ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump and Abe meet amid war and domestic crisis

போர் மற்றும் உள்நாட்டு நெருக்கடிக்கு மத்தியில் ட்ரம்ப்பும் அபேயும் சந்திக்கின்றனர்

Peter Symonds
18 April 2018

சிரியாவில் அமெரிக்க-தலைமையிலான வான் தாக்குதல்களுக்குப் பின்னரும் ஆசியா முழுமையிலும் உட்பட உலகெங்கிலும் புவியரசியல் பதட்டங்கள் கூர்மையடைந்து செல்வதற்கு மத்தியிலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபேயும் ஃபுளோரிடாவில் உள்ள மர்-அ-லகோ கிளப்பில் இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சந்தித்துப் பேசுகிறார்கள். இருவருமே தமக்கிடையிலான தனிப்பட்ட நெருக்கம் குறித்த பெருமையடித்து வந்திருக்கின்றனர் என்ற போதிலும், முக்கிய பிரச்சினைகளில் குறிப்பாக வர்த்தகம் மற்றும் வடகொரியா விடயங்களில் இந்த உறவிலான விரிசல்கள் எழுந்து வருகின்றன.

அபேயும் ட்ரம்ப்பும், தமது பெருகும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை தேசியவாதத்தையும் இராணுவவாதத்தையும் கிளறிவிடுவதன் மூலமாக சரிக்கட்ட முனைகின்ற பெரும் மக்கள்-விரோத, வலது-சாரி ஆட்சிகளுக்குத் தலைமை கொடுப்பவர்களாவர். இந்த நீண்டகால இராணுவக் கூட்டாளி நாடுகள் சீனாவை மட்டுப்படுத்துவதற்கும் அதனுடன் மோதுவதற்குமான தமது உறுதியில் ஒன்றுபட்டு நிற்கின்றன, ஆனாலும் அதைச் செய்வதற்கான வழிமுறையில் அதிகமான அளவில் எதிரெதிர் போக்கைக் கொண்டிருக்கின்றன.

சீனாவுக்கு எதிரான ட்ரம்ப்பின் அதிகரித்துச் செல்லும் வர்த்தப் போர் மிரட்டல்கள் ஜப்பானுக்கு பொருளாதார அபாயங்களை முன்நிறுத்துகின்றன, ஏனென்றால் தனது முதல்நிலை வர்த்தகக் கூட்டாளியாகவும் மலிவுழைப்புக் களமாகவும் அது சீனாவைப் பெருமளவில் சார்ந்திருக்கிறது. மேலும், ட்ரம்ப் வர்த்தகப் போர் நடவடிக்கைகளுக்கு வெறும் சீனாவை மட்டும் குறிவைக்கவில்லை, அமெரிக்காவுடனான வர்த்தக உபரி கொண்டிருக்கின்ற ஜப்பான் மற்றும் மற்ற நாடுகளையும் குறிவைக்கிறார்.

குறிப்பாக ”தேசியப் பாதுகாப்பு” காரணத்தைக் கூறி திணிக்கப்பட்டதால், ஜப்பான் மற்றும் பிற கூட்டாளிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய, அலுமினியம் மற்றும் உருக்குக்கான அமெரிக்காவின் சமீபத்திய தீர்வைகளில் இருந்து விலக்கு கோரி அபே ட்ரம்ப்புக்கு நெருக்குதலளிப்பார் என்பது நிச்சயம். ஆயினும் ஜப்பானை நோக்கி பகிரங்கமாக பயமுறுத்திக் கொண்டிருந்த ட்ரம்ப், அபேயிடம் “லேசான ஒரு புன்னகை” இருந்ததாக அறிவித்தார். “‘இத்தனை நீண்டகாலம் நம்மால் அமெரிக்காவை பயன்படுத்திக் கொள்ள முடிந்து வந்திருக்கிறதே, நம்பவே முடியவில்லையே’ என்பது தான் அந்த புன்னகை. அந்தக் காலம் முடிந்து விட்டது” என்றார் அவர்.

ஜப்பானிய பிரதமர் மிகப்பெருமளவில் அரசியல் மூலதனத்தை முதலீடு செய்திருக்கின்ற பசிபிக் கடந்த கூட்டு (TPP) ஐ மறுதலித்ததன் மூலம், ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் முதல் நாளில் இருந்தே அபேயின் பொருளாதாரத் திட்டநிரலை வெட்டித் தள்ளினார். TPP பொறியுமென வெள்ளை மாளிகை எதிர்பார்த்தது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அதற்குமாறாய் ஜப்பான், உலகின் மூன்றாவது மிகப்பெரும் பொருளாதாரமாக, அது மையமான பாத்திரத்தை ஆற்றக் கூடிய ஒரு தொகுப்பாக அந்த உடன்பாட்டை மறுவடிவம் செய்து விட்டது. இப்போது, அமெரிக்கா TPP இல் மீண்டும் நுழையக் கூடும் என்று அறிவித்ததன் மூலம், ட்ரம்ப் மறுபடியும் அபேயின் திட்டங்களைக் குலைத்திருக்கிறார்.

ட்ரம்ப் நிர்வாகம், வட கொரியாவுடன் அதன் மோதலை முறுக்கி வந்திருக்கின்ற நிலையில், வடகொரிய ஆட்சியை “முழுமையாக அழிப்பதற்கான” ஜனாதிபதியின் மூர்க்கத்தனமான மிரட்டல்களை ஆதரிப்பதிலும் பேச்சுவார்த்தைகள் கால விரயமே என்ற அவரது அறிவிப்பை எதிரொலிப்பதிலும் அபே தான் மிகவும் இசைவான கூட்டாளியாக இருந்துவந்திருக்கிறார். “வடகொரிய அச்சுறுத்தல்” என்பதாக சொல்லப்பட்டதை, ஜப்பானை மறுஇராணுவமயமாக்குவதற்கும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை முன்னெடுப்பதற்கு இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கு இருக்கக்கூடிய அனைத்து சட்டரீதியான மற்றும் அரசியல்சட்ட தளைகளையும் அகற்றுவதற்கும் அவர் கொண்டிருக்கின்ற இலட்சியங்களை முன்னெடுப்பதற்காய் அபே சுரண்டி வந்திருக்கிறார்.

இப்போது ட்ரம்ப், வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங்-உன் உடன் மார்ச்சில் ஒரு சந்திப்பு நடத்தவிருப்பதாக திடீரென்று அறிவித்து, அபேயை மறுபடியும் திகைக்கச் செய்திருக்கிறார். அபே அமெரிக்காவுக்கு வந்துசேர்ந்த சமயத்தில், வட கொரியாவுடனான நேரடிப் பேச்சுவார்த்தைகள் “மிக உயர்ந்த மட்டங்களில்” முன்னேறிக் கொண்டிருந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. அமெரிக்க வெளியுறவுச் செயலர் பதவிக்கு புதிதாக ட்ரம்ப் பரிந்துரைத்திருக்கும் மைக் பொம்பியோ, நீண்ட தூர ஏவுகணைகள் இல்லாமல் அணுஆயுத வல்லமை கொண்ட ஒரு வடகொரியாவை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளலாம் என்று ஊர்ஜிதப்படுத்தல் விசாரணைகளில் ஆலோசனையளித்த நிலையில், எந்த பேச்சுவார்த்தைகளின் நோக்கம் குறித்துமான கூர்மையான கருத்துவேறுபாடுகள் ஏற்கனவே எழுந்துவிட்டிருக்கின்றன. அப்படியான ஒரு உடன்பாடு ஏற்பட்டால், அது வடகொரியாவின் நடுத்தர தூர ஏவுகணைகளுக்கு ஜப்பான் இலக்காகத்தக்க நிலையில் விடும்.

அபே-ட்ரம்ப் சந்திப்பில் கூர்மையான கருத்துவேறுபாடுகளுக்கான சாத்தியம் என்பது, இருவருமே தங்களது அரசியல் வாழ்க்கைகளுக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையினால் மேலும் சிக்கலாகிறது. ட்ரம்ப் ரஷ்யாவை நோக்கி, குறிப்பாக சிரியாவில் இன்னும் பலவந்தமான ஒரு இராணுவத் தலையீட்டின் மூலமாக, கடுமையானதொரு நிலைப்பாட்டை எடுக்கத் தவறியதற்காக அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் மற்றும் இராணுவ-உளவு எந்திரத்தின் பிரிவுகளுடன் கடுமையான மோதல்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து அதிகரித்துச் செல்கின்ற எதிர்ப்பு அலை ஒன்றுக்கும் அவர் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது ஆசிரியர்களின் பரவும் வேலைநிறுத்தங்களால் விளங்கப்படுகிறது.

அபேவும் இதற்குச் சளைக்காமல் இரண்டு ஊழல்களில் சிக்கியிருக்கிறார், முதலாவதாய் ஒரு பாலர்பள்ளி அமைப்பதிலும், இரண்டாவதாய் ஒரு கால்நடை மருத்துவ மையம் அமைப்பதிலும் அதி-தேசியவாத தொடர்புகளுக்கு அரசாங்கம் சாதகமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. அபே இராஜினாமா செய்யக் கோரி சென்ற சனிக்கிழமையன்று சுமார் 30,000 இல் இருந்து 40,000 வரையான மக்கள் மத்திய டோக்கியோவில் கூடிப் போராடினர், மற்ற நகரங்களிலும் சிறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அபே தனது குருவாகக் கருதி வந்திருக்கின்ற முன்னாள் பிரதமரான ஜூனிசிரோ கோய்ஸுமி “நிலைமை அபாயகரமாய்” ஆகிக் கொண்டிருப்பதாக இந்த வாரத்தில் அறிவித்தார், அபே ஜூனின் பிற்பகுதியில் பதவி விலக நேரிடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அபே-ட்ரம்ப் சந்திப்பின் உடனடி விளைவு என்னவாயிருந்தாலும், அமெரிக்க-ஜப்பான் உறவுகளிலான விரிசல்கள் தொடர்ந்தும் வளர்ச்சி கண்டு முட்டல்கள் மற்றும் மோதல்களுக்கு இட்டுச் செல்லவிருக்கிறது. இந்த இரண்டு தலைவர்களின் மூர்க்கமான தேசியவாதம் என்பது வெறுமனே இந்த தனிநபர்களினால் விளைந்ததல்ல, மாறாக உலகப் போருக்கான முனைப்புக்கு எரியூட்டிக் கொண்டிருக்கின்ற உலக முதலாளித்துவத்தின் ஆழமடையும் நெருக்கடியின் வெளிப்பாடாகும்.

தனது வரலாற்றுவழி வீழ்ச்சிக்கு முகம்கொடுத்து நிற்கின்ற அமெரிக்க ஏகாதிபத்தியம், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் கால் நூற்றாண்டு கால போர்களின் மூலமாக தனது உலக மேலாதிக்கத்தைப் பத்திரப்படுத்த முனைந்து தோற்றுவிட்டிருக்கின்ற நிலையில், தனது வழியில் குறுக்காக நிற்கும் எந்த போட்டி சக்தியுடனும் மோதலுக்கு தயாரித்துக் கொண்டிருக்கிறது. 2018 ஜனவரியில் ட்ரம்ப் நிர்வாகத்தின் தேசியப் பாதுகாப்பு மூலோபாயமானது மூலோபாய மாற்றத்தை அறிவித்தது, “பயங்கரவாதத்தின் மீதான போர்” அல்ல “அரசுகள் இடையிலான மூலோபாயப் போட்டி”யே பிரதான அக்கறை என அது அறிவித்தது. பிரதான ”மூலோபாயப் போட்டியாளர்களாக” சீனா மற்றும் ரஷ்யா குறிப்பாகப் பெயர் கூறப்பட்டிருந்தாலும் கூட, ஜப்பான் போன்ற அதன் நீண்டகாலக் கூட்டாளிகளும் இதில் குறிவைக்கப்படலாம்.

ஜப்பானும் இதேபோன்றதொரு வரலாற்றுவழிக் குழப்பத்திற்கு முகம்கொடுக்கிறது. பல தசாப்தங்களுக்கு தொழில்நுட்ப ஜாம்பவானாகவும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் இருந்து வந்ததன் பின்னர், ஜப்பான் 2010 இல் சீனாவால் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. அதன் இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ நிலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்ததால், ஜப்பானின் மேலதிக வீழ்ச்சியைத் தடுக்க சிறந்த வழி என்ன என்பது குறித்து ஆளும் வட்டாரங்களில் தீவிரமான விவாதத்திற்கு இது தூண்டியது. அபேயின் மூர்க்கமான மறுஇராணுவமயமாக்கம் என்பது இரண்டாம் உலகப் போரில் நாட்டின் தோல்வியையோ அல்லது போர்க் குற்றங்களுக்கான அதன் பொறுப்பையோ ஒருபோதும் ஒப்புக்கொண்டிராத, அத்துடன் ஆசியாவில் அமெரிக்காவுக்கு ஒத்தூதுவதில் அதிருப்தி கொண்டிருக்கின்ற ஆளும் வர்க்கத்தின் அதி-தேசியவாத பிரிவின் பதிலிறுப்பாகும்.

சீனாவை மட்டுப்படுத்துவதும் இறுதியாக தமது ஏகாதிபத்திய நலன்களுக்குக் கீழ்ப்படியச் செய்வதுமே அமெரிக்கா ஜப்பான் இரண்டின் பிரதான கவனப் புள்ளியாகவும் இருக்கும், இது அபே-டரம்ப் சந்திப்பின் விளைமுடிவில் சந்தேகமில்லாமல் பிரதிபலிக்கும். ஆயினும், இன்றைய கூட்டாளிகள் கடும் எதிரிகளாக மாறக் கூடிய நாள் வெகுதூரத்தில் இல்லை. ஆசியாவில் மேலாதிக்கம் செய்யப் போகும் சக்தி எது என்ற விடயத்திற்காக இந்த இரண்டு நாடுகளும் 1941 முதல் 1945 வரை பசிபிக்கில் மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்ட ஒரு கொடூரமான போரில் ஈடுபட்டன என்பது டோக்கியோவிலோ அல்லது வாஷிங்டனிலோ மறந்து விட்டிருக்கவில்லை.