ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump torpedoes Iran nuclear accord

ஈரான் அணு ஒப்பந்தத்தை ட்ரம்ப் தகர்க்கிறார்

Keith Jones
9 May 2018

ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும், ஈரான் மீது முடக்கும் பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிப்பதாகவும், விரைவில் குறிப்பிடப்படாத மேலதிக தடைகளை விதிக்கவிருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.

இத்தகையதொரு நடவடிக்கை மத்திய கிழக்கை முழுவீச்சிலான போருக்குள் அமிழ்த்தி விடுகின்ற அபாயத்தைக் கொண்டிருக்கிறது என்று வாஷிங்டனுக்கு நெருக்கமான ஐரோப்பியக் கூட்டாளிகளிடம் இருந்தும் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் மற்ற நாடுகளிடம் இருந்தும் —பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி— வந்த எச்சரிக்கையை உதாசீனம் செய்து ட்ரம்ப் இதனைச் செய்திருந்தார்.

நேற்றைய அறிவிப்பு ஆத்திரமூட்டலாகவும் தீமூட்டுவதாகவும் இருந்த அதேசமயத்தில், சிறிதும் அது அதிர்ச்சிக்குரியதாக இல்லை.

2015 ஏப்ரலில் ஈரானும் பெரும் சக்திகளும் ஒரு அணு ஒப்பந்தத்திற்கான “கட்டமைப்பை” எட்டியிருக்கின்றன என்ற அறிவிப்புக்கான பதிலிறுப்பாக பிரசுரித்த ஒரு முன்னோக்கில் உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தவாறாக: ஒரு பரந்த வரலாற்று அர்த்தத்தில், இந்த ஒப்பந்தம் அது எழுதப்பட்டிருக்கும் காகிதத்தின் அளவுக்குக் கூட மதிப்பானதல்ல. கடந்த காலத்தில் பலமுறையும் நடைபெற்றிருப்பதைப் போல, அமெரிக்கா தனக்கு எப்போது அனுகூலமற்றது என்று கருதுகிறதோ அப்போது அமெரிக்கா அதை கிழித்தெறியும். மும்மார் கடாபியின் லிபிய ஆட்சி அதன் பேரழிவு ஆயுதங்கள் திட்டங்களை (WMD) கைவிடுவதாக 2003 இல் ஒரு ஒப்பந்தம் செய்தது, ஆயினும் அது 2011 இல் ஆட்சி-மாற்றத்திற்கான நேட்டோ-தலைமையிலான ஒரு போரின் இலக்காகும் நிலையில் தன்னைக் காண வேண்டியிருந்தது. அதன் சொந்த பொருளாதார வீழ்ச்சியின் மத்தியில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பிரதான போட்டியாளர்களை பலிகொடுத்து உலக மேலாதிக்கத்தைத் தக்கவைப்பதற்கான அதன் பொறுப்பற்ற முனைப்புக்குக் குறுக்கே எதுவந்தாலும் நிற்கப்போவது கிடையாது.”

மாற்ற வேண்டியதை மட்டும் மாற்றினால், 1930களின் ஏகாதிபத்திய இராஜதந்திரத்திற்கும் இன்றைக்கும் இடையில் திகைப்பூட்டும் மட்டத்திலான அறிவுறுத்துகின்ற ஒப்புமைகள் இருக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்கு முன்வந்த காலத்தில், அத்தனை வகையான இராஜதந்திர உடன்பாடுகளும் கையெழுத்தாகின, வேட்டை ஓநாய் கூட்டத்தின் தலைமையில் நாஜி ஆட்சி இருக்க, அவையெல்லாம் பின்னர் தூக்கிவீசப்படுவதாகவே இருந்தன.

இதில், ட்ரம்ப் அவரது வெள்ளை மாளிகை முன்னோடிகளைக் காட்டிலும் சற்று அதிக கல்நெஞ்சக்காரராகவும் அதிக அடாவடித்தனமானவராகவும் இருக்கிறார், அவ்வளவே.

அவருடைய பேச்சு ஆக்ரோஷமானதாக இருந்தது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தின்போது பெரும் மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா நடத்தியிருக்கின்ற, உரம் போட்டிருக்கின்ற, உதவியிருக்கின்ற, மற்றும் உடந்தையாயிருந்திருக்கின்ற போர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக் தொடங்கி லிபியா, சிரியா மற்றும் ஜெமன் வரையிலும் சிக்கலான சமூகங்களைத் தகர்த்தெறிந்திருக்கின்றன. அவ்வாறிருந்தும் இந்த பில்லியனர், பாசிச-மனோநிலை வாய்வீச்சாளர், “துஷ்டநோக்கமான” மற்றும் “தீங்கான” நடவடிக்கைகளால் மத்திய கிழக்கில் ”பெரும் அழிவு”க்குக் காரணமாகி வந்திருக்கின்ற “உலகின் தலைமையான பயங்கரவாதத்திற்கான அரசு ஆதரவளிப்பாளராய்” இருப்பதாக ஈரான் மீது குற்றம் சாட்டினார்.

வரலாற்றில் மிக ஊடுருவலான சோதிப்பு நடைமுறைகளுக்கு ஈரானின் அணுத் திட்டத்தை உட்படுத்தி வந்திருக்கின்ற சர்வதேச அணு சக்தி முகமை (IAEA), ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்ற நாடுகள், அமெரிக்க பாதுகாப்புச் செயலரான ஜேம்ஸ் மாட்டிஸ் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் மற்ற தலைமையான அங்கத்தவர்கள் அனைவருமே, ஒப்பந்தத்தின் கீழான அத்தனை நிபந்தனைகளையும் ஈரான் வரிக்குவரி நிறைவேற்றியிருப்பதாகவும் குறைந்தபட்சம் ஒன்றரை தசாப்த காலமாக அது எந்த அணு-ஆயுதத் திட்டத்தையும் கொண்டிருந்திருக்கவில்லை என்றும் திட்டவட்டமாக கூறுகின்றனர். அப்படியிருந்தும் ட்ரம்ப், ஈரான் அமெரிக்காவை அணு-ஆயுத வெடிப்பு ஏவுகணைகளைக் கொண்டு மிரட்டுவதன் விளிம்பில் இருப்பதாகக் கூறினார்.

இந்தப் பொய்களுக்கான ஆதாரமாக, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகுவால் ஏப்ரல் 30 அன்று வழங்கப்பட்ட காட்சிப்படுத்திச் சொல்லும் விவரிப்பை —இது மிகைப்படுத்தல் என்றும் பொய்கள் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் மிக வலது-சாரி ஊடகங்கள் தவிர்த்த மேற்கத்திய ஊடகங்கள் அனைத்தினாலும் விமர்சிக்கப்பட்டு விட்டிருந்தது— அவர் சுட்டிக்காட்டுகிறார். போர் பிரச்சாரத்திலும், ஏமாற்றிலும் மோசடியிலும் நிபுணத்துவம் பெற்றதான நியூ யோர்க் டைம்ஸ் கூட, வாஷிங்டன் இத்தகையதொரு முரட்டு நடவடிக்கையுடன் தன்னை தொடர்புபடுத்திக் கொண்டதில் தொழில்முறையாக அவமதிக்கப்பட்டதாக உணர்ந்து, தனது தலையங்கப் பதிலிறுப்புக்கு “ஈரான் விடயத்தில் நெத்தனியாகுவின் ஏமாற்றுவித்தை” என்று தலைப்பிட்டிருந்தது.

ட்ரம்ப் தனது உரையின் இறுதியை நெருங்குகையில், மிருகத்தனமான அமெரிக்க-ஆதரவு ஷா சர்வாதிகாரத்தின் கீழ் நிலவிய நவகாலனித்துவ வகை ஆட்டிப்படைப்பை ஈரானிய மக்களின் மீது மீண்டும் திணிக்கின்ற நோக்கத்துடனான பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ அழுத்தத்தின் ஒரு தீவிரப்பட்ட பிரச்சாரத்தில் அமெரிக்கா இறங்கியிருப்பதை —ஒரு மாஃபியா தலைவனது மொழியை ஒத்த ஒன்றைப் பயன்படுத்தி, ”நீங்கள் மறுக்க முடியாத ஒரு சலுகை” குறித்து பெருமையடித்தபடி— அடிக்கோடிட்டுக் காட்டினார்.

முதலில் ஷாவுக்கு புகழ்மாலை பாடிய அவர், 1979 புரட்சிக்கு முன்பாக ஈரான் “உலகின் மரியாதையைப் பெற்றிருந்தது” என்று தெரிவித்தார். அதன்பின் ஒரு “புதிய” அமெரிக்க-கட்டளையிலான “ஒப்பந்தத்திற்கான” வாஷிங்டனின் கோரிக்கைகளை ஈரானின் தலைவர்கள் நிராகரிப்பார்கள் என்று அறிவித்த அவர், “அவர்களிடத்தில் இருந்தால் நானும் கூட அதையேதான் கூறுவேன். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் ஒரு புதிய மற்றும் நீடிக்கத்தக்க ஒப்பந்தத்தை உருவாக்க விரும்பப் போகிறார்கள்” என்று மேலும் சேர்த்துக் கொண்டார்.

ஈரான் ஒப்பந்தத்தை தூக்கியெறிந்ததன் மூலம் “அமெரிக்கா இனியும் வெற்று மிரட்டல்களை செய்யப்போவதில்லை” என்று எடுத்துக்காட்டியிருப்பதாக பெருமையடித்துக் கொண்டதன் பின் உடனடியாக அவர் தனது அறிக்கையில் வட கொரியா குறித்து சுருக்மாக குறிப்பிடுவதையும் சேர்த்துக் கொண்டார்.

ட்ரம்ப்புக்கும் வட-கொரியத் தலைவரான கிம்-ஜங்-உன்னுக்கும் இடையில் திட்டமிடப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தைகளின் உடனடி விளைவு என்னவாக இருப்பினும், ஈரான் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியிருப்பதானது கொரியத் தீபகற்பத்தின் “அமைதிப் பேச்சுவார்த்தைகள்” அமெரிக்க ஏகாதிபத்திய வன்முறைக்கும் சூறையாடலுக்கும் வழிவகையளிக்கும் நோக்கம் கொண்ட ஒரு தந்திரோபாய சூழ்ச்சி மட்டுமே என்பதைத் தெளிவாக்குகிறது. ஒரு உடன்பாடு எட்டப்பட்டாலும் கூட, அது இன்னும் கூடுதல் முக்கியமான போட்டியாளர்களுக்கு எதிரான மோதல்களுக்காய் அமெரிக்காவின் கரங்களை விடுவிக்கின்ற நோக்கத்திற்காக மட்டுமே இருக்கும். அமெரிக்காவின் மூலோபாய முன்னுரிமைகள் மாறும்போதோ, அல்லது சூழ்நிலைகள் அனுமதிக்கும்போதோ, ஒரு கொரிய அணுவிலக்க உடன்பாட்டைத் தூக்கியெறிவதற்கு வாஷிங்டன் மிக நாடகத்தனமான மற்றும் சூழ்ச்சியான ஒரு சாக்கினை முன்நிறுத்தும்.

ஜனநாயகக் கட்சியினரும் அமெரிக்க இராணுவ-உளவு ஸ்தாபகத்தின் பரந்த பிரிவுகளும், பியோங்கியாங் உடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற ட்ரம்ப்பின் திருப்பம் குறித்து புகாரிட்டதோடு, வட கொரிய ஆட்சியுடன் அவர் கையெழுத்திடுகின்ற எந்த ஒப்பந்தத்தையும் தாங்கள் கிட்டத்தட்ட மறுதலிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன என்பதும் கவனத்திற்குரியதாகும்.

தமது ஆலோசனைகளுக்கு ட்ரம்ப் காட்டியிருக்கும் அலட்சியம் குறித்து ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் கோபமடைந்துள்ளன உலுக்கப்பட்டுள்ளன என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் இருவரும் ஏப்ரல் பின்பகுதியில் வாஷிங்டனுக்கு விஜயம் செய்து ஈரான் ஒப்பந்தத்தை தூக்கியெறியக் கூடாது என்று தனிப்பட்ட விதத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர். திங்களன்று, பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜோன்சனது முறையாக இருந்தது, அவரது பார்வையாளர்களில் இருந்தது துணை ஜனாதிபதி பென்ஸ் மற்றும் வெளியுறவுச் செயலர் பொம்பியோ ஆகியோர் தான் என்றபோதும் கூட.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றுமொரு முறை அதன் சொந்த நலன்களின் அப்பட்டமான பின்தொடரலில் அதன் வெளிப்படையான ஐரோப்பியக் கூட்டாளிகளது கவலைகளை புறந்தள்ளியிருக்கிறது. பொது அறிக்கைகளில் சொல்லப்படுவது என்னவாக இருக்கின்றபோதும், பொருளாதார நெருக்கடி மற்றும் முன்னெப்போதினும் தீவிரப்பட்டுச் செல்கின்ற புவியரசியல் மற்றும் வணிகப் போட்டிமோதல்கள் ஆகிய நிலைமைகளின் கீழ் ஏகாதிபத்திய சக்திகள் ஒவ்வொன்றும் அதன் சொந்த நலன்களைப் பின்தொடர்கின்ற நிலையில், அவற்றுக்கு இடையிலான உறவுகள் முன்னெப்போதையும் விட நச்சுத்தன்மையானதாக இருக்கின்றன.

பிரிட்டிஷ், பிரெஞ்சு, மற்றும் ஜேர்மன் ஆளும் உயரடுக்குகளின் ஏகாதிபத்திய வேட்கைகள் அமெரிக்க முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல என்பதை சென்ற நூற்றாண்டின் வரலாறு எடுத்துக்காட்டியது.

ஈரான் ஒப்பந்தத்தை தூக்கிவீசுவதில் ட்ரம்ப்புக்கு ஆர்வத்தைக் குறைக்க அவை முயற்சி செய்தன என்றால், ஈரானை பொருளாதாரரீதியாக சுரண்ட அவை செய்கின்ற முயற்சிகளுக்கு அது குறுக்கே நிற்கும் என்பதும், எண்ணெய் விலையேற்றங்கள் மற்றும் அகதிகள் இன்னும் பாரிய அளவில் உள்வருவது ஆகியவை உள்ளிட்ட ஈரானுடனான ஒரு போரின் ஸ்திரம்குலைக்கும் பாதிப்பு குறித்து அவை அஞ்சுவதுமே அதன் காரணங்களாய் இருந்தன.

ட்ரம்ப்பை ஒப்பந்தத்தில் நீடிக்கச் செய்ய அவை செய்த பயனற்ற முயற்சியில், ஐரோப்பிய நாடுகள், ஈரானின் வெடிப்பு-ஏவுகணைத் திட்டத்தில் ஒரேயடியான வரம்புகள் உள்ளிட தெஹ்ரானிடம் புதுக் கோரிக்கைகளின் ஒரு முழுவரிசையை அவர் வைத்தபோது அவருடன் இணைந்து கொண்டன, அத்துடன் இஸ்ரேலுக்கான தமது உறுதியான ஆதரவையும் உறுதிகூறின— இதன்மூலம் ட்ரம்ப் மற்றும் நெத்தனியாகு இருவருமே ஈரானுக்கு எதிரான தமது தாக்குதலில் முன்னேறிச் செல்வதற்கு அவை ஊக்குவித்தன.

இது ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் பிரதான அக்கறைகளில் இன்னொன்றை சுட்டிக்காட்டுகிறது, அவற்றின் நோக்கங்கள் சிறிதும் சளைக்காத மட்டத்திற்கு அதே அளவு மூர்க்கமானவையே என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜனநாயகக் கட்சி மற்றும் அமெரிக்க இராணுவ-உளவு எந்திரத்தின் பெரும்பகுதியுடன் இணைந்து, இவையும், ஈரானை மண்டியிடச் செய்வதற்கும் அந்தப் பிரச்சாரத்தை ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் இராணுவ-மூலோபாயத் தாக்குதலுடன் ஒன்றிணைப்பதற்குமான சிறந்த மூலோபாய வழி சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரை நடத்துவதில் கவனம் குவிப்பதே ஆகும் என்று வாதிட்டு வந்திருக்கின்றன. சென்ற மாதத்தில் சிரியா மீது நடைபெற்ற அமெரிக்க-பிரெஞ்சு-பிரிட்டிஷ் வான் தாக்குதல்களுக்கு முன்னர் அரசியல் தலைவர்களாலும் முதலாளித்துவ ஊடகங்களாலும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்ட விதமாக, இந்த மாற்று ஏகாதிபத்திய மூலோபாயமானது, அமெரிக்க மற்றும் ரஷ்யப் படைகளுக்கு இடையிலான, அத்தனை பின்விளைவுகளும் சூழ்ந்த, நேரடியான இராணுவ மோதல்களில் துரிதமாகப் போய் முடியக்கூடும்.

அணு ஒப்பந்தத்தை வாஷிங்டன் தூக்கியெறிந்தது, ஒரு தீவிரமான நெருக்கடியையும் மற்றும் ஈரானின் முதலாளித்துவ தேசியவாத ஆட்சியின் மீதான ஒரு உலுக்கும் அம்பலப்படுத்தலையும் கொண்டதாகும். ஈரானில் வர்க்க முரண்பாடுகள் வளர்ந்து செல்வது குறித்து மிரட்சிகண்ட இஸ்லாமிக் குடியரசின் முதலாளித்துவ-மத குருமார்கள் ஆட்சியானது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு நெருக்கத்தை உருவாக்குவதிலும் அமெரிக்காவின் ஒரு புதிய மத்தியகிழக்கு வெளியுறவுக் கொள்கைக்கான ஒபாமாவின் மோசடியான வாக்குறுதிகளிலும் தனது நம்பிக்கைகளை வைத்தது. ஒபாமாவின் கீழ் தான் அமெரிக்கா லிபியாவைத் தாக்கியது, சிரியாவில் அதேபோன்றதொரு ஆட்சி-மாற்ற நடவடிக்கையைத் தொடக்கியது அத்துடன் எகிப்தில் இராணுவம் அதன் இரத்தக்களரியான பிடியை மீட்சி செய்வதை ஆதரித்தது என்பதை அது பொருட்படுத்தவில்லை.

ஈரான் ஒப்பந்தம் உருவான சமயத்தில் இருந்தே அதன் சூளுரைத்த எதிரியாக இருந்து வந்திருக்கும் ட்ரம்ப் பதவிக்கு வந்தது முதலாகவே, ஈரான், அமெரிக்காவின் கோபத்தில் இருந்து தங்களைப் பாதுகாப்பதற்கு ஐரோப்பிய நாடுகளிடம் பிரயாசையுடன் விண்ணப்பம் செய்து வந்திருக்கிறது. இதனிடையே, ஈரானிய முதலாளித்துவ வர்க்கம், ஏகாதிபத்தியங்களிடம் நற்பெயரெடுத்து முதலீட்டை ஈர்க்கும் தனது முயற்சிகளின் அடியொற்றி, அதன் தொழிலாள-வர்க்க-விரோத சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னோக்கி நெருக்கி வந்திருக்கிறது.

ட்ரம்ப்பின் அறிவிப்புக்கான பதிலிறுப்பில், ஈரான் ஜனாதிபதியான ஹசான் ருஹானியும் ஐரோப்பிய நாடுகளும் தாங்கள் அணு ஒப்பந்தத்தில் தொடர்ந்து நீடிக்க விரும்புவதாக அறிவித்துள்ளன. ருஹானி இதன்மூலம் கைத்தாங்கலாக நிற்பதற்கு வைக்கோல்குச்சிகளை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலதிக வாசிப்புகளுக்கு

அணுசக்தி "கட்டமைப்பு" உடன்படிக்கையில் ஈரான் அமெரிக்காவிற்கு பெரும் விட்டுக்கொடுப்புகளை அளிக்கிறது

[3 April 2015]

ஈரான் அணுஆயுத உடன்படிக்கை: அமெரிக்கா புதிய போர்களுக்கு தயாரிப்பு செய்கிறது

[6 April 2015]