ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The West Virginia teachers strike and the rebellion against the trade unions

மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்கள் வேலைநிறுத்தமும், தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சியும்

Joseph Kishore
6 March 2018

ஒவ்வொரு மிகப் பெரிய சமூக மோதலும் பெருந்திரளான மக்கள் இயக்கத்தில், அரசியல் போக்குகளது மற்றும் அமைப்புகளது இயல்பை எடுத்துகாட்டுகின்றன, அதேவேளையில் அது அரசியல் கருத்துருக்களின் மதிப்பைப் பரிசோதித்து, மதிப்பீடும் செய்கின்றன. இதுபோன்றவொரு விடயம் தான் மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்களின் வேலைநிறுத்தமும்.

இப்போது அதன் ஒன்பதாவது நாளை எட்டியுள்ள, அம்மாநிலத்தில் 30,000 க்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களின் வெளிநடப்பு, விரிவடைந்து வருகிறது. நேற்று சார்லெஸ்டனில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கியதுடன், மாநில தலைமை செயலகத்தைச் சுற்றி தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் இணைந்து நின்றனர். தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து அடைந்து வரும் இயக்கத்திற்கு மற்றொரு ஆதாரமாக, மேற்கு வேர்ஜினியா மற்றும் வேர்ஜினியாவின் பிற பகுதிகளில் இருந்தும் 1,400 ஃப்ராண்டியர் தொலைதொடர்பு தொழிலாளர்கள் ஞாயிறன்று காலை வேலையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அம்மாநிலம் முழுவதும் மற்றும் அதற்கு அங்காலும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான உணர்வு அதிகரித்து வருகிறது, மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்கள் எடுத்துள்ள துணிச்சலான நிலைப்பாடு உலகெங்கிலுமான தொழிலாளர்களால் நெருக்கமாக பின்தொடரப்பட்டும், ஆதரிக்கப்பட்டும் வருகிறது.

வர்க்க மோதல் தீவிரமடைவதானது, தொழிலாள வர்க்கம் மடிந்துவிட்டது என்றும், வர்க்க போராட்டம் முடிந்துவிட்டது என்றும், இனம், பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலையை மையப்படுத்திய மோதல்கள் என்று கூறப்படுபவை அவற்றை பிரதியீடு செய்து விட்டன என்றும் அறிவித்த அனைவரையும் மறுத்தளிக்கிறது. தொழிலாள வர்க்கம் உயிர்ப்போடு உள்ளது என்பது மட்டுமல்ல, அது வரலாற்றின் போக்கில் தனது பலமான தலையீட்டை மீண்டும் தொடங்கி உள்ளது.

குறிப்பாக மேற்கு வேர்ஜினிய அபிவிருத்திகள் மிக முக்கியமானவை ஏனென்றால் வெள்ளையின மக்களைப் பெரும்பான்மையாக கொண்ட அம்மாநில தொழிலாளர்கள், ஜனநாயகக் கட்சியால் “இரங்கத்தக்க நிலைக்கு" (ஹிலாரி கிளிண்டனின் வார்த்தைகளில்) தள்ளப்பட்டுள்ளனர். அடையாள அரசியல் ஆதரவாளர்களின் கருத்துப்படி, அவர்கள் "வெள்ளையின மேலாதிக்க" அமைப்புமுறையில் இருந்து ஆதாயமடைந்த, "தனிச்சலுகை" பெற்றவர்களாக உள்ளனராம், அதுவும் அவர்கள் ஆண்களாக இருந்து விட்டால் அவர் "ஆணாதிக்கவாதியாக" ஆக்கப்படுகிறார். உண்மையில், இந்த தொழிலாளர்களின் கவலைகள், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின், எல்லா இனங்கள் மற்றும் பாலினத்தவர்களின் கவலைகளாக உள்ளன.

மேற்கு வேர்ஜினிய வேலைநிறுத்தத்தில் வெளிப்பட்ட பல பிரச்சினைகளில் ஒன்று தான், தொழிலாள வர்க்கத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான உறவு பற்றியதாகும். மேற்கு வேர்ஜினியாவின் சுரங்க தொழிலாளர்கள் உட்பட அமெரிக்க தொழிற்சங்கங்களால் நடத்தப்பட்ட காட்டிக்கொடுப்புகளின் அலை மற்றும் சர்வதேச அளவில் அதேபோன்ற காட்டுக்கொடுப்புகளுக்குப் பின்னர், 1990 களின் தொடக்கத்தில், தொழிற்சங்கங்களை இனியும் தொழிலாளர்களின் அமைப்புகளாக ஏற்க முடியாது என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) தீர்மானித்தது. பூகோளமயப்பட்ட உற்பத்தி மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு, தங்களின் தேசியவாத மற்றும் முதலாளித்துவ-ஆதரவு வரலாற்று வேலைத்திட்டத்தில் வேரூன்றிய தொழிற்சங்கங்களின் விடையிறுப்பு என்னவென்றால், வேலைகளை நீக்குவதிலும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்களைக் குறைப்பதிலும் நிர்வாகம் மற்றும் அரசுடன் கூட்டு சேர்ந்து பெருவணிகவாதத்தைத் (corporatism) தழுவதுமாக இருந்தது.

சோசலிச சமத்துவக் கட்சிக்கு முன்னோடி அமைப்பான வேர்க்கஸ் லீக் 1993 இல் விவரித்ததைப் போல, “ஒவ்வொரு நாட்டிலும் இந்த அதிகாரத்துவ எந்திரங்கள் வகிக்கும் பாத்திரம், தொழிலாளர்களுக்கு விட்டுக்கொடுக்குமாறு அரசு மற்றும் முதலாளிமார்களுக்கு அழுத்தமளிப்பதிலிருந்து, முதலாளிமார்களுக்கு விட்டுக்கொடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழுத்தமளிப்பதாக மாறி உள்ளது.” வர்க்க போராட்டத்தின் வளர்ச்சியானது, இத்தகைய தொழிலாள-வர்க்க அமைப்புகளுடன் தொழிலாளர்களை இன்னும் அதிகமாக நேரடியான மற்றும் பகிரங்கமான மோதலுக்குள் கொண்டு வரும் என்பதை ஆணித்தரமாக விவரித்தது.

இந்த பகுப்பாய்வு மேற்கு வேர்ஜினிய அபிவிருத்திகளில் முற்றிலுமாக நிரூபிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே, தொழிற்சங்கங்களுக்கு வெளியிலும் —இவ்விடத்தில் ஆசிரியர்களுக்கான அமெரிக்க சம்மேளனம் (AFT) மற்றும் தேசிய கல்வித்துறை ஆணையத்தில் (NEA) பதிவு செய்துள்ள அம்மாநில அமைப்புகளுக்கு வெளியே— அதிகரித்தளவில் அவற்றிற்கு எதிரான கிளிர்ச்சியில் இருந்தும் இந்த வேலைநிறுத்தம் மேலெழுந்தது.

இந்த வேலைநிறுத்தம், குறிப்பாக தென்பகுதியில் சுரங்க தொழில்துறை உள்ள வறிய உள்ளாட்சிகளில், ஆசிரியர்கள் கடந்த மாதம் அவர்களின் பள்ளிகளில் நடத்திய விவாதங்களில் இருந்து வெளிப்பட்டது. இது தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளின் அலுவலகங்களில் திட்டமிடப்படவில்லை. உள்ளாட்சியில் வெளிநடப்புகள் மற்றும் மாநிலம் எங்கிலுமான ஆசிரியர்களின் தீர்க்கமான ஆதரவுக்கு விடையிறுப்பாக, தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தன, இதுவே கொதிப்பைத் தணித்து, ஆளுநர் மற்றும் மாநில சட்டமன்ற பிரதிநிதிகளுடன் ஓர் உடன்படிக்கையை எட்ட அனுமதிக்குமென அவை நம்பின.

தொழிற்சங்கங்கள் ஓர் அழுகிய உடன்படிக்கையை எட்டுவதற்கு முன்னர் அந்த வேலைநிறுத்தம் இரண்டு நாட்கள் நீடிக்கப்பட்டு, பின்னர் வேலைக்குத் திரும்புமாறு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். ஆனால் ஆசிரியர்கள் மீண்டும் மாநிலந்தழுவி அவசர கூட்டங்களை நடத்தியதுடன், வேலைக்குத் திரும்புவதை நிராகரித்து வாக்களித்தனர். இப்போது தொழிற்சங்க தலைவர்கள் வேலைநிறுத்ததை முடிவுக்குக் கொண்டு வந்து, ஆசிரியர்கள் மீது தோல்வியை சுமத்த ஏதேனும் வழி கிடைக்குமா என ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி அரசியல்வாதிகளுடன் சூழ்ச்சி செய்து வருகின்றனர்.

தொழிற்சங்கங்கள், என்ன விலை கொடுத்தாவது, ஒரு பரந்த அணித்திரள்வைத் தடுக்க விரும்புகின்றன. தொழிற்சங்கங்கள் நாட்டின் மற்ற 49 மாநிலங்களிலும் வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைக்குமா என்று நேற்று ஒரு செய்தியாளர் வினவியதும், NEA தலைவர் Lily Eskelsen Garcia அழுத்தந்திருத்தமாக "இல்லை!” என்று விடையிறுத்தார். அவ்வாறு செய்ததன் மூலம், அப்பெண்மணி AFSCME வழக்கறிஞர் டேவிட் ஃபிரெடெரிக் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் கூறிய கோட்பாட்டின் கீழ் செயல்பட்டுள்ளார், அதாவது “தொழிற்சங்க பாதுகாப்பு என்பது, வேலைநிறுத்தங்கள் இல்லாத சமரசமாகும்,” என்று ஃபிரெடெரிக் இம்மாத தொடக்கத்தில் கூறியிருந்தார்.

மேற்கு வேர்ஜினிய வேலைநிறுத்தமானது, தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு முக்கிய போராட்டத்தில் இருந்தும் வளர்ந்து வந்த தொழிற்சங்க எந்திரத்திற்கும் மற்றும் தொழிலாளர்களுக்கும் இடையிலான அதே மோதலின் கூடுதல் அபிவிருத்தியாகும். தொழிற்சங்கங்கள், ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுக்கு எதிராக எந்தவொரு ஒழுங்கமைந்த எதிர்ப்பையும் இல்லாது செய்ய இயங்குகின்றன. வேலைநிறுத்தத்தையோ அல்லது ஆர்ப்பாட்டத்தையோ அவற்றால் தடுக்க முடியாத போது —2011 இல் விஸ்கான்சினில் வெகுஜன போராட்டங்கள், 2012 இல் சிகாகோ ஆசிரியர்கள் வேலைநிறுத்தம், 2013 இல் நியூ யோர்க் நகர பள்ளி வாகன ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம், 2015 இல் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், 2016 இல் வெரிசோன் வேலைநிறுத்தம் மற்றும் டெட்ராய்ட் ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுப்பு போராட்டம் மற்றும் இன்னும் பலவற்றையும் தடுக்க முடியாத போது— தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தி, தோல்விகளைத் திணித்துள்ளன.

மேற்கு வேர்ஜினிய வேலைநிறுத்தமானது, 33 ஆண்டுகளில் (பியட் கிறைஸ்லரில்) தொழிற்சங்க-ஆதரவிலான தேசிய ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் முதல்முறையாக நிராகரித்தமை உட்பட, ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்களுக்கு எதிராக 2015 இல் வாகனத்துறை தொழிலாளர்களின் கிளர்ச்சியையும் பின்தொடர்கிறது. ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கத்தால் (UAW) உடன்படிக்கை மூலமாக நிர்பந்திக்க முடியாமல் போனதும், பொய்கள், மோசடி மற்றும் அச்சுறுத்தல்களைக் கலந்து அதை நிறைவேற்றியது.

பெருந்திரளான தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களை தங்களின் பிரதிநிதிகளாக அல்ல, மாறாக இவற்றை தங்களின் தீர்மானகரமான எதிரிகளாக எதிர்கொண்டிருப்பதை உணர தொடங்கி உள்ளனர். செயலூக்கத்துடன் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் இந்த அமைப்புகளின் நெறிமுறைகளை ஏற்று, தொழிலாளர்கள் எதற்காக தொடர்ந்து அவற்றுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்?

தொழிலாள வர்க்கம் அதிகளவில் முன்வருகையில், அதன் போராட்டங்களை ஒடுக்க தொழிற்சங்கங்களின் முயற்சிகள் இன்னும் அதிக வன்முறையாக இருக்கும் என்பதோடு, அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஓர் ஐக்கியப்பட்ட அரசியல் இயக்கத்திற்குள் எதிர்ப்பின் பல்வேறு வெளிப்பாடுகளை ஒன்றிணைக்கவும், தங்களின் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், தொழிலாளர்கள் அவர்களின் சுயாதீனமான அமைப்புகளாக, தொழிற்சாலைகள், வேலையிடங்கள் மற்றும் அண்டை பகுதிகளில் அவர்களின் சாமானிய குழுக்களை உருவாக்க வேண்டிய தேவையும் இன்னும் அதிக வெளிப்படையாக உருவாகும்.