ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: Muslims explain how the organised violence occurred

இலங்கை: திட்டமிட்ட வன்முறைகள் எவ்வாறு வெடித்தன என்பதை முஸ்லீம்கள் தெளிவுபடுத்துகிறார்கள்

By Rohantha De Silva and K. Gamini 
13 March 2018

கண்டியில் திகன-தெல்தெனிய பிரதேசத்தில் சிங்கள-பௌத்த அதிதீவிரவத கும்பலின் தலமையில் நடந்த முஸ்லீம்–விரோத வன்முறைகள் மார்ச் 4 அன்று மாலை ஆரம்பமாகி நான்கு நாட்கள் தொடர்ந்தன. நான்கு முஸ்லீம்களால் தாக்கப்பட்ட ஒரு சிங்கள லொறிச் சாரதி இறந்த விடயம், தங்களின் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக வலதுசாரி சிங்கள-பௌத்த அமைப்புக்களால் பற்றிக்கொள்ளப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தினை பொலிஸ் அகற்றிக்கொண்டாலும் கண்டியில் சமூப் பதட்டங்கள் தொடர்கின்றன. பொலிஸ் மற்றும் இராணுவம் கண்டி நகரிலும் பாதிக்கப்பட்ட பிரதேசத்திலும் இடைக்கிடையே ரோந்தில் ஈடுபடுவதுடன் சில இடங்களில் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பொலிசாரின் படி, 3,250 இராணுவம் மற்றும் விமானப்படையினர் உட்பட ஏறக்குறைய 7,000 பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 220க்கு மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் –கண்டி பிரதேசத்தில் 161 பேரும் மாவட்டத்திற்கு வெளியில் 69 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திகனவில் பாதுகாப்புப் படைகள்

தெல்தெனிய–திகன பிரதேசங்களுக்கு உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் சென்றிருந்தனர். வன்முறையால் விளைந்த சேதம் தெளிவாக புலப்பட்டது. வீடுகள் மற்றும் கடைகள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டிருந்தன. பிரதேசவாசிகள் தங்களுக்கு எதிராக திடீரென கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிட்ட அழிவுகள் சம்பந்தமாக பயம், வெறுப்பு மற்றும் சீற்றத்தை வெளிப்படுத்தினர்.

WSWS பேட்டி கண்டவர்களின் படி, மஹாசோன் பலகாய (மாபெரும் பிசாசுப் படை), பொதுபல சேனா ஆகிய பாசிச அமைப்புக்களால் இந்த வன்முறை வெறியாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட மஹாசோன் பலகாயவிற்கு திகனவில் பகிரங்க அலுவலகம் ஒன்று உள்ளது. சிங்கள இனத்தையும் பௌத்த மதத்தையும் “பாதுகாப்பதாக” கூறிக்கொள்ளும் இந்த இரு அமைப்புக்களும், முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதில் பேர் போனவை. வன்முறை வெறியாட்டத்துக்கு வழிகாட்டலாக இருந்தார்கள் என்னும் சந்தேகத்தில் மஹாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் அவரது பல கூட்டாளிகளயும் இலங்கை பொலிஸ் கைது செய்துள்ளது.

ஒரு குடியிருப்பாளர் WSWSக்கு கூறியதாவது: மஹாசோன் பலகாய அமைப்பே இந்த சம்பவத்துக்கு பிரதான பொறுப்பாளி. மூன்று வருடங்களுக்கு முன்னர் அது உருவாக்கிய ஒரு வீடியோ காட்சியில், திகனப் பிரதேசத்தில் ஒரு சிங்கள கடை கூட கிடையாது என, அதன் தலைவர் அமித் வீரசிங்க கூறியிருந்தார். திகன ஒரு ’முஸ்லீம் நாடாக’ மாறிவிட்டது என அவர் கூறியிருந்தார்.”


தாக்குதல்தாரர்களால் சேதமாக்கப்பட்ட ஒரு மசூதி

ஒரு இளைஞர் தெரிவித்ததாவது: பிரதேசத்தில் வாழும் சிங்கள–பௌத்தர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. கலவரம் மற்றும் அழிவும் அதிதீவிரவாத கும்பல்களாலேயே நடத்தப்பட்டன. கென்கல்ல (ஒரு பாதிக்கப்பட்ட) கிராமத்தில் மட்டும், 25 கடைகள் மற்றும் 50 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல் கூட சேதப்படுத்தப்பட்டுள்ளது. எங்கும் தீ எரிந்து கொண்டிருந்த்து. பிரதேசம் முழுவதும் புகையால் மூடப்பட்டிருந்த்து.”

“எமது சிங்கள அயலவர்கள் சகோதரர் போல் உதவி புரிந்தார்கள்” என அவர் தொடர்ந்து கூறினார். “அவர்கள்தான் எங்களைப் பாதுகாத்தார்கள். நடந்தவற்றைப் பற்றி அவர்கள் மிகவும் கவலையடைந்திருந்தார்கள். விசாகப் பண்டிகை காலத்தில் தான சாலைகளை ஏற்பாடு செய்வதில் நாங்களும் பங்குபற்றுவோம். அந்த சாரதியை கொலை செய்த அந்த நான்கு பேரையும் நாங்கள் மன்னிக்கவில்லை. ஆனால், அப்பாவிகளான எங்களை ஏன் தாக்கினார்கள்?”

பிரதானமாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களைக் கொண்ட அதிதீவிர குண்டர் கும்பல்கள் மோட்டார் சைக்கிள்களில் பிரதேசத்துக்குள் நுழைந்தார்கள். போக்குவரத்துக்காக லொறியும் கூட பயன்படுத்தப்பட்டது. பெற்றோல் குண்டு, இரும்பு மற்றும் மரக் கட்டைகள், கற்கள் என்பன இந்த தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்டன. கூடுதலான பேரழிவுச் சம்பவங்கள் சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்தபோதிலும், அநேகமான குண்டர்கள் தங்களின் முகத்தினை துணிகளினால் மூடியிருந்தனர். இந்த வன்முறைகளை பொலிசார் அனுமதித்திருந்தனர், என ஒரு குடியிருப்பாளர் கூறினார்.


தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு வீடு

ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.)-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க.) என்ன செய்துகொண்டிருக்கின்றது என பிரதேசவாசிகள் கேள்வி எழுப்பியதோடு கல்வி தனியார்மயமாக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக அரசாங்கம் பொலிசை ஏவிவிடுவதையும் சுட்டிக் காட்டினர்.

"அவர்களால் வீதித் தடைகள் மற்றும் கண்ணீர்ப்புகைகளை பயன்படுத்தி கிலோமீட்டர்கள் நீண்ட போராட்ட பேரணிகளை தடுக்க முடியும், ஆனால் சில நூறு குண்டர்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியாது. குண்டர்களால் வந்து தாக்கிவிட்டு போகமுடியும்... கண்டியில் உள்ள அரசியல்வாதிகள் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் எதையும் செய்யவில்லை."

லொரி சாரதியின் மரணம் குறித்து பிரதேசவாசிகள் கவலை தெரிவித்தனர். "அவர் ஒரு நல்ல மனிதர் மற்றும் முஸ்லீம்களுடன் மிகவும் நேசமானவர்."


எம். ஷஹீட்

எம். ஷஹீட் கூறியதாவது: "தாக்குதல் நடத்தியவர்கள் எங்களை தூண்டிவிட்டு பதிலடிகொடுக்க எதிர்பார்த்தனர். அப்போது அவர்களால் எங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். என்று கூற முடியும். நாம் சமாதானத்தை விரும்பும் மக்கள், சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். உணவு மற்றும் தங்குவதற்கு அறைகள் மற்றும் தற்காலிக விடுதிகளையும் வழங்கி அவர்கள் எங்களுக்கு உதவி செய்கிறார்கள்."

குவைத்தில் பணிபுரியும் ரிஸ்வி, தனது குடும்பத்தின் பாதுகாப்பைப் பற்றி அச்சமடைந்து, கடந்த வாரம் இலங்கைக்குத் திரும்பினார்.

"ஒவ்வொரு நாளும் நான் என் குடும்பத்துடன் பேசினேன், தாக்குதல்களை ஆரம்பித்த மறு நாள் காலை 10.30 மணியளவில் நான் அவர்களை தொடர்புகொண்டேன். எனது மனைவி பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றார். ஆனால் இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகு அங்கு கலவரங்கள் நடந்ததை நான் அறிந்துகொண்டேன்.” ரிஸ்வீ மீண்டும் தொலைபேசியில் அழைத்தபோது அங்கு யாரும் இருக்கவில்லை. குவைத்தில் பணியாற்றிய கடைக்குள்ளேயே இருந்து அழுதுகொண்டிருந்ததாக அவர் கூறினார்.

"என் மனைவியும், இரண்டு குழந்தைகளும், அவளுடைய அண்ணி மற்றும் அவளது 8 மற்றும் 2 வயதினரான இரண்டு மகள்களும் சேர்ந்து, புதருக்குள் மறைந்து இருந்தபோது கண்டுபிடித்தேன். அவர்கள் சுமார் மூன்று மணி நேரம் அங்கு மறைந்திருந்ததோடு மிகவும் பீதியடைந்த நிலையில் இருந்தனர்," என்று அவர் கூறினார்.

"ஒரு சிங்கள பெண் அவர்களைக் கண்டு, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தார். அவருடைய கணவனும் மகளும் வேலைக்குச் சென்ற பின்னர் அவர் தனியாக இருந்த போதிலும் தைரியமாக அவர்களை உள்ளே அழைத்துச் சென்றிருந்தார். அவர்களுக்கு தேநீர் மற்றும் உணவு கொடுத்து, எல்லா கதவுகளையும் மூடிவைத்து அவர்களை பாதுகாத்திருந்தார்."


எரிந்த புத்தகங்களை பார்வையிடும் ஒரு மாணவி

ரிஸ்வி, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் எதிர்கொண்ட பயங்கரமான சூழ்நிலை, இப்பகுதியில் உள்ள ஏனைய முஸ்லிம் மக்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.

திகனவில் முஸ்லீம் மக்களுடன் WSWS நிருபர்கள் பேசினர். பிரதேசவாசிகளின் படி, குண்டர்கள் ஒரு வெற்று சவப்பெட்டியைக் கொண்டு வந்து, புதிய நகரம் எனப்படும் திகனவின் ஒரு பகுதியில் தமது தாக்குதலைத் தொடங்கினர். 500 குண்டர்கள் மத்தியில் ஒரு பௌத்த துறவியும் இருந்தார். ஒரு குழு கென்கல்லவிற்கு சென்றதோடு, மற்ற குழு திகன பகுதியில் முஸ்லீம்களின் கடைகள் மற்றும் வீடுகளையும் தாக்கியது. பொலிஸ் கமாண்டோக்கள் குண்டர்களுக்கு ஆதரவாக நின்றதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

"இது திகனவிலிருந்து ஒரு புறப் பாதையாகும், அவர்கள் இங்கு வருவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை அதனால் ஒழிந்துகொள்ளக் கூட நேரம் இருக்கவில்லை,” என முகமட் தெரிவித்தார். “ஏனைய பொருட்களுடன் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள சிகரெட்டுகள் மற்றும் தொலைபேசி கட்டண அட்டைகளும் இருந்தன. குளிர்சாதனப் பெட்டி மற்றும் தொலைக்காட்சியும் சேதமாக்கப்பட்டன."

திகனவாசிகளில் பலர் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு, தற்காலிகமாக மற்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். பாத்திமா பீபி கூறியதாவது: "நாங்கள் சிங்கள பொதுமக்களுடன் சமாதானமாக வாழ்ந்து வருகிறோம். அவர்கள் எங்களுக்கு மிகவும் சினேகமானவர்கள். [சிங்கள சாரதிய தாக்கிய] நான்கு பேருக்கு என்ன நடந்தது என்பதை பற்றி எமக்கு கவலை இல்லை. ஆனால் எங்களை ஏன் தாக்கினர்? எங்கள் மகன் ஒரு சிறிய வியாபாரத்தை ஆரம்பித்தார். அவருடைய அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. முன் கதவு உடைக்கப்பட்டுள்ளது.

"என் மகளும் அவளுடைய குழந்தைகளும் அந்த நேரத்தில் வீட்டில் இருந்தார்கள், ஆனால் அவர்கள் பாதுகாப்பான இடத்தில் மறைந்து இருந்தார்கள். சிறிய மகள் அழுதுவிடுவாள் என்ற பயத்தில் அவர்கள் அவளது வாயை துணியால் பொத்தி வைத்திருந்தனர்."

இந்த வகுப்புவாத தாக்குதல்கள் பிறழ்ச்சி அல்ல, மாறாக ஒரு திட்டவட்டமான வழிமுறையை பின்பற்றுகின்றன. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும்போதே, பொது பல சேனா, சிங்கள ராவய, மஹசோஹோன் பலகாய போன்ற பாசிச அமைப்புக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. அவை இப்போது தற்போதைய அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்டு பலப்படுத்தப்படுகின்றன.

சனிக்கிழமை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது சிங்கள மற்றும் முஸ்லிம் அமைச்சரவை அமைச்சர்களுடன் சேர்ந்து, அழிக்கப்பட்ட மற்றும் சேதமாக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுப்பதாக அவர் உறுதியளித்தார். பின்னர் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசாங்க அதிகாரத்துவவாதிகளின் கூட்டத்தை நடத்தினார். முஸ்லீம்-விரோத படுகொலை கலவரத்தில் 465 வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்களும் -86 முழுமையாக, 196 பகுதியாக மற்றும் 182 குறைந்தபட்சம்- அழிக்கப்பட்டுவிட்டதாக கூட்டத்தில் கூறப்பட்டது.


முற்றிலுமாக துவம்சம் செய்யப்பட்ட ஒரு வீடு

கவலையளிப்பதாகக் கூறிய விக்கிரமசிங்க, இந்த வன்முறை சுற்றுலாத்துறைக்கு ஒரு “சவாலாக” உள்ளது என அறிவித்து தன்னுடைய உண்மையான கவலை எதைப் பற்றியது என்பதை சமிக்ஞை செய்தார். மேலும் "ஒற்றுமை மற்றும் கூட்டுறவைப் பற்றி மக்களுக்கு கல்வியூட்டுமாறு" பௌத்த உயர் பீடத்தினருக்கே அவர் வேண்டுகோள் விடுத்தார்.

விக்கிரமசிங்கவின் கருத்துக்கள் வஞ்சகம் மற்றும் பாசாங்குத்தனத்தில் முக்கி எடுக்கப்பட்டவை. எத்தனை ஆணைக் குழுக்களும் அல்லது அரசியல் வேண்டுகோள்களும் அதிதீவிரவாத வன்முறையின் மூல காரணத்தை அகற்றப் போவதில்லை.

பௌத்த உயர் பீடமும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும் இலங்கையின் ஆளும் உயரடுக்கின் அதிகாரத்தையும் சலுகைகளையும் காப்பாற்றுவதற்காகவும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் தடம்புறளச் செய்யவும் தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத பேரினவாதத்தை ஊக்குவிக்கின்றன. சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தாலும் இராஜபக்ஷ தலைமையிலான எதிர்க் கட்சியாலும், இந்த பிற்போக்கு சக்திகள் ஊக்குவிக்கப்படுவது, இலங்கை முதலாளித்துவத்தின் ஆழ்ந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கான நேரடி பிரதிபலிப்பாகவே ஆகும்.