ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

New Anti-capitalist Party seeks to strangle French rail strikes

பிரெஞ்சு இரயில்துறை வேலைநிறுத்தங்களின் கழுத்தை நெரிக்க புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி முனைகிறது

By Alex Lantier
10 April 2018

பிரான்சில் ஒரு வேலைநிறுத்த அலை வளர்ந்து செல்வதன் மத்தியில், புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்தின் ஐம்பதாவது ஆண்டை கொண்டாடும் விதமாக ஒரு கூட்டத்தை பாரிஸில் சனிக்கிழமையன்று நடத்தியது. 1968 மாணவர் தலைவரான அலன் கிறிவினும் தொழிற்சங்க நிர்வாகியான மத்யூவும் (அவர் தனது முதல் பெயரை மட்டுமே வழங்கினார்) அதில் பிரதான உரையாற்றினார்கள், பிரெஞ்சு தேசிய இரயில் சேவையை (SNCF) தனியாமயமாக்குவதற்கான ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் நடவடிக்கைக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள்.

இந்தக் கூட்டம் NPA இன் குட்டி-முதலாளித்துவ அரசியலின் முழுமுழுதான திவால்நிலைக்கு ஒரு நடைமுறை உதாரணமாய் இருந்தது. அரை நூற்றாண்டுக்கு முன்பான ஒரு மாபெரும் புரட்சிகரப் போராட்டத்தின் படிப்பினைகளைத் தேற்றம் செய்வதன் மூலமாக தொழிலாளர்களையும் இளைஞர்களையும் போராட்டத்துக்கு தயாரிப்பு செய்கின்ற ஒரு பெருந்திரள் கூட்டமாக அது இல்லை. பாரிஸின் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருக்கும் தனது நூற்றுக்கணக்கான அங்கத்தவர்களைக் கூட NPA அணிதிரட்டியிருக்கவில்லை. பாரிஸின் புறநகர்ப் பகுதியில் ஒரு சிறிய தெருவில் இருந்த ஒரு உணவகத்தின் பின்பகுதியில் இருந்த ஒரு அறையில் மறைவாய் நடந்த இந்தக் கூட்டத்தில், கிறிவினும் மத்யூவும் கூறிய சம்பிரதாயமான மற்றும் விரக்தி நிறைந்த கருத்துக்களைக் கேட்பதற்கு சில டசன் பேர்கள் மட்டுமே வந்திருந்தனர்.

உரையாற்றியவர்கள் பேசி முடித்ததற்குப் பின்னர் கூட்டத்திற்கு வந்தவர்கள் தமக்குள் முணுமுணுப்பாக பேசிக் கொண்டிருந்த வேளையில், அவர்கள் சாப்பிடுவதற்காக வழங்கப்பட்ட உருளைக்கிழங்கு பொரியல், வெள்ளை ஒயின் மற்றும் மலிவான பழரசமும் மதுவும் கலந்த குளிர்பானங்களில் தான் அவர்களுக்கு அதிக ஆர்வம் இருந்ததைப் போன்று தோன்றியது. இந்தக் கூட்டத்தைப் பார்க்கையில், தொழிலாளர்கள் பல தலைமுறைப் போராட்டங்களின் மூலமாக வென்றெடுத்திருந்த சமூக உரிமைகளை, போருக்கும் செல்வந்தர்களுக்கான வரிவெட்டுகளுக்கும் நூறு பில்லியன்கணக்கான யூரோக்களை திருப்பிவிடுவதற்காக வெட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று எவராலும் உணர முடியாது. அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பாக மாணவர்களாக பாரிஸில் போலிசுடன் மோதிய வசதியான நடுத்தர-வர்க்க மனிதர்கள் தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களுக்கு அலட்சியம் காட்டுபவர்களாகவும், இன்னும் சொன்னால் குரோதமானவர்களாகவும் இருக்கின்றனர்.

NPA இன் பேச்சாளர்கள் ஒரு பிற்போக்கான, அரசியல்ரீதியாக அபத்தமானதொரு முன்னோக்கை முன்வைத்தனர், 1968 இலோ அல்லது இன்றோ எந்த புரட்சிகர சூழ்நிலையும் இருக்கவில்லை என்று வலியுறுத்திய அவர்கள், வேலைநிறுத்தங்களை கழுத்துநெரிக்க வேலைசெய்வதாக அவர்களே ஒப்புக்கொண்ட அமைப்புகளுக்கு தொழிலாளர்கள் கீழ்ப்படிந்து நடக்கவேண்டுமென வலியுறுத்தினர்.

வீதி மோதல்கள் மற்றும் 1968 இல் ஆணுறைகள் வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் போன்ற பாலினப் பிரச்சினைகள் ஆகியவை குறித்த NPA அங்கத்தவர்களின் மலரும் நினைவுகளைக் காட்டுகின்ற ஒரு காணொளி திரையிடப்பட்டதற்குப் பின்னர் கிறிவின் பேசினார். அந்த காணொளி, 1968 இல் இரண்டு தனித்தனியான சமூக சக்திகள் களமிறங்கியிருந்ததை அடிக்கோடிட்டுக் காட்டியது: பிற்கால NPA உறுப்பினர்கள் ஆக இருந்த நடுத்தர-வர்க்க மாணவர் இயக்கம்; மற்றும் பொது வேலைநிறுத்தத்தில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அணிதிரண்டமை. நடுத்தர வர்க்கத்திற்கு உத்வேகமளித்த வாழ்க்கைபாணி மற்றும் பாலினப் பிரச்சினைகள் பரந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களை போராட்டத்திற்குக் கொண்டுவந்த ஜனநாயக உரிமைகள் மற்றும் ஊதியங்களது பிரச்சினைகளில் இருந்து தனித்துமாறுபட்டதாய் இருந்தன.

கூட்டத்தில், கிறிவின் பொது வேலைநிறுத்தத்தின் புரட்சிகர சாத்தியத்தையும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தையும் சுருக்கமாய் நிராகரித்தார். அவருடைய குதர்க்க வாதத்தின் படி, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் (PCF) மற்றும் பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பும் (CGT) அதிகாரத்தை கையிலெடுக்க விரும்பாததால், அங்கே அந்த புரட்சிகர சூழ்நிலையும் இல்லை, ஆகவே தொழிலாளர்களுக்கு ஒரு புரட்சிகர கட்சிக்கு அவசியமில்லை.

“’தொழிலாளர்களுக்கு அதிகாரம்’ என்று நாங்கள் முழக்கமிட்டோம்” என்ற அவர், “ஆனால் துயரம் என்னவென்றால் ஒருவருக்கும் அதில் விருப்பமில்லை. ஏனென்றால் நன்கறியப்பட்டவர்களாய் இருந்த அலன் ஜெமார் (Alain Geismar), டானியல் கோன்-பென்டிட் (Daniel Cohn-Bendit) மற்றும் ஜாக் சோவாஜோ (Jacques Sauvageot) எல்லோருமே மாணவர்கள், பேராசிரியர்களாய் இருந்தார்களே தவிர, தொழிலாளர்கள் அல்ல. தொழிலாள வர்க்கத்திற்கு அவர்கள் மீது நம்பிக்கை இருந்தது…. ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு, ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அல்ல. அந்த சமயத்தில் PCFம் CGTயும் அதிகாரத்தைக் கையிலெடுத்திருக்க முடியும், ஆனால் அவர்கள் அதைச் செய்ய விரும்பவில்லை.”

“என்னைப் பொறுத்தவரை அது ஒரு புரட்சி அல்ல” என்ற கிறிவின் மேலும் சேர்த்துக் கொண்டார்: “புரட்சிகரமாய் அல்லாத ஆனால் மக்கள்சக்தி மிக்கதாகவும் தன்னெழுச்சியாகவும் இருக்கக் கூடிய ஒரு மக்கள் வெடிப்பை நீங்கள் காண முடியும். அதற்கு ஒரு கட்சி அவசியமில்லை.”

1968 குறித்த கிறிவினின் எதிர்ப்புரட்சிகர பகுப்பாய்வு அபத்தமானதும் பொய்யும் ஆகும். அந்த ஆண்டில், மாணவர் போராட்டங்கள் மீதான போலிசின் ஒடுக்குமுறை குறித்த பரந்துபட்ட கோபமானது ஐரோப்பிய வரலாற்றின் மிகப்பெரும் பொது வேலைநிறுத்தமாக வெடித்தது. 10 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர், பிரான்ஸ் எங்கிலும் தொழிற்சாலைகளின் மீது செங்கொடிகள் பறந்தன, ஜெனரல் சார்ல்ஸ் டு கோலின் ஆட்சி முழங்காலிடச் செய்யப்பட்டிருந்தது. பாரிஸ் போலிஸ் சிதறியிருந்தது, ஜேர்மனியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு துருப்புகளை பாரிஸுக்கு அணிவகுக்க உத்தரவிடுவது குறித்து விவாதிக்க ஜேர்மனியின் பாடென்-பாடென் (Baden-Baden) க்கு டு கோல் ஓடியபோது, அவரது தளபதிகள் தமது துருப்புகளின் விசுவாசத்திற்கு உத்தரவாதம் கூற முடியாது என்று கூறிவிட்டனர்.

இந்த சூழ்நிலையின் புரட்சிகரத் தன்மை தானாகவே நன்கு புலப்படுவதாய் இருக்கிறது. தொழிலாள வர்க்கத்தில் இருந்த புரட்சிகரத் தலைமை நெருக்கடியின் காரணத்தால் மட்டுமே பிரெஞ்சு முதலாளித்துவம் காப்பாற்றப்பட்டது: PCFம் CGTம் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை தடுத்தன. முதலாளிகள் வழங்கிய ஊதியச் சலுகைகளின் அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பச் செய்வதற்கு அவை பல வாரங்களாகப் போராடின, அத்துடன் இறுதியில் அரசாங்கம் அழைப்பு விடுத்த புதிய தேர்தல்களையும் ஆதரித்தன. முதலாளித்துவ வர்க்கம், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய எழுச்சியின் உச்சத்தில் இருந்த ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பொருளாதார ஆதாரவளங்களையும், ஸ்ராலினிசத்தின் அரசியல் சேவைகளையும் பயன்படுத்தி, அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.

ஸ்ராலினிஸ்டுக்களின் சோவியத் ஒன்றிய கலைப்புக்கும் PCF இன் சிதைவுக்கும் கால் நூற்றாண்டுக்குப் பிந்தைய காலத்தில், இப்போது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திடம் அதுமாதிரியான சலுகைகள் அளிப்பதற்கான எந்த ஆதாரவளங்களும் இருக்கவில்லை. 1930 களுக்குப் பிந்தைய மிக ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஐரோப்பா மறுஆயுதபாணியாகின்ற நிலையிலும் நேட்டோ சக்திகள் ரஷ்யா, சீனா மற்றும் மத்திய கிழக்குடனான போருக்கு அச்சுறுத்துகின்ற நிலையிலும், உலகத்தின் மீதான மறுபங்கீட்டுப் போட்டியில் இணைந்து கொள்வதற்காக பாரிஸ், எதேச்சாதிகார வரிசையில் வர்க்க உறவுகளை மறுகட்டுமானம் செய்து கொண்டிருக்கிறது, இராணுவத்திற்கும் செல்வந்தர்களுக்கு வரிவெட்டு அளிப்பதற்கும் நிதியாதாரம் திரட்டுவதற்காக தொழிலாளர்களிடம் இருந்து நூறுபில்லியன் கணக்கான யூரோக்களை பறித்துக் கொண்டிருக்கிறது. இன்று, வர்க்கப் போராட்டத்திலிருந்து எந்த சீர்திருத்தவாத விளைவுகளும் கிடைக்கப் போவதில்லை.

1968 பொது வேலைநிறுத்தம் குறித்த கிறிவினின் நிராகரிப்பான பார்வை, NPA இன் இன்றைய அரசியல் பிற்போக்குத்தனமான பாத்திரத்துடன் பிணைந்ததாகும். மக்ரோனுக்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டத்திற்கு குரோதம் காட்டும் இவர்கள், அவருக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்களை நசுக்குவதற்கும் விலை பேசுவதற்குமான ஒரு மூலோபாயத்தை ஊக்குவிக்கின்றனர்.

தொழிற்சங்கங்கள் ஜூன் வரையிலும் பயனற்ற வாரம் இருநாள் சுழற்சி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன, இது தொழிற்சங்கங்கள் மக்ரோனுடன் சிக்கன நடவடிக்கைகளுக்கு பேரம் பேசுகின்ற நேரத்தில் வேலைநிறுத்தங்கள் முடியும் வரை காத்திருப்பதற்கு மக்ரோனை அனுமதிப்பதாக இருக்கிறது. இந்த தந்திரங்கள் எல்லாம் திவாலானவை என்பதை ஒப்புக் கொண்ட கிறிவின், ஆயினும் சூழ்நிலை இன்னும் புரட்சிகரமானதாக இருக்கவில்லை என்றும், இருந்தபோதினும் தொழிலாளர்களுக்கு ஒரு புரட்சிகரத் தலைமைக்கு அவசியமிருக்கவில்லை என்றும் வாதிட்டார். மாறாக, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களையும் NPA போன்ற போலி-இடது குழுக்களுடனான அவற்றின் கூட்டணியையுமே நம்பியிருக்க வேண்டுமாம், அவை திடீரென 180 பாகை திருப்பத்தை மேற்கொண்டு, மக்ரோனை எதிர்க்கத் தொடங்கி, அவரை ”பின்வாங்குவதற்கும்” விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கும் நிர்ப்பந்திக்க முடியும் என்பதான நம்பிக்கையுடன், என்றார் அவர்.

அவர் கூறினார், “ஒரு வெகுஜன எழுச்சி வரலாம், வர முடியும், ஒவ்வொரு இடத்திலும் பல்கலைக்கழகங்களில் அது வளர்ந்து வருகிறது. ஆயினும் உண்மையில் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான கோரிக்கையை ஒருங்கிணைக்கவும் முன்னெடுக்கவும் உதவுகின்ற —உதவுவதைத் தவிர வேறு எதையும் செய்யாத— ஒன்று அல்லது பல அரசியல் அமைப்புகள் அங்கே இல்லாமல் இருக்கின்றன. ஏனென்றால் 15 நாட்களுக்கு ஒருமுறையான போராட்டங்கள், மற்றும் அதுஇதுவென்ற போராட்டங்கள் போன்ற அவ்வப்போதான போராட்டங்களைக் கொண்டெல்லாம் அவர்களை நாம் பின்வாங்கச் செய்ய முடியாது.”

கிறிவினின் கருத்துக்களை விரித்துக் கூறி மாத்யூ பேசினார். அவர் கூறினார், “கஷ்டங்களின் ஒரு முழு வரிசையே வருகிறது, இவை பிரதானமாக CGT மற்றும் CFDT இன் வேலைநிறுத்த அட்டவணையில் இருந்து வருகின்றன, பெரும்பான்மையான இரயில்வண்டித் தொழிலாளர்கள் இந்த அட்டவணையை இன்று மதித்துக் கொண்டிருக்கின்றனர், ஆயினும் நிறுவனத்திலும் நாட்டிலும் நடக்கக் கூடிய சமூகப் போராட்டத்தின் மட்டத்திற்கு இது மாற்றியமைக்கப்பட முடியும். .... இந்த அட்டவணையைக் குறித்துக் கூறுவதென்றால், அது எனது கைத்தொலைபேசிக்கு வந்தபோது, ‘சரிதான், இது ஒரு காட்டிக்கொடுப்பு’ என்றுதான் எனக்குள் நான் சொல்லிக்  கொண்டேன் என்பதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். அதாவது, இது மிகவும் வெளிப்படையானது.”

தோல்விக்கு இட்டுச் செல்லும் என நன்கறிந்த ஒரு மூலோபாயத்தையே தொழிற்சங்கங்கள் முன்வைக்கின்றன என்பதை மத்யூ வலியுறுத்தினார், அவை வேறொரு மூலோபாயத்திற்கு மாறிக் கொள்ள விரும்புவதில்லை என்றார் அவர்.

தொழிற்சங்கங்களுக்குள்ளாக, மாத்யூ கூறினார், “இப்போதைக்கு என்ன மனோநிலை நிலவுகிறதென்றால், எல்லோரும் அடுத்தவரை பார்த்துக் கொண்டு ’யார் ஆரம்பிக்கப் போகிறார்கள்’ என்பதைப் போல பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யாருமே முதலில் செல்ல உண்மையாகவே விருப்பமில்லாதிருக்கின்றனர். ... CGT தோழர்கள் பலரும் இரண்டு நாற்காலிகளில் உட்காந்திருந்திருக்கின்றனர், ஏனென்றால் அவர்களுக்கு நன்கு தெரியும் வெற்றி பெற வேண்டுமாயின், ஐந்து நாட்களுக்கு இரண்டு நாள் வேலைநிறுத்தம் செய்வது உதவாது என்று, ஆனாலும் அவர்கள் அதைச் செய்கிறார்கள். எல்லோரும் அடுத்தவர் செய்வாரா என ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.”

கூட்டத்திற்கு சென்றிருந்த WSWS செய்தியாளர் ஒருவர், இன்றைய வர்க்கப் போராட்டத்திற்கு 1968 இல் இருந்து NPA எடுத்துக் கொண்டிருக்கும் பாடங்கள் என்ன என்று வினவினார். பதிலளித்த கிறிவின், 1968 இலும் இன்றும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களின் கழுத்தை நெரித்ததாக அவரும் மாத்யூவும் சற்று முன்னர் தான் ஒப்புக் கொண்டிருந்த அரசியல் சக்திகளின் ஒரு கூட்டணிக்கு ஆதரவளிப்பது மட்டுமே தொழிலாளர்களுக்கு இருக்கின்ற ஒரே முன்னோக்கிய பாதை என வலியுறுத்தினார்.

NPAஇன் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான ஒலிவியே பெசன்ஸநோ பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS), PCF, மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆகியவற்றின் ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதை கிறிவின் வழிமொழிந்தார்: “ஒலிவியே, அவர் தனியாக இல்லை, அவர் NPA இன் ஒப்புதலுடன் தான் அதை செய்து கொண்டிருக்கிறார், மக்ரோனுக்கு எதிராக சாத்தியமான அளவுக்கு நிறைய அமைப்புகளை ஒன்றாகக் கொண்டுவருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். எல்லாருமே ஒருமிப்பையும் ஐக்கியத்தையும் விரும்புகின்றனர் என்றே நினைக்கிறேன், ஆயினும் நாம் அதை எட்டுவோம் என்பது அத்தனை வெளிப்படையானதில்லை. அரசியல் கட்சிகள் மட்டும் நமக்கு இருந்தால் போதாது, தொழிற்சங்கங்களும் நம்முடன் இருக்க வேண்டும்.”

இந்த கூட்டணி என்ன முன்னோக்கை முன்னெடுக்கும் என்று கூற கிறிவின் மறுத்தார்: “இது விடயத்தில் ஒரு சகோதர விவாதத்தை நாங்கள் நடத்திக்கொண்டு வருகிறோம், இன்று முற்றிலுமாக பிளவுபட்டுக் கிடக்கும் PCF உடன் மட்டுமல்ல, ... கிட்டத்தட்ட இதே விடயம் ஆயினும் வேறொரு வடிவத்தில் பசுமைக் கட்சியினர் மத்தியில் நடந்து வருகிறது, PS இன் இடப்பக்கத்திலும் கிட்டத்தட்ட இதே விடயம் நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே இது சிக்கலானது, இதில் தலையிடுவது மிகச் சிக்கலானது.”

கிறிவின் நோக்குநிலை கொண்டிருக்கும் சக்திகள் முதலாளித்துவத்திற்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஆதரவான மற்றும் தொழிலாள வர்க்கத்துக்கு கடும் குரோதமானவையாக நிரூபணமாகக் கூடிய சக்திகள் என்பதைக் காண்பது உண்மையில், அத்தனை கடினமானதல்ல.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் NPA க்கும் இடையில் ஒரு வர்க்கப் பிளவு பிரித்து நிற்கிறது. இந்த முன்னாள் தீவிரப்பட்ட மாணவர்கள் தமது இளமைக்காலத்தில், 1953 இல் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து முறித்துக் கொண்டு ICFI இல் இருந்து உடைந்து சென்ற பப்லோவாதக் கட்சிகளில் இணைந்து, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தின் மற்றும் ஐரோப்பாவில் போருக்குப் பிந்தைய எழுச்சி சமயத்தின் முதலாளித்துவ ஸ்திரப்படலுக்கு தங்களை தகவமைத்துக் கொண்டனர். பப்லோவாதிகள் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் சுயாதீனமான புரட்சிகரப் பாத்திரத்தை நிராகரித்ததோடு, ஸ்ராலினிசத்துக்கு ஒரு புரட்சிகரப் பாத்திரத்தை வழங்கினர், ட்ரொட்ஸ்கிச இயக்கம் தன்னை ஸ்ராலினிசத்துக்குள் கலைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதியமை பிரான்சில் பப்லோவாத அரசியலின் ஒரு அடிப்படைக் கூறாக இருந்தது.

1968 பொது வேலைநிறுத்தமும் கூட இந்த முன்னோக்கின் திவால்நிலையையே எடுத்துக்காட்டியிருந்தது: PCF புரட்சியின் வாகனமாக மேல்வரவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களைத் தடுக்கின்ற சுமைப்பொதியாகவே எழுந்துவந்தது. தொழிலாளர்களிடம் ஒரு புரட்சிகரத் தலைமை இல்லாததால் 1968 இலும் இன்றும் புரட்சிகர சூழ்நிலை ஏதுமில்லை என்பதான கிறிவினின் கூற்று ஒரு மையமான பிரச்சினையை விட்டுவிடுகிறது: அதாவது, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரத் தலைமை கட்டியெழுப்பப்படுவதைத் தடுப்பதில் பப்லோவாத இயக்கத்தின் பாத்திரம்.

கிறிவினும் அவரது கூட்டத்தினரும் PCF அல்லது PS ஐ பாதுகாத்து வந்த இந்த சூழ்ந்துபட்ட தசாப்தங்களில், பப்லோவாத இயக்கத்தின் பிரெஞ்சு பிரிவாக 1974 இல் ஸ்தாபிக்கப்பட்ட LCR (Ligue communiste révolutionnaire) மற்றும் அதன் வாரிசாக 2009 இல் ஸ்தாபிக்கப்பட்ட NPA உள்ளிட பல்வேறு வடிவங்களை எடுத்த அவர்களின் பிற்போக்குத்தனமான கோமாளித்தனங்களுடன் ட்ரொட்ஸ்கிசத்தை அடையாளம் காணுமாறு பிரான்சின் பரந்த மக்களிடம் கூறப்பட்டது.

ஐம்பது ஆண்டுகளின் பின்னர், தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து செல்லும் இயக்கமானது பப்லோவாத போலி-இடது போக்கின் இற்றுப் போன அரசியல் அடித்தளங்களை சுக்குநூறாக தகர்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் புரட்சியாளர்களோ அல்லது ட்ரொட்ஸ்கிசம் மற்றும் அக்டோபர் புரட்சியின் தொடர்ச்சிக்கான பிரதிநிதிகளோ அல்லர், மாறாக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை கழுத்தை நெரித்து தொழிலாளர்களை சிக்கன நடவடிக்கையுடனும் போருடனும் கட்டிப் போடுவதற்காக வேலை செய்பவர்களாகும். ICFI வலியுறுத்தி வந்திருப்பதைப் போல, மக்ரோனுக்கு எதிராக மட்டுமல்லாது, பிற்போக்குத்தனமான போலி இடது கட்சிகளுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டம் மட்டுமே மக்ரோனின் வெட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கி இருக்கும் பாதையாகும்.