ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The noose tightens around Trump

ட்ரம்பைச் சுற்றி சுருக்குக்கயிறு இறுகுகிறது

Barry Grey
11 April 2018

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரத்யேக வழக்கறிஞர் மைக்கல் கோஹென் மீது திங்களன்று FBI சோதனை நடத்தியதை அடுத்து, ட்ரம்ப் ஜனாதிபதி பதவி தப்பிப் பிழைப்பது அதிகரித்தளவில் சிக்கலானதாக தெரிகிறது.

பதவியிலிருக்கும் ஒரு ஜனாதிபதிக்கு எதிராக சூழ்ச்சிகளைப் பயன்படுத்துவது என்பது பொதுவாக மாஃபியா குண்டர்கள் அல்லது பயங்கரவாதிகள் என்று கூறப்படுபவர்களுக்காக பொதுவாக ஒதுக்கப்பட்ட ஒன்றானாலும், இது மாதக்கணக்கில் ஆளும் வர்க்கத்திற்குள் மற்றும் அரசுக்குள் நடந்த மோதலில் முற்றிலும் ஒரு புதிய மட்டத்தை எட்டியுள்ளது. சிரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை குறித்து விவாதிக்க ட்ரம்ப் அவர் தளபதிகளைச் சந்தித்த போது இந்த சோதனை நடத்தப்பட்டது என்ற உண்மை, ஆளும் உயரடுக்கிற்குள் நிலவும் பதட்டங்களின் வெடிப்பார்ந்த மட்டத்தை எடுத்துக்காட்டுகிறது.

2016 தேர்தலில் ரஷ்ய தலையீடு தொடர்பான குற்றச்சாட்டையும், ட்ரம்ப் உடந்தையாய் இருந்திருக்கலாம் என்பதையும் விசாரித்து வந்த சிறப்பு வழக்கறிஞர் ரோபர்ட் முல்லெரின் விசாரணை வெள்ளை மாளிகைக்கு எதிரான உளவுத்துறை ஸ்தாபக பிரிவுகள் மற்றும் ஜனநாயக கட்சியினது பிரச்சாரத்தின் குவிமையத்தில் உள்ள நிலையில், இவர் குறிப்பிட்டதன் பேரில், FBI முகவர்கள் கோஹெனின் கணினி, தொலைபேசி மற்றும் தனிப்பட்ட நிதி ஆதாரங்களைக் கைப்பற்றினர். 2016 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆபாச பட நடிகையின் வாயடைக்க நிதி வழங்கியது சம்பந்தமான ஆவணங்களையும் மற்றும் ட்ரம்புடன் முறைதவறிய தொடர்பில் இருந்ததாக கூறிக்கொள்ளும் முன்னாள் உல்லாச நபர் ஒருவர் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றினர். ட்ரம்ப் மற்றும் அவர் வழக்கறிஞருக்கு இடையிலான பிரத்யேக தகவல்தொடர்பு தகவல்கள் உள்ளடங்கலாக நிறைய முக்கிய தரவுகளை FBI எடுத்துச் சென்றுள்ளது.

ட்ரம்பின் நம்பிக்கைக்கு உரியவரும் நீண்டகால வழக்கறிஞருமான கோஹென், ஜனாதிபதியின் "மறைமுக மத்தியஸ்தராக" இருந்து வருவதாக பெருமைபீற்றுகிறார். நியூ யோர்க் ரியல் எஸ்டேட் பில்லியனராகவும், சூதாட பந்தயக்காரராகவும் இருந்து ஜனாதிபதி ஆன ட்ரம்புக்கு குற்றகரமான நடவடிக்கையில் தொடர்பிருக்கும் என்பதும், இது நிச்சயமாக கோஹெனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரதிபலிக்கும் என்பதும் முல்லெருக்கும் சரி ஆளும் உயரடுக்கிற்குள் உள்ள ட்ரம்ப்-விரோத முகாமுக்கும் சரி, நன்றாகவே தெரியும்.

அவர்கள் ட்ரம்பின் குரல்வளையைப் பிடித்துள்ளனர், இது ட்ரம்புக்கு தெரியும்.

குற்றச்சாட்டுக்கள் விரிந்து செல்கையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரு கணக்கிட்ட தந்திரத்தை முல்லெர் கையாண்டார். FBI சோதனைகளுக்கு உத்தரவாணைகள் பிறப்பித்து மேற்பார்வை செய்திருந்த அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகத்திடம், வங்கித்துறை மற்றும் பணப்பரிமாற்ற மோசடி குற்றச்சாட்டுக்கள் மற்றும் தேர்தல் பிரச்சார விதிமீறல்கள் தொடர்பாக கோஹென் மீது ஒரு குற்ற விசாரணைக்கு பரிந்துரைத்தார். இது கோஹெனுக்கு எதிராக மட்டுமல்ல, மாறாக ட்ரம்புக்கு எதிராகவும் ஒரு குற்றப்பத்திரிகை தயாரிக்க முல்லெர் செயல்பட்டு வருகிறார் என்பதை தெளிவாக்குகிறது.

குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டிலான காங்கிரஸில் பதவிவிலக்கல் குற்றவிசாரணை (impeachment) நடத்துவது சிரமம் என்பதால், ஒரு குற்றப் பத்திரிக்கை (criminal indictment) அல்லது அதுபோன்ற ஒன்றின் அச்சுறுத்தலானது குற்றவிசாரணை அடிப்படையிலான ஒரு உத்திக்கும் அப்பால் செல்கிறது என்பதை திங்கட்கிழமையின் அசாதாரண சம்பவங்கள் எடுத்துக்காட்டின. பதவியிலிருக்கும் ஒரு ஜனாதிபதியை வழக்கில் இழுக்க முடியாது, முதலில் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டியிருக்கும் என்றாலும் கூட, பெரும் அபராதங்கள் மற்றும் சிறைவாசம் குறித்த அச்சுறுத்தல் ட்ரம்பை இராஜினாமா செய்ய வைக்கும் என்ற கணக்கீடு இருக்கலாம்.

சிரியா தொடர்பாக ட்ரம்ப் அவர் தேசிய பாதுகாப்பு குழுவைச் சந்திப்பதற்கு முன்னதாக, (இதில் அவர் முல்லெரைச் சாடியிருந்தார்) அவரின் அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செசன்ஸ் மற்றும் அவரின் துணை அட்டார்னி ஜெனரல் ரோட் ரோசென்ஸ்டீனைச் சந்திப்பதற்கு முன்னதாக, திங்களன்று ட்ரம்பின் நீளமான ஆவேச உரை அவரது சொந்த நெருக்கடியை மற்றும் அவர் காணும் அவரின் தர்மசங்கடமான நிலையைப் பிரதிபலித்தது.

முல்லெர் மற்றும்/அல்லது அவரின் உயர்மட்ட நீதித்துறை அதிகாரிகளை நீக்க வேண்டியிருக்கலாம் என்ற அவர் பேச்சு காங்கிரஸின் சில முன்னணி குடியரசு கட்சியினரிடம் இருந்து கூர்மையான கண்டனங்களைக் கொண்டு வந்தது. செனட் நீதித்துறை குழுவின் குடியரசு கட்சி தலைவர் சுக் கிரேஸ்லே செவ்வாயன்று கூறுகையில், அந்த வழியைத் தேர்ந்தெடுப்பது ட்ரம்புக்கு "அரசியல் தற்கொலையாக" இருக்குமென எச்சரித்தார்.

இத்தகைய அசாதாரண சம்பவங்கள் ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் அரசு எந்திரத்தின் உயர்-மட்டங்களுக்குள் நடந்து வரும் மூர்க்கமான மோதலின் பாகமாக உள்ளன. இந்த சண்டையில் அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவு கொள்கையின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்புபட்டுள்ளன. ஜனநாயகக் கட்சி மற்றும் பெரும்பாலான பெருநிறுவன ஊடகங்களால் தலைமை தாங்கப்படும் ட்ரம்பின் எதிர்ப்பாளர்கள், சிரியாவில் போர் நடத்துவதிலும் மற்றும் ரஷ்யாவை எதிர்கொள்வதிலும் ட்ரம்ப் போதியளவுக்கு ஆக்ரோஷமாக இல்லையென கருதும் உளவுத்துறை ஸ்தாபகத்தின் மேலோங்கிய பிரிவுகளுடன் அணி சேர்ந்துள்ளனர்.

அவர்கள் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க தாக்குதலைத் தீவிரப்படுத்த ட்ரம்புக்கு அழுத்தமளிப்பதற்காக முல்லெரின் விசாரணையை மற்றும் "ரஷ்ய தலையீடு" என்ற பொய் வனப்புரையை மற்றும் மாஸ்கோ "போலி செய்திகளைத்" தூண்டிவிடுகிறது என்பனவற்றை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஆளும் வர்க்கத்தில் தீர்க்கமான பிரிவுகள் அவர்களது வெளியுறவுக் கொள்கையை நிர்வகிப்பதிலும் அல்லது அதிகரித்தளவில் பதட்டமான உள்நாட்டு நிலைமைகளைக் கையாள்வதிலும் ட்ரம்பின் தகைமை மீது நம்பிக்கை இழந்துள்ளன என்பதையே திங்கட்கிழமை சோதனை சுட்டிக்காட்டுகிறது.

வாஷிங்டனில் அரசியல் கொந்தளிப்பு பல முகப்புகளில் சங்கமித்து வரும் நெருக்கடிகளால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா ஓர் ஆழ்ந்த புவிசார் அரசியல் நெருக்கடியை முகங்கொடுத்து வருகிறது, இது சிரியாவில் அதன் பினாமி போர் தோல்வியில் மிக கூர்மையாக வெளிப்பட்டது. சீனாவுக்கு எதிராக ட்ரம்பின் வர்த்தக போர் நடவடிக்கைகள் அறிய முடியாத விளைவுகளை அச்சுறுத்தி வருகையில், நிதியியல் சந்தைகள் கொந்தளிப்பில் உள்ள நிலையில், வர்த்தக பற்றாக்குறைகள் அதிகரித்து வருவதுடன், வரவு-செலவு திட்ட பற்றாக்குறை ஆண்டுக்கு 1 ட்ரில்லியனை நெருங்கி வருகையில், அதன் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது.

இதை அனைத்தையும் விட மிக அபாயகரமானது தொழிலாள வர்க்க எதிர்ப்பாகும், மேற்கு வேர்ஜினியாவில் இருந்து ஒக்லஹோமா, கென்டக்கி, அரிசோனா இன்னும் பல மாநிலங்களுக்கும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் மற்றும் பெருநிறுவன தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் பரவி வருகின்றன. இந்த வேலைநிறுத்தங்களில் பெரும்பாலானவை ட்ரம்புக்கு வாக்களித்த மாநிலங்களில் நடந்து வருகின்றன என்ற உண்மை, அவரது சமூக பிரச்சனைகள் தொடர்பான வீராவேச பேச்சைக் கொண்டு தொழிலாள வர்க்க நிலைநோக்கை மாற்றுவதற்கான ட்ரம்பின் தகைமை கடுமையாக தேய்ந்துவிட்டது என்பதற்கு ஓர் அறிகுறியாக உள்ளது.

அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடிக்கு ஒரு முற்போக்கான மற்றும் ஜனநாயக தீர்வுக்கு —அதாவது ஒரு புரட்சிகர தீர்வுக்கு—அடித்தளம் வழங்குவது ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் அரண்மனை சதிகள் அல்ல, வர்க்க போராட்டமாகும். அதன் சொந்த அமைப்புகளிடம் விடப்பட்டால், ஆளும் உயரடுக்கு தற்போதைய ஜனாதிபதி மூலமாகவோ அல்லது அவர் இல்லாமலோ, அரசியல் முறையை மேற்கொண்டு இன்னும் வலதுக்கு மாற்றுவதன் மூலமாகத்தான் ட்ரம்ப் உடனான அதன் பிரச்சினைகளைத் தீர்க்கும். ட்ரம்ப் குற்றவிசாரணை மூலமாக நீக்கப்பட்டாலோ அல்லது இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டாலோ, அவருக்கு பதிலாக அவரிடத்தில் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் பிரதியீடு செய்யப்படுவார், இவர் அதிகமாக பூசிமெழுகப்பட்ட ஒருவர் என்றாலும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பிற்போக்குத்தனமான எதிரியாவார் என்பதில் குறைந்தவரல்ல.

நடைமுறையளவில் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சி உட்பட, முல்லெரைப் பாதுகாக்க முண்டியடிக்கும் மற்றும் ட்ரம்பின் வழக்கறிஞர் மீது சோதனை நடத்திய இதே சக்திகள், கடந்த ஏப்ரலில் சிரியா மீது ட்ரம்ப் உத்தரவிட்ட ஒரு-முறை ஏவுகணை தாக்குதலை விட மிகப்பெரியளவிலான ஓர் இராணுவ தாக்குதலை நடத்தக் கோரி வருகின்றன என்பதுடன், ரஷ்யாவுடனான மோதலை இராணுவ மோதல் புள்ளிக்கு கூட தீவிரப்படுத்தவும் கோரி வருகின்றன.

நியூ யோர்க் டைம்ஸின் செவ்வாய்கிழமை பதிப்பு, சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டை ட்ரம்ப் பாரியளவில் தீவிரப்படுத்த வேண்டுமென கோரி ஒரு தலையங்கம் தாங்கி வந்தது. அதே மாலை, அது FBI சோதனையைப் பாதுகாத்தும், ட்ரம்ப் அவர் வழக்கறிஞர் மீதான சோதனையைக் கண்டித்ததன் மூலம் சிரிய விஷவாயு தாக்குதல் எனப்படுவதில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதாக அவரை கடுமையாக விமர்சித்தும் ஒரு தலையங்கம் வெளியிட்டது.

அது குறிப்பிட்டது: “திங்கட்கிழமை [தேசிய பாதுகாப்பு] கூட்டமானது உலக முக்கியத்துவம் பெற்ற ஒரு விடயத்தை, அதாவது அப்பாவி சிரிய மக்கள் மீது இரசாயன ஆயுத தாக்குதல் என்று வெளியான செய்திகள் குறித்து விவாதிப்பதற்காக வெளிப்பார்வைக்கு அழைக்கப்பட்டிருந்தது என்பது கடந்த 24 மணி நேரத்தில் திரு. ட்ரம்பினது தவறான ஆட்சியினது கொண்டாட்டத்தின் பின்னணியில் மறைந்துபோன பிழைகள் திரண்ட அரசாங்கத்தின் விவகாரங்களினால் மூடிமறைக்கப்பட்ட ஒன்றானது. திரு. ட்ரம்ப் பதிலாக அதனை தன்னைப்பற்றிய விடயமாக்கினார்.…"

பரந்த மக்களுக்கு எந்தவித உண்மையான முறையீடும் வழங்க இயலாத ஜனநாயக கட்சியின் முழுமையான இயலாமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்—அது பணக்காரர்களுக்கான ட்ரம்பின் வரி வெட்டுக்களுக்கு அழுத்தமளிக்க உதவியுள்ளது, முன்பில்லாதளவில் அவரது பென்டகன் வரவு-செலவு திட்டத்திற்கு வாக்களித்தது, மற்றும் நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலை முகங்கொடுக்கும் DACA உதவி பெறுவோரை எந்தவிதத்திலும் பாதுகாப்பதை கைவிட்டது. ட்ரம்ப் உடனான அதன் மோதலில் அது முற்றிலுமாக FBI மற்றும் CIA ஐ சார்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம், “அரண்மனை சதியா அல்லது வர்க்க போராட்டமா: வாஷிங்டனில் அரசியல் நெருக்கடியும், தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும்" என்று தலைப்பிட்ட ஒரு முன்னோக்கை உலக சோசலிச வலைத் தளம் பிரசுரித்தது. அதன் ஒரு சில பகுதி:

தொழிலாள வர்க்கமானது, அதன் ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்கும் அதன் வாழ்க்கைத் தரங்களை மேலதிகமாய் குறைப்பதற்கும் அர்ப்பணித்துக் கொண்ட ஒரு நச்சுத்தனமான எதிரியை, ட்ரம்ப்பிலும் அவரது நிர்வாகத்திலும் முகம்கொடுத்து நிற்கிறது. “முதலில் அமெரிக்கா” பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச திட்டநிரலை பின்பற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கமாக அது உள்ளது. தொழிலாள வர்க்கம் இந்த அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும், அதனை அகற்ற முனைய வேண்டும். ஆனால் இந்தப் பணி ஆளும் வர்க்கத்தில் இருக்கின்ற ட்ரம்ப்பின் கன்னை போட்டியாளர்களிடம் ஒப்படைக்கப்பட முடியாது. ட்ரம்புக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையிலான மோதலில் தொழிலாள வர்க்கம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மாறாக அது தனது சொந்தப் பதாகையின் கீழ் தனது சொந்த வேலைத்திட்டத்தைக் கொண்டு ட்ரம்ப்புக்கு எதிரான தன் போராட்டத்தை அபிவிருத்தி செய்தாக வேண்டும்...

அமெரிக்காவிற்குள் மற்றும் சர்வதேச அளவில் இரண்டிலும் பெருகுகின்ற புறநிலை நெருக்கடியின் நிலைமைகளுடன், பரந்த சமூக நனவு தீவிரப்படுவது சந்திப்பதானது வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பில் வெளிப்பாடு காணும். வர்க்கப் போராட்டமானது பல தசாப்தங்களாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தாலும், ஜனநாயகக் கட்சியாலும் மற்றும் அடையாள அரசியலின் பல்வேறு வடிவங்களை முன்னெடுக்கின்ற வசதியான பிரிவுகளாலும் ஒடுக்கப்பட்ட நிலையானது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது...

அமெரிக்காவில் பரந்த மக்கள் போராட்டங்கள் திட்டநிரலில் இருக்கின்றன. ஆர்ப்பாட்ட பேரணிகளும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், மற்றும் வேலைநிறுத்தங்களும் பொதுவான ஒரு தேசிய-அளவிலான தன்மையை பெறுவதற்கு முனையும். ட்ரம்புக்கும் அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற அத்தனைக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டமானது, முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் அதன் அரசுக்கும் எதிரான ஒரு அரசியல்மயமான வெகுஜன இயக்கத்தை, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டிலிருந்தும் சுயாதீனப்பட்டும் மற்றும் அவற்றுக்கு எதிராகவும், கட்டியெழுப்புவதற்கான அவசியத்தை முன்னினும் அவசரமான பணியாக முன்வைக்கும் என்பதே இந்த பகுப்பாய்வில் இருந்து பிறக்கக்கூடிய அரசியல் முடிவாகும்.

இந்த பகுப்பாய்வு, இப்போது தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பு அலையை முகங்கொடுத்து, ஆழமடைந்து வரும் இந்த அரசியல் நெருக்கடியால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு வருகிறது. நமது பகுப்பாய்வு ஊர்ஜிதப்பட்டிருப்பதானது, தொழிலாளர்களும் இளைஞர்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் புரட்சிகர சோசலிச முன்னோக்கிற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை அனைத்தையும் விட அதிக அவசரமானதாக ஆக்குகிறது.