ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Global military spending at record $1.7 trillion

உலகளாவிய இராணுவ செலவுகள் அதியயுர் மட்டமான 1.7 ட்ரில்லியன் டாலரை அடைந்துள்ளது

Niles Niemuth
4 May 2018

சமாதானத்திற்கான ஸ்டாக்ஹோம் சர்வதேச ஆய்வு மையம் (SIRPI) வியாழனன்று வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, உலகளாவிய இராணுவ செலவினங்கள் 2017 இல் பனிப்போருக்குப் பிந்தைய அதன் அதிகபட்ச மட்டத்திற்கு 1.7 ட்ரில்லின் டாலருக்கும் அதிகமாக சாதனையளவை எட்டியுள்ளன.

எந்தளவுக்கு ஆதாரவளங்கள் அழிவுகரமான விளைவுகளுக்கு சீரழிக்கப்படுகின்றன என்பதைக் குறித்து இந்த அறிக்கை சில கருத்தை வழங்குகிறது. SIRPI தகவல்களின்படி, உலகின் வருடாந்தர இராணுவ செலவுகளில் வெறும் 13 சதவீதம் உலகின் வறுமை மற்றும் பசியைப் போக்கவும்; நான்கு சதவீதம் உலக மக்களுக்கான உணவு பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவும்; ஐந்து சதவீதம் சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்யவும்; 12 சதவீதம் ஒவ்வொருவருக்கும் கல்வி வழங்கவும்; மூன்று சதவீதம் சுத்தமான குடிநீர் மற்றும் முறையான வடிகால் வசதிகளை வழங்கவும் போதுமானதாகும்.

2017 இல் அமெரிக்கா 610 பில்லியனுக்கும் அதிகமான டாலரை அதன் பரந்த இராணுவ எந்திரத்திற்கு வாரியிறைத்து, உலகின் மிகப்பெரிய இராணுவச் செலவாளியாக நிற்கிறது, இது அதற்கடுத்து இருக்கும் ஏழு நாடுகள் இராணுவத்திற்குச் செலவிடும் கூட்டுத் தொகையை விட அதிகமாகும். சமீபத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட 2018 பாதுகாப்புத்துறை வரவு-செலவு திட்டக்கணக்கு இந்த தொகையை 700 பில்லியன் டாலருக்கு உயர்த்துகிறது.

1991 ஈராக் படையெடுப்பில் தொடங்கி கடந்த கால் நூற்றாண்டாக அமெரிக்கா தொடர்ந்து போரில் ஈடுபட்டுள்ளது, அப்படையெடுப்பைத் தொடர்ந்து அந்த தசாப்தத்தின் போக்கில் ஹைட்டி, சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலும் மற்றும் யூகோஸ்லாவியாவுக்கு எதிராக வான்வழி போரிலும் இராணுவ தலையீடுகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்தன. 2001 இல் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு தொடங்கி, 2000 ஆம் ஆண்டுகள் உலகளாவிய "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" தொடக்கத்தைக் கண்டன. அதை தொடர்ந்து 2003 இல் ஈராக் படையெடுப்பு வந்தது, 2004 இல் ஆப்கானிஸ்தானின் நீட்சியாக பாகிஸ்தானுக்குள் டிரோன் தாக்குதல்கள் தொடங்கப்பட்டன, 2011 இல் லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரும், அதே ஆண்டின் தொடக்கத்தில் சிரியாவில் சிஐஏ தூண்டிவிட்ட உள்நாட்டு போரும் தொடர்ந்தன, அதனைத் தொடர்ந்து ஈராக்கில் மூன்றாவது போர் நடத்தப்பட்டது.

ரஷ்ய-ஆதரவிலான மற்றும் ஈரானிய-ஆதரவிலான பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைத் தூக்கியெறிவதற்காக, அமெரிக்கா ஆயுதமேந்த செய்த மற்றும் நிதியுதவி வழங்கிய இஸ்லாமியவாத பினாமி படைகளால் ஓர் ஆட்சி-மாற்றத்திற்கான நடவடிக்கையாக தொடங்கிய சிரியப் போர், நிறைய ரஷ்யர்களை அமெரிக்கா கொன்றுள்ளது என்று வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவின் பெருமைபீற்றலுடன், சிரியாவில் ஈரானிய இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் ஏவுகணை தாக்குதல்களுடன், சிரிய அரசு அமைப்பிடங்களுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சின் ஒரு கூட்டு ஏவுகணை தாக்குதல் தொடங்கப்பட்ட நிலையில், அமெரிக்காவுக்கும் ரஷ்யா மற்றும் ஈரானுக்கும் இடையே ஒரு மோதலாக பரிணமித்துள்ளது.

1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கியவர்கள் "வரலாறு முடிந்துவிட்டதாக" —முதலாளித்துவத்தின் இறுதி வெற்றியாகவும் சோசலிசம் தோற்றுவிட்டதாகவும்—பிரகடனப்படுத்தினர். அவர்கள் தாராளவாத ஜனநாயகம், சமாதானம் மற்றும் செல்வவளத்தின் ஒரு புதிய சகாப்தத்தின் விடியலைக் கொண்டாடினர்.

ஆனால் ஒரு கால் நூற்றாண்டுக்கு பின்னரும், முதலாளித்துவம் தீவிரமான மீள்ஆயுதமயமாக்கம் மற்றும் போரின் ஒரு பேரச்சமூட்டும் உலகைத்தான் உருவாக்கியுள்ளது, மில்லியன் கணக்கான அகதிகள் இராணுவமயப்பட்ட எல்லைகளையும் இனவாத வேட்டையாடல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர், கடுமையான சமூக செலவினக் குறைப்புடன் சேர்ந்து சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது, அதி-வலது மற்றும் பாசிசவாத கட்சிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன என்பதோடு, உலகளவில் அரசாங்கங்கள் எதேச்சதிகார ஆட்சிக்கு திரும்புகின்றன.

இப்போது பிராந்திய போர்கள் உலகை மறுபங்கீடு செய்வதற்கான ஒரு மூன்றாம் உலக போராக மாற்றமடைந்து வருகின்றன. ஒவ்வொரு பிரதான சக்தியும் மீள்ஆயுதமேந்தி வருவதுடன், 2008 உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் சர்வதேச இராணுவ செலவுகளை அண்மித்து 10 சதவீதம் அதிகரிக்க இட்டுச் சென்றுள்ளன.

கடந்த தசாப்தத்தில் இராணுவச் செலவுகள் குறிப்பாக மத்திய ஐரோப்பாவிலும் (20 சதவீதம்) கிழக்கு ஐரோப்பாவிலும் (33 சதவீதம்) கூர்மையாக அதிகரித்திருப்பதானது, அமெரிக்காவும் நேட்டோ கூட்டாளிகளும் ரஷ்யாவுடன் போருக்கு தயாராகி வருவதைப் பிரதிபலிக்கிறது. நேட்டோவின் 29 அங்கத்துவ நாடுகள் இப்போது உலகின் இராணுவ செலவுகளில் பாதிக்கும் அதிகமானதைக் கணக்கில் கொண்டுள்ளன.

ஒபாமாவின் கீழும் இப்போது ட்ரம்பின் கீழும், வாஷிங்டன் இராணுவ செலவுகளை இன்னும் அதிகரிக்குமாறு அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கு அழுத்தமளித்துள்ளது. ஜேர்மனியின் புதிய மாபெரும் கூட்டணி அரசாங்கம் அதன் இராணுவச் செலவுகளை அண்மித்து இரட்டிப்பாக்கி, 2024 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை எட்ட சூளுரைத்துள்ளது, அதேவேளையில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இராணுவச் செலவுகளை 35 சதவீத அளவுக்கு அதிகரிக்க திட்டமிட்டு வருவதுடன், கட்டாய இராணுவச் சேர்க்கையை மீண்டும் கொண்டு வருவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்நாடுகள் அனைத்திலும், மீள்ஆயுதமயமாக்கம் என்பது சமூக திட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதான கடுமையான தாக்குதலுடன் சேர்ந்து நடத்தப்படுகின்றன.

ரஷ்யா இராணுவ பலத்தைக் கொண்டு அதன் அண்டைநாடுகளை அச்சுறுத்துவதாக பிரகடனப்படுத்தும் இடைவிடாத அமெரிக்க பிரச்சாரம் ஒருபுறம் இருக்க, வருடாந்தர இராணுவச் செலவுகளில் மிகப் பெரிய சரிவுகளைக் கண்டுள்ள நாடுகளில் அந்நாடும் ஒன்றாக உள்ளது, 2016 இல் இருந்து அதன் இராணுவச் செலவுகளில் 20 சதவீதம் சரிந்துள்ளன. அமெரிக்கா செலவிட்டதில் பத்தில் ஒரு பங்கிற்கு சற்று அதிகமாக, 2017 இல் கிரெம்ளின் அதன் இராணுவத்திற்காக 66.3 பில்லியன் டாலர் செலவிட்டது.

இதற்கிடையே, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஒரு முக்கிய கூட்டாளியான சவூதி அரேபியா, 2017 இல் 69.4 பில்லியன் டாலர் செலவிட்டு, ரஷ்யாவின் மூன்றாம் இடத்தை அது எடுத்தது. அரேபிய தீபகற்பத்தின் அந்த எண்ணெய் வளம் மிக்க முடியாட்சி, உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சதவீதமாக, அதன் ஆண்டு பொருளாதார உற்பத்தியில் 10 சதவீதத்தை அதன் இராணுவத்திற்குச் செலவிடுகிறது. சவூதி அரேபியாவின் இராணுவ தளவாடங்களில் பெரும்பான்மை அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்டவை, இவை அதன் அண்டைநாடான யேமனில் அதன் படுகொலைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன என்றாலும், அதன் பிரதான இலக்கான ஈரானுக்கு எதிரான ஒரு போருக்கு அதுவொரு முன்னறிவிப்பாகவே உள்ளன.

ஆசியாவும் ஓஷியானியாவும் அடுத்தடுத்து 29 ஆண்டுகள் ஈடிணையற்ற இராணுவ செலவு அதிகரிப்பைக் கண்டுள்ளன. அப்பிராந்தியம் ஒபாமாவின் "ஆசியாவை முன்னிலை" என்றழைக்கப்பட்டதன் கீழ் மிகப் பெரியளவில் இராணுவ ஆயத்தப்பாட்டைக் கண்டது, இது ட்ரம்பின் கீழ் தொடர்ந்து வருகிறது. அப்பிராந்தியத்தில் ஆயுதப் போட்டி, நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ், இந்தியாவைக் கொண்டு தீவிரப்படுத்த உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது, அந்நாடு சீனா மற்றும் பாகிஸ்தானுடன் போருக்குத் தயாரிப்பு செய்ய அந்நாட்டின் இராணுவப் படைகளை விரிவாக்கி நவீனப்படுத்தும் திட்டங்களைத் தொடங்கி உள்ளது.

அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எதிரான அதன் போர் தயாரிப்புகளை, வாஷிங்டனின் மிகவும் அபாயகரமான எதிர்விரோதியாக கருதப்படும் சீனாவுடனான ஓர் இராணுவ மோதலுக்கு முன்னோட்டமாக பார்க்கிறது. அமெரிக்கா அப்பிராந்தியத்தில் அதன் கடற்படைகளை வேகமாக ஆயத்தப்படுத்தி வருவதுடன், அப்பிராந்தியத்தில் சீனாவைச் சுற்றி வளைக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்புமுறைகளையும் மற்றும் ஏனைய பிற இராணுவ நிறுவுதல்களையும் கட்டமைத்து வருகிறது, சீனா அதன் சொந்த இராணுவ ஆயத்தப்பாடுகளுடன் விடையிறுத்து வருகிறது.

ஜப்பான், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய சமாதானவாத பாசாங்குத்தனங்கள் அனைத்தையும் ஓரங்கட்டி, மீள்இராணுவமயமாதலுக்கு சென்று கொண்டிருக்கிறது.

அமெரிக்க இராணுவ செலவுகள் வரலாற்றிலேயே மிக உயரத்திற்கு அதிகரித்துள்ள நிலையில், பென்டகனோ சிலிக்கன் மண்டலத்தில் அமைக்கப்பட்ட ஒரு சிறப்புப் பிரிவான பாதுகாப்புத்துறைக்கான புதிய கண்டுபிடிப்பு பரிசோதனை கூடம் என்பதை உருவாக்குவதில், தொழில்நுட்ப பெருநிறுவனங்களுடன் அதன் நெருக்கமான உறவுகளை முன்பினும் நெருக்கமாக ஸ்தாபித்துள்ளது. சிஐஏ மற்றும் பென்டகன் இரண்டிடம் இருந்தும் அமசன் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது, டிரோன் படுகொலை திட்டத்தை விரிவாக்குவதற்காக கூகுள் பென்டகனுடன் கைகோர்த்துள்ளது.

பில்லியனர்களின் கரங்களில் முன்னெப்போதும் விட மிக அதிகளவில் செல்வ வளம் குவிக்கப்படுவதும், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பெருநிறுவனங்கள் அரசு எந்திரத்துடன் ஒருங்கிணைக்கப்படுவதும், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதலும், இணையத்தில் சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு குரல்களைத் தணிக்கை செய்வது உட்பட ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதும் என இவையனைத்தும் சாதனை அளவிலான இராணுவ செலவுகளைப் பின்தொடர்கின்றன.

போர், சமூக செலவின குறைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதலுக்கான மூலகாரணம், நாடிதளர்ந்த, காலாவதியாகிப்போன இந்த முதலாளித்துவ அமைப்புமுறையாகும். இது சமூகத்தில் மேலாதிக்கம் கொண்டுள்ள நிதியியல் செல்வந்த தட்டுக்களைச் செழிப்பாக்குவதில் ஒவ்வொரு சமூக தேவையையும் அடிபணியச் செய்கிறது.

ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டமைப்பதற்காக பின்வரும் கோட்பாடுகளை நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு 2016 இல் எடுத்துரைத்தது:

* போருக்கு எதிரான போராட்டமானது, மக்கள்தொகையின் முற்போக்கான அனைத்து கூறுபாடுகளையும் தன் பின்னால் ஐக்கியப்படுத்தி, சமூகத்தின் மிகப்பெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.

* இந்த புதிய போர்-எதிர்ப்பு இயக்கம், முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிசத் தன்மை கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படை காரணமான இந்த பொருளாதார அமைப்புமுறைக்கும் மற்றும் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டம் இல்லாமல், போருக்கு எதிராக எந்த பொறுப்பான போராட்டமும் இருக்க முடியாது.

* ஆகவே இந்த புதிய போர்-எதிர்ப்பு இயக்கம், அத்தியாவசியமான வகையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாகவும் குழப்பத்திற்கிடமின்றியும் சுயாதீனமாகவும், அவற்றிற்கு விரோதமாகவும் இருந்தாக வேண்டும்.

* அனைத்திற்கும் மேலாக, இந்த புதிய போர்-எதிர்ப்பு இயக்கம், சர்வதேசமயப்பட்டதாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஓர் ஒன்றுபட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டியதாக இருந்தாக வேண்டும். முதலாளித்துவத்தின் நிரந்தரமான போருக்கு தொழிலாள வர்க்கத்தின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கைக் கொண்டு விடையிறுக்க வேண்டும்—அதாவது, தேசிய-அரசு அமைப்புமுறையை ஒழிப்பதும், ஓர் உலக சோசலிச கூட்டமைப்பை ஸ்தாபிப்பதுமே அதன் மூலோபாய இலக்காக இருக்கும். இது உலகின் வளங்களை பகுத்தறிவார்ந்த, திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்வதை சாத்தியமாக்கும் என்பதோடு, இதன் அடிப்படையில், வறுமை ஒழிக்கப்படுவதும் மற்றும் மனித கலாச்சாரம் புதிய மட்டங்களுக்கு உயர்வதும் சாத்தியமாகும்.