ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

An aging liar peddles his wares

ஒரு முதுமையடையும் பொய்யர் தனது சரக்குகளுக்கு கடைவிரிக்கிறார்

By David North
17 May 2018

அலெக்ஸ் ஸ்ரைனர் தனது நிரந்தர-புரட்சி (permanent-revolution) வலைப் பதிவுத் தளத்தில் சமீபத்திய பதிவின் கீழான கருத்துரை பிரிவில், அனைத்துலகக் குழு, உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் மீது இன்னுமொரு வெறிக்கூச்சலான கண்டனத்தைப் பதிந்திருக்கிறார். [1] ஒரு உருப்படியான அரசியல் மற்றும் தத்துவார்த்த வாதத்தின் ஒரு சுவடும் கூட அதில் இல்லை. ட்ரொட்ஸ்கிச-விரோதிகள் மற்றும் ICFI-வெறுப்பாளர்களுக்கு இது காதில் தேன் பாய்ச்சியது போல் இருக்கக் கூடும், ஆனால் அனைத்துலகக் குழுவின் அரசியல் நிலைப்பாடுகளை ஆய்வுசெய்கின்ற மற்றும் அறிந்து வைத்திருக்கின்ற உலக சோசலிச வலைத் தளத்தின் மிகப் பல வாசகர்கள் மத்தியில் ஸ்ரைனர் மேலதிகமாய் மதிப்பிழப்பதற்கே இது வழிசெய்யும்.

ஸ்ரைனர் தனது ஆவேசத்தை பின்வரும் திட்டவட்டத்துடன் ஆரம்பிக்கிறார், “ICFI என்பதாக சொல்லப்படும் ஒன்று ட்ரொட்ஸ்கியின் பெயரைக் கைப்பற்றிக் கொண்டதைத் தவிர்த்து ட்ரொட்ஸ்கியின் பாரம்பரியத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.” அவர் இவ்வாறு நிறைவுசெய்கிறார், “உண்மையில், அவர்கள் பல தசாப்தங்களுக்கு முன்பே அந்த பாரம்பரியங்களுக்கு தங்களது முகத்தைத் திருப்பிக் கொண்டு அவர்கள் இன்றிருக்கக் கூடிய மலடான பிரிவாக ஆகி விட்டனர்.”

“தசாப்தங்களுக்கு முன்பாக என்றால்?” ஸ்ரைனர் இன்னும் துல்லியமாகக் கூற வேண்டும். மூன்று தசாப்தங்களுக்கு முன்பு (1985 இல்) ஹீலிக்கும் அவரது எடுபிடியான சவாஸ் மைக்கேலுக்கும் எதிரான ICFI இன் போராட்டத்திற்கு வேர்க்கர்ஸ் லீக் தலைமைகொடுத்திருந்ததே, அப்போதா? அல்லது நான்கு தசாப்தங்களுக்கு முன்பாக (1974 இல்) வேர்க்கர்ஸ் லீக், தேசியச் செயலாளர் பதவியில் இருந்து ரிம் வொல்ஃபோர்த் ஐ நீக்கியதே, அப்போதா? அல்லது, ஐந்து தசாப்தங்களுக்கு முன்பாக, 1963 இல், பப்லோவாதிகளுடனான கோட்பாடற்ற மறுஇணைவுக்கு ஜோசப் ஹான்சன் செய்த ஏற்பாட்டை ICFI நிராகரித்ததே, அப்போதா?; அல்லது ஆறு தசாப்தங்களுக்கு முன்பாக, 1953 இல், ஜேம்ஸ் பி.கனன், பப்லோவுக்கு எதிரான பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டு அனைத்துலகக் குழுவின் உருவாக்கத்தை அறிவித்தாரே அப்போதா? 

ICFI “தசாப்தங்களுக்கு முன்பே” ட்ரொட்ஸ்கிசத்தைக் கைவிட்டு விட்டது என்று கூறுவதுடன் சம்பந்தப்பட்டவை குறித்த எந்த சிந்தனைக்கும் ஸ்ரைனர் இடம்கொடுத்ததற்கான எந்த அறிகுறியுமே இல்லை. அவரது வெறித்தனமான அகநிலைவாதம் அவரை எங்கே இட்டுச் செல்லும் என்பது குறித்த யோசனையும் அவருக்கு இல்லை, அதைப் பற்றி அவர் அக்கறைப்படவுமில்லை. எல்லா நடைமுறைவாதிகளையும் போலவே, ஸ்ரைனரும், அவரது உடனடியான அகநிலை மற்றும் கன்னைவாத தேவைகளுக்கு பொருத்தமானதாக அவர் கருதுவதற்கேற்ப, வரலாற்றை -அவரது சொந்த வரலாறு உள்ளிட- பொய்மைப்படுத்துகிறார்.

ஸ்ரைனர் முதன்முதலில் 1971 இல் வேர்க்கர்ஸ் லீக்கில் சேர்ந்தார். பப்லோவாத அனைத்துலக செயலகம் (International Secretariat) ட்ரொட்ஸ்கிசத்தை சந்தர்ப்பவாதரீதியில் திருத்தியதற்கு எதிரான அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் அடிப்படையில் அவர் இயக்கத்திற்கு வென்றெடுக்கப்பட்டிருந்தார். போர்-எதிர்ப்பு இயக்கத்திற்குப் பிந்தைய சமயத்தில் நடுத்தர-வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் இடையே நிகழ்ந்த வலதுநோக்கிய மாற்றத்தால் பாதிக்கப்பட்டு, ஸ்ரைனர் 1979 இல் வேர்க்கர்ஸ் லீக்கில் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) இருந்து விலகினார். ஆனால் மறுபடியும் அவர் 1985 இல் வேர்க்கர்ஸ் லீக்குடன் தொடர்பை மீண்டும் உருவாக்கிக் கொண்டார். ஜெர்ரி ஹீலி மார்க்சிசத்தை பொய்மைப்படுத்தியதன் மீதும் பப்லோவாத சந்தர்ப்பவாதத்திடம் அவர் சரணடைந்ததன் மீதுமான வேர்க்கர்ஸ் லீக்கின் விமர்சனத்துடன் தனது முழுமையான உடன்பாட்டை ஸ்ரைனர் அறிவித்தார். வேர்க்கர்ஸ் லீக்கில் மீண்டும் இணைய வேண்டாம் என்று ஸ்ரைனர் முடிவுசெய்திருந்தார் என்றபோதும், தொடர்ந்து வந்த ஆண்டுகளில் வேர்க்கர்ஸ் லீக்/SEP உடன் அவர் நெருக்கமான தொடர்பைப் பராமரித்து வந்தார்.

கடைசியாக 1999 இல் மீண்டும் உறுப்பினராக அவர் விண்ணப்பித்தபோது, மீண்டும் அனுமதிக்க ஸ்ரைனர் விடுத்த விரிவான விண்ணப்பம் 1985 இல் அவர் ஏன் மீண்டும் இணையவில்லை என்பதை விளக்கியது:

“80களின் மத்திக்குள்ளாக, நான் மிகவும் வெற்றிகரமாகத் திகழ்ந்த ஒரு புதிய தொழில்முறை வாழ்க்கையை எனக்கு உருவாக்கிக் கொண்டுவிட்டிருந்தேன். வசதியான நடுத்தர வர்க்கத்தின் எல்லைக்குள் நான் நுழைந்து விட்டிருந்தேன், சுய-ஏமாற்றின் அத்தனை முயற்சிகளையும் தாண்டி, சுமூகமாகச் செல்லும் படகை உலுக்க நான் விரும்பவில்லை என்பது எனக்குத் தெரிந்தது.

“அரசியல்ரீதியாக இயக்கத்துடன் நான் ஐக்கியம் கொண்டிருந்தபோதும், எனது அன்றாட வாழ்க்கை புரட்சிகர சோசலிசத்தின் அக்கறைகளில் இருந்து வெகுதூரம் தள்ளி இருந்தது. நடுத்தர வர்க்க நியூ யோர்க் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக நான் இருந்தேன்.”

ஒரு நடுத்தர வர்க்க வாழ்க்கையில் திருப்தி கண்டிருந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட போதிலும், SEP இன் வேலை, குறிப்பாக உலக சோசலிச வலைத் தளத்தின் ஸ்தாபகம், அவரை அரசியல்ரீதியாகவும் புத்திஜீவித்தனரீதியாகவும் ஆதர்சித்திருந்ததாக, ஸ்ரைனர் அறிவித்தார். தனது அறிக்கையை ஒரு கிளர்ச்சியூட்டும் பிரகடனத்துடன் நிறைவுசெய்தார்:

“சோசலிசத்துக்கான போராட்டத்தில் ஒரு பங்கேற்பாளராக இருப்பதே நான் ஆற்ற விரும்புகின்ற பாத்திரம் என்பதை உணர்ந்தநிலைக்கு நான் இப்போது வந்துசேர்ந்திருக்கிறேன். அதற்குக் குறைந்த எதுவும் தத்துவத்தை நடைமுறைக்குள் கொண்டுசெலுத்தும் திருப்தியை எனக்குத் தரப் போவதில்லை. அதுவே சுதந்திரத்தின் உண்மையான சாரமாக இருக்கும்.”

அவரது புகழ்ச்சிப் பிரவாகம் இருந்தாலும், SEP —அவரது அரசியல் ஸ்திரமின்மையுடனான பல ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில்— சுதந்திரத்தின் இராஜ்ஜியத்திற்குள் ஸ்ரைனர் முதிர்ச்சியில்லாமல் பாய்ந்து விடாமல் தடுத்து வைப்பதே சிறந்தது என்று கருதியது. உறுப்பினராவதற்கான அவரது விண்ணப்பத்தை அது நிராகரித்தது, ஆனாலும் அவருடன் அரசியல் உறவுகளைப் பராமரித்தது. ஸ்ரைனரின் 1999 விண்ணப்பம் குறித்து இன்னுமொரு விடயத்தையும் கூறியாக வேண்டும்: இப்போது அவர் கண்டனம் செய்கின்ற அரசியல் நிலைப்பாடுகள் அத்தனையுமே ஏற்கனவே SEP இன் வேலைத்திட்டத்தின் பகுதியாக அப்போதே இருந்தன.

அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட போதும், ஸ்ரைனர் தொடர்ந்தும் உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரைகளில் பங்களிப்பு செய்து வந்தார். 2003 மார்ச்சில், ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பை எதிர்ப்பதற்காக சோசலிச சமத்துவக் கட்சியால் அழைக்கப்பட்டிருந்த ஒரு மாநாட்டில் அவர் பங்குபெற்றார். இந்த மாநாட்டிற்குப் பின்வந்த காலத்தில் தான் ஸ்ரைனர் SEP உடனான அரசியல் உடன்பாடின்மையின் அறிகுறி காட்டத் தொடங்கினார்.

இடிமுழக்கமென இயங்கியலை இழுக்கவல்ல ஸ்ரைனருக்கு, அவரது சொந்த அரசியல் பரிணாமம் குறித்த ஒரு சீர்மையான விவரக்கணக்கை வழங்கும் திறன் கிடையாது. அவரது சொந்த முரண்பாடுகளிலேயே அவர் மிரட்சியடைந்து விடுகிறார். ஆரம்பத்தில் பப்லோவாதிகள் மற்றும் சாக்ட்மன் வாதிகளது மார்க்சிச-விரோத அரசியலை எதிர்ப்பதற்காக 1971 இல் வேர்க்கர்ஸ் லீக்கில் இணைந்து விட்டு, இப்போது அவர்களது நிலைப்பாடுகளையே தழுவிக் கொள்வது ஏன் என்பதை ஸ்ரைனர் விளக்க முடியாதவராய் இருக்கிறார். தாங்கள் மட்டுமே “ட்ரொட்ஸ்கியின் பெயரால் பேசுகின்ற” “ஒரேயொரு குழுவினர்” என்பதைப் போன்ற ICFI அங்கத்தவர்களின் “கிட்டத்தட்ட மதம் போன்ற நம்பிக்கை”யை அவர் கண்டனம் செய்கிறார். 1938 இல் ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்ட இடைமருவு வேலைத்திட்டத்தை அனைத்துலகக் குழுவின் “குறுங்குழுவாதிகள்” கைவிட்டதற்கான மற்றுமொரு உதாரணம் இந்த மனத்திண்ணம் என்று அவர் அறிவிக்கிறார். எத்தனையோ பல விடயங்களுடன் சேர்த்து ஸ்ரைனர், இடைமருவு வேலைத்திட்டத்தின் நிறைவுப் பகுதியில் ட்ரொட்ஸ்கி “[நான்காம் அகிலத்தின்] இந்தக் காரியாளர்களுக்கு வெளியில், புரட்சிகர நீரோட்டம் என்ற பெயருக்கு உண்மையிலேயே பொருத்தமான ஒன்றேயொன்றும் கூட இந்த பூகோளத்தில் கிடையாது” என்று அறிவித்திருந்தார் என்பதையும் மறந்து விட்டதாகவே தெரிகிறது. “குறுங்குழுவாத” லியோன் ட்ரொட்ஸ்கி தான் இவ்வாறு எழுதினார்.

ஸ்ரைனரின் அரசியல் பரிணாமம் ரிம் வொல்ஃபோர்த்தின் பரிணாமத்தை நினைவுக்குக் கொண்டுவருகிறது. கட்சியின் மற்றும் அதன் உறுப்பினர்களின் அரசியல் பாதுகாப்பில் கடுமையாக சமரசம் செய்து கொண்டதையடுத்து, 1974 ஆகஸ்டில் வேர்க்கர்ஸ் லீக்கின் தேசியச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்த சிறிதுகாலத்தில், வொல்ஃபோர்த் அமைப்பை விட்டே வெளியேறினார். அடுத்த ஒரு சில மாதங்களுக்குள்ளாக, அவர் பப்லோவாத சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியில் (Socialist Workers Party) மறுஇணைவு கண்டு, அனைத்துலகக் குழுவுக்கு எதிராகவும் வேர்க்கர்ஸ் லீகிற்கு எதிராகவும் அகநிலையாக ஊக்குவிக்கப்பட்ட அவதூறுகளின் ஒரு பிரச்சாரத்தைத் தொடக்கினார்.

அனைத்துலக் குழு மீது ரிம் வொல்ஃபோர்த் தொடுத்த காட்டுத்தனமான தாக்குதல்களை மறுத்த நான்காம் அகிலமும் ஓடுகாலி வோல்ஃபோர்த்தும் என்ற ஆவணத்தை 1976 இல் என்னுடன் இணைந்து ஸ்ரைனரும் எழுதியிருந்தார். அந்த ஆவணத்தின் அத்தியாயம் ஒன்றிற்கு “ஒரு மூப்படையும் பொய்யர் தனது சரக்குகளைக் கடைவிரிக்கிறார்” என்று தலைப்பிடப்பட்டது. ஸ்ரைனருக்கு, அவரும் பங்குபெற்றிருந்த வரலாறு, நடந்துமுடிந்த மிகவும் பழைய கதையாக தெரிகிறது. 40க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பாக வொல்ஃபோர்த் கையிலெடுத்த அதே அவதூறுகளையே ஸ்ரைனர் இப்போது ICFIக்கும் SEPக்கும் எதிராக வீசுகிறார். ஸ்ரைனரும் ஒரு மூப்படைந்து செல்லும் பொய்யராக ஆகியிருக்கிறார்.

ஒருகாலத்தில் அவர் நம்புவதாகக் கூறிய அத்தனையையும் இப்போது மறுதலிக்கின்ற மற்றும் கண்டனம் செய்கின்ற நிலைக்குச் சென்றது எப்படி, ஏன் என்பதை ஸ்ரைனரால் விளக்க முடியவில்லை. ஆனால் அவரது அரசியல் சீரழிவுக்கான விளக்கம் 1999 இல் ஸ்ரைனர் அளித்த வெளிப்படையான ஒப்புதலில் காணத்தக்கதாய் இருக்கிறது. “வசதியான நடுத்தர வர்க்கத்தின் எல்லைக்குள் நான் நுழைந்து விட்டிருந்தேன், சுய-ஏமாற்றின் அத்தனை முயற்சிகளையும் தாண்டி, சுமூகமாகச் செல்லும் படகை உலுக்க நான் விரும்பவில்லை என்பது எனக்குத் தெரிந்தது... நடுத்தர வர்க்க நியூயோர்க் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக நான் இருந்தேன்.”

ஸ்ரைனர் அப்படித் தான் இருந்தார். இன்றும் அப்படித் தான் இருக்கிறார்.

[1] “காரல் மார்க்ஸ் 200” (http://forum.permanent-revolution.org/2018/05/karl-marx-200-years-later.html) இன் கருத்துரை பிரிவைக் காணவும்.

ஸ்ரைனரின் அரசியல் பரிணாமம் மற்றும் ICFI மீதான அவரது தாக்குதல் சம்பந்தப்பட்ட தத்துவார்த்த மற்றும் மெய்யியல் பிரச்சினைகளது ஒரு விரிவான பகுப்பாய்வுக்கு காணவும்: The Frankfurt School, Postmodernism and the Political of the Pseudo-Left: A Marxist Critique.