ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

North and South Korea hold “peace” summit

வட மற்றும் தென் கொரியாக்கள் “சமாதான” உச்சிமாநாட்டை நடத்துகின்றன

By James Cogan 
27 April 2018

வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னும் அவர்களது மூத்த அமைச்சர்களுடன், 1953 இல் கொரிய போரை முடிவுக்கு கொண்டு வந்த ஒரு தற்காலிக போர் நிறுத்த நடவடிக்கைக்கு பின்னர் கொரிய தீபகற்பத்தை பிரித்த எல்லை பகுதிக்கு மிக அருகில் அமைந்த “அமைதி மாளிகை” யில் இன்று சந்திக்கின்றனர்.  

மிகுந்த கவனத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு முன்கூட்டியே நன்கு தயாரிப்பு செய்யப்பட்டுள்ளதோடு, தென் கொரியா முழுவதிலும் இதன் பெரும்பகுதி நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டு வருகிறது. வட கொரியா “அணுவாயுத ஒழிப்புக்கு” ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது அதன் சிறிய அணுவாயுத படைக்கலத்தை அழித்தொழிக்க வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கையின் பேரில் இது நடத்தப்படுகிறது. இரு தலைவர்களும் கூட, கொரியப் போரை உத்தியோக பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு சமாதான உடன்படிக்கை பற்றியும், வட மற்றும் தென் கொரியாக்களின் பொருளாதார உறவுகளின் மேம்பாடு பற்றியும் இதில் விவாதிக்கின்றனர்.  

வட கொரிய ஆட்சி, அணுவாயுதம் மற்றும் ஏவுகணைகள் சோதனையை “தற்காலிக நிறுத்தம்” செய்வதாக அறிவித்துள்ளதே தவிர, “அணுவாயுத ஒழிப்பை” ஏற்றுக்கொள்வதாக எந்தவொரு சமிக்ஞையும் அது செய்யவில்லை. அவ்வாறு நடந்தால், அது ஒரு நீண்டகாலம் நடைமுறையில் இருக்கும் ஒரு செயல்முறையாக இருக்கவேண்டும் என பெரும்பாலும் இது வலியுறுத்தப்படும்.

வட கொரியா “குண்டுவீச்சினால் உக்கிரமாக” அழிக்கப்படும் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் மற்றும் அதன் மீது திணிக்கப்பட்ட கடும் பொருளாதாரத் தடைகள் ஆகியவை உள்ளிட்ட வட கொரியா மீதான அமெரிக்காவின் ஆக்கிரோஷமான நிலைப்பாட்டின் விளைவாகவே இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக ட்ரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. பொருளாதாரத் தடைகள் விதிப்பதில் இருந்த சீனாவின் ஒத்துழைப்பு வட கொரிய பொருளாதாரத்தை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கி, 90 சதவிகிதத்திற்கு அதிகமாக அதன் ஏற்றுமதியையும் வீழ்ச்சியடையச் செய்தது, மேலும் அந்நாட்டின் 25 மில்லியன் மக்களை துன்பத்திற்குள்ளாக்கும் கடுமையான சமூக நெருக்கடியை இன்னும் மோசமாக்கியது என்று அறிக்கை குறிப்பிடுகிறது.     

இன்றைய கூட்டம் வட கொரியாவின் “அணுவாயுத ஒழிப்பை”  நோக்கிய அடுத்தகட்ட நகர்வுகளை விளைவிக்கும் நிபந்தனையுடன் கூடியது என்று தெரிவித்து, மே அல்லது ஜூன் மாதம் கிம் ஐ சந்திக்கவிருப்பதாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். பதவிக்கு வரவிருக்கும் தேசிய வெளியுறவுச் செயலரும் மற்றும் தற்போது CIA இயக்குநருமான மைக் பொம்பியோ, ஆரம்பகட்ட விவாதங்களுக்காக பெரியவெள்ளி விடுமுறையில் வட கொரியாவிற்கு ஒரு இரகசிய பயணம் மேற்கொண்டார். பொம்பியோ பயணத்தைப் பற்றி தெரிவித்து பின்னர், ஒப்பந்தத்திற்கான சாத்தியம் பற்றி ட்ரம்ப் தொடர்ந்து பெருமையடித்துக் கொண்டார். வட கொரிய ஆட்சி வாஷிங்டன் ஆணையிடும் விதிமுறைகளை கொள்கை ரீதியில் எதிர்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதையே இது தெரிவிக்கிறது.     

பேரழிவுகர போர் அபாயத்திலிருந்து தென் கொரியாவை விடுவிப்பதாகவும், கொரியர்களின் மறு ஒற்றுமைக்கான காரணத்தை முன்னெடுத்து செல்வதாகவும் கூறி, மூன் நிர்வாகம் தன்னையே அதற்கான ஒரு அரசாங்கமாக முன்னெடுக்கும் வகையில், முடிந்த வரை இந்நிகழ்வை பயன்படுத்தியது.

இந்த இராஜதந்திர ஊமைக் கூத்தில் கிம் ஜோங்-உன் அவரது குறிப்பிட்ட பாத்திரமேற்று, கொரிய தீபகற்பத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்து அவரது ஆட்சியின் அர்பணிப்புக்கு உறுதிபூண்டு ஊடகங்களின் தேவைக்கேற்ப அபிநயம் பிடித்தார். அதற்கு ஈடாக, வாஷிங்டனும் சியோலும், இது தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க முடியும் என்பதற்கும், இதன் செல்வாக்கையும் சலுகைகளையும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதற்கும் வட கொரிய ஆளும் குழுவிற்கும் இராணுவ எந்திரத்திற்கும் ஒரு உத்திரவாதத்தை அளிக்க வேண்டும் என்பதாகும். இருப்பினும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இத்தகைய உத்திரவாதங்கள் கடந்த காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளன என்பது அறியப்பட்டதே.  

அமெரிக்கா ஆணையிட்ட விதிமுறைகளின் அடிப்படையிலான கொரிய தீப்கற்பத்தில் நல்லிணக்கத்தை நோக்கிய எந்தவொரு உறுதியான வளர்ச்சியும் பெய்ஜிங்கினால் ஆழ்ந்த கவலைக்குரிய விடயமாகவே பார்க்கப்படும். முறைப்படி, வட கொரியா சீனாவின் ஒரு நட்பு நாடாக இருக்கிறது. 1953 முதல், சீனாவின் வடக்கு எல்லைகளுக்கும், தென் கொரியாவிலும் ஜப்பானிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ள கணிசமான அமெரிக்க படைகளுக்கும் இடையே இராணுவமயமாக்கப்பட்ட தாக்குதல் வேகத்தை தணிக்கும் கருவியாகவே இது செயல்பட்டு வந்துள்ளது. 

அமெரிக்க செல்வாக்கு மண்டலத்திற்குள் வட கொரியாவை இணைக்க வேண்டும் என்பதே அமெரிக்க, தென் கொரிய ஆளும் வர்க்கங்களின் முக்கிய கன்னைகளின் தசாப்தங்கள் நீண்ட நோக்கமாக இருந்துள்ளது. 1990 களின் ஆரம்பத்தில் இருந்து, அந்த நோக்கம் போர் மற்றும் ஆட்சி மாற்றத்தின் மூலம் எட்டப்பட வேண்டுமா அல்லது தற்போதைய ஆளும் குழுவுடனான ஒரு உடன்பாட்டின் மூலம் எட்டப்பட வேண்டுமா என்ற வகையிலேயே வாஷிங்டனில் நிலவிய தந்திரோபாய மோதல்கள் மையம் கொண்டிருந்தன.     

ஒருவேளை வட கொரிய ஆட்சி இராஜதந்திர குட்டிக்கரணம் அடிக்குமானால், சுய பாதுகாப்பு மற்றும் கணிசமான நிதி வெகுமதிகளுக்கு ஈடாக, அமெரிக்க மற்றும் தென் கொரிய நலன்களுக்காக சேவையாற்றும் ஒரு காவல் காக்கும் நாடாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியதாகவே பெய்ஜிங்கின் மோசமான சூழ்நிலை இருக்கும்.  

எந்தவொரு உறுதியான முடிவுகளையும் வரைவது காலத்திற்கு முந்திய ஒன்று என்றாலும், அத்தகைய விளைவிற்கான சாத்தியப்பாடு தவிர்க்க முடியாது. அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவின் மூலோபாய மற்றும் இராணுவ நிலைப்பாட்டை பெருமளவு இல்லாதொழிக்க முனைந்து வருகிறது. வட கொரியாவில் மனித உரிமைகள் பற்றி எந்தவொரு உண்மையான அக்கறையையும் அது ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. பியோங்யாங் கொண்டிருக்கும் சிறியளவிலான அணுவாயுத படைக்கலமானது, வட கொரியாவை அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் சக்தியின் பயன்பாடாக இருக்கும். இது  பரந்தளவிலான சிக்கலாகவுள்ளது என்பது மட்டுமே இதன் உண்மையான கவலையாகும்.   

தென் கொரிய முதலாளித்துவ வர்க்கம் மறு ஒருங்கிணைவு பற்றி தொடர்ந்து பேசுகிறது, ஆனால், 1990 களின் “சூரியஒளி கொள்கையை” ஆதிக்க கன்னைகள் கவனத்தில் கொள்ள வேண்டும். வட கொரிய சர்வாதிகாரம் அப்படியே நீடிக்கும், ஆனால் வடக்கின் பெரும்பகுதி பன்னாட்டு முதலீட்டிற்கும் சுரண்டலுக்கும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். தென் கொரியா மற்றும் பிற இடங்களின் பெருநிறுவனங்களுக்காக மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டு மலிவுகூலி உழைப்பாளிகளாக வழங்கப்படவிருக்கும், பெருமளவிலான வட கொரியர்களின் வருகைக்கு எல்லைப் பகுதியில் தொடர்ந்து தடை செய்யப்பட்டிருக்கும்.  

தென் கொரிய தொழிலாள வர்க்கம், இதற்கு வேலை அழிப்பு வடிவில் விலை கொடுக்க வேண்டியிருக்கும் அல்லது அவர்களது ஊதியங்களில் வெட்டுக்களையும், வட தொழிலாளர்களுக்கு எதிராக “போட்டிமிக்க” வேலை நிலைமைகளையும் ஒப்புக்கொள்ள நேரிடும் எனவும் கோருகிறது. 

இத்தகைய “மறுஒருங்கிணைப்பு” என்பது வட கொரிய ஆட்சியை அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்குள் அடிப்படையில் இணைத்து வருகிறது என்பதே பெய்ஜிங்கின் பெரும் கவலையாக உள்ளது. அதிகரித்துவரும் மூலோபாய மற்றும் பொருளாதார போட்டியும் மோதலும் நிறைந்த நிலைமைகளின் கீழ் வடக்கை நோக்கி அதன் இராணுவப் படைகள் நகராது என்ற வாஷிங்டனின் எந்தவொரு உத்திரவாதமும் பயனற்றதே. ஒருவேளை சீனாவின் திசையை நோக்கி வட கொரியாவின் ஏவுகணைகள் இலக்கு வைத்திருந்தன என்றால், சிறியளவிலான அணுவாயுதங்களை அது கொண்டிருப்பதை அமெரிக்காவின் ஆளும் உயரடுக்கு ஏற்கத்தக்கதாக கூட இருக்கும்.   

பியோங்யாங் உடனான அமெரிக்காவின் எந்தொரு நல்லிணக்கத்தின் முக்கிய விளைவும், பெரும் வல்லரசு போட்டிகளை முன்னுக்கு கொண்டுவருவதாக இருக்கும். வட கொரியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ரஷ்யாவும், அத்தகைய நிகழ்வுகள் குறித்து சீனாவை போலவே எச்சரிக்கையாக இருக்கும். பெய்ஜிங்கும் மாஸ்கோவும் அவர்களது நலன்களை பாதுகாக்கும் முயற்சியில் வட கொரிய ஆட்சிகளின் கன்னைகளுடன் சதியாலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன என்பதை கவனமாக அனுமானிக்க முடியும்.

இந்த தற்போதைய நிகழ்வுகளை பின்னடைவாக கருதும் மற்றொரு சக்தியாக ஜப்பான் உள்ளது. ஜப்பானிய ஆளும் வர்க்கம், இராணுவ சக்தியை பலப்படுத்தும் அதன் திட்டமிட்ட பிரச்சாரத்திற்கான முக்கிய சாக்குப்போக்காக, வட கொரியாவினால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை பயன்படுத்தியுள்ளதோடு, அவர்களது பயன்பாட்டிற்காக அரசியலமைப்புசட்டரீதியான மட்டுப்படுத்தல்களையும் நீக்கியுள்ளது. ட்ரம்ப் நிர்வாகம், கிம் மீதான அதன் இராணுவ அச்சுறுத்தல்களில் இருந்து இராஜதந்திர அனுசரிப்புக்கு மாறி, பிரதம மந்திரி சின்ஸோ அபே இன் அரசாங்கத்தின் விடயத்தில் கண்மூடித்தனமாக ஒருதலைப்பட்சமாக இருந்தது.

வட கிழக்கு ஆசியாவை தீவிர பதட்டங்களுக்கு உட்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயாரிப்புகள், தென் கொரியாவில் அதன் தூதராக சேவையாற்றும் அட்மிரல் ஹாரி ஹாரிஸை அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் (Pacific Command-PACOM) தளபதியாக நியமிக்கும் ட்ரம்ப் நிர்வாக முடிவில் பிரதிபலித்தன. ஆஸ்திரேலியாவுக்கான அமெரிக்க தூதராக ஹாரிஸ் நியமிக்கப்பட்டார், மேலும் இந்த வாரத்தில், இந்த பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பாரா என்பது உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு பதிலாக, அட்மிரலின் நியமனம் சியோலில் இன்னும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பொம்பியோ ட்ரம்பிடம் முன்வைத்தார். 

அமெரிக்க இராணுவத்தில் மிகவும் வெளிப்படையான சீன விரோத நபராக ஹாரிஸ் இருந்து வருகிறார். வட கொரியா உடனான பேச்சுவார்த்தைகள் முறிந்து போகுமானால் மற்றும் ட்ரம்ப் நிர்வாகம் யுத்த கொள்கைக்கு மீண்டும் திரும்புமானால், தென் கொரிய அரசாங்கம் மற்றும் ஆயுத படைகளின் உறுதிப்பாட்டிற்கு முட்டுக் கொடுப்பது அவரது நோக்கமாக இருக்கும்.

ட்ரம்ப்-கிம் உச்சிமாநாட்டிற்கும், மேலதிக உடன்பாடுகளுக்கும் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடருமானால், பியோங்யாங் உடன் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளின் மையமாகவும், மற்றும் சீனாவுடனான அமெரிக்க மோதலுக்குள் வட கொரியாவை சேர்ப்பதற்கான முயற்சிகளின் மத்தியில் ஹாரிஸ் இருப்பார்.

ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:

வடகொரியாவுடன் ட்ரம்ப்பின் திரைமறைவு இராஜதந்திரம் [PDF]

[19 April 2018]

போர் மற்றும் உள்நாட்டு நெருக்கடிக்கு மத்தியில் ட்ரம்ப்பும் அபேயும் சந்திக்கின்றனர் [PDF]

[18 April 2018]