ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Unions seek to hijack, shut down Oklahoma teachers strike as support for expanded struggle grows

போராட்டத்தை விரிவாக்குவதற்கு ஆதரவு அதிகரிக்கின்ற நிலையில், தொழிற்சங்கங்கள் ஒக்லஹோமா ஆசிரியர் வேலைநிறுத்தத்தைக் தாமே பொறுப்பெடுக்கவும், கலைத்து விடவும் முயல்கின்றன

By the Socialist Equality Party
9 April 2018

பத்தாயிரக் கணக்கான ஒக்லஹோமா ஆசிரியர்கள் மற்றும் சக பணியாளர்களின் வேலைநிறுத்தம் இரண்டாம் வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், தொழிலாளர்கள் ஒரு முக்கிய முடிவெடுக்க வேண்டிய கட்டத்தை முகங்கொடுக்கின்றனர். பொதுக்கல்வியைப் பாதுகாக்கும் போராட்டத்தை விரிவாக்க ஆசிரியர்கள் தீர்மானகரமாக உள்ளனர் என்றாலும், தொழிற்சங்கங்கள் அந்த போராட்டத்தை தாமே பொறுப்பெடுக்கவும், கலைத்து விட்டு, ஒரு விற்றுத்தள்ளலைத் திணிக்க அவற்றால் ஆனமட்டும் அனைத்தும் செய்து வருகின்றன.

மேற்கு வேர்ஜினியாவில் ஒன்பது நாள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து கல்வியாளர்கள் எடுத்த தைரியமான நிலைப்பாடு, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த ஆதரவை வென்றுள்ளது. இது உலகெங்கிலும் வர்க்க போராட்டத்தின் ஒரு மீள்எழுச்சிக்கு இடையே நடக்கிறது.

ஆசிரியர்களின் பிரதான கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யாமலேயே வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஆசிரியர்களின் அமெரிக்க சம்மேளனம் (AFT) மற்றும் தேசிய கல்வித்துறை கூட்டமைப்பு (NEA) ஆகிய தொழிற்சங்கங்களது முயற்சிகளை எதிர்த்து, அந்த வேலைநிறுத்தம் ஆசிரியர்களாலேயே தொடங்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.

இப்போது தொழிற்சங்கங்கள், அழுகிய இருதரப்பு உடன்படிக்கையில் கூடுதலாக சிலவற்றை சேர்த்து வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நினைக்கின்றன. அந்த உடன்படிக்கையைத் தான் தொழிற்சங்கங்கள் முன்னர் "வரலாற்று முக்கியத்துவமானதாக" புகழ்ந்துரைத்தன, ஆசிரியர்களோ அதை ஏற்கனவே பெரும்பான்மையாக இருந்து மார்ச் 29 இல் நிராகரித்ததுடன், வேலைநிறுத்தத்திற்கு அழுத்தமளித்திருந்தனர். அந்த உடன்படிக்கையின்படி சில பத்து மில்லியன் டாலர்கள் பள்ளித்துறை நிதி ஒதுக்கீடுகளுக்கு வழங்கப்படும், பின்னர் இது "கோலி மற்றும் தாயம் உருட்டும்" சூதாட்ட விளையாட்டை சட்டபூர்வமாக்குவது உட்பட தொழிலாள வர்க்கத்தைக் கடுமையாக பாதிக்கும் திரும்பி வசூலிக்கும் வரிகள் மூலமாக வசூலிக்கப்படும்.

ஆசிரியர்கள் சம்பளத்தில் $10,000 டாலர் உயர்வு, பள்ளி உதவி பணியாளர்களுக்கு 5,000 டாலர் உயர்வு மற்றும் கூடுதல் நிதி ஒதுக்கீடாக குறைந்தபட்சம் 200 மில்லியன் டாலர் என தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதையும் குறிப்பிடாமல் தொழிற்சங்கங்கள் கைவிட்டுள்ளன. அதற்கு பதிலாக, ஒக்லஹோமா கல்வித்துறை கூட்டமைப்பு (OEA) தலைவர் அலிசியா ப்ரீஸ்ட் வெள்ளியன்று பேசுகையில், அது முன்னர் வேலைநிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர முன்வைத்த அடிமட்ட நிலைப்பாட்டிலிருந்து OEA பின்வாங்கியிருப்பதை எடுத்துக்காட்டினார். அதில் மூலதன இலாபங்கள் மீதான வரி வெட்டுக்களைத் திரும்ப பெறவேண்டும் என்பதும் அதில் உள்ளடங்கும்.

Tulsa World செய்தியின்படி, ப்ரீஸ்ட் "எவ்வளவு கூடுதல் வருவாய் ஆசிரியர்களுக்கு நிறைவளிப்பதாக இருக்கும் என்பதை கூட குறிப்பிட்டு கூற மறுத்தார். நடைமுறை தேவைகளுக்கு கூடுதல் டாலர்கள் வேண்டுமென்று பொத்தம்பொதுவாக ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அறிவுறுத்துவதை மட்டுந்தான் ப்ரீஸ்ட்டால் கூற முடியும்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போராட்டத்தை கலைத்துவிட ஏதோவொரு வித அழுகிய உடன்படிக்கையை எட்டுவதற்காக ப்ரீஸ்ட் சட்டமன்ற பிரதிநிதிகளுடன் சூழ்ச்சி செய்து வருகிறார்.

இரண்டு கட்சிகளாலும் ஒரு தசாப்தமாக செய்யப்பட்ட, தொழிற்சங்கங்களால் மேற்பார்வையிடப்பட்ட நிதி வெட்டுக்கள், அதாவது ஒக்லஹோமாவின் நிஜமான ஆண்டு செலவில் 1 பில்லியன் டாலர் வெட்டு, அல்லது தலா ஒரு மாணவருக்கு 1,000 டாலருக்கும் கூடுதலாக வெட்டப்பட்டுள்ள நிலையில், இதை சரி செய்ய கூடிய ஏதோவொரு நடவடிக்கை குறித்து எதுவும் பரிசீலிக்கப்படவில்லை.

தேசியளவில், ஆசிரியர் சங்கங்கள் ஒக்லஹோமா ஆசிரியர்களைத் தனிமைப்படுத்தவும், மற்ற மாநிலங்களுக்கு வேலைநிறுத்தத்தை விரிவாக்குவதற்கு தொழிலாளர்களிடையே நிலவும் மிகப்பெரியளவிலான ஆதரவு அதிகரித்தும் வருகின்ற நிலையில், அதை தடுக்கவும் தீர்மானகரமாக உள்ளன.

ஆசிரியர்களின் எந்தவொரு நடவடிக்கையும் மாணவர்களைப் பாதிக்கும் என்று ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பொய்யைத் திரும்பக்கூறி கென்டக்கி கல்விதுறை கூட்டமைப்பு வெள்ளியன்று ஓர் அறிக்கை வெளியிட்டது. “வகுப்பறைகளிலும், பள்ளிகளிலும் அவர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டுமோ எதுவோ அது தான் நமது மாணவர்களுக்கு அவசியப்படுகிறது,” என்று அது குறிப்பிட்டது. “மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நாம் வழங்கும் கல்விச்சேவைகளுக்கான சமூகங்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து அழைப்புவிடுப்பதன் மூலம் நமது ஒருங்கிணைந்த முயற்சிகள் வீணாக அனுமதிக்க கூடாதென நாங்கள் மாநிலந்தழுவிய கல்வியாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம்,” என்று அது குறிப்பிட்டது.

லோவா மாநில கல்வித்துறை கூட்டமைப்பின் தலைவர் டாமி வாவ்ரோ கூறுகையில், லோவா ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினால் "கடுமையான" அபராதங்கள் செலுத்த வேண்டியிருக்கும் என்றார். புளோரிடா கல்வித்துறை கூட்டமைப்பின் ஓர் அறிக்கை அறிவித்தது, “வேலையிலிருந்து வெளிநடப்பு செய்வது அல்லது வேலைக்கு தாமதமாக வருவது ஆகியவை முறையான நடவடிக்கை அல்ல, அது கடுமையான விளைவுகளைச் சந்திக்கும். FEA இன் அனைத்து உறுப்பினர்களும் விதிகளை முறையாக பின்பற்றுவது முக்கியம்.”

ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை உடைக்கும் தொழிற்சங்கங்களின் பெருநிறுவன கைக்கூலிக்களின் கரங்களில் இருந்து வேலைநிறுத்ததை வெளியில் எடுக்காவிட்டால், அது தவிர்க்கவியலாமல் காட்டிக்கொடுக்கப்படும். இது தான் மேற்கு வேர்ஜினியாவில் நடந்த துணிச்சலான ஒன்பது நாள் வேலைநிறுத்தத்தின் படிப்பினை, அங்கே வேலைநிறுத்தத்தை கைவிட்டு பாதியிலேயே வேலைக்கு திரும்ப வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிய போது, சமூக ஊடகங்கள் மூலமாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு, அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதில்லை என்று வாக்களித்து, ஆசிரியர்கள் ஆரம்பத்தில் அதை நிராகரித்தனர்.

ஆனால் பள்ளிக்கூட பணியாளர்கள் சங்கத்திடம் இருந்து சுயாதீனமாக அவர்களின் சொந்த அமைப்பைக் கட்டமைத்திருக்கவில்லை என்பதால், சங்கத்தால் பின்னர் அதன் கட்டுப்பாட்டை மீளபலப்படுத்த முடிந்தது என்பதோடு ஒரு விற்றுத்தள்ளப்பட்ட உடன்படிக்கையையும் திணிக்க முடிந்தது. அந்த உடன்படிக்கை மருத்துவ பராமரிப்பு உட்பட சமூக திட்டங்களில் ஆழ்ந்த வெட்டுக்களில் இருந்து ஒன்றுக்கும் உதவாத சம்பள உயர்வுகளுக்கு நிதி ஒதுக்கியதுடன், அதிகரித்து வந்த மருத்துவ கவனிப்பு செலவுகள் குறித்த ஆசிரியர்களின் மத்திய முறையீட்டை கவனத்தில் கொள்ளவில்லை.

சோசலிச சமத்துவக் கட்சி (SEP), வேலைநிறுத்தத்தை பொறுப்பெடுப்பதற்கான தொழிற் சங்கங்களின் அனைத்து முயற்சிகளையும் தடுக்க, ஒவ்வொரு பள்ளியிலும் சமூகத்திலும் தொழிலாளர்களால் ஜனநாய முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சாமானிய மட்ட தொழிலாளர் குழுக்களை உருவாக்குமாறு ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுப்பதுடன், அதற்காக தொழிலாளர்களை ஆதரிக்கிறது. இந்த குழுக்கள் நாடெங்கிலும் மற்ற மாநிலங்களில் மற்றும் சர்வதேச அளவிலும் ஆசிரியர்களுடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கையை ஒழுங்கமைக்க வேண்டும். பொதுக்கல்விக்கான உரிமையை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதில் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அத்துடன் மாணவ இளைஞர்களையும் அணிதிரட்டி, மட்டுப்படுத்தப்படாத, தேசியளவிலான பொது வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புகள் செய்யப்பட வேண்டும்.

சுயாதீனமான அமைப்புகளை அபிவிருத்தி செய்வதானது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி அரசியல்வாதிகள், மற்றும் அவர்கள் தாங்கிப்பிடிக்கும் இந்த சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறைக்கு எதிராக திரும்பிய, தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல் இயக்கத்தைக் கட்டமைப்புடன் இணைக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்கள் “நவம்பரை நினைவுகூர்ந்து,” நவம்பர் 2018 இடைத்தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களித்தால் மட்டுந்தான் பொதுக்கல்வியைக் காப்பாற்ற முடியும் என்று OEA வலியுறுத்தி உள்ளது. ஆனால் குடியரசுக் கட்சி ஆளுநர் மேரி ஃபாலினுக்கு முன்பிருந்த ப்ராட் ஹென்றியின் கீழ் ஜனநாயகக் கட்சியினர், உயர் வருவாய் வரி விகிதம் மற்றும் மூலதன இலாப வரிகளைக் குறைப்பதற்கும் சமூக செலவினங்களை வெட்டுவதற்கும் வழி வகுத்தனர். மேலும் ஒபாமா நிர்வாகம் தான் நாடெங்கிலும் 400,000 ஆசிரியர்களின் வேலைகளை அழிப்பதையும் மற்றும் சார்ட்டர் பள்ளிகள் விரிவாக்குவதையும் மேற்பார்வையிட்டது, அதேவேளையில் அது 2008 நிதி பொறிவுக்குப் பின்னர் வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ட்ரில்லியன் கணக்கில் டாலர்களைப் பாய்ச்சியது.

ஆசிரியர்களின் போராட்டம் "அரசியலற்றது" என்று அறிவுறுத்தும் மற்றும் உலக சோசலிச வலைத் தள கட்டுரை பதிவுகளை நிறுத்திவிட்ட ஒக்லஹோமா ஆசிரியர் ஐக்கியம் (OTU) போன்ற பேஸ்புஸ் பக்கங்கள் அறிவுறுத்தும் முன்னோக்கு நிராகரிக்கப்பட வேண்டும். வேலைநிறுத்தங்கள் "அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்" என்று கூறும் அமைப்புகள் உண்மையில் ஆசிரியர்களை ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பின்னால் பிணைத்து வைக்கவும், சோசலிச அரசியல் குறித்த விவாதத்தைத் தடுக்கவும் தீர்மானகரமாக உள்ளன என்பதை தொழிலாளர் இயக்கத்தின் நீண்ட வரலாற்று அனுபவம் எடுத்துக்காட்டுகிறது.

தொழிற்சங்கங்களின் பலமான பிடியிலிருந்து முறித்துக் கொள்ள சமூக ஊடகங்களைப் பயன்படுத்திய ஆசிரியர்களிடையே OTU போன்ற பேஸ்புக் பக்கங்கள் பரந்தளவில் பின்தொடரப்பட்டது. ஆனால் ஆசிரியர்களைப் பாதுகாக்க சங்கங்களுக்கும் மாநில ஜனநாயக கட்சியினருக்கும் அழுத்தமளிக்கலாம் என்றும், பொதுக்கல்விக்கான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் அணித்திரள்வு அவசியமில்லை என்றும் பேராபத்தான பிரமைகளை இப்போது OTU ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு செய்கையில், அது ஆசிரியர்களை ஒரு முட்டுச்சந்திற்கு தான் இட்டுச் செல்கிறது.

தொழிலாள வர்க்கத்தால் எது முடியும் அல்லது எதை "தாங்க" முடியாது என்று ஆளும் வர்க்கம் என்ன அறிவிக்கிறதோ அதிலிருந்து அல்ல, மாறாக ஆசிரியர்கள் நன்கு ஆதாரவளம் வழங்கப்பட்ட உயர்தரமான பொதுக்கல்வி முறை, சுகாதார கவனிப்பு, ஒரு பாதுகாப்பான ஓய்வூ மற்றும் அனைவருக்கும் கண்ணியமான வேலைகள் உட்பட, தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளை உறுதிப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து முன்நகர வேண்டும். பெருநிறுவன ஊடகங்களும் இரு கட்சிகளும் மொத்தமும் அதற்கெல்லாம் "பணமில்லை" என்று ஊளையிடுகின்றன. ஆனால் 2008 க்கு பின்னர் இருந்து வங்கிகளைப் பிணையெடுக்கவும், புதிய பெருநிறுவன வரி வெட்டுகள் வழங்கவும், மற்றும் உலகெங்கிலுமான நாடுகள் மீது படையெடுத்து அழிக்க பென்டகனுக்கு ஒவ்வொரு ஆண்டும் 700 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஒதுக்கீடு செய்ய அவர்களுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் கிடைத்துள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளுக்கான போராட்டமானது, தவிர்க்கவியலாமல், சமூகத்தின் செல்வவளம் எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்பதை எந்த சமூக வர்க்கம் தீர்மானிக்கிறது என்ற கேள்வியை முன்னிறுத்துகிறது: அதாவது சமூகத்தின் மொத்த செல்வவளத்தை உருவாக்குகின்றன மிகப் பெருந்திரளான மக்களான தொழிலாள வர்க்கமா, அல்லது ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டினாலும் பிரதிநிதித்துவம் செய்யப்படும் பெருநிறுவன உயரடுக்கால் தீர்மானிக்கப்பட வேண்டும். சமூக தேவைகளுக்கு ஏற்ப சமூகத்தை மறுஒழுங்கமைப்பது மற்றும் நிஜமான சமத்துவம் என்பது சோசலிசத்திற்கான போராட்டம் என்பதை அர்த்தப்படுத்தும். இது தான் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) முன்னெடுக்கும் முன்னோக்கு. இந்த முன்னோக்குடன் உடன்படுகின்ற ஆசிரியர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எங்களை இன்றே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.