ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A travesty of justice that must not stand!
One year since India’s courts condemned framed-up Maruti Suzuki workers to jail for life

நீதியின் மீதான பரிகாசம் நிலைத்துநிற்க கூடாது!

ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு இந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தண்டித்து இதுவரை ஒரு வருடமாகிறது

By Keith Jones
17 March 2018

ஜோடிக்கப்பட்ட கொலை குற்றச்சாட்டுக்களின் பேரில் 13 இந்திய மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது குறித்த கசப்பானதொரு ஆண்டு நிறைவாக இந்த வார இறுதி உள்ளது.

இந்திய சிறைச்சாலை எனும் வாழும் நரகத்திற்குள் அவர்களது எஞ்சிய வாழ்நாட்களை கழிக்கும்படி அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சரியாக ஒரு வருடமாகியிருப்பதை மார்ச் 18 குறிக்கிறது. ஆதி முதல் அந்தம் வரை நீதியை பரிகசிப்பதாகவே இருந்துவந்த ஐந்து ஆண்டுகால சட்ட நடைமுறைகளின் உச்சகட்டமாகவே அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் புதிய, பூகோள அளவில் இணைக்கப்பட்டதான வாகன தொழில்துறையில் இயல்பாகவே காணக்கூடிய மலிவுகூலி உழைப்பு நிலைமைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்தது மட்டும்தான் அந்த 13 பேர் செய்த ஒரே “குற்றம்” ஆகும். அவர்களில் மாருதி சுசூகி தொழிலாளர் தொழிற்சங்கத்தின் (Maruti Suzuki Workers Union-MSWU) அனைத்து பன்னிரண்டு செயற்குழு (அல்லது நிர்வாக) உறுப்பினர்களும் அடங்குவர்.

ஹரியானா, மானேசரில் உள்ள மாருதி சுசூகி வாகன ஒருங்கிணைப்பு ஆலையிலுள்ள தொழிலாளர்கள், ஜப்பானை தளமாகக் கொண்ட நாடுகடந்த நிறுவனம் மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவன சார்பு தொழிற்சங்கம் ஆகியவற்றை எதிர்த்து 2011-12 இல் வெளிநடப்புகளையும், உள்ளிருப்பு போராட்டங்களையும் நடத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஒரு போர்க்குணமிக்க போராட்டத்தின் போது இந்த MSWU என்பது ஸ்தாபிக்கப்பட்டது.

குறைவூதியங்கள், பாதுகாப்பற்ற வேலைகள் மற்றும் கொடூரமான வேலை நிலைமைகள் இவற்றை எதிர்த்து மாருதி சுசூகி தொழிலாளர்கள் விடுத்த சவால், இந்திய தலைநகரமான தில்லியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள மாபெரும் மானேசர்-குர்கான் தொழில்துறை பகுதி முழுவதிலுமான தொழிலாளர் எதிர்ப்பின் ஒரு மையப் புள்ளியாக மாறியது.

அதனால் தான் துல்லியமாக மாருதி சுசூகி நிறுவனத்தை குறிவைத்து, இந்தியாவின் வணிக உயரடுக்கு, மற்றும் அவர்களது பொலிஸ், நீதிமன்றங்கள் மற்றும் அரசியல் கூலியாட்கள் என அனைவரும் ஒன்றுசேர்ந்து MSWU ஐ இல்லாதொழித்து, மானேசர் தொழிலாளர்களை பழிவாங்குவதற்கும் துன்புறுத்துவதற்கும் உறுதி பூண்டனர்.

ஜூலை 18, 2012 அன்று, மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆலையில் நிறுவனத்தால் தூண்டிவிட்ட ஒரு கைகலப்பை அவர்கள் பற்றிக் கொண்டனர், மேலும் அப்போது அதற்கு மத்தியில் வெடித்த ஒரு மர்மமான தீயின் விளைவாக நிறுவன மேலாளர் ஒருவர் மூச்சுத்திணறி இறக்கும் நிலையும் ஏற்பட்டது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக எந்தவொரு முறையான விசாரணையுமின்றி, மாருதி சுசூகி நிர்வாகத்துடன் சட்டவிரோதமாக கைகோர்த்துக் கொண்டு, பொலிஸார் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை கைதுசெய்ய இலக்கு வைத்தனர், இதனை நீதிமன்றம் ஒப்புக்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டது. இதற்கிடையில், மாருதி சுசூகி நிறுவனம், அதன் 2,400 நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களை, கிட்டத்தட்ட மானேசர் வாகன ஒருங்கிணைப்பு ஆலையின் ஒட்டுமொத்த தொழிலாளர் சக்தியையும் பணிநீக்கம் செய்து மறுநியமனம் செய்வதற்கு காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கம் உதவியது.

இறுதியாக, கொலை, தாக்குதல் மற்றும் பிற கடுமையான குற்றங்களை புரிந்ததாக 148 தொழிலாளர்கள் மீது இந்திய அதிகாரிகள்  குற்றங்களை சுமத்தியதோடு, அவர்களை பழிவாங்கும் நோக்குடன் பல வருடங்களுக்கு அவர்களில் எவரும் பிணையில் வெளிவருவதை தடுக்கும் விதமாக இந்திய சட்ட விதிமுறைகளையும் புறக்கணித்தனர்.

முதலீட்டாளர்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தவும், இந்தியா எங்கிலும் உள்ள தொழிலாளர்களை அச்சுறுத்தவும் மாருதி சுசூகி தொழிலாளர்களை முன்னுதாரணமாக காட்ட வேண்டியது அவசியம் என்பதை இந்திய அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் இரகசியமாக வைத்திருக்கவில்லை.

ஹரியானா உயர் நீதிமன்றம் மே 2013 இல், தொழிலாளர்களது ஆரம்பகட்ட பிணையனுமதி கோரும் விண்ணப்பத்தை நிராகரிப்பதை நியாயப்படுத்துகையில், “தொழிலாளர் அமைதியின்மை குறித்த அச்சத்தினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அநேகமாக இந்தியாவில் பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள்” எனக் கூறியது.

மார்ச் 2017 இல் 13 தொழிலாளர்களுக்கு தீர்ப்பு வழங்குவதற்கான விசாரணையில், சிறப்பு வழக்கறிஞர் அனுராக் ஹூடா, அவர்கள் அனைவருக்கும் மிகக் கடுமையான தண்டனை – அதாவது மரண தண்டனை - வழங்கப்பட வேண்டுமென வாதிட்டதோடு, “நமது தொழில்துறை வளர்ச்சி சரிந்துவிட்டது, வெளிநாட்டு நேரடி முதலீடும் (Foreign Direct Investment-FDI) வறண்டுவிட்டது என்றார். மேலும், பிரதம மந்திரி நரேந்திர மோடி “இந்தியாவில் தயாரிப்பு செய்யுங்கள்” திட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார், ஆனால் அதற்கு மாறாக இத்தகைய சம்பவங்கள் நமது கண்ணியத்தின் மீதான ஒரு கறையாக இருக்கின்றன” என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், உலக சோசலிச வலைத் தளமும், அவர்களை பாதுகாப்பதில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட உடனடியாக ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டு அதன் மூலமாக மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கொடூரமான ஆயுள் தண்டனைகளுக்கு பதிலிறுத்தது.

“மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்!” என்ற மார்ச் 2017 அறிக்கை, “காங்கிரஸ் கட்சி மற்றும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) போன்ற இந்தியாவின் பிரதான அரசியல் கட்சிகளின் முற்று முழுதான உடந்தையுடன், சுசூகி பெருநிறுவனம், பொலிஸ் மற்றும் நீதித்துறை அதிகாரிகளால் தொடுக்கப்பட்ட ஒரு மாபெரும் ஜோடிப்பு வழக்கின் விளை பொருளாகவே அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புகள் இருந்தன” என விவரித்தது. (பார்க்கவும்:ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்!”)

உலகளவில் மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் ஒரு முக்கிய கூறாக, வழக்கு விசாரணை எழுத்துப்படியை அடிப்படையாக கொண்டு ஜோடிப்பு வழக்கு குறித்து முழுமையான ஐந்து பாகம் கொண்ட ஒரு அம்பலப்படுத்தலை பிரசுரித்தது. (பார்க்கவும்: “The frame-up of the Maruti Suzuki workers—Part 1: A travesty of justice”).

வாதித்தரப்பு வழக்கு ஓட்டைகளும் முரண்பாடுகளும் நிரம்பியதாக இருந்தது. மேலும், இவ்வழக்கு தொடர்பாக அவர்கள் கூறிய முக்கிய ஆதாரங்கள் குறித்தும் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அவர்களால் புனையப்பட்ட சாட்சியங்கள் குறித்தும் மிக அடிப்படையான தடயவியல் சோதனைகளை நடத்துவதற்கு கூட பொலிஸ் தவறிவிட்டது எனவும் பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞரால் நிரூபிக்க முடிந்தது.

விசாரணை நீதிபதி கோயல், தொழிலாளர்களுக்கு எதிராக தெளிவாக ஒருபக்கசார்புடன் இருந்தார். அவர், வாதித்தரப்பின் மூலமாக வழங்கப்பட வேண்டிய ஆதார சுமைகளை மீண்டும் மீண்டும் தொழிலாளர்களின் பக்கம் மாற்றினார்.

ஜூலை 18, 2012 சம்பவத்தன்று ஆலையில் இருந்த ஆனால் குற்றம் சாட்டப்படாத மாருதி சுசூகி தொழிலாளர்களின் எந்தவொரு சாட்சியத்தையும் நிராகரித்ததை, அவர்கள் தவறான சாட்சியங்களை அளித்திருப்பார்கள், ஏனென்றால் அவர்கள் பரிவு கொண்டவர்களாக இருந்திருக்கலாம், அல்லது MSWU இனால் மிரட்டப்பட்டிருக்கலாம் என்றெல்லாம் கூறி அவர் நியாயப்படுத்தினார்.

வாதித்தரப்பு கொலை வழக்கின் முக்கியம்சமாக இந்த தீ விபத்து இருந்தது. இதுவரை, அது எங்கு, எப்போது அல்லது எப்படி பற்றிக்கொள்ளத் தொடங்கியது என்பதை நிரூபிக்க முடியவில்லை. அங்கு ஒரு தீப்பெட்டி கிடந்தது கண்டறியப்பட்டதாக அதிகாரிகளால் கூறப்பட்டது, எனினும் நெருப்பு பற்றியது குறித்த ஆரம்பகட்ட விசாரணையின் போது அதைக் கண்டறிவது விடுபட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது, மற்றும் நெருப்பு சுவாலையில் முற்றிலும் அழிந்துபோன ஒரு பகுதியில் சிறிதும் சேதமடையாமல் அது மட்டும் எப்படி தப்பித்தது என்பதையும் விளக்கமுடியவில்லை. ஆனால், எந்தவொரு தொழிலாளிக்கும் இந்த தீப்பெட்டிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

நிறுவன மேலாளர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலில் தொழிலாளர்கள் எவ்வகை ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்று கூறப்பட்டது உட்பட, இந்த வழக்கு பற்றிய அதன் கதையின் அடிப்படை கூறுகளை கூட வாதித்தரப்பு மாற்றியது.

சட்டவிரோதமாக 89 தொழிலாளர்களை கைதுசெய்துள்ள உண்மையை மூடிமறைக்கும் ஒரு முயற்சியில் பொலிஸ், “பொய்யான சாட்சியங்களையே” கண்டுபிடித்தனர், மேலும், ஜூலை 18, 2012 கைகலப்பில் அவர்கள் தலையிட்ட போது, அவர்களை தொழிலாளர்கள் தான் தாக்கினார்கள் என்ற தங்களது கூற்றுக்கான “ஆதாரமாக”, போலியான மருத்துவ சட்ட சான்றிதழ்களையே (Medico Legal Certificates-MLCs) சமர்ப்பித்தனர்.

பொலிஸின் நடவடிக்கைகள் அப்பட்டமாக சட்டவிரோதமானவையாக இருந்தன என்பதால், எந்தவித வாதித்தரப்பு சாட்சியமும் அடையாளம் காட்டவில்லை அல்லது சரியாக அடையாளம் காட்டவில்லை என்ற நிலையில் ஏனைய 29 தொழிலாளர்களுடன் சேர்த்து 89 பேரையும் நிரபராதிகள் என்று விடுவிக்க நீதிபதி கோயல் நிர்பந்திக்கப்பட்டார்.

ஆனால், MSWU தலைவர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுக்களின் பேரில் ஜோடிக்கப்பட்ட வழக்கின் மிகவும் அத்தியாவசியமான பகுதியை “காப்பாற்றும்” நோக்கத்துடனேயே அவர் அவ்வாறு செய்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதிவாதித் தரப்பு பொலிஸின் சட்டவிரோதத்தை மறுக்கவியலாதபடிக்கு நிரூபிக்க முடியாத நிலையில், சுவிசேஷ உண்மையாக அவர்களது ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.  இவ்வழக்கில், தலைமை காவல் ஆய்வாளர் மாருதி சுசூகி நிர்வாகத்துடன் சட்டவிரோதமாக கைகோர்த்துள்ளார் மற்றும் குறுக்கு விசாரணையின் கீழ் அவர் வழங்கிய MLC மோசடியானது என்பதை ஒப்புக் கொண்டார் என்ற உண்மை இருந்த போதிலும், அது அவரது நம்பகத்தன்மை மீதோ அல்லது ஒட்டுமொத்த பொலிஸ் விசாரணையின் மீதோ தாக்கத்தை கொண்டிருக்கவில்லை என்று நீதிபதி கோயல் தனது தீர்ப்பில் வாதிட்டார்.

மானேசர்-குர்கான் தொழில்துறை பகுதி மற்றும் இந்தியா எங்கிலும் மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு பரந்த அனுதாபமும் ஆதரவும் உள்ளது. கடந்த மார்ச் 18 இல், 18 தொழிலாளர்களுக்கு குறைந்த குற்றச்சாட்டுக்களின் பேரில் ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை வழங்கப்பட்டதுடன் சேர்த்து, 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதற்கு பத்தாயிரக்ககணக்கான தொழிலாளர்கள் வேலை செய்வதை உடனடியாக நிறுத்தினர்.

ஆனால், ஸ்ராலினிச தலைமையிலான CITU மற்றும் AITUC உட்பட, பெரும் தொழிற்சங்க கூட்டமைப்புகளும் மற்றும் ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகளும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முன்னும் பின்னும் மாருதி சுசூகி தொழிலாளர்களை திட்டமிட்டே தனிமைப்படுத்தி வைத்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் ஆங்கில மொழி வாராந்திர பத்திரிகையான People’s Democracy, பல வாரங்களாக, MSWU தலைவர்கள் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்தும், அவர்கள் மீது சுமத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தண்டனைகள் குறித்தும் செய்தி வெளியிடுவதற்கு கூட தவறியது. சிபிஎம், அதன் எதிர்வரும் கட்சி மாநாட்டிற்காக தயார்செய்து வைத்துள்ள 50 க்கும் மேலதிக பக்கங்கள் கொண்ட அரசியல் தீர்மானத்தில் மாருதி சுசூகி தொழிலாளர்கள் பற்றி எதையும் குறிப்பிடவில்லை; அனால் இந்தியா முழுவதிலும் உள்ள வேலை வழங்குநர்கள், அவர்களுக்கு ஏற்பட்ட கதியை அடிக்கடி சுட்டிக்காட்டி தொழிலாளர்களின் எதிர்ப்புகளை அடக்க முயற்சிக்கின்றனர் என்பது எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த ஒன்றாகும்.

இந்தியாவை ஒரு மலிவுகூலி உழைப்பு புகலிடமாக உருவாக்குவதற்கான இந்திய உயரடுக்கின் உந்துதலுக்கு ஸ்ராலினிஸ்டுகள் ஆதரவளித்துள்ள நிலையில், அவர்கள் இரண்டு விஷயங்கள் பற்றி அஞ்சுகின்றனர், ஒன்று மாருதி சுசூகி தொழிலாளர்களின் போர்க்குணமிக்க உதாரணம் மற்றையது அப்போராட்டங்களுடன் அவர்கள் வைக்கும் கூட்டு வளர்ந்துவரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை, இந்திய சர்வாதிகார மற்றும் பரம-வகுப்புவாத பிஜேபி அரசாங்கத்திலிருந்து காங்கிரஸ் மற்றும் ஏனைய வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளுக்கு அடிபணிய செய்யும் அவர்களது முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும் என்றும் அஞ்சுகின்றனர்.

தொழிற்சங்கங்களும் இடதுசாரி கட்சிகள் என்று தம்மை கூறிக்கொள்பவையும் மாருதி சுசூகி தொழிலாளகளை கைவிடுவது அரசிற்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. ஹரியானாவில் உள்ள பிஜேபி தலைமையிலான மாநில அரசாங்கம், 117 தொழிலாளர்களை குற்றமற்றவர்களென தீர்ப்பளித்து விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும், 13 தொழிலாளர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மாற்றி அதற்கு பதிலாக அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கிட உத்திரவிடக் கோரி உயர் நீதிமன்றத்திற்கு மனு அளிக்கவும் உத்தேசித்திருப்பதாக அறிவிப்பு விடுத்துள்ளது.

இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்க முன்வரவேண்டும். கொத்தடிமை சுரண்டலுக்கு ஒரு சவாலாக, அவர்கள், இந்திய தொழிலாளர்களுக்காக மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்காகவும் ஒரு பெரும் அடியை எடுத்துவைத்துள்ளனர். உலக மூலதனத்தை எதிர்த்து போராட, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை உருவாக்குவதில் அவர்களின் பாதுகாப்பு என்பது ஒரு முக்கிய முதல் படியாகவுள்ளது.