ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

SEP (Sri Lanka) calls May Day meeting in Colombo

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) கொழும்பில் மே தினக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றது

By the Socialist Equality Party 
19 April 2018

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), மே 1 அன்று மாலை 3 மணிக்கு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்துவதன் மூலம், சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்துக்கான தினமான மேதினத்தை கொண்டாட உள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம், நாம் இலங்கையில் மே தின கொண்டாட்டங்களுக்கு குழி பறிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை எதிர்க்கின்றோம்.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்கு புத்திஜீவிகளை இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு சோ.ச.க. வலியுறுத்துகிறது. மே 5 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) வழியாக ஒளிபரப்பப்பட உள்ள, இணையவழி மே தினக் கூட்டத்தில் இணைந்துகொள்ளுமாறும் நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

மார்ச் 28, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மே 1 நடக்கவுள்ள அனைத்து மே தின கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளையும் ஒத்தி வைப்பதாக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை அறிவித்தார். அவர் மே தினக் கூட்டங்கள் மே 7 அன்று நடத்தப்பட வேண்டும் என "கேட்டுக்கொண்டார்". அன்றைய தினம் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"அரசாங்கத்தின் முடிவானது புனித பௌத்த மத குருமார்களின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்டது, இந்த சிறப்புடன் மே முதல் வாரத்தில் நாடு முழுவதும் மத கொண்டாட்டங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன" என ஜனாதிபதி பிரகடனம் செய்தார். பௌத்தர்கள் புத்தரின் பிறந்த, ஞானம் பெற்ற மற்றும் இறந்த தினத்தை மே மாதம் பௌர்ணமி அன்று நினைவு கூருகின்றனர். இது "வெசாக்" தினம் என்று அழைக்கப்படுகிறது.

மே தினத்தை கீழறுப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு, அதன் பிற்போக்கு சிங்கள-பௌத்த பேரினவாதத்தை மேம்படுத்துவதன் வழியில் அமைந்ததாகும். இது அரசாங்கத்தின் மிகப்பெரும் அரசியல் நெருக்கடியுடன் பிணைந்துள்ளது. வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்ட அலைகள் பெருகிவரும் நிலையில், மே தினமானது தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மற்றும் கிராமப்புற ஏழைகளின் எதிர்ப்பின் மையப் புள்ளியாக ஆவதோடு முதலாளித்துவ ஆட்சிக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது.

வேலை நிறுத்தங்களை தடம்புரளச் செய்வதற்கு தொழிற்சங்கங்கள் முயற்சித்த போதிலும் பல்கலைக்கழகங்கள், துறைமுகங்கள், மின்சாரம், பெட்ரோலியம், தபால், இரயில், சுகாதாரம் மற்றும் பெருந்தோட்டங்கள் உட்பட பல்வேறு துறைகளில் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தங்களை முன்னெடுத்திருந்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் போது வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களை தொழிலாள வர்க்கம் எதிர்க்கின்றது.

இலவசக் கல்வி மீதான அரசாங்கத் தாக்குதல்களுக்கு எதிராக மாணவர்கள் மத்தியிலும், அத்தியாவசிய விவசாய உள்ளீடுகளை வெட்டுவது போன்ற பிரச்சினைகள் தொடர்பாக ஏழை விவசாயிகள் மத்தியிலும் கிளர்ச்சியான போராட்டங்கள் வெடித்தன. கொழும்பின் இனவாத உள்நாட்டு யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகளால் இன்னமும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கில், தற்போதைய இராணுவ ஆக்கிரமிப்பையும் வீடுகள் மற்றும் நிலங்களை திரும்ப கொடுக்க மறுப்பதையும் எதிர்த்து வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆளும் கூட்டணியின் பங்காளிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (ஸ்ரீ.ல.சு.க.) சிறிசேனவின் கன்னையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க.) பெப்ரவரியில் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அவமானகரமான தோல்விகளுக்கு உள்ளாகின –இது அரசாங்கத்தின் மீதான வாக்காளர்களின் எதிர்ப்பின் தெளிவான வெளிப்பாடாக இருந்தது.

அரசாங்கம் இப்போது குழப்பத்தில் உள்ளது. ஸ்ரீ.ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான எதிர்ப்புக் குழு ஒன்று, பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. விக்கிரமசிங்க வாக்கெடுப்பில் தப்பிவிட்டார். ஆனால் 16 அமைச்சர்கள் அவருக்கு எதிராக வாக்களித்து, இப்போது எதிர்க் கட்சி ஆசனத்தில் அமரவுள்ளதாக அச்சுறுத்துகின்றனர். சாத்தியமான பிளவுகளுக்கு ஒட்டுப்போடும் அவநம்பிக்கையான முயற்சியில், சிறிசேன மே 8 வரை மூன்று வாரங்களுக்கு பாராளுமன்றத்தை ஒத்தி வைக்க தனது எதேச்சதிகார நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தினார்.

திரைக்குப் பின்னால், சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் தொழிலாள வர்க்கத்தின் மீது பாய்வதற்கு பொலிஸ்-அரச வழிமுறைகளை தயாரிக்கின்றனர். நாட்டின் பிரமாண்டமான கடன் நிதி நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது திணிப்பதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு மாற்று வழி இல்லை.

ஆளும் கூட்டணியின் எதிர்ப்பாளராக காட்டிக்கொள்வதன் மூலம் பொதுமக்களிடையேயான பரந்த அதிருப்தியை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கும் ஒரு புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) இராஜபக்ஷ தலைமை வகிக்கின்றார். தனது எதேச்சதிகார ஆட்சியினால் பேர் போன இராஜபக்ஷ, ஆட்சிக்கு வந்த தொழிலாள வர்க்கத்தை கொடூரமாக அடக்குவதன் பேரில் மேற்கொள்ளும் முயற்சியில் வலதுசாரி சக்திகளைத் தயார் செய்வதோடு இனவாதத்தையும் தூண்டி விடுகின்றார்.

ஆளும் கட்சிகள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட எதிர்க் கட்சிகளுமாக, ஸ்தாபகக் கட்சிகள் எவையும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அல்லது உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதை எதிர்க்கவில்லை. ஜே.வி.பி. ஏற்கனவே அரசாங்கத்தின் "வேண்டுகோளுக்கு" தலைவணங்கி, மே 1 அன்று மே தினத்தை நடத்தி "வெசாக்கிற்கு தடங்கல் செய்யாது" என அறிவித்துள்ளது. அது யாழ்ப்பாணத்தில் அன்றைய தினம் ஒரு கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளமை இனவாத விரோதத்தை கிளறிவிடும் திட்டமிட்ட ஆத்திரமூட்டலாகும்.

மார்ச் 28, முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) பிரச்சார செயலாளர் புபுது ஜயகொட, மே தினத் தடையை அகற்றுவதற்காக "அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க" அனைத்து "முற்போக்கு சக்திகளையும்" ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார். தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அரசியல் அணிதிரள்வையும் தடுப்தற்காக போலி-இடது அமைப்புகளின் கூட்டணி ஒன்றை அமைக்க முயலும் மு.சோ.க., அரசாங்கத்தை போர்க்குணத்துடன் எதிர்ப்பதாக காட்டிக்கொள்கின்றது.

பிரெஞ்சு புரட்சியின் நூற்றாண்டில் 1889 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் இரண்டாம் அகிலம் கூட்டப்பட்ட போதே, சர்வதேச தொழிலாளர் தினமாக மே 1 அறிவிக்கப்பட்டது. அது, 1886ல் சிகாகோவில் அமெரிக்க தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை காலத்துக்காக முன்னெடுத்த போராட்டத்தையும் அவர்களுடைய போராட்டம் இரத்தக்களரியில் அடக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தது. மே 1ம் திகதியானது விடுமுறை தினத்திலா அல்லது வேலை நாளிலா வருகிறது, இல்லையெனில் எஜமானின் அல்லது அரசாங்கத்தின் அனுமதி கிடைத்ததா என்பது அதைக் கொண்டாடுவதற்கு அவசியமற்றதாகும்.

இலங்கையில் முதல் மே தின கொண்டாட்டம் ஏ.இ. குணசிங்க தலைமையிலான தொழிற்சங்க இயக்கத்தால் 1927ல் நடத்தப்பட்டது. பெரும் பொருளாதார மந்த நிலையால் உருவாக்கப்பட்ட நெருக்கடியின் மத்தியில், ​​தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பிற்கு விரோதமாக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை குணசிங்க பாதுகாத்தபோது, ​​லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) 1936ல் ஒரு பரந்த சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முதல் மே தின பேரணியை ஏற்பாடு செய்தது.

1948ல் பிரித்தானியாவிடம் இருந்து உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்ற பின்னர், லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் சீரழிவு மற்றும் பின்னடைவு கண்டது. இது ஸ்ரீ.ல.சு.க.யின் சிங்கள மேலாதிக்கவாதத்திற்கு ல.ச.ச.க. அடிபணிந்து போனதில் வெளிப்பட்டது. அது S.W.R.D. பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க. 1956ல் ஆட்சிக்கு வர உதவியதுடன், அதற்கு பிரதியுபகாரமாக மே 1ம் திகதியை அரசாங்கம் விடுமுறை தினமாக்கியது. 1964ல் ல.ச.ச.க. மே தினத்தில் வெளிப்படுத்தப்படும் சோசலிச சர்வதேசியவாத கொள்கைகளை பகிரங்கமாக காட்டிக் கொடுத்ததுடன், பண்டாரநாயக்க அம்மையாரின் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தில் நுழைந்துகொண்டது -இது இறுதியில் 1983ல் தீவின் இரத்தம் தோய்ந்த 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் வெடிப்பதற்கு வழிவகுத்தது.

அரசாங்கங்கள் மீண்டும் மீண்டும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு போராட்டத்தையும் நசுக்கும் ஒரு வழிமுறையாக யுத்தத்தை பயன்படுத்தின. இரண்டு தடவைகள் மே தினம் தடை செய்யப்பட்டுள்ளது. முதலில் 1987ல் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன தடை செய்தார். பின்னர் 2006ல், இராஜபக்ஷ போர் நிறுத்தத்தை உடைத்து, மோதல்களை புதுப்பிக்கத் தயாராக இருந்தபோது, ​​"பாதுகாப்பு காரணங்களை" மேற்கோள் காட்டி, மே தினக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என "அழைப்பு விடுத்தார்".

இரண்டு சந்தர்ப்பங்களிலும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல்ரீதியாக முன்னேறிய பிரிவினரும் ஒடுக்கப்பட்டவர்களும் அந்த தடைகளை மீறி மே 1 அன்று பொதுக் கூட்டங்களை நடத்தினர். 1987ல், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், மே தினத்தை கொண்டாடுவதற்கான தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது.

இந்த ஆண்டு மே தினம், தீவிரமடைந்து வரும் பூகோள-அரசியல் பதட்டங்கள் மற்றும் பெருகிவரும் உலகப் போர் ஆபத்துக்களுக்கு மத்தியில், சிரியா மீதான சமீபத்திய அமெரிக்கத் தலைமையிலான ஏவுகணை தாக்குதல்கள், அணு ஆயுதம் கொண்ட ரஷ்யாவுடன் மோதலை தூண்டிவிட அச்சுறுத்துகின்றது. அதே சமயம், யுத்தத்திற்கு எதிராகவும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் தீவிரமயமாதலும் மற்றும் இயக்கமும் வளர்ச்சியடைந்து வருகின்றது.

இலங்கையைப் போன்ற பின்தங்கிய அல்லது முன்னேறிய நாடுகளிலும் கூட, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவசரமான பணி, முதலாளித்துவத்தை தூக்கி வீசவும், சோசலிச வழியில் சமூகத்தை மறு ஒழுங்கு செய்வதற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதே ஆகும். அந்த அடிப்படையில், சோ.ச.க. மற்றும் அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும் ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டத்திற்கு வருகை தருமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

மே 1, சர்வதேச தொழிலாளர் தினம் வாழ்க!

உலக சோசலிசத்திற்கான சர்வதேச புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்பு!