ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Why has Ecuador silenced Julian Assange?

ஈக்வடார் ஏன் ஜூலியன் அசான்ஜை மவுனமாக்கியது?

Bill Van Auken
31 March 2018

ஜூலியன் அசான்ஜின் வெளியுறவு தொடர்பை வெட்டுவதற்கு ஈக்வடார் அரசாங்கம் எடுத்த கடுமையான நடவடிக்கைகள், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான பிற்போக்குத்தனமான தாக்குதலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இது ஒவ்வொரு நாட்டு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்.

ஈக்வடார் அதிகாரிகள் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரின் இணைய அணுகுதலையும், அத்துடன் அண்மித்து ஆறு ஆண்டுகளாக அசான்ஜ் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலண்டன் ஈக்வடார் தூதரகத்தின் ஏனைய அனைத்து வகை தகவல்தொடர்புகளையும் முடக்கியுள்ளனர். இதற்கும் கூடுதலாக பார்வையாளர்கள் அவரை சந்திப்பதையும் தடுத்து, ஒரு சிறைக்கைதியை விட ஒருசில உரிமைகளுடன் அவரை விட்டு வைத்துள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய தேசத்துரோக மற்றும் உளவுபார்ப்பு குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்காக, அசான்ஜைக் கைது செய்து, நாடு கடத்துவதற்காக பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் ஒருங்கிணைந்த சதிகளைத் தொடர்ந்து அவர் முகங்கொடுத்து வருகிறார்.

அசான்ஜ் மீதான தாக்குதல் ஜனநாயக உரிமைகள் மீதான ஓர் உலகளாவிய தாக்குதலின் பாகமாகும், இது அதிகரித்தளவில் பாசிசத்தின் வளர்ச்சி மற்றும் உலக போருக்கான உந்துதலுக்கு இடையே, 1930 களின் இருண்ட காலத்தை நினைவூட்டுகிறது. ஸ்பெயின் வேண்டுகோளின் பேரில் கட்டலோனிய தலைவர் கார்லெஸ் புயக்டெமொன்ட்டை ஜேர்மன் அரசாங்கம் சமீபத்தில் கைது செய்தமைக்கும், 1940 இல் கட்டலோனிய தலைவர் லூயிஸ் கொம்பானிஸ் கைது செய்யப்பட்டமைக்கும் இடையே, (இவர் நாஜிக்களால் பிராங்கோ பாசிசவாத சர்வாதிகாரத்திடம் ஒப்படைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்) ட்வீட்டரில் ஓர் ஒப்பீட்டை எழுதியதற்காக அவர் பலவந்தமான தனிமைப்படலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புகொள்ளவியலாத சிறைதண்டனைக்கு ஒத்த நிலைமையில் அசான்ஜை வைத்திருப்பதானது, இணைய தணிக்கையைத் திணிக்க முனையும் உலகெங்கிலுமான அனைத்து அரசாங்கங்களது ஒரு முனைவுடன் பொருந்தி வருகிறது. அந்த ஜனநாயக-விரோத பிரச்சாரத்தை எதிர்ப்பதில் அசான்ஜ் முன்னணியில் இருந்தார்.

இந்த நடவடிக்கைகள் ஈக்வடார் அரசாங்கத்தின் கூர்மையான வலது திருப்பத்தோடு மட்டுமல்ல, மாறாக முன்னர் 1998 இல் வெனிசூலாவில் ஹூகோ சாவேஜ் தேர்வானதில் இருந்து தொடங்கிய, "இடதுக்கு திரும்பு" அல்லது "ரோஜா நிற பேரலை" எனப்பட்டதுடன் தொடர்புபட்டிருந்த பல இலத்தீன் அமெரிக்க நாடுகளும் கூர்மையாக வலதுக்கு திரும்பியதுடன் பிணைந்துள்ளன.

ஸ்வீடனின் ஜோடிக்கப்பட்ட பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டுகளை முகங்கொடுத்த அசான்ஜிற்கு ஈக்வடார் தஞ்சம் வழங்குவதாக அது ஆகஸ்ட் 2012 இல் அறிவித்தது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர் குற்றங்களை அம்பலப்படுத்தும் நூறாயிரக் கணக்கான இரகசிய ஆவணங்களையும், அத்துடன் உலகெங்கிலுமான அமெரிக்க வெளியுறவுத்துறை சதிகளையும் பகிரங்கப்படுத்தியதற்காக அமெரிக்காவில் அவர் வழக்கில் இழுப்படுவார் என்ற நிலையில், அவரை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிடம் ஒப்படைக்க உதவுவதற்காக ஸ்வீடன் விசாரணை ஜோடிக்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் அது கைவிடப்பட்டது. ஸ்வீடன் அந்த வழக்கை கைவிட்டுவிட்டது என்றாலும், பிரிட்டிஷ் அதிகாரிகள் இன்னுமும் அசான்ஜைக் கைது செய்ய முயன்று வருகின்றனர்.

ஈக்வடாரின் முன்னாள் ஜனாதிபதி ரஃபேல் கொர்ரியா அரசாங்கம் அசான்ஜிற்கு தஞ்சம் வழங்கிய போது, அதுவொரு அடிப்படை மனித உரிமையென்றும், அது ஒவ்வொரு அரசாலும் மதிக்கப்பட வேண்டுமென்றும், குவாண்டனமோவில் அடைக்கப்படக் கூடிய அச்சுறுத்தலை அல்லது செல்சியா மேனிங்கிற்கு வழங்கப்பட்டவாறு ஒருவித சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்படும் அச்சுறுத்தலை முகங்கொடுக்கும் அசான்ஜ் விடயத்தில் அது அவசியமென்றும் அந்த அரசாங்கம் அறிவித்தது. அசான்ஜை ஈக்வடாருக்கு வர அனுமதிக்குமாறு அது பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கோரிய போது, இலண்டன் அந்த கோரிக்கையை மறுத்ததோடு மட்டுமின்றி, மாறாக ஈக்வடார் தூதரகத்தின் இராஜாங்க அந்தஸ்தைத் திரும்ப பெற்று, அக்கட்டிடத்துள் உள்நுழைய பொலிஸ் அனுப்பப்படுமென்றும் அச்சுறுத்தியது.

எதேச்சதிகாரமாக தடுப்புக்காவல் தொடர்பான ஐ.நா. பணிக்குழு, அவரை விடுவித்து நஷ்டஈடு வழங்க வேண்டுமென அழைப்பு விடுத்ததுடன், "ஏதேச்சதிகாரமானது, காரணமற்றது, அவசியமற்றது, பொருத்தமற்றது" என்று அது விவரித்திருந்த நிலைமைகளின் கீழ் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விடாப்பிடியான பிடிவாதத்தால், அசான்ஜ் தூதரகத்திற்குள் அடைந்து கிடக்க வேண்டியிருந்தது.

இம்மாத தொடக்கத்தில் பிரிட்டனின் சார்லிஸ்பரி நகரில் முன்னாள் இரட்டை உளவாளியான செர்ஜி ஸ்கிர்பால் மற்றும் அவர் மகள் நஞ்சூட்டப்பட்டதில் ரஷ்யா சம்பந்தப்பட்டிருந்ததாக முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் ரஷ்யாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தியும், மற்றும் புய்க்டெமொன்டை ஜேர்மன் கைது செய்ததைக் கண்டித்தும், அசான்ஜ், தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் இரண்டு உலக அபிவிருத்திகள் மீது ட்வீட்டர் வழியாக அவர் கருத்தை வெளியிட்டதும், ஈக்வடார் அரசாங்கம் அசான்ஜின் தகவல் தொடர்பை வெட்டியது.

அசான்ஜின் செய்திகள், “ஐக்கிய இராஜ்ஜியம், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகள் மற்றும் இதர நாடுகளுடன் இந்நாடு பேணி வரும் நல்லுறவுகளை ஆபத்திற்குட்படுத்துவதாக" ஈக்வடாரிய வெளியுறவுத்துறை அமைச்சகர் குறிப்பிட்டது.

“இதர நாடுகள்" என்பது சந்தேகத்திற்கிடமின்றி அமெரிக்காவை உள்ளடக்கியதாகும், இதனுடன் ஜனாதிபதி லெனின் மொரீனோவின் புதிய அரசாங்கம் நல்லிணக்கத்துடன் இருக்க முயன்று வருகிறது.

அசான்ஜை மவுனமாக்கும் இந்த நடவடிக்கையானது, Southcom துணை இராணுவ தளபதி ஜெனரல் ஜோசப் டிசால்வோ மற்றும் அதன் தலைமை அரசியல் அதிகாரி தூதர் லினைனா அயல்டே தலைமையில், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனின் பென்டகன் அங்கமான அமெரிக்க தெற்கு கட்டளையகத்தில் இருந்து வந்த ஒரு பிரதிநிதிகள் குழுவை ஈக்வடார் அரசாங்கம் வரவேற்று வெறும் ஒருநாளுக்குப் பின்னர் வந்தது. இந்த விவாதங்கள் "பாதுகாப்பு கூட்டுறவை" பலப்படுத்தவும் மற்றும் "நீண்டகால பங்காண்மைக்கு அமெரிக்க கடமைப்பாட்டை வலியுறுத்தவும் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும்" நடத்தப்பட்டதாக அறிவித்து சவுட்காம் ஓர் அறிக்கை வெளியிட்டது.

இந்த கால ஒற்றுமை தற்செயலானதா? அல்லது பென்டகனின் பிரதிநிதிகள் ஜூலியன் அசான்ஜை மவுனமாக்குமாறு அவர்களின் ஈக்வடாரிய பிரதிநிதிகளுக்கு வெளிப்படையான ஒரு அறிவுறுத்தலை வழங்கியிருந்தார்களா? இதை தொடர்ந்து வரும் வெளிப்படையான கேள்வி, வேறு என்னென்ன கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அசான்ஜை வாஷிங்டனிடம் ஒப்படைப்பதும் அவற்றில் உள்ளடக்கி உள்ளது?

கடந்த மே மாதம் அவர் தேர்வானதற்குப் பின்னர் இருந்து, மொரீனோ—கொர்ரெயால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளரான இவர்—கூர்மையாக வலதுக்கு திருப்பம் எடுத்து, பெருவணிகங்களுக்கு வரி வெட்டுக்களையும், சமூக செலவினங்களில் வெட்டுக்களையும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதற்கு சாதகமாக, சீனக் கடன்கள் மற்றும் முதலீட்டை ஈக்வடார் சார்ந்திருப்பதைக் குறைக்கும் முயற்சிகளையும் நடைமுறைப்படுத்தி உள்ளார், அமெரிக்க ஏகாதிபத்தியம் அப்பிராந்தியத்தில் அதன் மேலாதிக்கத்தை மீளபலப்படுத்த மற்றும் அதிகரித்து வரும் பெய்ஜிங்கின் செல்வாக்கை எதிர்க்க முனைந்து வருகிறது.

ஈக்வடாரின் வலதை நோக்கிய திருப்பமானது, “ரோஜா நிற பேரலை" எனப்படும், அதாவது இலத்தீன் அமெரிக்காவில் பல்வேறு வெகுஜன, தேசியவாத முதலாளித்துவ கட்சிகளது ஆட்சியின் பரந்த ஏற்ற-இறக்கங்களின் பாகமாக உள்ளது. இது, 2015 இல் ஆர்ஜென்டினாவில் வலதுசாரி பல மில்லியனிய மில்லியனர் மவ்ரீசியோ மாக்ரி தேர்ந்தெடுக்கப்பட்டமை, 2016 இல் தொழிலாளர்கள் கட்சி ஜனாதிபதி டில்மா ரூஸ்செஃப் மீதான பதவி நீக்க குற்றவிசாரணை, மற்றும் அவரது வலதுசாரி துணை ஜனாதிபதி மைக்கேல் திமெரால் அவர் பிரதியீடு செய்யப்பட்டமை, வெனிசூலாவில் ஜனாதிபதி நிக்கோலா மாதுரோ அரசாங்கத்தின் ஆழ்ந்த நெருக்கடி, பொலிவியாவில் நான்காவது முறையாக தன்னை பதவியில் நிறுத்திக் கொள்ள அரசியலமைப்பைத் திருத்தி எழுதும் பொலிவிய ஜனாதிபதி எவோ மொரேலெஸ்ஸின் முயற்சி தோல்வி அடைந்தமை ஆகியவற்றுடன் இணைந்து இதுவும் ஒரு பகுதியாக உள்ளது.

இலத்தீன் அமெரிக்காவில் இந்த வலதுசாரி திருப்பமானது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தொடங்கிய "இடதை நோக்கிய திருப்பம்" என்றழைக்கப்பட்டதுடன் அடையாளம் காணப்பட்ட அனைத்து அரசாங்கங்களாலும் தயாரிக்கப்பட்டதாகும். இலத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் போலி-இடது அமைப்புகளின் ஒரு தொகுதியால் ஊக்குவிக்கப்பட்ட பிரமைகளாக, தங்களை இடதுசாரி என்றும் "சோசலிஸ்ட்" என்றும் கூட கூறிக் கொண்ட இவை, அதேவேளையில் தனிச்சொத்துடைமையையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனம் இரண்டினது நலன்களையும் பாதுகாத்த முதலாளித்துவ அரசாங்கங்களாக இருந்தன.

பண்டங்கள் மற்றும் எழுச்சி பெற்று வந்த சந்தை வளர்ச்சியின் அடிப்படையில், அவற்றால் ஏழைகளுக்கு குறைந்தளவிலான நலத்திட்டங்களை உருவாக்க முடிந்ததுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து மட்டுப்பட்ட சுதந்திர நிலைப்பாட்டையும் ஏற்க முடிந்திருந்தது, பெரும்பாகம் இவை அமெரிக்க போட்டியாளர்களுடன், குறிப்பாக சீனாவுடன் வர்த்தக உறவுகளை விரிவாக்குவதை அடித்தளத்தில் கொண்டிருந்தன.

பண்டங்களின் விலைகள், குறிப்பாக எண்ணெய் விலைகளின் வீழ்ச்சியால் நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில், இதை தான் ஈக்வடார் அதன் வருவாய்களுக்காக 40 சதவீதம் சார்ந்துள்ளது என்பதால், இந்த அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது அதிகரித்த தாக்குதல்களை நடைமுறைப்படுத்தி விடையிறுத்தன, அவ்விதத்தில் அவற்றின் மதிப்பு சரிந்து, வலதை நோக்கிய திருப்பத்திற்கு வழி வகுத்தது.

ஜனநாயக கட்சியின் தேசியக் குழுவினது கசிந்த மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் பிரசுரித்ததது தொடர்பாக அமெரிக்க அரசு அழுத்தத்தின் கீழ் 2016 இல் கொர்ரியா அவரே அசான்ஜின் இணைய தொடர்பைத் துண்டிக்க உத்தரவிட்டிருந்தார், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதலாளித்துவ நிதியியல் சந்தைகளுக்கு நம்பிக்கையூட்ட ஈக்வடாரின் தங்க கையிருப்புகளில் பாதிக்கும் அதிகமானதை கோல்ட்மன் சாச்ஸ் க்கு மாற்றியிருந்தார்.

இதேபோல, பிரேசிலில் தொழிலாளர்கள் கட்சி அரசாங்கமும் ஆர்ஜென்டினாவில் Kirchnerista பெரோனிஸ்ட் அரசாங்கமும் ஜனநாயக-விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு, தொழிலாளர்களின் உரிமைகளைத் தாக்கியது, இவைதான் அமெரிக்க ஆதரவிலான இராணுவ சர்வாதிகாரங்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்நாடுகளில் ஆட்சிக்குவந்த மிகவும் வலதுசாரி அரசாங்கங்களின் எழுச்சிக்கு வழிவகுத்தன.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு, அப்பிராந்தியத்தின் பரந்து பரவிய வறுமை மற்றும் சமத்துவமின்மையைக் கடந்து வருவது, மற்றும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தைத் தூக்கியெறிவது என இவற்றை —பிரேசிலில் PT, வெனிசூலாவில் சாவிஸ்மோ, ஆர்ஜென்டினாவில் பெரோனிசம் மற்றும் இன்னும் இதுபோன்ற இயக்கங்கள் உட்பட— அனைத்து முதலாளித்துவ கட்சிகளில் இருந்து சுயாதீனமாக, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், இலத்தீன் அமெரிக்காவின் தொழிலாளர்களது போராட்டங்களை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலுமான அதேபோன்ற தொழிலாளர்களின் போராட்டங்களுடன் ஐக்கியப்படுத்தி, தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே எட்ட முடியும்.

அசான்ஜ் மீதான தாக்குதல் சர்வதேச அளவில் இந்த அடிப்படை கேள்வியைத் தான் முன்னிறுத்துகிறது. ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்கு ஒரே உண்மையான ஆதரவு தளமாக இருப்பது தொழிலாள வர்க்கமாகும். உழைக்கும் மக்கள் அவரது தகவல் தொடர்பு மீதான தடைகளை நீக்கி அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு, அசான்ஜைப் பாதுகாக்க முன்வர வேண்டும். அவரை கைது செய்வதற்கான எந்தவொரு முயற்சியோ அல்லது அவரை வேறு நாட்டிடம் ஒப்படைப்பதோ, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நடவடிக்கைகளுடன் பதிலளிக்கப்பட வேண்டும்.

அசான்ஜ் மற்றும் அரசு ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட மற்றவர்களையும் பாதுகாப்பதற்கான இந்த பிரச்சாரமானது, உலக போர் மற்றும் பொலிஸ் அரசு சர்வாதிகாரம் என இவ்விரண்டையும் கொண்டு மனிதயினத்தை அச்சுறுத்தும் அளவுக்கு வரலாற்று நெருக்கடியில் வேரூன்றிய முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தொழிலாள வர்க்க போராட்டத்தின் பாகமாக மட்டுமே வெற்றிகரமாக நடத்தப்பட முடியும்.