ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French rail workers demonstrate after voting against Macron’s privatization

மக்ரோனின் தனியார்மயமாக்கத்தை எதிர்த்து வாக்களித்த பின்னர் பிரெஞ்சு இரயில்வே துறைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்

By Alex Lantier
28 May 2018

பிரெஞ்சு தேசிய இரயில்வேயை (SNCF) தனியார்மயமாக்கும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் திட்டங்களை நிராகரித்து நிறுவனத்தின் கருத்துவாக்கெடுப்பு ஒன்றில் 95 சதவீத வாக்களிப்பை அளித்த பின்னர், பிரான்ஸ் எங்கிலும் இரயில்வே துறை தொழிலாளர்கள் பேரணிகள் நடத்தினர். மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவவாத மற்றும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு தொழிலாளர்களின் மத்தியில் எதிர்ப்பு பெருகிச் செல்வதன் மத்தியில் Paris, Bordeaux, Avignon மற்றும் Périgueux உள்ளிட்ட நகரங்களில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணம் பெருகிச் செல்வதற்கும் தொழிற்சங்கங்களது கோழைத்தனமான கொள்கைகளுக்கும் இடையிலான மோதல் முன்னெப்போதினும் வெளிப்படையாக இருக்கிறது. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் முரண்பாடான கொள்கைகளை அறிவிக்கின்றன, போராட்டங்களை பிளவுபடுத்துகின்றன, அதேநேரத்தில் தொழிலாளர்படை ஏற்கனவே நிராகரித்து விட்ட ஒரு சீர்திருத்தத்தை தொடர்ந்தும் பேரம்பேசிக் கொண்டிருக்கின்றன. இப்போது, அவை வேலைநிறுத்த நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

போராட்டங்களை தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து விடுவித்து மக்ரோன் அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்குடனான ஒரு அரசியல் இயக்கத்தில் அவற்றை ஐக்கியப்படுத்துவதற்காக, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்ட சாமானிய தொழிலாளர் கமிட்டிகளை உருவாக்குவதற்கு உலக சோசலிச வலைத் தளம் விடுத்த அழைப்பின் சரியான தன்மையை இது நிரூபிக்கிறது. இல்லாது போனால், தொழிற்சங்கங்கள் -1968 மே-ஜூன் இல் போன்று ஒரு பொதுவேலைநிறுத்தத்தை நோக்கிய ஒரு இயக்கம் உருவாவதைத் தடுக்கின்ற நோக்குடன் இவை இரயில்வே தொழிலாளர்கள், பொதுத் துறை தொழிலாளர்கள், ஏர் பிரான்ஸ் தொழிலாளர்கள் மற்றும் மின் துறை தொழிலாளர்களை ஏற்கனவே பிளவுபடுத்திக் கொண்டும் சிதறடித்துக் கொண்டும் இருக்கின்றன- மக்ரோனுக்கு எதிரான போராட்டங்களை கழுத்துநெரிக்க துரிதமாய் இயங்கும்.

பாரிஸின் ஒரு முக்கிய இரயில்நிலையத்தில் இரயில் பராமரிப்பு துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்றிற்காக வேலைபார்க்கின்ற ஃபரீட் இடம் WSWS செய்தியாளர்கள் பேசினர். தனியார்மயமாக்கத்திற்கும் SNCF இல் புதிதாக எடுக்கப்படுபவர்களுக்கு இரயில் தொழிலாளர்களுக்கான சிறப்பு சட்டப்பிரிவை அகற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கும் எதிராக இரயில்வே தொழிலாளர்கள் வாக்களித்திருப்பதை அவர் பாராட்டினார்: “அவர்கள் சரியாக செய்துள்ளனர்! உண்மையாகவே, புதிதாக எடுக்கப்படுபவர்களுக்கு SNCF இல் அதே வேலையைச் செய்து கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு இருக்கும் உரிமை இல்லாது போவதையே இந்த சீர்திருத்தங்கள் குறித்து நிற்கின்றன. ஆகவே அதனை அவர்கள் எதிர்ப்பது சரியே.”

இரயில்வே தொழிலாளர்களுக்குரிய சிறப்பு சட்டப்பிரிவை மக்ரோன் நீக்கினால் ஏற்படக்கூடிய பாதிப்பை ஃபரீட் சுட்டிக்காட்டினார், இரயில் தொழிலாளர்களுக்கான சிறப்பு சட்டப்பிரிவால் பாதுகாக்கப்படுகின்ற தொழிலாளர்களுக்கும் துணைஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையிலான சமத்துவமின்மைக்கு எதிராக அவர் பேசினார். “அவர்களைப் போலன்றி, நாங்கள் குறைந்தபட்ச ஊதியத்தையே பெறுகிறோம். இரயில்வே தொழிலாளர்கள் மாதத்திற்கு 2,000 யூரோ அல்லது 2,500 யூரோவும் கூட சம்பாதிக்கின்றனர், நாங்களோ குறைந்தபட்ச ஊதியத்தையே பெறுகிறோம், அதிர்ஷ்டம் இருந்தால் 1,600 யூரோக்கள் வரை பெறலாம். இரயில்வே தொழிலாளர்கள் இந்த உரிமைகளை நீண்டகாலத்திற்கு முன்பாகப் பெற்றிருந்தனர்.” ஓய்வூதியங்கள் மற்றும் இரயில்களில் பயணிப்பதான விடயங்களிலும் துணைஒப்பந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் குறைவான அனுகூலங்களையே பெறுவதாக ஃபரீட் மேலும் சேர்த்துக் கொண்டார்.

மக்ரோன் குறித்த தனது கசப்பான ஏமாற்றத்தையும் ஃபரீட் வலியுறுத்தினார். “அவர் ஏழை மக்களைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. எந்த மட்டத்திற்கு அவர் ஆரம்ப கட்டத்தில் அத்தனை விதமான வாக்குறுதிகளையும் அளித்தாரோ, அந்த மட்டத்திற்கு இன்று நாங்கள் ஏமாற்றமடைந்திருக்கிறோம். வெறும் இரயில் தொழிலாளர்கள் மட்டுமல்ல, இன்று ஒவ்வொருவருமே புகார் கூறிக் கொண்டுதானிருக்கின்றனர்.” பிரான்சில் பில்லியனர்களின் நிகர சொத்து மதிப்பு துரிதகதியில் வளர்ச்சி கண்டுவந்திருப்பதில் தனது வெறுப்பையும் அவர் வெளிப்படுத்தினார்: “அதைக் கேட்கும்போது வயிற்றெரிச்சலாக இருக்கிறது. இது முற்றிலும் அட்டூழியமானது, பணக்காரர்களுக்கு மட்டும் தான் பணமிருக்கிறது.”

தமது வாழ்க்கை மேம்பாட்டுக்கான ஒரு தெளிவான முன்னோக்கை காணும்போது இன்னும் பல தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்குவார்கள் என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார். இரயில்வே தொழிலாளர்களுக்கான சிறப்பு சட்டப்பிரிவால் உண்டாகும் பயன்களைக் குறித்து பேசுகையில் அவர் கூறினார்: “எங்களுக்கும் அது தேவையானதாகவே இருக்கிறது, எங்களுக்கு அது கிடைக்கும் என்று தெரிந்தால் நாங்களும் அவர்களுடன் சேர்ந்து வேலைநிறுத்தத்தில் இறங்குவோம்..... எனக்கு அந்த உரிமைகள் கிடைக்கும் என்று நான் கருதினால், நிச்சயமாக நான் வேலைநிறுத்தத்தில் இறங்குவேன். இந்த உணர்வு வெறுமனே எனக்கு மட்டுமானதல்ல.”

ஆயினும், இரயில்வே துணைஒப்பந்த நிறுவனத்தில் பல ஆண்டு காலம் வேலை செய்து வந்திருக்கும் நிலையில், தொழிற்சங்கங்கள் ஒரு போராட்டத்தை ஒழுங்கமைக்கும் என்ற எந்த நம்பிக்கையும் தனக்கில்லை என்பதை ஃபரீட் வலியுறுத்தினார். முதலாவதாய், அவர் தொழிற்சங்கங்களின் சுய-முரண்பாடான கொள்கைகளை விமர்சனம் செய்தார்: “நிறைய போட்டியான தொழிற்சங்கங்கள் இருக்கின்றன, ஒன்றையொன்று அவை குற்றம்சாட்டுகின்றன, அவை என்ன சொல்கின்றன என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியாது. ஒரு தொழிற்சங்கம் ஒன்றைச் சொல்வது, இன்னொன்று அதற்கு எதிரானதைச் சொல்வது, ஒருவரும் மற்ற எவரொருவருடனும் உடன்படுவதில்லை என்ற காரணத்தால் எஜமானர்கள் தப்பித்து வருகின்றனர்.”

எல்லாவற்றையும் விட, தொழிலாளர்களது வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய ஒரு போராட்டத்தை தொழிற்சங்கங்கள் ஒழுங்கமைக்கும் என்று தான் நம்பவில்லை என்பதை ஃபரீட் வலியுறுத்தினார். “இல்லை, உண்மையாகவே அதை இனியும் நாங்கள் நம்புவதில்லை. ஒவ்வொரு தடவை நாங்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் போதும், அவர்கள் “எங்களுக்கு வாக்களித்தால், நாங்கள் இதைச் செய்வோம், அதைச் செய்வோம்” என்று வாய்கிழியப் பேசுகிறார்கள். அதன்பின் அடுத்த தேர்தல் வருகின்ற வரையில் அவர்களைப் பார்க்கவே முடிவதில்லை. எப்போதும் இதே கதை தான். உண்மையாகவே, அது எங்களுக்கு ரொம்பவே பழகிய விடயமாகி விட்டது... அவர்களிடம் நாங்கள் ஏமாற்றமடைந்திருக்கிறோம், இப்போது சுயாதீனமாகப் போராட வேண்டும் அல்லது நடப்பதை சகித்துக் கொண்டு இருந்து விட வேண்டும் என்பதே எங்களது முடிவாக இருக்கிறது.”

Avignon ஆர்ப்பாட்டத்தில், மக்ரோனின் சீர்திருத்தத்தை -இதனை முன்னாள் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் தொழிலாளர் சட்டத்துடன் தொடர்புபடுத்திப் பிறப்பிக்கின்ற உத்தரவுகள் மூலமாக அவர் திணித்துக் கொண்டிருக்கிறார்- தொழிலாளர்கள் விமர்சனம் செய்தனர். மக்களில் 70 சதவீதம் பேர் எதிர்த்தும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றும் அதனையும் மீறி நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பும் கூட இல்லாமல் PS அதனைத் திணித்தது.

Avignon இல் மக்ரோனின் குடியரசை நோக்கி அணிவகுப்போம் கட்சி (LREM) கட்சியின் பிரதிநிதியான Jean-François Césarini யிடம் ஒரு இரயில்வே தொழிலாளி தெரிவித்தார்: “மக்களின் உறுதிப்பாடுகளை காட்டிக்கொடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட துரோகிகளது ஒரு கூட்டமைப்பாக LREM இருக்கிறது. மக்களை வறுமைப்படுத்துவதைத் தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்... மக்களின் விருப்பத்திற்கு எதிராக உத்தரவாணைகளைப் பயன்படுத்தி உங்களின் விருப்பத்தைத் திணிப்பதல்ல பேச்சுவார்த்தை என்பதன் அர்த்தம். அது பேச்சுவார்த்தை அல்ல, சர்வாதிகாரம்.”

பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் பாத்திரம் குறித்து கூர்மையான எச்சரிக்கைகள் செய்யப்பட்டாக வேண்டும். சீர்திருத்தத்திற்கு எதிரான இரயில்வே தொழிலாளர்களின் பெருவாரியான வாக்களிப்பை மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ள அவை முனையவில்லை. மாறாக, அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டுக்கு பேரம்பேச அவை முயற்சி செய்து வரும் நிலையில் அந்த அரசாங்கத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு பெருகிச் செல்வதில் மிரட்சியடைந்து, தொழிலாளர்களின் நலன்களைப் பலிகொடுத்தும் அரசாங்கத்தின் அத்தனை கோரிக்கைகளுக்கும் சரணாகதியடைவதின் ஊடாகவும் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு வழியை அவை தேடிக் கொண்டிருக்கின்றன.

இரயில்வே தொழிலாளர்களது சிறப்பு சட்டப்பிரிவை நீக்குவது, SNCF இன் தனியார்மயமாக்கம் மற்றும் ஐரோப்பியக் கட்டளையின் படி பிரெஞ்சு இரயில்வேயை சர்வதேசப் போட்டிக்குத் திறந்து விடுவது ஆகியவை பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டவை என்று பிரதமர் எட்வார்ட் பிலிப் கூறி விட்ட பின்னரும் அவருடன் பேச்சுவார்த்தைகளை இவை ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருக்கின்றன. SNCF இன் கடன்களில் எத்தனை பகுதியை அரசு ஏற்றுக் கொள்ளக் கூடும் என்பது மட்டுமே பேச்சுவார்த்தைக்குரிய ஒரே விடயம் என்று பிலிப் கூறியிருந்தார். இவ்வாறாக, பிலிப் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமாக, இரயில் தொழிலாளர்களது பிரதான கோரிக்கைகளில் தாங்கள் சரணடையக் கூடும் என்பதற்கான சமிக்கைகளை தொழிற்சங்கங்கள் அளித்துக் கொண்டிருந்தன.

வெள்ளிக்கிழமையன்று, தொழிற்சங்கங்களை சந்தித்த பிலிப் SNCF இன் 54.5 பில்லியன் யூரோ கடனில் 35 பில்லியன் யூரோக்களை அரசு பொறுப்பேற்றுக் கொள்ள ஆலோசனை மொழிந்தார்.

தன்னாட்சி தொழிற்சங்கங்களது தேசிய ஒன்றிய (UNSA) அமைப்பின் இரயில்வே துறை கூட்டமைப்பு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ‘வெகு விரைவில்’ முடிவெடுக்க வாக்குறுதியளித்து எதிர்வினையாற்றியது. இரயில்வே தொழிலாளர்களுக்கான சிறப்பு சட்டப்பிரிவை நீக்குவதிலோ அல்லது SNCF ஐ தனியார்மயமாக்குவதிலோ தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் பிலிப் சுட்டிக்காட்டியிருக்கவில்லை என்ற நிலையில், UNSA-Rail  பொதுச் செயலரான Roger Dillenseger, ”அவர் உண்மையாகவே நாங்கள் கூறியதற்கு காதுகொடுத்தார்” என்றும் “பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்கிறது” என்றும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) வேலைநிறுத்த நடவடிக்கையை அது தொடரவிருப்பதாகக் கூறியபோதிலும் SNCF கடன் விடயத்திலான பிலிப்பின் ஆலோசனைமொழிவைப் பாராட்டியது, அத்துடன் அரசாங்கத்துடன் ஒரு “வட்ட மேசை’ பேச்சுவார்த்தைகளுக்கும் அழைப்பு விடுத்தது.

ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் சந்தித்துக் கொண்டிருந்த மக்ரோன், அங்கிருந்தபடி, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கோரினார். பிலிப் அளித்திருந்ததே அரசாங்கத்தின் “இறுதியான முன்வருகை” என்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை ஒழுங்கமைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்: “SNCF சீர்திருத்தத்திற்கு எதிரான முறையான ஆர்ப்பாட்டங்கள் இருக்கின்றன. ஆனாலும் இப்போது சொல்கிறேன், அந்த நிகழ்ச்சிப்போக்கின் முடிவுக்கு நாம் வந்துசேர்ந்து விட்டோம். மசோதா செவ்வாய்கிழமையன்று செனட்டில் வரவிருக்கிறது.”

மக்ரோனின் கட்டளைக்கு தொழிற்சங்கங்கள் உடன்படுமாயின், அவற்றின் தரப்பில், அவை அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்தங்களை காட்டிக் கொடுப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளது வரலாற்றுவழி ஈட்டங்களை விலைபேசி விற்பதற்குமான ஒரு முயற்சிக்கு நிகரானதாக அது இருக்கும். எப்படியிருந்தபோதிலும், அந்த திசையில் தான் அவை சென்று கொண்டிருக்கின்றன என்பது தெளிவாய் தெரிகிறது. தொழிலாள வர்க்கம் தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மக்ரோன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்குமான ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துகின்ற பொருட்டு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்ட விதத்தில் ஒழுங்குபடுவதே அதற்கு இருக்கின்ற ஒரேயொரு செல்தகைமையான முன்னோக்கு ஆகும்.