ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

#MeToo at the Cannes Film Festival: All about money and power

கான் திரைப்பட விழாவில் #MeToo: அனைத்தும் பணம் மற்றும் அதிகாரத்திற்காக

By Stefan Steinberg
21 May 2018

2018 ஆஸ்கார் விழா, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலைகளுக்கான பிரிட்டிஷ் அமைப்பு Baftas விழா மற்றும் பேர்லின் திரைப்பட விழா ஆகியவற்றில் செய்த தலையீடுகளை அடுத்து, சுயநலமான #MeToo இயக்கத்தை ஊக்குவிப்பவர்கள் கடந்த வாரம் கான் திரைப்பட விழாவை நோக்கி அவர்களின் கவனத்தை திருப்பியிருந்தனர்.

பத்திரிகையாளர் ரோனன் ஃபாரொவ்வும் (Ronan Farrow) மற்றவர்களும் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் (Harvey Weinstein) மீது கடந்த அக்டோபரில் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியதற்குப் பின்னர், அந்த பாலியல் வேட்டையாடல் தொடங்கியது. வைன்ஸ்டீன் கான் திரைப்பட விழாவுக்கு வழமையாக வரும் பார்வையாளர், #MeToo க்கு வக்காலத்துவாங்குபவர்கள் அவர்களின் பிரச்சாரத்தை ஊக்குவிக்க இந்த உண்மையைப் பயன்படுத்தினர். பாலியல் தொல்லையளித்தல் பிரான்சில் மூன்றாண்டு சிறைவாசம் மற்றும் 40,000 பவுண்டுகள் (54,000 அமெரிக்க டாலர்) அபராதத்துடன் தண்டிக்கப்படும் என்று எச்சரித்து, அப்பிரச்சாரத்தின் ஆதரவாளர்கள் 40,000 துண்டு பிரசுரங்களை விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு வினியோகித்தனர். அவ்விழா நிகழ்வில் எந்தவொரு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்தும் குறைகூறுவதற்காக, விழா தலைவர்கள் பெண்களுக்கான ஒரு பிரத்யேக தொலைபேசி அழைப்பை ஏற்பாடு செய்திருப்பதாகவும் அறிவித்தனர்.

ஆனால் விழா நிகழ்ச்சிகளின் போக்கினூடாக, #MeToo மற்றும் கானில் உள்ள அதன் செல்வந்த ஆதரவாளர்களின் முன்னுரிமை, பாலியல் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதோடு குறைவாகவே சம்பந்தப்பட்டிருந்தது, அவர்களின் சொந்த தொழில்வாழ்வை மேம்படுத்திக் கொள்வதிலும் மற்றும் வங்கி கையிருப்புகளை அதிகரித்து கொள்வதுடனும் தான் அதிகமாக சம்பந்தப்பட்டிருந்தது என்பதை அது தெளிவாக்கியது.

இத்திரைப்பட விழாவின் படத்தேர்வுக்குழுவுக்கு தலைமை வகிக்கும் ஆஸ்திரேலிய நடிகை கேட் பிளான்செட் (Cate Blanchett), 82 நடிகைகள், பெண் தயாரிப்பாளர்கள் மற்றும் சல்மா ஹாயெக், கிறிஸ்டென் ஸ்டீவார்ட் உள்ளடங்கிய இயக்குனர்களுடன் சமமான சம்பளம் கோரியும், பாலியல் தொல்லைப்படுத்தலை நிறுத்துவதற்கும் கோரி மே 11 இல் ஒரு சிவப்பு கம்பள போராட்ட பேரணிக்குத் தலைமை வகித்திருந்தார்.

அப்போராட்டத்தின் நோக்கங்களைக் குறித்து பிளான்செட் கூறுகையில்: “நாம் வசிக்கும் உலகை மிகச் சிறந்த விதத்தில் எடுத்துக்காட்டும் வகையில், நமது வேலையிடங்கள் பன்முகத்தன்மையோடும், சமமாகவும் இருக்க வேண்டுமென நாங்கள் கோருகிறோம்.” ஆனால் "நாம் வசிக்கும் உலகில்" ஆதிக்கம் செலுத்துபவை சமூக பிளவுகளே ஒழிய, பாலின பிரச்சினைகள் அல்ல. திரையுலகில் உயர்மட்ட நடுத்தர வர்க்க பெண்களின் பலமான பிரசன்னம், ஏதோவிதத்தில் சினிமாஸ்கோப் அளவுக்கு விரிவடைவதற்கு இட்டுச் சென்றுள்ளது என்பதற்கு அங்கே ஒரு சிறிய அறிகுறியும் காட்டப்படவில்லை.

ஃபோர்ப்ஸ் சஞ்சிகை செய்தியின்படி, பிளான்செட் 2017 இல் 12 மில்லியன் டாலர் ஈட்டினார், இது அந்தாண்டில் மிக அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் வரிசையில் அவரை எட்டாவது இடத்தில் நிறுத்தியது. கோடீஸ்வர மில்லியனர் பிளான்செட் வாழும் வட்டாரங்களுக்கும், உலகெங்கிலும் வேலை செய்யும் பெண்களின் வாழ்க்கைக்கும் இடையே பொதுவான அம்சம் எதுவும் இல்லை என்பதை ஒருவர் சுலபமாக அனுமானிக்கலாம்.

அந்த சிவப்பு கம்பள போராட்டத்திற்கு மறுநாள், பிரெஞ்சு பாலின-சமநிலைக்கான குழு 50/50-2020 அவ்விழாவில் ஒரு கூட்டத்தை நடத்தியது. அதன் வலைத் தளத்தில் 50-50-2020 குறிப்பிடுகிறது, “வைன்ஸ்டீன் அதிர்வலையால் பிரெஞ்சு சினிமா உலுக்கப்படவில்லை என்றாலும், பாலியல் துஷ்பிரயோக பிரச்சினை ஒன்று மட்டுமல்லாமல் அதைக் கடந்தும் உறுதியான நடவடிக்கை எடுக்க நாம் நகர வேண்டியது இன்றியமையாததாகும்.” உறுதியான நடவடிக்கைக்கு இந்த ஒழுங்கமைப்பாளர்களின் முன்மொழிவுகள் மொத்தத்தில், திரைப்பட துறையில் பெண்களின் வருவாய் மற்றும் அதிகாரத்தை அதிகரித்து கொள்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

#MeToo க்கு முன்னணியிலிருந்து வக்காலத்து வாங்கும் மற்றொருவரும், “பெண்களும் ஹாலிவுட்டும்" (“Women and Hollywood”) அமைப்பின் ஸ்தாபகர் மிலெஸ்ஸா சில்வர்ஸ்டைனும் கான் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் சில்வர்ஸ்டைன், ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனைப் பற்றி படமெடுக்க ஒரு ஆண் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உண்மை குறித்து குறை கூறியிருந்தார். அந்நேரம் சில்வர்ஸ்டைன் அறிவித்தார்: “உலகெங்கிலும் தலைமை இடங்களில் அதிக பெண்களை நியமிப்பதற்காக உட்கார நேரமின்றி பணியாற்றி வரும் ஒரு பெண்ணைக் குறித்து திரைப்படமெடுக்க ஒரு ஆணை அமர்த்துவது, பாலின சமத்துவ பிரச்சினைகளுக்காக பணியாற்றி வரும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அடியாகும்.” வோல் ஸ்ட்ரீட்டின் பைகளில், கிளிண்டன் போர்நாடுபவர் என்பது சில்வர்ஸ்டைனுக்கு தொந்தரவூட்டவில்லை.

தெற்கு கலிபோர்னியா அனென்பேர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டாசி எல். ஸ்மித் (Stacy L. Smith), கானில் நடத்தப்பட்ட 50-50-2020 கூட்டத்தில் பேசிய முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக இருந்தார், இவர் அங்கே கூடியிருந்தவர்களை நோக்கி, திரைத்துறையில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நிதியைச் சார்ந்து ஒருங்குவிய வேண்டும் என்றார். “மாநில மற்றும் மத்திய அளவில் நாம் வரிச் சலுகைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் அவற்றை தயாரிப்புக்கு ஆதாயமாக தொடர்புபடுத்துவதற்காக, அதாவது ஒரு தயாரிப்புடன் உள்ளார்ந்த உந்துசக்தி (inclusion rider) இணைக்கப்பட்டிருந்தால், அது வரிசையின் முன்னால் நகர்த்தப்படும் அல்லது தானாகவே நிதியளிப்புக்கு தகுதி பெறும்,” என்றார்.

இந்த உள்ளார்ந்த உந்துசக்தியைத் தொடங்கி வைத்தவராக ஸ்மித் கருதப்படுகிறார், அதன்படி ஒரு படக்குழுவானது பாலினம், இனம், மற்றும்/அல்லது பாலியல் நோக்குநிலை அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்துடன், நடிகர்களும் திரைப்பட தயாரிப்பாளர்களும் ஒப்பந்தங்களை வலியுறுத்துவார்கள். இந்த உள்ளார்ந்த உந்துசக்தி என்பது 2018 ஆஸ்கர் விருதுகள் நிகழ்வின் உரையில் நடிகை பிரான்சிஸ் மெக்டொம்மாண்ட்டின் (Frances McDormand) பிரதான கோரிக்கையாக இருந்தது.

ஏற்கனவே பேர்லின் திரைப்பட விழாவில், Speak Up, Pro Quote, Time’s Up மற்றும் இதர பிற அமைப்புகள் உட்பட பல மிதமிஞ்சிய அமைப்புகள், “பாலின கண்காணிப்பு" (Gender Monitoring) என்றழைக்கப்படுவதை, அதாவது பாலினத்தின் அடிப்படையில் திரைப்பட பாத்திரங்களைக் கூர்ந்தாராய்வதைக் கோரி கூட்டங்கள் நடத்தின. பேர்லின் திரைப்பட விழா தொடங்குவதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட பத்திரிகைகளுக்கான விபரக்குறிப்பு, முதல்முறையாக, திரைப்படங்கள் திரைப்பட இயக்குனரின் பாலினம் அடிப்படையில் விரிவாக பகுக்கப்பட்டிருக்கும் பட்டியலைக் கொண்டிருந்தது. பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலையின் அடிப்படையில் தேர்வு செய்வது நீண்ட காலமாகவே பேர்லின் திரைப்பட விழாவின் குறிப்பிட்ட பிரிவுகளிடையே ஒரு கொள்கையாக இருந்து வருகிறது என்றாலும், இப்போது அது உத்தியோகப்பூர்வ விழா கொள்கையாக மாறியுள்ளது.

பாலின கண்காணிப்பு மற்றும் உள்ளார்ந்த உந்துசக்திகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களில் சிலர், இதுபோன்ற கொள்கைகளின் விளைவாக நிறைய பெண் இயக்குனர்கள் வருவார்கள், அவ்விதத்தில் சிறந்த படங்கள் வருமென்று வாதிடுகிறார்கள். திரைப்பட தயாரிப்பாளரும் நடிகையுமான விட்னி கம்மிங்ஸ் (Whitney Cummings) அவர் வலைத் தளத்தில் எழுதுகிறார்: “ஓர் உள்ளார்ந்த உந்துசக்தி என்பது படப்பிடிப்பு தளத்தில் வேலைக்கு அமர்த்தப்படுபவர்களில் பாலினரீதியில் மற்றும் இனரீதியில் சமத்துவமாக இருப்பதை நடிகர்கள் ஏதோவிதத்தில் அவர்களின் ஒப்பந்தத்தில் உறுதிப்படுத்தி வைப்பதாகும். நாம் இதை ஒரு கோடி காரணங்களுக்காக ஆதரிக்க வேண்டும், என்றாலும் உங்களால் காரணத்தைக் காண முடியவில்லை என்றால், இங்கே ஒன்றை தருகிறேன்: அது நல்ல படங்களைக் கொண்டு வரும்.”

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள ஆண் மற்றும் பெண் திரைப்பட தயாரிப்பாளர்கள் பொதுவான எதிர்விரோத சித்தாந்த சூழலில் நிலவும் ஒரே மாதிரியான சமூக அரசியல் அழுத்தத்திற்கு தான் உள்ளாகிறார்கள். பிரபலமான பெண் திரைப்பட தயாரிப்பாளர்கள் தயாரித்த சமீபத்திய படங்களைக் குறித்த ஒரு ஆய்வு, அவர்களின் ஆண் சமதரப்பினரின் பிரச்சினைகளை தான் பகிர்ந்து கொள்கின்றன என்பதையும், அதேபோல பெரிதும் ஆபாசமான காட்சிகளை வெளியில் தள்ளும் தகுதி பெற்றிருந்தன என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த வலைத் தளத்தைப் பார்த்து வரும் பெண் இயக்குனர்களின் படைப்புகளைக் குறித்த ஒரு சிறிய திறனாய்வே இதை உறுதிப்படுத்துகிறது. CIA இன் விருப்பமான இயக்குனர் காத்ரின் பிக்கெலோ (Kathryn Bigelow) குறித்து நாம் எழுதிய போது, அவர் படமான Zero Dark Thirty ஐ "அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரம் மற்றும் அதன் குற்றங்களைத் தழுவிய அரை-பாசிசவாத சினிமாத்தனம்" என்று விவரித்தோம். இதற்கும் கூடுதலாக, பிக்கெலோ இன் படைப்பு "வெட்கக்கேடானது. அண்மித்து இரண்டு மணி நேரங்களில், அப்படம் நீண்டு, இருண்டு, சலிப்பூட்டுவதாக உள்ளது. ஒரேயொரு கதாபாத்திரம் கூட வளர்த்தெடுக்கப்படவில்லை,” என்றோம்.

Patty Jenkins இயக்கியதும், பெண் இயக்குனர்களுக்கான ஒரு பெரிய முன்னேற்றம் என்று புகழப்பட்டதுமான Wonder Woman திரைப்படத்தைக் குறிப்பிட்டு, நாம் எழுதுகையில், “Wonder Woman வழக்கமான ஒன்றே, பெரும்பாலும் சலிப்பூட்டுகிறது, சிறப்பு காட்சிகள் ஏற்றப்பட்ட படம்,” என்று குறிப்பிட்டோம்.

மிகச் சமீபத்தில், பிரிட்டிஷ் திரைப்பட தயாரிப்பாளர் லின்னி ராம்சேயின் You Were Never Really Here குறித்து உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு கருத்துரைத்தது: “இது பயங்கரமான, சந்தைப்படுத்துவதற்கான வன்முறை படம், இது அதன் காட்சிக்குரிய அகநிலையான கருத்துக்கள் மீதோ அல்லது கதாபாத்திரங்கள் மீதோ கூட வெளிச்சம் பாய்ச்சவில்லை … இங்கே அவர் சமூக வாழ்க்கை குறித்து ஒத்திசைவாக ஆய்வு செய்வதற்கு அவருக்கு ஆர்வமில்லை அல்லது அதை வெறுக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறார். வியந்து பாராட்டும் உலகளவிலான ஊடகங்களின் ஆதரவுடன் ராம்செ தன்னைத்தானே விபரீதமான, அவசியமற்ற மற்றும் விளக்கவியலாத காட்டுமிராண்டித்தனத்தின் Scorsese-Tarantino பயிலகத்தின் ஒரு பெண் உறுப்பினர் என்பதை எடுத்துக்காட்டுவதாக தெரிகிறது.

அவர்களின் நல்ல விடயங்கள் என்றால், கான் திரைப்பட விழாவில் கலந்து கொண்டவர்களில் சிலர் தெளிவாக ஹாலிவுட் #MeToo வேட்டையாளர்களுக்கு எதிராக பேசியுள்ளனர்.

அவரது புதிய படமான Based On a True Story உடன் கான் க்கு வந்திருந்த பிரெஞ்சு-போலாந்து இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி, #MeToo இயக்கத்தைச் சுற்றிய பிரச்சாரத்தைப் பாசாங்குத்தனம் நிறைந்த "பாரிய விஷமத்தனத்தின்" ஒரு வடிவத்துடன் ஒப்பிட்டார். அவர் Newsweek Polska க்கு கூறினார்: “நேரத்திற்கு நேரம் சமூகத்தில் தோன்றும் ஒரு விதமான பாரிய விஷமப்பிரச்சாரம் இதுவென்று நினைக்கிறேன்.”

இயக்குனர் டெர்ரி ஜில்லியம் (Terry Gilliam), இவரின் சமீபத்திய படமான The Man Who Killed Don Quixote கான் திரைப்பட விழாவில் இறுதியில் திரையிடப்பட்டது, சமீபத்தில் #MeToo இயக்கத்தைக் குண்டர் விதிகளுடன் ஒப்பிட்டார்: “குண்டர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள், அவர்கள் அவர்களின் தீப்பந்தத்தை ஏந்தி வந்து, பிரங்கன்ஸ்ரைன் கோட்டையை எரிக்க இருக்கிறார்கள்,” என்றார்.

அங்கே பாலின இடஒதுக்கீட்டிற்கான அல்லது இன இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கை மீது எந்த ஜனநாயகத்தன்மையோ அல்லது முற்போக்குத்தன்மையோ எதுவும் இல்லை என்பதை கான் அனுபவம் மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டுகிறது. அங்கே இன்னும் கூடுதலான தனிச்சலுகைகளை எதிர்பார்க்கும் ஏற்கனவே தனிச்சலுகை பெற்றுள்ள நடுத்தர வர்க்க அடுக்குகளது சூழ்ச்சிகள் தான் உள்ளன.