ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French President Macron turns his labor decrees against rail workers

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் தனது தொழல் உத்தரவாணைகளை புகையிரத தொழிலாளர்களுக்கு எதிராகத் திருப்புகிறார்

By Alex Lantier
28 February 2018

பிரான்சின் புகையிரத தொழிலாளர்களின் சட்ட பாதுகாப்பு விதிகளை (statut des cheminots) முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பிரெஞ்சு தேசிய புகையிரத சேவையை (SNCF) தனியார்மயமாக்குவதற்குமான திட்டங்களை பிரான்சின் பிரதமர் எட்வார்ட் பிலிப் திங்களன்று அறிவித்தார். ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் வர்க்கப் போராட்டங்கள் அதிகரித்துச் செல்வதன் மத்தியில், தனது திட்டநிரலுக்கு தொழிலாளர்கள் மத்தியில் ஆழமான கோபம் நிலவுவது குறித்து அறிந்திருக்கும் அவர், இந்த சீர்திருத்தத்தை ஒருதலைப்பட்சமாக ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் உத்தரவாணைகளைப் (ordonnances) பயன்படுத்தி திணிக்கவிருப்பதாக அறிவித்தார். இது சட்டமன்ற அங்கத்தவர்களிடம் இருந்தும் பெருநிறுவன ஆதரவு தொழிற்சங்கங்களிடம் இருந்தும் ஆதரவைத் திரட்டுவதற்கான நேரத்தை அவருக்கு வழங்குகின்ற நோக்கமுடையதாகும்.

இரண்டாம் உலகப் போரில், எல்லாவற்றுக்கும் மேல் சோவியத் ஒன்றியத்தின் தலைமையில், நாஜி ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டதில் பிரெஞ்சு புகையிரத தொழிலாளர்களது பங்கேற்பை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சமூக உரிமைகளை அகற்றுவதற்கு நோக்கம் கொண்டிருப்பதை பிலிப் ஊர்ஜிதம் செய்தார். அவர் கூறினார்: “புதிய தலைமுறையினர், பயிற்சிப் பணியாளர்கள், SNCF இல் இணைவதற்கு விரும்புகின்ற அனைவருக்கும், நாங்கள் சொல்வது என்னவென்றால், அனைத்து பிரெஞ்சு மக்களும் அனுபவிக்கின்ற வேலை நிலைமைகள் மீதான உத்தரவாதங்களை, தொழிலாளர் சட்ட உத்தரவாதங்களை (Code du travail) அவர்களும் அனுபவிப்பார்கள்... எதிர்காலத்தில், முடிவு செய்யப்படுகின்ற ஒரு தேதியில் இருந்து, புகையிரத தொழிலாளர்கள் சட்ட பாதுகாப்பு விதிகளின் (statut des cheminots) அடிப்படையில் வேலை நியமனங்கள் இருக்காது.”

SNCF இன் நிலையானது “எச்சரிக்கை மணி”யடிப்பதாய் இருப்பதாக கூறிய பிலிப், அரசாங்கம் மக்ரோனின் தொழில் உத்தரவாணைகளைப் பயன்படுத்தி அதன் சீர்திருத்தத்தை திணிப்பதற்கு அனுமதிக்கின்ற ஒரு வழிவகைச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுத்தார். அவர் கூறினார், “அவசரமான அவசியத்திற்கு முகம்கொடுக்கும் நிலையில், அரசாங்கமானது இந்த கோடைக்குள்ளாக முக்கியமான கொள்கைகளை நிறைவேற்றிவிடுகின்ற தீர்மானத்துடன் இருக்கிறது... மார்ச் மாதத்தின் மத்தியில், நாங்கள் சட்டம் இயற்றுவத்கான ஒரு வரைவை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிப்போம். தொழில் உத்தரவாணைகளை பயன்படுத்துவது SNCF நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கங்கங்களுக்கும் இடையிலான பரந்த பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதிக்கும்.” அரசு பகுதியாக பங்குகளைக் கொண்டிருக்கும் வகையில் ஒரு பெருநிறுவனமாக SNCF தனியார்மயமாக உருமாற்றப்படுவதற்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

பிலிப் மற்றும் மக்ரோனின் கொள்கையானது அதன் வடிவம் மற்றும் உள்ளடக்கம் இரண்டிலுமே முறையற்றதும் ஜனநாயக விரோதமானதுமாகும், இகழ்ச்சியுடன் நிராகரிப்பதற்கு தகுதியானதாகும்.

பிரெஞ்சு புகையிரத தொழிலாளர்களின் சட்ட பாதுகாப்பு விதிகளையும், ஐரோப்பாவெங்கிலுமான தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களையும் பராமரிக்குமளவுக்கு போதுமான நிதியாதாரம் இல்லை என்பதான கூற்று ஒரு அரசியல் பொய் ஆகும். SNCF தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்ற அதேவேளையில், மக்ரோன் பில்லியன் கணக்கான யூரோக்கள் வரி வெட்டுக்களை பெரும் செல்வந்தர்களுக்கு கையளித்துக் கொண்டிருக்கிறார். 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவின் சமயத்தில் பிரெஞ்சு அரசு ஒர் இரவிலேயே 360 பில்லியன் யூரோ கடன் உத்தரவாதங்களை வங்கிகளுக்கு அளித்தது, அதன்பின்னர் ஐரோப்பிய மத்திய வங்கி, டிரில்லியன் கணக்கான யூரோக்களை வங்கிகளுக்கு கடனுதவி அளிப்பதற்கு ஆதரவளித்தது.

பெரும் ஏகாதிபத்திய சக்திகளின் போர் உந்துதலே இந்த பிற்போக்குத்தனமான கொள்கையை செலுத்திக் கொண்டிருப்பதாகும்: தொழிலாளர்களின் நலன்களைப் பலிகொடுத்து, பிரெஞ்சு இராணுவவாதம் வளர்த்தெடுக்கப்படுவதற்கு நிதியாதாரமளிக்க மக்ரோன் நோக்கம் கொண்டிருக்கிறார்.

பிப்ரவரி 17 அன்று மூனிச் பாதுகாப்பு மாநாட்டில், பிரான்சின் பாதுகாப்பு அமைச்சரான ஃபிளோரொன்ஸ் பார்லி, 2018-2024க்கான இராணுவ நிதிஒதுக்கீட்டில் 35 சதவீதம் அதிகரிப்பு செய்து 300 பில்லியன் யூரோக்களாக அதிகரிக்கவிருப்பதாக அறிவித்தார். பேர்லினுடன் கைகோர்த்து இப்போது நடைபெற்று வருகின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவமயமாக்கத்தில் இணைந்து கொள்வதற்காக, மாலி, சிரியா மற்றும் பெரும் அணுசக்தி நாடுகளுக்கு இடையில் நேரடியாக நடக்கும் போர்கள் உள்ளிட உலகெங்குமான போர்களுக்கு நிதியாதாரம் அளிப்பதற்காக தொழிலாளர்களை பல தசாப்தங்களுக்கு பின்னே வீசியெறிய நோக்கம் கொண்டிருக்கிறார்.

தொழிலாளர்களை எந்த சமூக உரிமைகளுமற்ற தற்காலிகத் தொழிலாளர்களாக தரம் குறைப்பதுதான் எதிர்காலத்திற்கான அரசாங்கத்தின் திட்டமாக இருக்கிறது என்பதையே, PSA வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் மீதும் SNCF புகையிரத தொழிலாளர்கள் மீதும் அதன் தொழில் உத்தரவாணைகளைத் திணிக்கின்ற அதன் திட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. புகையிரத தொழிலாளர்களுக்கு தொழில் சட்டத்தின் பாதுகாப்புகளை வழங்கவிருப்பதாக பிலிப் வாக்குறுதியளிப்பது ஒரு சிடுமூஞ்சித்தனமான மோசடியாகும். 2012-2017 ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தில் மக்ரோனின் பங்கேற்புடன் நிறைவேற்றப்பட்ட தொழில் சட்டமானது முதலாளிகளும் தொழிற்சங்கமும் தொழில் சட்டத்தை மீறுவதில் உடன்பட அனுமதிக்கிறது. பிலிப் வழங்கவிருப்பதாகக் கூறும் பாதுகாப்புகளே கூட, உண்மையில், நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சென்ற ஆண்டில் பிரான்சின் இரசாயனத் தொழிற்துறையும் தொழிற்சங்கங்களும், தொழில் சட்ட வரையறையின் படி, தொழிலாளர்கள் குறைந்தபட்ச சம்பளத்திற்கும் கீழாக ஊதியமளிக்கப்படுகிறதான ஒரு ஒப்பந்தத்தில் உடன்பட்ட போது இதுவே காட்சிக்கு வந்தது.

ஐரோப்பாவெங்கிலுமான தொழிலாள வர்க்கத்தினால் போர் மற்றும் சமூக அசமத்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டம் நடத்தப்படாமல் மக்ரோனின் பிற்போக்கான கொள்கைகளுக்கு எதிரான எந்த உண்மையான போராட்டமும் நடத்தப்பட முடியாது.

SNCF ஐ கலைப்பதற்கான தனது திட்டங்களை மக்ரோன் முன்வைத்துக் கொண்டிருக்கின்ற அதேவேளையில், 2008 பொறிவு முதலான ஒரு தசாப்தத்தில் சமூகத் தாக்குதல் தொடர்ச்சியாக வேகம் பெற்று வந்திருப்பதன் பின்னர் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தில் எதிர்ப்பும் போர்க்குணமும் பெருகி வருகிறது. 2018 தொடங்கியது முதலாக, ஈரான் மற்றும் துனிசியாவில் தொழிலாளர் போராட்டங்கள், ஜேர்மன் மற்றும் துருக்கிய உலோகத் தொழிலாளர்களின், பிரிட்டிஷ் புகையிரத தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், மற்றும் சிரிசா (“தீவிர இடதுகளின் கூட்டணி”) அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு எதிரான கிரேக்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் என பாரியத் தொழிலாளர் போராட்டங்கள் அபிவிருத்தியடைந்து வருகின்றன.

அமெரிக்காவில், சக்திவாய்ந்த அமெரிக்கப் பாட்டாளி வர்க்கம் போராட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. ஒரு பிற்போக்குத்தனமான ஒப்பந்தத்தைத் திணிப்பதற்காக ஐக்கிய வாகன உற்பத்தித் தொழிலாளர் சங்கத்திற்கு (UAW) பெருநிறுவனங்கள் கையூட்டு அளித்திருப்பது தொடர்பாக வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்கள் மத்தியில் கோபம் பெருகிச் செல்வதன் மத்தியில், ஒட்டுமொத்த மேற்கு வேர்ஜினியா மாகாணமெங்கிலும் ஆசிரியர்கள் ஒரு வலது-சாரி ஆளுநரை எதிர்த்து நிற்பதோடு மேம்பட்ட ஊதியங்களையும் வேலை நிலைமைகளையும் கோரி அணிதிரண்டு வருகின்றனர்.

பிரான்சில், ஏர் பிரான்ஸ் மற்றும் சுகாதார நலத் துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் பெருகிச் செல்வதன் மத்தியில், புகையிரத தொழிலாளர்கள் ஒரு போராட்டத்தை ஒழுங்கமைக்கும் அவசியத்திற்கு முகம்கொடுத்து நிற்கின்றனர்.

மக்ரோனின் தாக்குதல்களை எதிர்த்து நிற்கவேண்டுமெனில், தேசிய மட்டத்தில் ஒழுங்கமைக்கப்படுகின்ற ஒருசில அடையாள தொழிற்சங்க போராட்டங்கள் என்ற கட்டுத்தளையை தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. போராட்டத்தை, மக்ரோனுடன் “பேச்சுவார்த்தைகளுக்கு” தலைமை கொடுத்துக் கொண்டிருக்கின்ற தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மற்றும் அதன் அரசியல் கூட்டாளிகளின் கரங்களில் இருந்து விடுவித்து, மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயக-விரோத மற்றும் இராணுவவாதக் கொள்கைகளுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவதற்கு சுயாதீனமாக ஒழுங்கமைப்பதுவே முக்கியமான பிரச்சினையாகும்.

வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்கள், இரசாயனத் துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் என மக்ரோனால் ஏற்கனவே குறிவைக்கப்பட்டிருக்கின்ற தொழிலாளர்களது மற்ற அடுக்குகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, பிரான்சில் புகையிரத தொழிலாளர்கள் முழுக்க தேசிய அளவில் அணிதிரள்வதையே அரசாங்கம் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சியுடன், சர்வதேச அளவில் அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளிடம் இருந்து தனிமைப்படுத்தி, பல்வேறு தொழிற்துறைகளிலுமான போராட்டங்களை களைப்படையச் செய்து ஓயச் செய்வதற்கு அல்லது உடைத்து முறிப்பதற்கு அவர் நோக்கம் கொண்டிருக்கிறார். பிரான்சில் இப்போது நடைபெற்று வருகின்ற போராட்டங்கள் ஐக்கியப்படக் கூடாது என்பதில் பிரான்சின் தொழிற்சங்கங்கள் பிடிவாதமாக இருக்கின்றன, புகையிரத தொழிலாளர்கள் மீது ஒரு அவமதிப்பான மற்றும் மனஸ்திரம் குலைக்கின்ற ஒரு தோல்வியை வழங்குவதற்கான சாத்தியத்தைக் கொண்டு ஊடகங்களின் பகுதிகள் குரூரத் திருப்தியை கண்களில் காட்டுகின்றன.

கருத்துக்கணிப்பு வல்லுநரான Jérôme Sainte-Marie Le Monde பத்திரிகையிடம் பேசுகையில் மக்ரோனுக்கு பின்வருமாறு அறிவுரையளித்தார்: “SNCF சீர்திருத்தமானது ஒரு யுத்தத்தின் தோற்றத்தைப் பெறுவதென்பது அவருக்கு நல்லதாக இருக்கும். வெற்றி ரொம்ப சுலபமானதாய் இருந்தால், அவருக்கு அரசியல்ரீதியாக அதில் பெரிய பயனேதும் இல்லை. தாட்சர் சுரங்கத் தொழிலாளர்களது வேலைநிறுத்தத்தின் போது, தொழிற்சங்க அசுரத்தனத்தின் அபாயகரமான கற்பனைக்கோலத்திற்கு எதிராக ஒரு துணிச்சலான போராட்டம் நடத்தி அதில் அவர் இறுதியில் வெற்றி பெற்றார், அது போன்றிருப்பதே மக்ரோனுக்கு மேம்பட்டதாக இருக்கும்.”

சுரங்கத் தொழிலாளர்களின் தேசிய சங்கத்தின் (National Union of Mineworkers) கட்டுப்பாட்டில் நடந்த ஒரு போராட்டத்தை மற்ற தொழிற்சங்கங்களை தனிமைப்படுத்தி, அதன்மூலமாக தொழிலாளர்களது வாழ்க்கைத் தரங்களின் மீது ஒரு பரந்த தாக்குதலைத் தொடுப்பதற்கு பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சரை அனுமதிக்கும் நிலை நேர்ந்த, கிரேட் பிரிட்டனில் 1985 இல் நடந்த சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைக் குறிப்புக் காட்டுவது மக்ரோனின் திட்டங்கள் விடயத்தில் ஒரு எச்சரிக்கையாகும்.

அடிப்படையில் மக்ரோனின் அதே தேசியவாத மற்றும் இராணுவவாத முன்னோக்கையே பகிர்ந்து கொள்கின்ற தொழிற்சங்கங்களின் துரோக இயல்பின் மீதே முதலாளித்துவ வர்க்கத்தின் மூலோபாயம் சார்ந்திருக்கிறது. இராணுவத்தில் கூடுதலாய் பல பில்லியன்கள் செலவிடப்படுவதற்கு ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் விடுக்கும் அழைப்பு, ஸ்ராலினிச CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) போன்ற LFI உடன் தொடர்புடைய “வர்க்கப் போராட்ட சங்கங்கள்” என்பதாய் சொல்லப்படுபவை உள்ளிட இந்தத் தட்டுக்களின் பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தின் ஒரு தெளிந்த பிரதிபலிப்பாய் இருக்கிறது.

நாட்டை “நவீனப்படுத்துவதற்காக”வும் மற்றும் உலக அரங்கில் அதன் “போட்டித்திறனை”யும் அதிகாரத்தையும் ஊக்குவிப்பதற்காகவும் விருப்பம் கொண்டிருக்கும் அவர்கள், மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற எந்த சமூகத் தாக்குதல்களையும் ஏற்றுக் கொள்வதற்கு விருப்பத்துடன் இருக்கிறார்கள்.

தொழிற்சங்கங்கள் எந்த எதிர்ப்பையும் ஒழுங்கமைப்பதற்கு தவிர்க்கின்ற அதேநேரத்தில், எதிர்ப்பு சக்திகளாக காட்டிக் கொள்வதற்கு நப்பாசையுடன் முனைந்து கொண்டிருக்கின்றன. CGT ஆரம்பத்தில் மார்ச் 22 அன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது; அத்துடன் மக்ரோனின் தொழில் உத்தரவாணைகளைப் பாராட்டியதும் இரசாயனத் தொழிற்துறையில் குறைந்தபட்சத்திற்கும் குறைவான ஊதிய ஒப்பந்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்ததுமான பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பும் (CFDT) கூட, "மார்ச் 14 தொடங்கி ஒரு விரிந்து செல்லத்தக்க வேலைநிறுத்தத்தை” தொடங்க அது விரும்புவதாக சுருக்கமாக அறிவித்தது.

ஆயினும், SNCF சீர்திருத்தம் தொடர்பான வேலைநிறுத்த நடவடிக்கைகள் மீதான அத்தனை முடிவுகளையும் தொழிற்சங்கங்கள் மார்ச் 15 வரை தள்ளிவைக்கவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.