ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Julian Assange “in jeopardy” of being forced into UK and US detention

ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவால் கைதாகத் தள்ளப்படும் “இக்கட்டான நிலையில்” ஜூலியான் அசாஞ்ச்

By Mike Head
25 May 2018

விக்கிலீக்ஸின் ஸ்தாபகரான ஜூலியான் அசாஞ்ச் இலண்டனில் இருக்கும் ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் உடனடி அபாயத்தில் இருப்பதாக சிஎன்என் செய்தி ஒன்று இன்று தெரிவித்தது. பிரிட்டிஷ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவாராயின், அங்கு அவர் வேவுபார்த்த குற்றச்சாட்டுகளின் படி ஆயுள்கால சிறைக்கோ அல்லது மரணதண்டனைக்கோ முகம்கொடுக்க வேண்டியிருக்கும்.

அசாஞ்ச்சின் “அசாதாரண மோசமான” நிலை குறித்து “அறிந்த பல ஆதாரங்கள்”, அவர் தூதரகத்தில் இருந்து “இப்போதிருந்து எந்த நாளிலும்” பலவந்தமாக வெளித்தள்ளப்படுவதன் மூலமோ அல்லது அவரை மிகவும் தனிமைப்படுத்தப்பட்டவராக உணரச் செய்து அவராகவே வெளியேறும்படி செய்வதன் மூலமோ அகற்றப்படலாம் என்று எச்சரித்ததாக சிஎன்என் கூறியது.

2012 இல் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரிய நாளில் இருந்து, அசாஞ்ச் எந்த குற்றச்சாட்டுமின்றி ஒரு சிறு அறையில் 2,726 நாட்களாக கிட்டத்தட்ட தடுத்து வைக்கப்பட்டிருந்து வருகிறார். மார்ச் 28 அன்று ஈக்வடோர் அரசாங்கம் அவருக்கு எந்த அணுகலையும் துண்டித்து விட்டதையடுத்து, 59 நாட்களாக, அவர் பார்வையாளர்களுக்கும் வெளியுலகத் தொடர்புகளுக்கும் அணுகல் மறுக்கப்பட்டு வந்திருக்கிறார்.

அசாஞ்ச் இப்போது அவரது வழக்கறிஞர்களை மட்டுமே காண்பதற்கு அனுமதிக்கப்படுகிறார், தூதரகத்தில் இருக்கும்போது அவர்களது அலைபேசிகளும் முடக்கப்பட்டு விடுவதாக அந்த வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

தூதரகத்தில் இருந்து அசாஞ்ச் வெளியேறினால் “அவருக்கு என்னவெல்லாம் தெரியும் என்பதை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் இருக்கும் அமெரிக்காவின் விசாரணை அதிகாரிகளுக்கு அது ஒரு புதிய கட்டத்தைத் திறந்து விடலாம்” என்று சிஎன்என் திகிலூட்டும் விதமாக தெரிவித்தது. பிராட்லி [இப்போது செல்ஸியா] மேனிங் போலவே, இவரையும் மனமுடையச் செய்கின்ற முயற்சியில், பலவந்த விசாரணைக்கு அல்லது நீண்டகால தனிமைச் சிறையிலடைப்புக்கு அசாஞ்ச் உள்ளாக்கப்படலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

“ஜூலியான் அசாஞ்ச் தூதரகத்தில் இருந்து வெளியில் வருவாராயின், அமெரிக்க வேவுபார்ப்புச் சட்டத்தின் கீழ் ‘முன்கண்டிராத மற்றும் அரசியல்சட்டம்சாராத’ வழக்குவிசாரணை என்று ACLU [அமெரிக்க குடிமை சுதந்திரங்கள் சங்கம்] இன் செயல் இயக்குநரால் விவரிக்கப்பட்ட ஒன்றுக்கு முகம் கொடுக்கும்படி அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படக் கூடும் என்பதே முதல் நாள் தொடங்கி இன்று வரையான கவலையாக இருக்கிறது” என்று அசாஞ்சின் வழக்கறிஞர்களில் ஒருவரான மெலின்டா டெய்லர் சிஎன்என் யிடம் தெரிவித்தார்.

போர்க்கால எதிரிக்கு தகவல்களை வழங்குவது தொடர்பான சட்டத்தின் 794வது பிரிவு மரண தண்டனையைக் கொண்டதாகும். சென்ற ஆண்டில் சிஐஏ இன் இயக்குநராக இருந்தவரும் இப்போது அமெரிக்க வெளியுறவுச் செயலராக இருப்பவருமான மைக் பொம்பியோ, விக்கிலீக்ஸை “குரோதமான அரசு-அல்லாத உளவு சேவை” என்று அடையாளப்படுத்தினார். பொம்பியோ அறிவித்தார்: “தவறான முறையில் கையகப்படுத்திய இரகசியங்களைக் கொண்டு நம்மை நசுக்குவதற்கு அவர்களுக்கு இடமளிப்பது என்பது நமது மகத்தான அரசியல் சட்டத்தினை திரிப்பதாகும். அது இப்போது முடிவுக்கு வருகிறது.”

டெய்லர் சிஎன்என் இடம் கூறினார்: ”விசாரணைக்கு அனுப்புவதற்கான கோரிக்கை அமெரிக்காவிடம் இருந்து வந்திருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ ஐக்கிய இராஜ்ஜியம் கடந்த எட்டு ஆண்டுகளாக மறுத்துவந்திருக்கிறது. அதேநேரத்தில், அப்படியானதொரு கோரிக்கை பெறப்படுமாயின் அப்போது ஜூலியான் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட மாட்டார் என்பதற்கான உத்தரவாதங்களை அளிப்பதற்கும் அவர்கள் மறுத்து வந்துள்ளனர், அத்துடன் ஜூலியானுக்கு உடனடியாக சுதந்திரமளிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா உத்தரவிட்டிருக்கின்ற போதிலும், தூதரகத்தின் மீது எப்போதும் விலகாத ஒரு கண்காணிப்பையும் பராமரித்து வருகின்றனர்.

“குறிப்பாக ஜூலியானின் கைதும் நாட்டுக்குக் கொண்டுவருதலும் முன்னுரிமை விடயங்கள் என்ற அமெரிக்க அதிகாரிகளது சமீபத்திய வசனங்களது வெளிச்சத்தில் பார்க்கும்போது, அவர்களது மவுனம் தொகைதொகையாய் பேசுகின்றன.”

2017 ஏப்ரலில், அமெரிக்க அட்டர்னி ஜெனரலான ஜெஃப் செசன்ஸ் அசாஞ்சின் கைது ஒரு “முன்னுரிமையான விடயம்” என்று கூறினார். ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்: “ஏற்கனவே எங்களது முயற்சிகளை நாங்கள் தீவிரப்படுத்த தொடங்கி விட்டோம், ஒரு வழக்கு நடத்தப்படும்போது, சிலரை சிறையிலடைக்க நாங்கள் முயலுவோம்.”

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாய், அமெரிக்க அதிகாரிகள், ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தூண்டுதலளிக்கப்பட்ட, விக்கிலீக்ஸ் மீதான ஒரு இரகசிய நீதிபதிகள் குழு விசாரணையைப் பராமரித்து வருகின்றனர்.

சிஐஏ இன் ஹேக்கிங் கருவிகள் குறித்து வெளிக்கொண்டுவரும் கட்டுக்கட்டான நிரல் குறிகள் மற்றும் கோப்புகள் உள்ளிட, அமெரிக்காவின் இராணுவ மற்றும் உளவு முகமைகளின் குற்றவியல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகின்ற ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகின்ற காரணத்தால் அசாஞ்சை வாய்மூடச் செய்யும் முயற்சிகளை அமெரிக்க அதிகாரிகள் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

2016 ஜனாதிபதி தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டனின் பிரச்சாரத்தில் இருந்து ஹேக் செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்ற மின்னஞ்சல்களை விநியோகிப்பதற்கான ஒரு இடைத்தரகராக ரஷ்யா இவரைப் பயன்படுத்தியதாக அமெரிக்க உளவு முகமைகளின் ஆதாரமற்ற கூற்றுகள் தொடர்பான குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கும் விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் இப்போது முகம் கொடுத்து வருகிறார்.

2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை திருடுவதற்கான ஒரு குற்றவியல் முயற்சியாகச் சொல்லப்படுகின்ற ஒன்றில் ரஷ்யா மற்றும் ட்ரம்ப் பிரச்சார அணியுடன் சேர்ந்த சக-சதிகாரர்களாக விக்கிலீக்ஸ் மற்றும் அசாஞ்சின் பெயர்களைச் சேர்த்து ஒரு சட்டரீதியான வழக்கை சென்ற மாதத்தில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தேசியக் கமிட்டி (DNC) தொடுத்தது.

2016 ஜனாதிபதித் தேர்தலுக்கான முதனிலைத் தேர்தல்களில் பேர்னி சாண்டர்ஸின் பிரச்சாரத்தை பலவீனப்படுத்துவதற்கு DNC செய்த சூழ்ச்சிகள், மற்றும் வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் மற்றும் நிறுவனங்களுடன் கிளிண்டன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் ஆகியவற்றை விக்கிலீக்ஸ் தோலுரித்துக் காட்டியதுதான் DNC ஐயும் அமெரிக்க அரசியல் மற்றும் உளவு ஸ்தாபகத்தில் இருக்கும் மற்றவர்களையும் உண்மையில் எச்சரிக்கை செய்து விட்டிருந்தது.

சென்ற மே மாதத்தில் பதவிக்கு வந்த ஈக்வடோரின் ஜனாதிபதி லெனின் மொரீனோ, அசாஞ்சை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா அளிக்கும் பெருகிய நெருக்குதலின் கீழ் இருக்கிறார். ஜனவரியில் மொரீனோ, அசாஞ்சை ஒரு செலவுபிடிக்கும் “ஆஸ்தியாகப்பெற்ற பிரச்சினை” என்றும் “ஹேக்கர்” என்றும் முத்திரை குத்தியதோடு, வாஷிங்டனுடனான நல்லுறவுகளுக்கு அசாஞ்ச் ஒரு முட்டுக்கட்டையாக இருப்பதாக தான் காண்பதையும் தெளிவாக்கினார்.

“பாதுகாப்பு ஒத்துழைப்பை” வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக ஜெனரல் ஜோசப் டிசால்வோவின் தலைமையில் அமெரிக்க தென் கட்டளையகத்தில் இருந்தான ஒரு குழுவை வரவேற்ற ஒரேயொரு நாளுக்கு அடுத்து, மொரீனோவின் அரசாங்கம் அசாஞ்சின் தகவல் தொடர்புகளை துண்டித்து விட்டது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக, இட்டுக்கட்டப்பட்ட பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக என்று சொல்லப்பட்டதன் பேரில் ஸ்வீடனிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து அசாஞ்ச் செய்த சட்ட மனுக்கள் பலனளிக்காததை அடுத்து, ஈக்வடோர் அரசாங்கம் அசாஞ்சுக்கு தஞ்சம் வழங்கியது. இறுதியில் ஸ்வீடன் அதிகாரிகள் சென்ற மே மாதத்தில் அவருக்கு எதிரான புனையப்பட்ட விசாரணை நடவடிக்கையைக் கைவிட்டு, அவருக்கு எதிரான ஐரோப்பிய கைது ஆணையையும் முடித்துக் கொண்டனர்.

இருந்தபோதும், அமெரிக்காவின் ஒரு நெருங்கிய கூட்டாளியான, பிரதமர் தெரசா மேயின் பிரிட்டிஷ் அரசாங்கம், அவர் தஞ்சம் கோரிய சமயத்தில் பிணையை சாதாரணமாய் தவிர்த்ததற்காக, அவருக்கு எதிரான ஐக்கிய இராச்சியத்தின் ஒரு கைது ஆணையை இரத்து செய்ய மறுத்தது.

அசாஞ்சை நாட்டிற்குக் கொண்டுவரும் முயற்சியை மறுப்பதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மறுத்திருக்கிறது. ஒரு அதிகாரி சிஎன்என் இடம் தெரிவித்தார்: “ஒரு கொள்கை விவகாரமாக, நாட்டிற்கு அனுப்பக் கோருவது குறித்த அமெரிக்க அரசாங்கத்தின் எண்ணங்களை வெளியுறவுத்துறை ஊர்ஜிதம் செய்வதோ அல்லது மறுப்பதோ கிடையாது.”

ஆரம்பத்தில் விக்கிலீக்ஸின் சில உலுக்கும் அம்பலப்படுத்தல்களை 2010 இல் வெளியிட்டிருந்த பிரிட்டிஷ் செய்தித்தாளான தி கார்டியன், சென்ற வாரத்தில், அசாஞ்சேக்கு தஞ்சமளிப்பதில் ஈக்வடோர் நழுவியோடுவதை நியாயப்படுத்துவதற்கான ஒரு அவலட்சணமான பிரச்சாரத்தை தூண்டியது.

தூதரகத்தின் தகவல்தொடர்பு பாதுகாப்பு முறைகளை அசாஞ்ச் அத்துமீறியதாக எந்த ஆதாரமும் இல்லாமல் கூறிய கார்டியன், அசாஞ்சின் அத்தனை பார்வையாளர்களையும் -இவர்களில் ஒருவரை FBI ஏற்கனவே நேர்காணல் செய்து விட்டிருந்தது- ஈக்வடோர் அதிகாரிகள் கண்காணித்திருந்ததை வெளிப்படுத்தியது.

ஈக்வடோர் மற்றும் அமெரிக்க உளவு முகமைகளுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பையும், கார்டியன் மற்றும் பிற பெருநிறுவன ஊடக நிறுவனங்கள் உடந்தையாக இருப்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

கார்டியன் பத்தி எழுத்தாளரான ஜேம்ஸ் பால், “அசாஞ்ச் தனது கைகளை உயர்த்தியபடி தூதரகத்தை விட்டு வெளியேறியாக வேண்டும்” என்று அறிவித்தார். நோக்கம் கொள்ளப்படும் காட்சியை கார்டியனின் முன்னணிக் கட்டுரை விவரித்தது: “அவர் தூதரகத்தை விட்டு வெளியில் வருவாரானால், அவர் கைது செய்யப்படவும் பிணை நிபந்தனைகளை மீறியதற்காக ஒரு வருடம் வரை சிறையில் கழிக்கவும் எதிர்பார்க்கலாம். அதன்பின் அமெரிக்கா அவரை தனது நாட்டிற்குக் கொண்டுவர முனையும். எந்த முயற்சிக்கும் எதிராய் அவர் வாதிடலாம், வெல்லவும் கூட செய்யலாம், ஆயினும் அவரது வழக்கு முடிவாகும் வரையான காலத்தில் ஒரு நெடிய, அசவுகரியமான காலத்தை அவர் கம்பிகளுக்குப் பின்னால் செலவிடும் நிலைக்கு முகம்கொடுக்க நேரும்.”

ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி பிரதமர் ஜூலியா கிலார்ட் தொடங்கி அடுத்தடுத்த ஆஸ்திரேலிய அரசாங்கங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இதில் எதுவுமே சாத்தியமாக முடியாது. 2010 டிசம்பரில் அசாஞ்சேயை ஒரு குற்றவாளி என்று முத்திரை குத்திய அவர், ஆஸ்திரேலியக் குடிமகனைப் பிடிப்பதற்கான அமெரிக்க நடவடிக்கைக்கு உதவுவதற்கும் வாக்குறுதியளித்தார்.

அசாஞ்சுக்கான மிரட்டல் ஒரு தனிமனிதப் பிரச்சினை அல்ல. ஆழமடைந்து செல்லும் சமத்துவமின்மை, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் தயாரிப்புகளுக்கு எதிராய் பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பு அபிவிருத்தி காண்பதைத் தடுப்பதற்காக வெகுதூரம் செல்லத்தக்க இணைய தணிக்கையை திணிப்பதற்கு அமெரிக்க அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் தீவிரப்படுத்தி வருகின்ற ஒரு பிரச்சாரத்தின் பகுதியாக இது இருக்கிறது.

முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றும் அதன் முகமைகளின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துகின்ற மற்றும் ஒரு மாற்று அரசியல் முன்னோக்கை வழங்குகின்ற வலைத் தளங்களுக்கு -குறிப்பாக உலக சோசலிச வலைத் தளத்திற்கு- அணுகலை முடக்குவதற்காக “பொய்ச் செய்தி” குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூகுள், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகப் பெருநிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

தீவிரமான அரசாங்க மற்றும் ஊடக சதிகளையும் தாண்டி, சர்வதேச அளவில் அசாஞ்சேக்கு பொதுவெளியில் ஆழமான ஆதரவு இருக்கிறது, விக்கிலீக்ஸ் செய்த திடுக்கிடச் செய்யும் அம்பலப்படுத்தல்களே இதற்கான துல்லியமான காரணமாகும். அவசரமாய் அசாஞ்சேயின் பாதுகாப்புக்கு  வருவதற்கும் அவரது உடனடியான சுதந்திரத்திற்கு கோருவதற்கும் எங்கெங்கிலும் உள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் அழைக்கிறோம்.