ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Varanasi flyover bridge collapse kills 18

இந்தியா: வாரணாசி மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலி

By Wasantha Rupasinghe 
18 May 2018

செவ்வாயன்று, வட இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில், இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியின் பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் பரபரப்பு மிகுந்த சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தபட்சம் 18 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் படுகாயமுற்றனர்.

அரசாங்க அதிகாரிகளும் இலாப நோக்கம் கொண்ட கட்டுமான நிறுவனங்களும் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த பொது மக்கள் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கின்றனர் என்பதாகவே இந்த சோக நிகழ்வின் கூடுதல் அறிகுறி உள்ளது.

மாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில், வாரணாசி கான்ட் ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தின் இரு தூண்கள் இடிந்து நொறுங்கி, மேம்பாலத்தின் ஒரு பெரிய அடுக்கு கீழே சரிந்து விழுந்ததில், ஒரு சிறு பேருந்து, ஆறு கார்கள் மற்றும் பல இருசக்கர வாகனங்கள் உட்பட குறைந்தபட்சம் 20 வாகனங்கள் நசுங்கிப் போயின. மாநிலத்தின் உயர்மட்ட பொலிஸ் அதிகாரி ஓ.பி.சிங் இன் அறிவிப்பின்படி, இந்த இடிபாடுகளில் பெரும்பாலும் கட்டுமானத் தொழிலாளர்கள் தான் சிக்கியிருக்க வேண்டும் எனக் கருதப்பட்டது.

விபத்து நடந்து முடிந்து 30 நிமிடங்களில் பொலிஸ் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தை சென்றடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்ற போதிலும், Telegraph பத்திரிகை, இந்த துயரமான விபத்து நிகழ்ந்து அநேகமாக இரண்டு மணி நேரங்களுக்கு பின்னர் தான் இடிபாடுகளை அகற்றும் மற்றும் பிற கனரக உபகரணங்கள் சம்பவ இடத்திற்கு கொண்டுவரப்பட்டன என்று தெரிவித்தது. மேலும், மீட்பு நடவடிக்கைளை அரசாங்கம் மந்தமாக மேற்கொண்டதாகக் கருதி கோபமடைந்த மக்கள் கண்டனம் தெரிவித்ததாகவும் இப்பத்திரிகை குறிப்பிட்டது.

First Post செய்தி ஊடகத்தின் காணொளி, இந்த பேரழிவில் தனது குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேரை பலி கொடுத்த பாஜிபூரைச் சேர்ந்த கைலாஷ் ராம் என்பவர், கட்டுமானப் பகுதியைச் சுற்றிலும் மக்கள் நடமாட்டம் இல்லாததை உறுதிசெய்யத் தவறிய அரசாங்கம் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கிறார் என காண்பித்தது.

Hindustan Times தினசரி நாளிதழ், உத்தர பிரதேச மாநில பொறியாளர்கள் சங்கத்தின் (UP Engineers Association) பொதுச் செயலாளர் சுர்ஜித் சிங் நிரஞ்சன், மாவட்ட நிர்வாகமும் கட்டுமான நிறுவனமும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டுவதாக குறிப்பிட்டது. மேலும், “கட்டுமானப் பணி நடைபெறும் பாலத்தின் கீழ் போக்குவரத்துக்கு அனுமதியளித்திருக்கக் கூடாது என்பதோடு, கட்டுமானத் தளத்தை சுற்றிலும் சரியான பாதுகாப்பு வலையம் வைக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்ததையும் குறிப்பிட்டது.

உத்யோகபூர்வமாக பொறுப்பைத் தட்டிக்கழிப்பது உடனடியாக தொடங்கியது. ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்த அலட்சியத்தை சுட்டிக்காட்டி மாநில அரசாங்க ஆதாரங்கள் NDTV க்கு தெரிவித்தன.

மாநில பொலிஸ் ஆதாரங்களை மேற்கோளிட்டு, Indian Express பத்திரிகை வியாழனன்று, போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறை மீறல்கள் குறித்து கடந்த நவம்பர் மாதம் முதல், பிப்ரவரியில் பொலிசாரால் முதல் தகவல் அறிக்கை (First Information Report-FIR) பதிவு செய்யப்பட்டது வரையிலான காலத்தில், இந்த மேம்பால கட்டுமானத்திற்கு பொறுப்பிலுள்ள நிறுவனமான அரசு நடத்தும் உத்தர பிரதேச மாநில பால கட்டுமானக் கழகத்திற்கு (Uttar Pradesh State Bridge Corporation-UPSBC) குறைந்தபட்சம் ஐந்து கடிதங்களை பொலிசார் அனுப்பியுள்ளனர் என்று தெரிவித்தது.

இருப்பினும், UPSBC இன் நிர்வாக இயக்குநர் ராஜன் மிட்டல், கட்டுமானத்தின் போது போக்குவரத்தை பராமரிக்க மாவட்ட அதிகாரிகளையும் பொலிசையும் கழகம் கேட்டுக் கொண்டிருந்ததாக Express பத்திரிகைக்கு தெரிவித்தார். மேலும், “குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்டுமானத்தை முடிப்பதற்காக மட்டும் அழுத்தம் கொடுக்கப்பட்டதேயன்றி, வேலையின் தரம் பற்றி எந்தவித சமரசமும் எட்டப்படவில்லை என்று குறிப்பிட்டு, இது விசாரணையின் போது தெளிவாகத் தெரியவரும்,” என்றும் மிட்டல் கூறினார்.

மாவட்ட நீதிபதி யோகேஷ்வர் ராம் மிஷ்ரா இந்த கூற்றை நிராகரித்தார். “எங்களுக்கு அவர்கள் கடிதம் எழுதியிருந்ததாகக் குறிப்பிடுவது தவறானது” என்று அவர் Express பத்திரிகைக்கு தெரிவித்தார். UPSBC க்கு ஐந்து கடிதங்கள் அனுப்பியதாக பொலிசார் கூறிய கதையையே அவர் மீண்டும் தெரிவித்தார். “ஆனால் அவர்கள் (அதன்படி செயல்படவில்லை) என்பதால் தான் அவர்களுக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டது” என்றும் தெரிவித்தார்.

வியாழனன்று Hindustan Times தினசரி நாளிதழின் தலையங்கம், இடிந்து விழுந்த மேம்பாலப் பகுதி பிப்ரவரியில் தான் கட்டிமுடிக்கப்பட்டது என்று தெரிவித்தது. மேலும், “தரம் குறைந்த கட்டுமானம் மற்றும் தரம்குறைந்த கட்டுமானப் பொருட்கள் உபயோகம் ஏதேனும் ஒன்று இந்தியாவில் பல கட்டுமானத் திட்டங்களை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன என்பதை இது அறிவுறுத்துகிறது” என்றும் இப்பத்திரிகை தெரிவித்தது.

“பொதுவாகவே திட்டங்கள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன, அதிலும் பெரும்பாலும் தேர்தல்களுக்கு முந்தைய திட்டங்கள் சிறிதளவு திட்டமிடலுடனும், பொறியியல் விதிமுறைகளில் மிகக்குறைந்த கவனம் செலுத்துதலுடனும் நிறைவேற்றப்படுகின்றன. பெரும்பாலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் பெரும் தாமதங்களினால் பாதிக்கப்படுவது, செலவுகள் அதிகரிப்புக்கு அழுத்தம் கொடுப்பதுடன், ஒப்பந்தக்காரர்கள் சில வெட்டுக்களை ஏற்படுத்தவும் ஊக்கமளிக்கிறது. இந்நிலையில், வாரணாசி வழக்கு மற்றும் பிற திட்டங்களில் காணப்படும் விபரீத கட்டுமானத் தோல்விகளையே இவை ஏற்படுத்துகின்றன.”

புதனன்று, பொதுமக்கள் கோபத்தை தணிக்க, உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத், தலைமை திட்ட மேலாளர் கே.ஆர்.சுதன் உட்பட நான்கு UPSBC அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்தார். இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் 48 மணி நேரங்களுக்குள், “அதிகபட்ச தண்டனைக்குரிய நடவடிக்கை” எடுப்பதற்கு உறுதியளித்தார். மேலும் அவர், சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு சொற்ப இழப்பீடாக 500,000 ரூபாய் ($US 7,369) வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு 200,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

பிஜேபி பிரதம மந்திரி நரேந்திர மோடி, இத்தகைய பேரழிவுகளின் போது அவரது வழமையான நடைமுறையாக முதலைக் கண்ணீர் வடிக்க தனது ட்விட்டர் பதிவை இடுவதற்கு விரைந்தார். அதில், “உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கு அவர் மிகவும் வருந்துவதாக” தெரிவித்தார். மேலும், “காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன். அதிகாரிகளிடம் பேசி, பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளேன்” என்று அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.

உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து மோடிக்கு எந்தவித உண்மையான அக்கறையும் இல்லை. கடந்த காலத்தில், சிற்சில மாற்றங்களுடன், இதேபோன்று பலமுறை “இரங்கல்” ட்வீட்டுகளை அவர் பதிவு செய்துள்ளார் என்றாலும், இத்தகைய பேரழிவுகள் மட்டும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

மார்ச் 2016 இல், மேற்கு வங்க தலை நகரம் கொல்கத்தாவில் பாதியளவு கட்டுமானம் முடிவடைந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 25 க்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த துயரமான சம்பவத்தை குறிப்பிட்டு, வியாழனன்று Times of India பத்திரிகை தலையங்கம் பின்வருமாறு குறிப்பிட்டது: “[ஒரு] நிபுணர் குழு, தவறான வடிவமைப்பு, தரம் குறைந்த மூலப் பொருட்கள் உபயோகம் மற்றும் சரியான மேற்பார்வை இல்லாமை போன்ற பல்வேறு காரணிகளால் இந்த இடிபாடுகள் ஏற்படுவதாக கண்டறிந்தது. அதற்குப் பின்னர் மேம்பாலம் இடிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் ஸ்திரமற்ற நிலைக்கு மாறிய இந்த கட்டமைப்புக்குள் தான் உள்ளூர் கடைக்காரர்களும் குடியிருப்பாளர்களும் தொடர்ந்து வசித்து வருகின்றனர். தவறான நடத்தைகள், அக்கறையின்மை மற்றும் அவசர பாதுகாப்பு பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் உள்ள தாமதிப்பு ஆகியவை பற்றிய இந்த கதை, ஆறுதலுக்காக பெரும்பாலும் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்பட்டு வருகிறது.”

இந்நிலையில் UPSBC வலைத் தளம், “தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளில் தொடர்ச்சியான மேம்பாட்டுடன் பராமரிக்கப்படும் அதன் தரம், பொருளாதார மற்றும் நேர மேலாண்மை” குறித்து தேசிய மற்றும் சர்வதேசிய அளவில் பல விருதுகளை அது வென்றுள்ளது என்றும், அதன் செலுத்தப்பட்ட முதலீடு 150 மில்லியன் ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது என்றும் தெரிவிக்கிறது. இது, பல இந்திய நகரங்களிலும், ஈராக், ஏமன் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலும் கூட பாலங்களையும் மேம்பாலங்களையும் கட்டமைத்துள்ளது என்றும் தெரிவிக்கிறது.

இருப்பினும், புதனன்று வெளிவந்த Hindustan Times பத்திரிகை கட்டுரையின்படி, UPSBC ஏற்கனவே இரண்டு முறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 2010 இல், 6.5 மில்லியன் ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்ட 1086-மீட்டர் நீளம் கொண்ட சில்லாஹத் பாலம் (Chillgahat Bridge) திறந்துவைக்கப்பட்டு 13 நாட்களில் தகர்ந்து போனதாக பெயர் குறிப்பிடப்படாத பொதுத் துறை பொறியாளர் ஒருவர் கூறியதாக இப்பத்திரிகை குறிப்பிட்டது. இது பற்றி உத்தர பிரதேச மாநில அரசாங்கம் ஒரு விசாரணைக்கு ஆணையிட்டிருந்தது, ஆனால் உயர்மட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த பொறியாளர் தெரிவித்ததாகவும் இது குறிப்பிட்டது.

இதேபோல் 2016 இல், லக்னோவில் லோஹியா பாலத்தின் மேல் ஒரு குழி உருவாகியது. இது பற்றி விசாரிக்க உத்தர பிரதேச மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நான்கு உறுப்பினர்கள் கொண்ட ஒரு விசாரணை குழு, தரம் குறைந்த பணிக்காக பொறியாளர்களை குற்றம் சாட்டியது, ஆனால் அந்த அறிக்கையோ “குளிர்பதன சேமிப்பில்” வைக்கப்பட்டுவிட்டதாக ஒரு மூத்த UPSBC பொறியாளர் Times பத்திரிகைக்கு தெரிவித்தார்.

அவ்வறிக்கையை போன்றே, தற்போதைய அரசாங்க விசாரணைகளும் பெரும்பாலும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்த போவதில்லை. முதலாளித்துவ அமைப்புமுறையும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் மனித உயிர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை, வெறும் இலாபங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றனர். இதற்காக, நாடெங்கிலும், வேலை செய்யும் இடங்களில் ஒவ்வொரு நாளும் டசின் கணக்கான தொழிலாளர்களும் ஏழை எளியவர்களும் இறக்கிறார்கள்.

மேலும், UPSBC வலைத் தளம் இவ்வாறு பெருமையடித்துக் கொண்டது: “இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் உலகளாவிய போட்டியை எதிர்கொள்வதில், பலமுறை அது விருதுக்கு தகுதியான வேலையை நிறைவேற்றியதன் மூலம் UPSBC மீதான நம்பிக்கைக்கு பல வாடிக்கையாளர்கள் திரும்பியுள்ளனர் என்பதில் வியப்பு எதுவுமில்லை.” இந்த “உலகளாவிய போட்டியால்” உந்தப்பட்டு, பெருநிறுவனங்கள், செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதையும், அடிப்படை பாதுகாப்பு விதிகளை ஒதுக்கித் தள்ளுவதையும், மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் உயிர்களை விலை கொடுப்பதையும் நாடியுள்ளன என்பதை ஆதாரங்கள் ஏற்கனவே குறிக்கின்றன.