ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French President Macron signs basing deals in India

இந்தியாவில் கடற்படைத்தள ஒப்பந்தத்தில்  பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் கையெழுத்திடுகிறார்

By Athiyan Silva
20 March 2018

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கடந்த வார இந்தியாவுக்கான நான்குநாள் விஜயம் சர்வதேச ரீதியாக நிகழும் போரை நோக்கிய உந்துதல் மற்றும் அதிகரித்துவரும் இராணுவ தயாரிப்பினை எடுத்துக்காட்டுகின்றது. பிரெஞ்சு அதிகாரிகளும் ஊடகமும் சிரியாவில் போருக்கு அழைப்புவிடுக்கையிலும், பிரிட்டிஷ் உளவாளி சேர்ஜி ஸ்கிரிப்பால் நஞ்சுட்டிக் கொல்லப்பட்டார் என்பது தெளிவற்ற நிலையிலுள்ளபோதும் ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளை நிறுத்துமாறு பிரிட்டிஷ் இன் அழைப்பை ஆதரிப்பதுடன், மக்ரோன் பிரான்சையும் ஐரோப்பாவையும் ஆசியாவின் பெருநீர்ச்சுழலுக்குள் இழுத்துக் கொண்டிருக்கின்றார்.

இந்தியாவின் இந்து மேலாதிக்கவாத பிரதம மந்திரி நரேந்திர மோடி மக்ரோன் சந்திப்பு மூலோபாய ரீதியாகவும் வணிக ரீதியாகவும் முக்கியமான இந்தியப் பெருங்கடலின் பகுதியில் அதன் இராணுவ பலத்தை மீண்டும் நிலைநிறுத்தும் மற்றும் வாஷிங்டனால் தூண்டிவிடப்படும் சீனாவுடனான பகைமையை தீவிரப்படுத்துவதைப் பின்பற்றும் ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதி ஆகும்.

இச்சந்திப்பின்பொழுது மோடியும் மக்ரோனும், இராணுவ மற்றும் அணு ஆற்றல் பேரங்களைக் குவிமையப்படுத்தி, 16 பில்லியன் டாலர்கள் (13 பில்லியன் யூரோக்கள்) மதிப்புள்ள 14 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். பிரான்ஸ் மரபுவழிப்பட்ட Scorpène-class நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் அணு ஆயுதங்களை ஏற்றிச்செல்லக்கூடிய ரஃபால்  ஜெட் போர்விமானங்களையும் இந்தியாவிற்கு விற்க இருக்கிறது.

அனைத்திற்கும் மேலாக, “இந்திய பெருங்கடற் பிராந்தியத்தில் இந்திய-பிரான்ஸ் ஒத்துழைப்பின் கூட்டு மூலோபாயக் கண்ணோட்டத்தின்” மீது இருவரும் உடன்பட்டனர். அது பரஸ்பர போக்குவரத்து-விநியோக ஆதரவு உடன்பாடு என்றழைக்கப்படுவதையும் உள்ளடக்கும். அத்தகைய உடன்படிக்கையின் கீழ், பிரான்சும் இந்தியாவும் தங்களது தரைப்படை அல்லது கடற்படைத்தளங்களை ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய பாவனைக்கு திறந்துவிடுவர். இந்திய பெருங்கடலில் உள்ள பிரான்சின் பல்வேறு கடல்கடந்த எல்லைப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களுக்கு இந்தியக் கப்பல்கள் அனுமதிக்கப்படுவது மட்டுமல்லாமல், பிரான்சும் இந்திய இராணுவ தளங்களில் போர்க்கப்பல்களையும் துருப்புக்களையும் நிறுத்துவதற்கான வாய்ப்பையும் கொண்டிருக்கும்.

பிரான்சில் தொழிலாளர்களும் இளைஞர்களும் கட்டாய இராணுவ சேவையினை திரும்பக் கொண்டுவருவதற்கான மக்ரோனின் அழைப்பு பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: இந்தப் பேரங்கள் பாரிய இராணுவ கட்டமைப்புக்கான மக்ரோனின் அழைப்புக்களுக்குப் பின்னே காணப்படும் பரந்த இராணுவ மற்றும் நிதிய நலன்களை சுட்டிக்காட்டுவதுடன் மற்றும் உலகரீதியான இராணுவ சேவைக்கு பிரான்ஸ் திரும்புவதையும் காட்டுகின்றது. மக்ரோனின் திட்டங்களை குறைத்துக் காட்டும் முயற்சி இருந்தபோதிலும், இந்த திட்டங்கள் சமூக சேவை செய்வதற்கு இளைஞர்களை ஊக்குவிப்பதற்கு நோக்கங் கொண்டதல்ல. இன்னும் சொல்லப்போனால், உலகம் முழுவதும் பிரதான, அணுவாயுதம் ஏந்திய மற்றும் வல்லரசுகளுக்கிடையில் எழும் பெரிய அளவிலான மோதலில் பங்கேற்பதற்கு தேவையான படைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு பிரான்ஸ் தயாரிப்புச் செய்துவருவதாகும்.

தில்லியில், மக்ரோன்  பிரான்ஸ்  இந்தப் பிராந்தியத்தில் அதன் தீவிர இராணுவத் தலையீட்டை பிரதான வல்லரசுகளுக்கிடையில் வளர்ந்து வரும் பதட்டங்கள் மற்றும் பகைமைகளில் செல்வாக்குச் செலுத்துவதை நோக்கங்கொண்டதாகப் பார்க்கிறது என்று தெளிவுபடுத்தினார். இந்தியப் பெருங்கடலில் எமது பாதுகாப்பும் உலக ஸ்திரத்தன்மையும் பணயம் வைக்கப்பட்டிருக்கிறது. பசிபிக் பெருங்கடல் போல இந்தியப் பெருங்கடலும் மேலாதிக்கத்திற்கான ஒரு இடமாக ஆகமுடியாது” என்று அவர் அறிவித்தார்.

இந்தியாவும் பிரான்சும் இந்த இரு நாடுகளுக்கும் இடையில் முன்னரே நிலவும்  கடற்படை ஒத்துழைப்பை தீவிரமாக்க உறுதி கொண்டுள்ளன, அதன் கீழ் அவை ஏற்கனவே ஆண்டுதோறும் “வருணா” கூட்டு கடற் பயிற்சியை நடத்தி வருகின்றன. “மூலோபாயக் கண்ணோட்டம்” என்ற ஆவணமானது “இந்தியப் பெருங்கடலில் கடல்சார் சூழ்நிலையின் மீதான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலை அதிகரிக்க” மற்றும் “இந்தியப் பெருங்கடலில் குவிமையப்படுத்தும் ஒரு கடல்சார் கண்காணிப்பு செயற்கைக்கோள் முறையை கூட்டாக அபிவிருத்தி செய்ய” உறுதி கொண்டுள்ளது. இது இந்தப் பிராந்தியத்தில் கப்பல்களின் நடமாட்டத்தை குறிப்பாக சீனக் கப்பல்களின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் விவரங்களை மேம்படுத்தலை அனுமதிக்கும்.

இதன் ஐயத்திற்கிடமற்ற விளைபயன் ஆனது வாஷிங்டன் இந்தியாவை சீனாவுக்கு எதிரான ஒரு நிகரிடையாக அபிவிருத்தி செய்கையில், ஆசியாவில் வளர்ந்து வரும் பெரும் வல்லரசு மோதலில் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பியத் தலையீட்டினை உக்கிரப்படுத்துவதாகும். அண்மைய மாதங்களில், இந்தியா மற்றும் சீனா – இரு அணுவாயுத அரசுகளும்- இமயமலையில் சீன இந்திய எல்லையிலுள்ள டோக்லாம் பீடபூமிப் பகுதி மீதான சர்ச்சையில் மற்றும் மாலைதீவு நெருக்கடி மீதாகவும் ஒருவரையொருவர் இராணுவ பலத்தை பயன்படுத்தப் போவதாக. அச்சுறுத்தியிருந்தனர். அது வெடித்திருந்தால், இந்தியாவில் உள்ள பிரெஞ்சு துருப்புக்களும், இந்தப் பகுதிகள் மீதான மோதலில் விரைவில் பங்கெடுப்பாளர்களாக ஆகியிருக்கக்கூடும்.

அமெரிக்க இராணுவம் மற்றும் சீனா அல்லது இந்தியா போன்ற பிரதான பிராந்திய வல்லரசுகள் இவற்றோடு ஒப்பிடுகையில் இந்தியப் பெருங்கடலில் பிரான்ஸ் சிறு பாத்திரத்தையே ஆற்றுகின்ற அதேவேளை, உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மோடிக்கு கணிசமான வசதிகளை வழங்க முன்வந்திருக்கின்றது.

ஜிபுட்டியில், மடகாஸ்கருக்கு அருகே ரியூனியன் தீவில், ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடலில் மொசாம்பிக்கின் மஜோத்தில் பிரான்ஸ் தளங்களைக் கொண்டிருக்கின்றது. அது தெற்கு பசிபிக்கில்  பிரெஞ்சு பாலினேஷியா மற்றும் நியூ காலிடோனியாவிலும் தளங்களை வைத்திருக்கின்றது. இந்தியாவும் பிரான்சும் செஷைல்ஸ் இல் ஒரு இராணுவ தளத்தைக் கட்ட தாயார் செய்துகொண்டிருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் பிரான்ஸ் 7,000க்கும் அதிகமான தரைத்துருப்புக்களை நிறுத்தியுள்ளது.

மக்ரோனின் விஜயமானது அமெரிக்க ஏகாதிபத்தியம் மட்டுமல்ல, அனைத்து ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய சக்திளும் உலக முதலாளித்துவத்தின்  போரை நோக்கி தீவிர உந்துலில் பங்கெடுக்கின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மக்ரோன் ஜேர்மனியுடன் கூட்டு வைத்து ஒரு ஐரோப்பிய இராணுவத்தைக் கட்டி எழுப்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறார் மற்றும் 2024 க்குள் 300 பில்லியன் யூரோக்களை செலவழிக்கப்போவதாக உறுதி அளித்திருக்கிறது. உள்நாட்டில் வேலைகளையும் சமூக நலத்திட்டங்களையும் வெட்டிக் குறைக்க நகர்தல் மற்றும் தொழிற்சட்ட விதிகளை சீர்குலைப்பது யாவும் வெளிநாடுகளில் இராணுவத்தை தீவிரப்படுத்தலின் செலவை தொழிலாள வர்க்கம் தாங்கிக்கொள்ள நிர்பந்திப்பதை நோக்கமாகக் கொண்டது.

ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் இந்தத் திட்டங்களை வகுத்திட்ட கடந்த மாத மூனிச் மாநாட்டில், அவர்கள் உலகில் ஆசியாவின் பொருளாதார எடை வளர்ந்து வருவதற்கு இடையில் “ஆசிய நாற்தரப்பு” என அழைக்கப்படுவது (அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா) உடன் உறவுகளை ஏற்படுத்த அவர்கள் வலியுறுத்தினர். மக்ரோனின் இந்திய விஜயம் பிரான்சால் மேற்கொள்ளப்படும் ஒரு பரந்த இராணுவ விரிவாக்கத்தின் ஒரு பகுதி ஆகும், அது இராணுவ மோதலுக்கு சீனாவுடனான சாத்தியமான ஒரு யுத்தத்துக்கான ஒரு இராணுவ மோதலுக்கான “ஆசிய நாற்தரப்பு” நாடுகளின் தயாரிப்புடன் மிக நெருக்கமாக சம்பந்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் Florence Parly இன்படி, 2017 முதற்கொண்டு பிரான்ஸ் ஆனது ஜப்பானுடன் தொழில்நுட்பம் மற்றும் செயல்முறை இராணுவ ஒத்துழைப்பு, அதேபோல இணைந்த கூட்டு இராணுவ பயிற்சிகளை முன்னெடுப்பதன் மீது ஜப்பானுடன் ஒப்பந்தங்களைப் பேசிக் கொண்டு வருகிறது. பிரதான இலக்கு சீனாவாகும். கடந்த ஜனவரியில் பிரான்சானது “கடல்வழி சுதந்திர நடவடிக்கைகளுக்காக, அதாவது அங்கு சீனப் படைகளை கண்காணிக்கவும் தொந்திரவு கொடுக்கவும் தென் சீனக் கடலில் அமெரிக்கா தலைமையிலான இராணுவ நுழைவுக்காக - இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடற்படைக் கலங்களைத் தொடர்ந்து நிறுத்தும் என பார்லி உறுதி வழங்கினார்.

அதேபோல, இந்தியாவில் அத்தகைய பிற்போக்கு ஒப்பந்தங்கள் போரின் அபாயத்தையும் இந்தியாவின் பெருமளவிலான ஏழ்மைமிக்க தொழிலாள வர்க்கத்தின் சுரண்டலை தீவிரப்படுத்துவதை தவிர வேறொன்றையும் செய்யப்போவதில்லை. மோடிக்கும் மக்ரோனுக்கும் இடையிலான பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை வரவேற்பதானது, நூறு மில்லியன் கணக்கான இந்திய தொழிலாளர்கள் கடும் வறுமையில் வாழும் நிலைமைகளின் கீழே அருவருப்பானதாகும்.

இந்தியாவின் ஆளும் செல்வந்தத் தட்டுக்கள் 8 பில்லியன் யூரோ மதிப்புடைய 36 ரஃபால் ஜெட் போர்விமானங்கள் வாங்குவதற்கு செலவழிக்கின்ற அதேவேளை,  70 சதவீத இந்திய மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் மற்றும் அவர்களில் பெரும்பான்மையினர் ஒரு நாளைக்கு 2 டாலர்கள் அல்லது அதற்கும் குறைவானதில் வாழ்கின்றனர். இந்த பேரங்கள், மில்லியன் கணக்கான இந்திய தொழிலாளர்கள் உயிர்வாழ்வதற்கே சம்பாதிக்க போராடுகையில் எதிர்கொள்கின்ற கஷ்டங்களை மேலும் அதிகரிக்க மட்டுமே செய்யும், அதேவேளை உலகை இன்னுமொரு பேரழிவுகரமான மோதலுக்கு நெருக்கமாய்க் கொண்டுவரும்.

மோடியின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) இந்த பிற்போக்கு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாட்டை இன, மத மற்றும் சாதிய வழிகளில் பிளவுபடுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கெதிரான இனவாத தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது மற்றும் மசூதிகளை அழிப்பதில் பேர்பெற்றதாகவும் விளங்குகிறது. டிசம்பர் 1992ல், பாஜக வும் மற்ற இந்து மேலாதிக்கவாதிகளும் கிட்டத்தட்ட 500 ஆண்டு பழமையான பாபர் மசூதியை இடித்துத்தள்ளினர். 2002ல் குஜராத் கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், அச்சம்பவம் 140,000 இலிருந்து 200,000 முஸ்லிம்களை வேறு மாநிலங்களுக்கு அகதிகளாக வெளியேறுவதற்கு நிர்ப்பந்தித்தது. அவ்வேளை மோடி குஜராத்தில் மாநில பாஜக அரசாங்கத்தின் முதல்வராக இருந்தார். மோடி இந்தக் குற்றத்தால் கறைபடிந்தவரானார், மற்றும் உண்மையில் அவர் அதிகாரத்திற்கு வரும் முன்னர்  கலவரங்களில் அவரது பாத்திரத்திற்காக அவர் அமெரிக்கா பயணம் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டார்.

அவரது சொந்த முற்றுமுழுதான பிற்போக்கு அரசியலின் அறிகுறியாக, மக்ரோன் மோடி மற்றும் பாஜக வின் பாத்திரத்தை அவரது சொந்த வழியில் மூடிமறைக்க்க முயன்றார்.

அவரது விஜயத்தின்போது, மக்ரோன் உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை (பாஜக) காசியில் சந்தித்தார். இந்த இடம் இந்து மேலாதிக்கவாதத்திற்கான மத்திய நிலையமும் மற்றும் இந்தியாவின் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும், இந்து இளைஞர் ஆயுதக்குழுவான இந்து யுவ வாஹிபி என்ற அமைப்பின் நிறுவனரான, இந்துத் துறவியான யோகி ஆதித்யநாத்தின் அரசியல் தளமாகும். ஆதித்யநாத் கொலை முயற்சி, ஆத்திரமூட்டல் மற்றும் கலவரத்தைத் தூண்டல் மீதாக குற்றம் சாட்டப்பட்டிருப்பவர். அவர் 2007 ஜனவரியில் குற்ற நடவடிக்கை மற்றும் கலவரத்தைத் தூண்டிய குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு எதிராக நிலுவையிலுள்ள ஒரு கொலைக்குற்றச்சாட்டு இருக்கையிலும் அவர் 10 நாட்கள் கம்பிகளுக்குப் பின்னே சிறையில் இருந்தார்.