ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK’s Porton Down military lab head: Russia not identified as source of Skripal poisoning

பிரிட்டனின் போர்ட்டன் டவுன் இராணுவ ஆய்வக தலைவர்: ஸ்கிரிபால் நஞ்சூட்டலுக்கு மூலகாரணமாக ரஷ்யா அடையாளம் காணப்படவில்லை

By Julie Hyland
4 April 2018

பிரிட்டனின் போர்ட்டன் டவுன் இராணுவ ஆய்வக விஞ்ஞானிகள், முன்னாள் இரட்டை உளவாளி சேர்ஜி ஸ்கிர்பால் மற்றும் அவர் மகள் யூலியா மீதான படுகொலை முயற்சி என்று கூறப்படுவதில் பயன்படுத்தப்பட்ட நரம்புகளைப் பாதிக்கும் விஷ மருந்து உற்பத்தி செய்யப்பட்ட இடமாக ரஷ்யாவை அடையாளம் காணவில்லை.

போர்ட்டன் டவுன் பாதுகாப்புத்துறை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தின் (DSTL) தலைமை நிர்வாகி காரி ஏய்ற்கென்ஹெட் ஸ்கை செய்திகளுக்கு கூறுகையில், மார்ச் 4 அன்று சாலிஸ்பரி தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பொருளின் "துல்லியமான உற்பத்தி இடத்தை அடையாளம் காணவில்லை" என்றார்.

இந்தவொரு குற்றகரமான புரளிக்கு பிரிட்டிஷ் ஸ்தாபகமே குற்றவாளி என்பதை அவரது ஒப்புதல் உறுதிப்படுத்துகிறது, இது அமெரிக்க தலைமையிலான 2003 ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்த இட்டுக்கட்டப்பட்ட போலி "உளவுத்தகவல்" கோப்புகளையும் விஞ்சி நிற்கிறது.

இராணுவ மீள்ஆயுதமயப்படுத்தலை மட்டுமல்ல, மாறாக வெளிநாட்டு "தலையீட்டை" எதிர்க்கிறோம் என்ற பெயரில் உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை ஒடுக்க நகர்வதற்காக ரஷ்யாவுடன் பதட்டங்களை விரைவுபடுத்துவதற்கான அரசியல் ஸ்தாபகத்தின் முயற்சிகளை முற்றிலும் குறுக்காக வெட்டும், ஏய்ற்கென்ஹெட் இன் அறிக்கை மீது, குறிப்பிடத்தக்க விதத்தில், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஊடகங்கள் பெரும்பாலும் வாய்மூடி உள்ளன. கார்டியன் அதன் இணைய பதிப்பில் இதுகுறித்து செய்தி வெளியிட்டது என்றாலும், அந்த செய்தி அதே நாளின் மதியம் அதன் முதல் பக்கத்திலிருந்து மறைக்கப்பட்டது.

அந்த விஷ மருந்து எங்கே, யாரால் உற்பத்தி செய்யப்பட்டதென தீர்மானிப்பது "எங்கள் [DSTL] வேலையில்லை" என்று ஏய்ற்கென்ஹெட் தெரிவித்தார். அந்த விஷ மருந்து நோவிசோக் மருந்தா —அதாவது ரஷ்யாவால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் வலியுறுத்தும் இராணுவ தரத்திலான நரம்பு விஷமா— என்பதையும் அவர் உறுதிப்படுத்தவில்லை.

“தற்போதைய நிலையில் … அது ஒரு நோவிசோக் இரசாயனம் அல்லது அந்த வகையைச் சார்ந்தது என எங்களால் ஸ்தாபிக்க முடிந்துள்ளது" என்றார். ரஷ்யாவில் தான் அது உற்பத்தி செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடியுமா என்று வினவிய போது, அவர் கூறினார், மொத்தத்தில் DTSL செய்திருப்பது என்னவென்றால் “விஞ்ஞான தகவல்களை அரசுக்கு" வழங்கியுள்ளது, அரசு "பின்னர் இன்னும் பல ஆதாரங்களைப் பயன்படுத்தி அவர்கள் எட்டியுள்ள முடிவுகளை ஒருமித்து எட்டியுள்ளது,” என்றார்.

ஏய்ற்கென்ஹெட் இன் கருத்துக்கள், மாஸ்கோவிற்கு எதிராக நேட்டோவின் ஆத்திரமூட்டல்களை அதிகரிப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் ஸ்கிரிபால் மீதான வெளிப்படையான விஷ தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டதை அம்பலப்படுத்துகின்றன.

மார்ச் 12 அன்று பிரதம மந்திரி தெரேசா மே நாடாளுமன்றத்தில் கூறுகையில், ஸ்கிரிபால் மற்றும் அவர் மகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட அந்த விஷ மருந்து ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட "ஒரு வகை" (நோவிசோக்) இரசாயனம் என்றார். “போர்ட்டன் டவுனின் உலக-முன்னணி வல்லுனர்களால் இந்த விஷ இரசாயனம் சரியாக கண்டறியப்பட்டிருப்பதன் அடிப்படையில் … ரஷ்யா தான்" பிரிட்டிஷ் மண்ணில் படுகொலை முயற்சிக்கு "பெரிதும் அனேகமாக பொறுப்பாகிறதென இந்த அரசு தீர்மானிக்கிறது,” என்றார்.

அந்த பிரதம மந்திரி அவர் குற்றச்சாட்டுக்கு பக்கபலமாக ஒரு ஆதார துணுக்கை கூட முன்வைக்கவில்லை, அவரது "பெரிதும் அனேகமாக" என்ற கபடத்தனமான வார்த்தை ஜோடிப்பு ஒரு நெளிவுசுளிவான தொனியை ஏற்படுத்த வடிவமைக்கப்பட்டிருந்தது.

வெளியுறவுத்துறை செயலர் போரிஸ் ஜோன்சன் அந்த எச்சரிக்கை கூட காட்டவில்லை, “பெரும்பாலும்" கிரெம்ளின் தான் அந்த தாக்குதலை நடத்தி "இருக்கும்" என்றவர் குறிப்பிட்டார். அதில் அது சம்பந்தப்படவில்லை என்ற ரஷ்யாவின் தொடர்ச்சியான வலியுறுத்தலை நிராகரித்து, மாஸ்கோவின் "பொய் மூட்டைகள்" என்று அதை குற்றஞ்சாட்டியதுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை ஹிட்லருடன் ஒப்பிட்டார்.

போர்ட்டன் டவுன் "அந்த விஷ மருந்தை ரஷ்யர்களுடையதாக சரியாக அடையாளம் கண்டிருப்பதாக" அவரிடம் கூறியதாக ஜோன்சன் பின்னர் வாதிட்டார். “இந்த விஷ மருந்து, நோவிசோக், ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது" என்று அவருக்கு எவ்வாறு தெரிந்தது என்று ஜேர்மன் ஒளிபரப்பு நிறுவனம் Deutsche Welle வினவிய போது, ஜோன்சன் பதிலளித்தார், “அந்த ஆதாரங்களை நான் பார்த்த போது தெரிந்தது. அதாவது நான் குறிப்பிட்டுவது போர்ட்டன் டவுன் நபர்களை, அதாவது, அந்த ஆய்வகத்தை [அவர்களிடம் அதன் மாதிரிகள் உள்ளன], அவர்கள் முற்றிலும் ஆணித்தரமாக கூறியிருந்தனர். 'உறுதியாக கூறுகிறீர்களா' என்று நான் அந்த நபரிடமே கூட கேட்டேன், 'எந்த சந்தேகமும் இல்லை' என்றவர் கூறினார்.”

இந்த அடிப்படையில், பிரிட்டன் 26 நாடுகளில் இருந்து —மிகவும் குறிப்பிடத்தக்கது அமெரிக்கா— 130 ரஷ்ய தூதர்களை வெளியேற்றும் முயற்சியில் வெற்றி கண்டது, அத்துடன் ரஷ்யாவின் "ஸ்திரமின்மைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு" எதிராக நேட்டோ முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும் கோரியது.

போர்ட்டன் டவுன் அறிக்கைக்கு விடையிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், சாலிஸ்பரி சம்பவம் மீது ஒரு விசாரணை மேற்கொள்ள கோரியதுடன், “ரஷ்ய-விரோத பிரச்சாரம் தொடங்கப்பட்ட வேகம்" குறித்து அவர் கவலைகளையும் வெளியிட்டார்.

இந்நகர்வுகளின் ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற தன்மை பாதுகாப்பு மந்திரி கவின் வில்லியம்சனால் அடிக்கோடிட்டு காட்டப்பட்டது. மாஸ்கோவுக்கு எதிரான நேட்டோ ஆயத்தப்படுத்தலின் பாகமாக, எஸ்தோனியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டிஷ் துருப்புகளிடையே பேசுகையில், “ஜனாதிபதி புட்டின் மற்றும் அவர் நடவடிக்கைகளால் உலகின் பொறுமை குறைந்து கொண்டே செல்கிறது,” என்று அச்சுறுத்தினார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் தான் "பொய் மூட்டைகளுக்கு" குற்றவாளி என்பது இப்போது தெளிவாகிறது. WSWS எச்சரித்ததைப் போல, “துரதிருஷ்டவசமாக பாதிக்கப்பட்ட இரட்டை உளவாளி திரு. ஸ்கிர்பால் மற்றும் அவர் மகளும், மேலதிக தீர்க்கமான புவிசார்மூலோபாய நோக்கங்களுக்காக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறை முகமைகள் திட்டமிட ஒரு சதிக்கு விலைகொடுக்கப்பட்ட பகடைகாய்களாகி போனார்கள் என்பதே சாலிஸ்பர் நஞ்சூட்டல் விவகாரத்தின் மிகவும் நம்புவதற்குரிய விளக்கமாக உள்ளது.

இரசாயன ஆயுதங்கள் மீதான ஒப்பந்தம் (CWC) மற்றும் இரசாயன ஆயுதங்கள் தடுப்புக்கான ஐ.நா. அமைப்பு (OPCW) ஆகியவற்றின் கீழ் குற்றஞ்சாட்டப்படும் அந்த விஷ மருந்தின் மாதிரிகளை மாஸ்கோவுக்கு வழங்கி இருக்க வேண்டும் என்றபோதும், ஒரு பூங்கா இருக்கையில் ஸ்கிர்பாலும் அவர் மகளும் நனவிழந்து கண்டறியப்பட்டதற்கு பிந்தைய வாரங்களில், பிரிட்டனின் அதிகாரிகள் அதை மாஸ்கோவுக்கு வழங்க மறுத்தனர்.

பிரிட்டிஷ் அரசாங்கமும் வளைந்து கொடுக்கும் ஊடகங்களும் தொடர்ந்து —ஸ்கிரிபால் மற்றும் அவர் மகளும் "ஓபியோய்ட் ஃபென்தாய்ல்" (opioid fentanyl) கொண்டு நஞ்சூட்டப்பட்டனர் என்பதில் இருந்து நரம்புகளைத் தாக்கும் இராணுவ தரத்திலான விஷ மருந்து சம்பந்தப்பட்டிருந்தது என்பது வரையில்— அவர்கள் கதையை இட்டுக்கட்டினர். அவர்கள் பாதிக்கப்பட்டதற்கு ஆதாரப் பொருளாக, யூலியா பிரிட்டனுக்குள் கொண்டு வந்த ஒரு பரிசு பொருளில் இருந்து, அவர்களது காரின் காற்றோட்ட வசதி வரையில், ஸ்கிர்பாலின் வீட்டு கதவு பிடி வரையில், மாற்றி மாற்றி அவர்களுக்கு சமாளிப்புகளையும் செய்ய வேண்டியிருந்தது.

ஸ்கிரிபால் மற்றும் அவர் மகளும் மற்றும் சார்ஜென்ட் நிக் பெய்லியும் —இவரும் பாதிக்கப்பட்டதாக செய்திகள் குறிப்பிட்டன—அனேகமாக பிழைக்க மாட்டார்கள் என்ற வாதங்களுக்குப் பின்னர், பெய்லி மார்ச் 22 அன்று மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், வியாழனன்று, யூலியாவும் கண்முன்னாலேயே அதிசயத்தக்க வகையில் மீண்டு வந்தார். அவரது இருப்பிடத் தகவல்கள், அத்துடன் மிகவும் கவலைக்குரிய நிலைமையில் இருப்பதாக செய்திகளில் கூறப்படும் அவர் தந்தையினதும் கூட, இன்னும் தெரிய வரவில்லை, பிரிட்டிஷ் அரசாங்கமோ தொடர்ந்து ரஷ்யா அவர்களை அணுகுவதை தடுத்து வருகிறது.

ஏய்ற்கென்ஹெட் இன் அறிக்கை அரசாங்கத்தையும் ஊடங்களையும் பின்னுக்கு இழுத்து பிடித்திருப்பதாக தெரிகிறது. அவர் ஸ்கை செய்திகளுக்கு பேச இருப்பதாக வெளியானதும், அவர் அரசாங்க தரப்பை ஆதாரபூர்வமாக செய்ய முயல்வார் என்று எதிர்நோக்கப்பட்டது.

அதில் சம்பந்தப்பட்ட விஷம் "ஒருவேளை அரசு நடவடிக்கையாளரின் தகைமைகளுக்குள் மட்டுமே இருக்கக்கூடிய ஏதோவொன்று" என்று DSTL தலைவர் தெரிவித்தார், ஆனால் இதுவே கூட ஜோன்சன் ஆணித்தரமாக வலியுறுத்திய இது தான் விடயம் என்பதிலிருந்து மிகவும் பிறழ்ந்து உள்ளது.

அனைத்திற்கும் மேலாக, பயன்படுத்தப்பட்ட விஷ மருந்து "அதீத விஷத்தன்மை கொண்ட பொருள்", அதற்கு எந்த மாற்று மருந்தும் அறியப்படவில்லை என்று ஏய்ற்கென்ஹெட் குறிப்பிடுவது தான் இன்னும் கேள்விகளை அதிகரிக்கிறது. பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நோவிசோக், வேறெந்த இராணுவ தரத்திலான விஷ மருந்தை விட "பத்து மடங்கு அதிக சக்தி வாய்ந்தது" என்று ஜோன்சன் குறிப்பிடுகின்ற நிலையில், எப்படி இப்போது பாதிக்கப்பட்ட மூன்றில் இருவர் பிழைத்திருக்கிறார்கள், மேலும் இன்னும் நிறைய பேர் ஏன் பாதிக்கப்படாமல் போனார்கள்?

மாஸ்கோவின் கோரிக்கையின் பேரில் சாலிஸ்பர் தாக்குதல் குறித்து விவாதிக்க ஹேக்கில் இன்று கூடும் OPCW கூட்டத்திற்கு முன்னதாக ஏய்ற்கென்ஹெட் இன் பேட்டி வெளியானது. OPCW விசாரணை முடிவு அடுத்த வாரம் தொடக்கத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

பிரிட்டனின் இரகசிய சேவைகள் தான் அத்தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டி, கடந்த சில நாட்களாக, மாஸ்கோ பிரிட்டிஷ் குற்றச்சாட்டுகளுக்கு அதன் கண்டனங்களை உயர்த்தி இருந்தது.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், பிரிட்டனும் அமெரிக்காவும் பனிப்போர் காலத்தையும் விட மிக ஆபத்தான ஒரு மோதலை மாஸ்கோவுடன் உண்டாக்கும் கண்ணோட்டத்தில், “பகிரங்கமாக பொய்களையும், அப்பட்டமாக பிழையான தகவல்களையும் சார்ந்துள்ளன” என்றார்.

“பிரிட்டன் வெளியேறுவதற்கான நிலைமைகள் மீது வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய பின்னர், பிரிட்டிஷ் அரசாங்கம் தன்னை ஒரு அசௌகரியமான சூழலில் கண்டதால், அதற்கு இது ஆதாயமாகவும் இருக்கும்,” என்று குறிப்பிட்ட அவர், இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக ஆழமடைந்து வரும் அரசியல் நெருக்கடியைச் சுட்டிக்காட்டினார்.

இதுபோன்றவொரு கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு விடையிறுக்குமாறு ஸ்கை செய்திகள் வினவியதற்கு, ஏய்ற்கென்ஹெட் இன் கருத்துக்கள் முற்றிலும் மதிப்பற்று இருந்தன. அவர் தெரிவித்தார், “அது மாதிரியான எதுவும் ஒருபோதும் நாங்கள் எங்களிடம் வந்துள்ளது என்பதற்கோ அல்லது எங்கள் இடத்தின் நான்கு சுவர்களை விட்டு வெளியேறுவதற்கோ வழியில்லை,” என்றார்.

“நாங்கள் செய்து வரும் வேலையின் பாகமாக மிகவும் விஷத்தன்மை கொண்ட பல பொருட்களை நாங்கள் கையாள்கிறோம்,” என்று தொடர்ந்து அவர் கூறினார். ஆனால் போர்ட்டன் டவுன் "மிகவும் உயர்ந்தபட்ச பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளைக்" கொண்டுள்ளது என்பதோடு, அது வழமையாக OPCW ஆல் கண்காணிக்கப்படுகிறது. “எங்கள் நான்கு சுவர்களை விட்டு வெளியேற நாங்கள் அனுமதித்துள்ளோம் என்பதற்கு ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தது [என்றால்], பின்னர் நாங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டோமே,” என்றார்.

போர்ட்டன் டவுன் சாலிஸ்பரியில் இருந்து வெறும் எட்டு மைல்கள் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த இரகசிய ஆலை பிரிட்டனின் இரசாயன ஆயுத ஆராய்ச்சிக்கான மையமாக விளங்குவதுடன், இது பின்னோக்கி முதல் உலக போர் காலத்திலிருந்து இருந்து வருகிறது. 1939 மற்றும் 1989 க்கு இடையே நூற்றுக் கணக்கான முன்னாள் இராணுவ சிப்பாய்கள் சோதனைச்சாலை எலிகளாக (guinea pigs) பயன்படுத்தப்பட்டனர் என்பது சம்பந்தமான நீதிமன்றத்தின் ஏற்பாட்டின்படி 3 மில்லியன் பவுண்டு வழங்க 2008 இல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக் கொண்டது. அதில் பங்கெடுத்தவர்களிடம் குளிருக்கான மாற்று ஆய்வுகளில் அவர்கள் பங்கெடுத்து இருப்பதாக கூறப்பட்டது, ஆனால் சரீன் மற்றும் பிற விஷ இரசாயனங்களைக் கொண்டு சிலருக்கு நஞ்சூட்டப்பட்டிருந்தது.

போர்ட்டன் டவுன் 2003 இல் ஈராக்கின் பாரிய பேரழிவு ஆயுதங்கள் தொடர்பான அரசு பிரச்சாரத்தில் உள்ளார்ந்து இணைந்திருந்தது. ஈராக்கிய போர் தொடங்கி ஒருசில வாரங்களில், போர்ட்டன் டவுனில் இருந்த இரசாயன ஆயுதங்களுக்கான வல்லுனர் டாக்டர் டேவிட் கெல்லி, டோனி பிளேயரின் தொழிற் கட்சி அரசாங்கம் தற்காப்புக்கான முன்கூட்டிய போரை நியாயப்படுத்த ஈராக்கிய இராணுவ தகைமை மீது "சிலாகித" செய்திகளை வழங்கியது என்ற குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரநபராக இருந்தார் என்பதற்காக வெளியேற்றப்பட்டார். ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் ஜூலை 17, 2003 இல் கெல்லி மரணமடைந்தார்.

ஸ்கிர்பால் நஞ்சூட்டலுக்கு வெறும் ஒருசில நாட்களுக்கு முன்னர் தான் சாலிஸ்பரி சமதளத்தில் நடந்த ஒரு மிகப்பெரிய இரசாயன போர்முறை பயிற்சியை பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் நிறைவு செய்திருந்தது என்பது கடந்த வாரம் வெளியானது. அந்த மூன்று வாரகால "நிஜமான பயிற்சி சூழலில்" 300 இராணுவ சிப்பாய்கள் ஈடுபட்டிருந்தனர் என்பதோடு, “இரசாயன, உயிரி, ரேடியோகதிர்வீச்சு மற்றும் அணுக்கதிர்வீச்சு" அச்சுறுத்தல்களுக்கு தாங்கள் தயாராக உள்ளோமா என்பதை சோதிக்க Dstl மற்றும் ராயல் கடற்படை அதிரடிப்படையினர் ஒரு பயிற்சியில் இருப்பதாக, பெப்ரவரி 20 அன்று வெளியான பாதுகாப்பு அமைச்சகத்தின் ஓர் அறிக்கை பெருமைபீற்றியது.