ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The massacre in Gaza and imperialist war policy

காஸா படுகொலையும், ஏகாதிபத்திய போர் கொள்கையும்

Andre Damon
16 May 2018

இஸ்ரேலிய இராணுவ படைகளால் திட்டமிட்டு 60 க்கும் மேற்பட்ட நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட மே 14, 2018 ஒரு அவமானம்மிக்க நாளாக விளங்கும். ஒரு மணித்தியால முடிவில், இஸ்ரேலிய படைகள் நிராயுதபாணியான பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஆயிரக்கணக்கான நிஜமான குண்டுகளால் சுட்டனர். இதில் 3,000 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர், எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர், இதில் சின்னஞ்சிறு மழலையான எட்டு மாத குழந்தையும் உள்ளடங்கும்.

பாலஸ்தீனர்கள் செவ்வாய்கிழமை உயிரிழந்தவர்களைப் புதைத்த போதும் கூட, இஸ்ரேல் அதன் படுகொலைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தது. அதிலும் பலர் காயமடைந்தனர், ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த ஏழு வாரகாலத்தில், இஸ்ரேலிய இராணுவப் படை நிஜமான தோட்டாக்களைக் கொண்டு ஏறக்குறைய 6,000 பேரைச் சுட்டுள்ளதுடன், இரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளைக் கொண்டு ஆயிரத்திற்கும் அதிகமானவர்களைத் தாக்கியுள்ளது. இக்காலகட்டத்தில், குறிவைத்துசுடும் இஸ்ரேலிய துப்பாக்கிதாரிகளால் சுமார் 109 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் தலையில் சுட்டுவிட்டு கூச்சலிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்துவதை படமெடுத்தனர்.

இஸ்ரேலிய அரசியல் ஸ்தாபகத்திற்குள், இந்த படுகொலை அதிர்ச்சி கொண்ட சுய-பிரதிபலிப்புகளையோ, யூத-இனஅழிப்புக்கு விடையிறுப்பாக ஸ்தாபிக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு நாடு எவ்வாறு நாஜிக்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதன் மீது விசாரணைகளையோ தூண்டவில்லை, மாறாக இனப்படுகொலைபற்றி அப்பட்டமாக தமது கருத்தை தெரிவித்தனர்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் (Knesset) வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு குழுவின் தலைவர் அவி திச்டெர் இந்த படுகொலைக்கு விடையிறுத்து கூறுகையில், “இஸ்ரேலிய இராணுவப் படைகளிடம் [IDF] ஒவ்வொருவருக்கும் போதுமான தோட்டாக்கள் உள்ளன,” என்றார்.

இஸ்ரேலிய அரசு மற்றும் இராணுவத்தின் கூடியளவிலான பிரிவுகள், 1930 களின் மொழியில் கூறுவதானால், பாலஸ்தீன பிரச்சினைக்கு ஒரு "இறுதித் தீர்வை" நடைமுறைப்படுத்த தயங்காது என்பதற்கு டெல் அவிவ் இன் மொழியும் நடவடிக்கைகளும் இரண்டுமே தனித்துவமான வெளிப்பாட்டை காட்டின.

ஆனால் ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு "தன்னை பாதுகாக்க உரிமை" இருப்பதாக இஸ்ரேலை ஆதரித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், ஏகாதிபத்திய சக்திகளின் இந்த பிற்போக்குத்தனம், இந்த குற்றத்தை சர்வதேசமயப்படுத்தி உள்ளது. இஸ்ரேலின் படுகொலைக்கு சட்டபூர்வத்தன்மை வழங்கியதன் மூலமாக, ஏகாதிபத்திய அதிகாரங்கள் தங்களைத்தாங்களே அதற்கு உடந்தையாய் ஆக்கிக் கொண்டுள்ளன.

நாஜி கால சர்வதேச உறவுகளைக் குணாம்சப்படுத்தும், வெட்கமற்ற அப்பட்டமான பொய்களை நினைவூட்டும் ஓர் உரையில், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, “இந்த சபையில் உள்ள எந்த நாடும் இஸ்ரேலை விட மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டிருக்காது,” என்று அறிவித்தார்.

அப்பெண்மணி அந்த படுகொலையைப் பாலஸ்தீனர்கள் ஈரானுடன் இணைந்து செய்த தவறாக சித்தரித்தார். “சமீபத்திய நாட்களில், ஹமாஸ் பயங்கரவாதிகள், ஈரான் ஆதரவுடன், இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் மற்றும் உள்கட்டமைப்புக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி உள்ளனர்,” என்றார்.

ஹேலியின் கருத்துக்கள், குறிப்பாக கீழ்தரமாக இருக்கின்ற போதும், ஏனைய ஏகாதிபத்திய அரசாங்கங்களது பிரகடனங்களின் ஒரு துணுக்காகும். நிராயுதபாணியான அப்பாவி பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிப்பதை நியாயப்படுத்துவதற்கு “இஸ்ரேலுக்குத் தன்னை பாதுகாக்கும் உரிமை உள்ளது,” என்ற இஸ்ரேலின் படுகொலை பிரதம மந்திரி பயன்படுத்திய வார்த்தைகளை, விதிவிலக்கின்றி, ஒவ்வொரு உத்தியோகபூர்வ அறிக்கையும் வெவ்வேறு வடிவில் உள்ளடக்கி இருந்தன.

ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சகம், அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக நிஜமான தோட்டாக்களைப் பயன்படுத்துவது குறித்து அதன் "கவலைகளை" வெளிப்படுத்திய போதும், “அமைதியான போராட்டத்திற்கான உரிமையை" பாலஸ்தீன தலைவர்கள் “துஷ்பிரயோகம்" செய்யக் கூடாது என்று அறிவித்தது, "வன்முறை ஏற்படுத்துவதற்கு" ஆர்ப்பாட்டக்காரர்களை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தியதாக அது பாலஸ்தீன தலைவர்களை மறைமுகமாக குற்றஞ்சாட்டியது.

“காஸா பகுதியில் அதிகாரத்தை கொண்டிருப்பவர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும், பாலஸ்தீன ஆணையம் மீண்டுமொருமுறை காஸாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்,” என்பதையும் அந்த வெளியுறவுத்துறை அமைச்சகம் சேர்த்துக் கொண்டது.

பிரிட்டன் பிரதம மந்திரி தெரேசா மே இதே உணர்வுகளை எதிரொலிக்கும் விதத்தில், காஸாவில் உள்ள “அதிதீவிரவாத கூறுபாடுகள்" “அவற்றின் சொந்த நோக்கங்களை முன்னெடுக்க அமைதியான போராட்டங்களைக் தமக்கு சாதகமாக முனைந்திருக்கலாமென நாங்கள் கவலை கொள்கிறோம்,” என்று அறிவித்தார்.

வேறெந்த தலைவர்களையும் விட இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சிப்பதைவிட மேலும் சென்றுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், “இஸ்ரேலின் பாதுகாப்புக்கு" அவரின் "பொறுப்புறுதியை" மீளவலியுறுத்தினார்.

அமெரிக்காவுக்குள், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் இஸ்ரேலிய படுகொலைக்குப் பின்னால் அணிதிரண்டு நின்றது. போராட்டக்காரர்களை இஸ்ரேல் படுகொலை செய்து கொண்டிருந்த போதும் கூட, ஜனநாயக கட்சியின் செனட் சிறுபான்மை தலைவர் சக் சூமர் அறிவித்தார், “நீண்டகாலமாக நிலுவையிலிருந்த ஒரு நகர்வில், நாங்கள் எங்கள் தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றியுள்ளோம்… "இதை செய்வதற்காக இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே நான் சட்டமசோதா கொண்டு வந்தேன், இதை செய்ததற்காக நான் ட்ரம்பைப் பாராட்டுகிறேன்,” என்றார்.

ஜனநாயகக் கட்சியின் இடது பிரிவு என்று கூறிக்கொள்வதன் தலைவர் பேர்ணி சாண்டர்ஸ், போரை ஆதரிக்கும், அரசுத்துறை பிரமுகர்களைக் கொண்ட ஒரு குழுவை உள்ளடக்கி திங்களன்று நகர அரங்கில் மத்தியக் கிழக்கு குறித்து ஒரு விவாதம் நடத்தினார்.

முன்னாள் அமெரிக்க தூதரான லாரா ஃப்ரீட்மன் அறிவித்தார், ஹமாஸின் நடவடிக்கைகள் "சிலநேரங்களில் இஸ்ரேலுக்கு சட்டபூர்வத்தன்மை வழங்குகிறது, சிலநேரங்களில் சட்டபூர்வத்தன்மை வழங்குவதில்லை, இதை கூறுவதற்காக என்னை மன்னியுங்கள், எல்லா பயங்கரவாதமும், ஒரு போர் நடவடிக்கையாகும், போருக்கான விதிகளின் படி எல்லைக்கு அருகே நிற்கும் நிராயுதபாணியான மக்களுக்கு எதிராக உயிர்பறிக்கும் படைகளை பயன்படுத்த நமக்கு உரிமை உள்ளது, அவர்கள் அந்த வேலியை சேதப்படுத்தி, அதை மீறி வந்தால், அவர்கள் இஸ்ரேலுக்குள் வந்து விடக்கூடும், நமக்கு அச்சுறுத்தலாகி விடக்கூடும்,” என்றார்.

ஒரு கொடூரமான போர் குற்றத்திற்கு வெறித்தனமான நியாயப்பாடு என்று அதுபோன்ற அறிக்கையைக் கண்டிப்பதற்கு பதிலாக, சாண்டர்ஸ் இஸ்ரேல் விவகாரத்தில் ஃப்ரீட்மனின் நிபுணத்துவத்தைப் பாராட்டினார், அதுகுறித்து அப்பெண்மணி "அடிமுதல் முடி வரையில், அனைத்துப் பக்கத்திலும்,” அறிந்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.

அப்பாவி பாஸ்தீன மக்கள் மீதான படுகொலை நடைமுறையளவில், பட்டவர்த்தனமாக ஆக்கிரமிப்புமிக்கதாக இருந்தபோதும், சட்டபூர்வமானது மற்றும் இஸ்ரேலியர்களின் தரப்பில் தற்காப்பின் வடிவமாக இருந்தது என்ற வாதமே, அமெரிக்க பத்திரிகைகளின் செய்திகளிலும், கருத்துரைகளிலும் வியாபித்திருந்தன. கூகுள் செய்திகளில் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்ட, வாஷிங்டன் போஸ்டின் ஒரு கட்டுரையில், “அந்த போராட்டங்கள் முந்தைய வாரங்களை விட மிகவும் வன்முறையான முனையைக் கொண்டிருந்ததாக தெரிந்தது. சில இளைஞர்கள் கத்திகளையும் வேலியை வெட்டும் கருவிகளையும் எடுத்து வந்திருந்தனர்… துப்பாக்கியேந்திய இஸ்ரேலிய படையினர் அத்துமீறலை அனுமதிக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தனர்,” என்று அறிவித்தது.

அப்படுகொலை குறித்த ஒரு தலையங்கத்தில், நியூ யோர்க் டைம்ஸ் அறிவிக்கையில், “காஸாவை ஒட்டியுள்ள எல்லை உட்பட, இஸ்ரேலுக்கு அதன் எல்லைகளைப் பாதுகாக்க எல்லா உரிமையும் உள்ளது,” என்று அறிவித்தது. “நீண்டகாலமாகவே துஷ்பிரயோகத்திலும் அல்லது வன்முறையிலும் அல்லது இரண்டு விதத்திலும் ஈடுபட்டு வந்த, பாலஸ்தீனர்கள் சமாதானத்தை நோக்கிய அவர்களின் சொந்த சிறந்த முயற்சிகளை மேற்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர், மீண்டும் தோல்வியடைந்துள்ளனர். இப்போதும் கூட, காஸாவாசிகள் அவர்களின் போராட்டங்களை உறுதியுடன் அமைதியாக மேற்கொள்வதற்கு பதிலாக, வன்முறையை ஏற்பதன் மூலமாக அவர்களின் சொந்த நோக்கத்தை பலவீனப்படுத்தி கொள்கிறார்கள்,” என்றார்.

என்னவொரு கேவலமான பாசாங்குத்தனம்! இதே பத்திரிகை தான், அப்பாவி மக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள், அல்லது இருக்கக்கூடும் என்ற அடித்தளத்தில் ஒரு போர் மாற்றி போரை நியாயப்படுத்தி உள்ளது. எண்ணற்ற ஆட்சி மாற்ற நடவடிக்கைகள், குண்டுவீச்சுக்கள் மற்றும் போர்களையும் நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட கோட்பாடு, அதாவது அப்பாவி மக்களின் வாழ்வை "பாதுகாப்பதற்கான பொறுப்புறுதி" என்ன ஆனது?

ஏழாண்டுகளுக்கு முன்னர், இதே நியூ யோர்க் டைம்ஸ், “யாராவது அவரை ஏதேனும் வழியில் தடுக்காத வரையில், லிபியாவின் கர்னல் மௌம்மர் எல்-கடாபி அதிகாரத்தில் தொடர்ந்தும் இருக்கையில் அவரின் பெரும் பிரயத்தனத்தில், அவரின் சொந்த மக்களில் நூற்றுக் கணக்கானவர்களை அல்லது ஆயிரக் கணக்கானவர்களைக் கூட கொன்று குவிப்பார்,” என்ற அடித்தளத்தில் லிபியாவில் அமெரிக்க-பின்புலத்தில் ஆட்சி மாற்ற நடவடிக்கையை நியாயப்படுத்தியது.

ஓர் ஒட்டுமொத்த சமூகத்தையும் அழிப்பதில் போய் முடிந்த ஒரு குண்டுவீச்சு நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கு, அந்த விடயத்தை "நூற்றுக் கணக்கான" அப்பாவி மக்களுக்கு அச்சுறுத்தல் என்பதாக உருவாக்கி, அப்பத்திரிகை, டேவிட் புரூக்ஸ் மற்றும் நிக்கோலஸ் கிரிஸ்ட்ஆஃப் உட்பட கட்டுரையாளர்களின் ஒரு வியூகத்தை ஏற்படுத்தி, அதன் பதிவு செய்யப்பட்ட தார்மீக சீற்றம் அனைத்தையும் கொட்டித் தீர்த்தது. காஸா படுகொலையில் எங்கே சென்றது அவர்களின் இந்த சீற்றம்?

“தார்மீகத்தன்மை என்பது எப்போதுமே வர்க்கரீதியிலான தார்மீகத்தன்மை ஆகும்" என்று பிரெடெரிக் ஏங்கல்ஸ் குறிப்பிட்ட கோட்பாட்டை இதை விட வேறெதுவும் இந்தளவுக்கு மிகப்பெரியளவில் எடுத்துக்காட்ட முடியாது. நியூ யோர்க் டைம்ஸின் தார்மீக சீற்றம், அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு சேவையாற்றுவதில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஐம்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், மார்ச் 21, 1960 இல், தென்னாபிரிக்காவில் ஷார்பெஸ்வில் படுகொலையில் நிறவெறி கொள்கை ஆட்சியின் படைகள் 69 நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுட்டுக் கொன்ற போது, அது சர்வதேச அளவில் சீற்றம் மற்றும் வெறுப்புணர்வை சந்தித்தது. அச்சம்பவம் தென்னாபிரிக்காவின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறித்ததுடன், ஆபிரிக்க கண்டம் எங்கிலும் பாரிய பெருந்திரளான மக்களின் பிரமாண்ட தீவிரமயப்படலை இயக்கத்திற்கு கொண்டு வந்தது. அதுவே நிறவெறி ஆட்சியின் முடிவுக்கு தொடக்கமாக இருந்தது.

அக்காலப்பகுதியிலோ, பெருந்திரளான மக்களின் எழுச்சிக்கு இடையே, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் மத்தியக் கிழக்கின் ஒடுக்கப்பட்ட நாடுகள் காலனித்துவ-கலைப்பின் கீழ் சென்று கொண்டிருந்தன. இப்போதோ, மீள்-காலனிமயமாக்கம் என்பது நாளாந்த நடைமுறையாகி உள்ளது. அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் மீண்டுமொருமுறை மத்திய கிழக்கைத் துண்டாட வாயில் எச்சில் ஊற நிற்கின்றன. ஈரானுக்கு எதிராக அமெரிக்க-தலைமையிலான தாக்குதலில் இஸ்ரேல் அச்சாணியாக வடிவெடுக்கிறது, ஹேலி வாதிட்டதைப் போல, காஸாவில் இஸ்ரேலின் போர் குற்றங்களை நியாயப்படுத்துவது அப்பிராந்தியத்தில் ஈரானின் "ஸ்திரமின்மைப்படுத்துவதை முன்வைப்பதை" எதிர்கொள்வதில் இருந்து பிரிக்க முடியாததாகும்.

இதைவிட மேலதிகமான தந்திரோபாய கேள்விகளும் அங்கே பணயத்தில் உள்ளன. மத்திய கிழக்கு மீதான நவ-காலனித்துவ துண்டாடலில் சம்பந்தப்பட்ட போர்களை, மக்கள் மீதான படுகொலை மற்றும் இனப்படுகொலையில் இருந்தும் கூட பிரித்துவிட முடியாது. வரவிருக்கும் காலத்தில், மத்திய கிழக்கிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் இதேபோன்ற பயங்கர படுகொலைகளை நடத்தி, மக்களை அதற்கு உட்படுத்துவதற்கு, ஏகாதிபத்திய சக்திகள் அனைத்துமே தங்களை முன்னிறுத்திக் கொள்ள முடியும்.

மார்க்சிஸ்டுகள் எப்போதுமே உள்நாட்டு வர்க்க உறவுகளின் ஒன்றுதிரண்ட வெளிப்பாடாகவே வெளியுறவு கொள்கையைக் காண்பர். இன்று நிராயுதபாணியான பாலஸ்தீனர்களின் பாரிய படுகொலை, நாளை வேலைநிறுத்தம் செய்யும் அமெரிக்க தொழிலாளர்கள் மீதான பாரிய படுகொலையாக மாறக்கூடும்.

அனைத்திற்கும் மேலாக, இஸ்ரேலின் நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்படுகின்றன என்றால், மெக்சிகன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகள், அமெரிக்க எல்லையை நோக்கி வரும் அகதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது நியாயப்படுத்தப்படாதா? ஐரோப்பாவுக்கு தப்பி வரும் புலம்பெயர்வோரின் படகுகளை மூழ்கடிப்பதில் ஐரோப்பிய எல்லை பொலிஸ் நியாயப்படுத்தப்படாதா?

சர்வசாதாரணமாக ஆம் என்பது தான், இவ்விரு கேள்விகளுக்குமான பதில். இஸ்ரேலின் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் நியாயப்படுத்தப்படுவதானது, ஏகாதிபத்திய அதிகாரங்கள் நிராயுதபாணியான அப்பாவி மக்களைப் பாரியளவில் கொல்வதை ஒரு சட்டபூர்வ கொள்கை கருவியாக ஏற்றுள்ளன என்பதையே தெளிவுபடுத்துகிறது.