ஏனைய பிற பெருங்கேடான விளைவுகளும் உள்ளன. தொலைதொடர்பு, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் மீதும், பாரிய கண்காணிப்பில் ஈடுபடுகின்றன ஒரு தேசிய-பாதுகாப்பு அரசு கட்டமைக்கப்பட்டதன் மூலம் ஜனநாயக உரிமைகள் சிதைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த சமூகத்தில் வன்முறை வளர்ந்துள்ளது, இது ஈராக் போரால் மட்டும் வேரூன்றியதல்ல, மாறாக மத்தியக் கிழக்கு, மத்திய ஆசியா, முன்னாள் யூகோஸ்லாவியா, ஆபிரிக்கா மற்றும் —அனேகமாக விரைவிலோ தாமதமாகவோ— தொலைதூர கிழக்கிலும், நடைமுறையளவில் இடைவிடாத ஒரு கால் நூற்றாண்டு இராணுவ ஆக்கிரப்பில் வேரூன்றியதாகும்.

எல்லாவிதத்திலும் உலகப் பொருளாதாரம் மீதான அமெரிக்காவின் நிஜமான பலத்திற்கு பொருத்தமற்ற விகிதத்தில், உலகம் முழுவதும் அதன் மேலாதிக்க நிலையைத் தக்க வைப்பதற்கான முயற்சியானது, சமூகநல செலவுகளில் கடுமையான குறைப்புகள், கல்வி, உள்கட்டமைப்பு, மருத்துவ பராமரிப்பு மற்றும் இதர சமூக தேவைகளைக் கீழறுப்பதற்கு உந்துசக்தியாக இருந்துள்ளது. அமெரிக்கா அதற்கடுத்து உள்ள ஒருசேர டஜன் கணக்கான நாடுகளை விட இராணுவத்திற்கு அதிகமாக செலவிடுகிறது.

ஈராக் போரின் மற்றொரு விளைவு, அமெரிக்க அரசியல் வாழ்வின் மையத்திற்கு இராணுவ-உளவுத்துறை எந்திரத்தை வளர்த்துள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் குற்றவாளிகள் —கெல்லி, மாட்டீஸ், மெக்மாஸ்டர் ஆகியோர்— ட்ரம்ப் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு கொள்கையை வழிநடத்துகிறார்கள். ஜனநாயகக் கட்சி தற்போது உளவுத்துறை செயல்பாட்டாளர்களின் ஒரு பெருங்கூட்டத்தால் கையகப்படுத்தப்பட்டு வருகிறது, அண்மித்து அவர்களில் அனைவருமே ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் முன்னர் பணியாற்றியவர்களாவர்.

அப்போரின் 15வது ஆண்டு நினைவுதினத்தை அமெரிக்க ஊடகங்கள் மிகக் குறைவாகவே குறிப்பிட்டுள்ளன, ஏகாதிபத்தியத்தின் குற்றங்களும், அவற்றின் சொந்த உடந்தைத்தன்மையும், நடைமுறையளவில் மவுனமாக கண்டுங்காணாது கடந்து செல்ல வேண்டுமென அவை விரும்புகின்றன. இதைவிட மிக முக்கியமானது, ஈராக் போரை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட அதே அணுகுமுறைகள், ரஷ்யாவுக்கு எதிராக ஓர் ஆத்திரமூட்டல் மற்றும் ஆக்ரோஷ பிரச்சாரமாக இன்னும் கொடூரமான நாசத்தைத் தூண்டிவிட பயன்படுத்தப்பட்டு வருகிறது, இவற்றின் தர்க்கம் அணுஆயுதங்கள் சம்பந்தப்பட்ட முற்றுமுதலான போருக்கு இட்டுச் செல்கின்றன.  

ரஷ்யாவுக்கு எதிரான தற்போதைய பிரச்சாரத்தில், வேறொன்றும் இருக்கிறதென்றால், அது பூதாகரமாக்குவதற்கான இலக்கில் சதாம் ஹூசைன் இடத்தில் விளாடிமீர் புட்டின் பதிலீடு செய்யப்பட்டு, அது ஈராக்கிற்கு எதிரான பிரச்சாரத்தை விட முன்பினும் அதிக வலுவற்றதாக, வெளிப்படையான பொய்களின் அடிப்படையில் உள்ளது. இந்த வனப்புரையில், பிரிட்டிஷ் உளவாளி சேர்ஜி ஸ்கிரிபால் க்கு ரஷ்யா நஞ்சூட்டியது என்று குற்றஞ்சாட்டப்படுவது, சதாம் ஹூசைனின் "பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள்" என்பதற்கு சமமாக மாறியுள்ளது. பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலர் போரிஸ் ஜோன்சன் வாஷிங்டன் மற்றும் இலண்டனால் இலக்கில் வைக்கப்பட்ட ஆட்சியுடன் ஒரு மோதலைத் தீவிரப்படுத்துவதற்கு அவசியமான "ஆதாரத்தை" வழங்குவதில் கொலின் பவுல்லின் பாத்திரத்தை மிஞ்ச முனைகிறார்.

எவ்வாறிருப்பினும் இந்த 15 ஆண்டுகள் வீணாக கடந்துவிடவில்லை. உலகெங்கிலும், ஏகாதிபத்திய போருக்கு ஒரு நிலையான குரலாக ஒலிக்கும் உலக சோசலிச வலைத் தளத்திற்கு வாசகர்கள் அதிகரித்து வருகிறார்கள். உலக சோசலிச வலைத் தளத்தால் முன்னெடுக்கப்பட்ட மார்க்சிச முன்னோக்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு முன்னோக்கிய பாதையைக் காட்டுகிறது. போருக்கு எதிரான போராட்டத்திற்கு இன்று அமெரிக்காவில் சமூக சமத்துவக் கட்சியையும் மற்றும் உலகெங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அதன் சகோதர கட்சிகளைக் கட்டமைப்பதும் அவசியமாகிறது.