ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: Support the Tillyrie estate workers struggle to defend jobs and wages

இலங்கை: வேலைகள் மற்றும் ஊதியங்களை பாதுகாப்பதற்காக டில்லரி தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்

M. Thevaraja
23 March 2018

இலங்கையின் மத்திய மலையக பிரதேசமான டிக்கோயாவில், டில்லரி தோட்டத்தின் கீழ் பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், மார்ச் 14 அன்று ஒரு எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினர். பெருந்தோட்ட கம்பனிகளின் உற்பத்தி திறனையும் இலாபத்தையும் அதிகரிக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வருவாய் பகிர்வு முறைக்கு எதிராகவே தொழிலாளர்கள் தேயிலை தொழிற்சாலைக்கு முன் இந்த போராட்டத்தை நடத்தினர்.

2016 அக்டோபரில், வலப்பனையில் மதுரட்ட பெருந்தோட்ட கம்பனியின் மகா ஊவா தோட்டம் உட்பட பல தோட்டங்களில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2017 ஏப்ரலில், டிக்கோயாவில், களனிவெலி பெருந்தோட்ட கம்பனி நடத்தும் பட்டல்கல தோட்டத்தில் இதே திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இரு தோட்டத் தொழிலாளர்களும் இந்த திட்டத்தை எதிர்த்த போதிலும், தோட்டத் தொழிற்சங்கங்கள் இந்த போராட்டங்களை ஒடுக்கி, இந்த நடைமுறையை அமுல்படுத்த கம்பனிகளுக்கு உதவி செய்தன.

2016 அக்டோபரில் தோட்ட கம்பனிகளுடன் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் 1000 ரூபா நாட்சம்பளக் கோரிக்கைக்கான போராட்டத்தை காட்டிக்கொடுத்ததோடு, வருவாய் பகிர்வு முறையை அறிமுகப்படுத்தும் ஒரு நிபந்தனையையும் உடன்படிக்கையில் உள்ளடக்குவதற்கு ஒத்துக்கொண்டன.

தொழிலாளர்களின் போராட்டங்களை குழப்பிவிட்டு, கம்பனிகளின் இலாப நலன்களுக்கு அவர்களை கீழ்ப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து முயற்சித்தாலும், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வருவாய் பகிர்வு முறை தொடர்பாக பரந்த எதிர்ப்பு வளர்ந்து வருவதையே டில்லரி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் குறிக்கிறது.

தொழிலாளர்களின் படி, டில்லரி தோட்டத்தின் தொழிற்சங்க கிளை தலைவர்களுக்கு 13,500 தேயிலை செடிகள் அடங்கிய ஒரு ஹெக்டயரை "இலஞ்சமாக" கொடுத்து, ஏனைய தொழிலாளர்களை இந்த புதிய முறையை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்த அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். தொழிலாளர்கள், இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் இல்லையேல் வேலை இழக்க நேரிடும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த தோட்டத்தில் நான்கு தொழிற்சங்கங்கள் உள்ளன. ஆறுமுகம் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பி. திகாம்பரத்தின் தொழிலாளர் தேசிய சங்கம், வி. ராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியவை இதில் அடங்கும். திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களாவர். இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கம் (LJEWU) ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமாகும். அனைத்து தொழிற்சங்கங்களும் தங்கள் நலன்களுக்காகவும் சலுகைகளுக்காகவும் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன, தொழிலாளர்களின் நலன்களுக்காக அல்ல.

இந்த நடைமுறை, தொழிலாளர்கள் என்ற நிலைமையிலிருந்து, சம்பளம், வேலைகள் மற்றும் ஏனைய சமூக உரிமைகளை ஒழித்து, தோட்டக் கம்பனிகளுக்காக உழைக்கும் குத்தகை விவசாயிகளாக தங்களை மாற்றிவிடும் என்பதை டில்லரி தோட்டத் தொழிலாளர்கள் சரியாக உணர்ந்துள்ளனர். அவர்கள் முந்தைய போராட்டங்கள் ஊடாக பெற்ற ஊழியர் சேமலாப நிதியம் (EPF) ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் வீட்டு வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளின் கல்வி வசதிகளையும் அவர்கள் இழக்க நேரிடும்.

சர்வதேச தேயிலை சந்தையில் நெருக்கடிக்கு முகங்கொடுக்கையில், பெரிய கம்பனிகள் தொழிலாளர்களின் உரிமைகளை துடைத்தெறிந்து சுரண்டலை அதிகரிக்க முயற்சிக்கின்றன.

டில்லரி தோட்ட மேல் பிரிவில் 65 தொழிலாளர்கள் உள்ளனர், ஒவ்வொரு தொழிலாளிக்கும் 5,000 தேயிலை செடிகள் பராமரிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. நிர்வாகம் தேயிலை கொழுந்துகளை அது தீர்மானிக்கும் விலையில் வாங்கும். ஆரம்பத்தில் தொழிலாளர்களுக்கு கிலோவிற்கு 85 ரூபாய் கொடுக்கப்பட்டது, பின்னர் 72 ரூபாயாக குறைக்கப்பட்டு, இப்பொழுது 62 ரூபாயாக ஆக்கப்பட்டுள்ளது.

கீழ் பிரிவில், ஐம்பது தொழிலாளர்கள் இந்த புதிய முறையை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர், ஆனால் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த திட்டத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.

துப்புரவு செய்தல், கவ்வாத்து வெட்டுதல், நடவு செய்தல் மற்றும் கொழுந்து பறித்தலுமாக சகலதும் தொழிலாளர்களால் செய்யப்பட வேண்டும். உரங்கள் மற்றும் இரசாயன செலவு நிர்வாகத்தால் வழங்கப்பட்டாலும், அவற்றுக்கான செலவு தொழிலாளர்களின் வருவாயிலிருந்து குறைக்கப்படுகிறது. கவ்வாத்து வெட்டுவதற்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் 10,000 ரூபாய் கடன் வழங்கப்படுவதுடன் இதுவும் அவர்களின் மாத வருமானத்திலிருந்து குறைக்கப்படுகிறது.

வருமானப் பகிர்வு முறையின் கீழ், தொழிலாளர்கள் நிர்வாகத்துடன் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும். இந்த உடன்படிக்கையில் தொழிலாளர்கள் "ஒப்பந்தக்காரர்" என்றே குறிப்பிடப்படுவர். உடன்படிக்கையின் கீழ், நிர்வாக அலுவலர்களின் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் "ஒப்பந்தக்காரரின்" வருமானத்திலிருந்தே வெட்டிக்கொள்ளப்படும். தேயிலை கொழுந்துகளை வெளியாருக்கு விற்க முடியாது. "ஒப்பந்தக்காரர்" தரமான கொழுந்துகளை விநியோகிக்கத் தவறினால், ஒரு மாத அறிவித்தலுக்குப் பின்னர் காணிப் பரப்பை நிர்வாகம் மீண்டும் அபகரித்துக்கொள்ளும்.

டில்லரி தோட்டத்தின் கீழ் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறியதாவது: "நாங்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்கின்றோம். இந்த புதிய முறையின் கீழ் எங்கள் வருமானம் மற்றும் வேலைகளுக்கு எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது. நாங்கள் இ.பி.எஃப்., இ.டி.எஃப். மற்றும் சிறுவர் காப்பகம், மருத்துவ வசதிகள் போன்ற ஏனைய வசதிகளையும் இழந்து விடுவோம். முழு குடும்பமும் இந்த நிலத்தில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இது எங்கள் பிள்ளைகளின் கல்வியை பாதிக்கும். சகல தொழிற்சங்கங்களும் இந்த திட்டத்தை ஆதரிக்கின்றன."

தொழிலாளர் கிராமங்கள் என அழைக்கப்படுவதை உருவாக்கும் சாக்குப் போக்கில், தொழிலாளர்களுக்கு 7 பேர்ச்சஸ் காணித் துண்டுகளை கொடுப்பதன் மூலம், தோட்டங்களில் இருந்து தொழிலாளர்களை அகற்றுவதற்கு அரசாங்கமும் கம்பனிகளும் திட்டமிட்டு வருகின்றன. இதன் நோக்கம், சுமார் 300,000 எண்ணிக்கையிலான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அமைப்புரீதியான வலிமையைத் தகர்ப்பதே ஆகும்.

2014ல் இருந்து தேயிலை ஏற்றுமதி வருவாயில் ஏற்பட்ட தொடர்ச்சியான வீழ்ச்சிக்குப் பின்னர், உலக சந்தையில் விலை அதிகரிப்பின் விளைவாக தேயிலை ஏற்றுமதியில் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற உயர்ந்த வருமானத்தை இலங்கை பெற்றது. எனினும், மோசமடைந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் பிரதானமாக இலங்கை தேயிலையை இறக்குமதி செய்யும் மத்திய கிழக்கிலும் ரஷ்யாவிலும் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக, தேயிலைத் தொழிற்துறையின் எதிர்காலம் ஸ்திரமானது அல்ல.

இந்த சூழலில் அரசாங்கம் ஏனைய வணிகப் பயிர்களை பெருந்தோட்டங்களில் பயிரிடுவதை பிரேரித்துள்ளதுடன், ஏனைய தொழில்துறைகளுக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் மற்றும் அவற்றுடன் ஒத்துழைக்கும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதாக வாக்குறுதியளித்தன. அவர்களின் உண்மையான நோக்கம், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கும் இந்த முறையை அமுல்படுத்துவதே ஆகும்.

தோட்டத் தொழிலாளர்களின் நிலைமை மீதான தாக்குதலானது சர்வதேச நாணய நிதியத்தின் ஆணையின் படி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் பரந்த சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பாகமாகும்.

* பெருந்தோட்டத் தொழிலாளர்கள் டில்லரி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்பதோடு, ஒவ்வொரு தோட்டத்திலும் அமுல்படுத்தப்படவுள்ள இந்த ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கான புதிய முறையை எதிர்த்துப் போராட தயாராக வேண்டும் என்று நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

* தோட்டத் தொழிலாளர்களுக்கு 40,000 மாதாந்த சம்பளத்திற்காகவும் வீடு, சுகாதாரம் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு தரமான கல்வி உட்பட சிறந்த சமூக வசதிகளுக்காகவும் போராட வேண்டும்.

* தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தில் தொழிற்சங்கங்களின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது. தொழிற்சங்கங்கள் கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் தொழிற்துறை பொலிஸ்காரனாக செயல்படுகின்றன.

தொழிலாளர்கள் இந்த தொழிற்சங்கங்களிலிருந்து பிரிந்து தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும். தொழிற்சங்கங்கள் அல்லது அதிகாரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் இந்த குழுவுக்குள் நுழைய விடக்கூடாது. இந்தக் குழு தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், முடிவுகளை ஜனநாயக ரீதியாக எடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைக் குழுக்கள், ஒரு பொது போராட்டத்தில் ஏனைய பகுதி வர்க்க சகோதரர்களுடனும் சர்வதேச அளவில் தொழிலாளர்களுடனும் ஐக்கியப்படுவதற்கு வழி வகுக்கும்.

தற்போதைய கடுமையான தாக்குதல்கள், இலாப வெறி கொண்ட கம்பனிகளின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களால் தங்கள் தொழில், சம்பளம் மற்றும் சமூக நிலைமைகளை பாதுகாக்க முடியாது என்பதையும் தற்போதைய வறுமை நிலைமையில் இருந்து முன்னேற முடியாது என்பதையும் மீண்டும் நிரூபித்துள்ளன. ஒவ்வொரு துறையிலும் உழைக்கும் மக்களின் பொதுவான அனுபவம் இதுவே ஆகும். அவர்கள் ஒரு இலாப நோக்கு அமைப்பு முறையின் கீழ் தமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முடியாது. சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் நலனுக்காக பொருளாதாரம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். பெருந்தோட்டங்கள், வங்கிகள் மற்றும் பெரிய கம்பனிகளும் தொழிலாளர்கள் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து தேசியமயமாக்குவதன் மூலம் மட்டுமே இந்த மாற்றத்தை செய்ய முடியும்.

அதனாலேயே, சோசலிச சமத்துவக் கட்சி, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக இந்த சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான போராட்டத்திற்கு ஐக்கியப்பட வேண்டும் என்று தொழிலாளர்களை வலியுறுத்துகிறது.