ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Anti-“fake news” bill gives French state unchecked Internet censorship powers

“போலி செய்திகள்"-எதிர்ப்பு மசோதா, பிரெஞ்சு அரசுக்கு தடையற்ற இணைய தணிக்கைக்கான அதிகாரங்களை வழங்குகிறது

By Alex Lantier
8 June 2018

எந்தவொரு தேசிய தேர்தலுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னதாக இணையத்தை தணிக்கை செய்ய அரசுக்கு அதிகாரமளிக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கடுமையான சட்டமசோதா மீது தேசிய நாடாளுமன்றத்தில் வியாழனன்று விவாதம் தொடங்கியது. “போலி செய்திகளுக்கு" எதிராக போராடுகிறோம் என்ற சாக்குபோக்கில் உலகளவில் இணைய சுதந்திரம் மீதான ஓர் அச்சுறுத்தல் அலைக்கு இடையே, இந்த சட்டமசோதா பேச்சு சுதந்திரம் மீது பரந்தளவில் ஒரு புதிய தாக்குதலைத் தொடுக்கிறது.

வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணையத்தில் வரும் கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல இந்த மசோதா அனுமதிக்கும், அங்கே நீதிபதிகள் "போலி செய்திகளாக" கருதுகிறோம் என்று அறிவித்து அத்த கவல்களைத் தணிக்கை செய்யுமாறு இணைய சேவை வழங்குனர்களை நிர்பந்திப்பார்கள். உயர்மட்ட நீதிபதிகளின் நியமனத்திற்கு பெயரிடுவதிலும் கட்டுப்படுத்துவதிலும் பிரெஞ்சு ஜனாதிபதிக்கு இருக்கும் பரந்த அதிகாரங்களின் காரணமாக, பிரெஞ்சு நீதித்துறை நிறைவேற்று அதிகாரத்துறையை சார்ந்திருப்பதாகவே பரவலாக கருதப்படுகிறது.. இவ்விதத்தில் இந்த மசோதா இணையம் மீதான பெரும் அதிகாரங்களை ஜனாதிபதியின் கரங்களுக்குள் கொண்டு சேர்க்கிறது.

இந்த மசோதா, ஒரு தகவலை அது பிழையானது என்பதால் "போலி செய்திகள்" என்று வரையறுக்கவில்லை, மாறாக நிரூபிக்கத்தக்க தகவலை முன்வைப்பதன் மூலம் நம்பத்தக்கதாக செய்ய முடியாத எந்தவொரு தகவலையோ அல்லது குத்துமதிப்பான தகவலை “போலி செய்திகளாக" வரையறுக்கிறது.

இந்த ஜனநாயக-விரோத வரையறையானது, ஓர் அறிக்கையை தடுப்பதற்கான சட்டபூர்வ நடவடிக்கைக்கு முன்னதாக, உண்மையில், அது பொய்யானது மற்றும் பாதிப்பேற்படுத்தக்கூடியது என்பதை நிரூபிக்க வேண்டியிருக்கும் அரசின் எந்தவொரு கடமைப்பாடுகளையும் நீக்குவதன் மூலமாக, சட்டபூர்வ பத்திரிகையியல் மற்றும் அரசியல் நடவடிக்கைக்கு பெரும் அபாயங்களை முன்னிறுத்துகிறது. தனிப்பட்டரீதியில் தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்று வலியுறுத்தி, சட்டபூர்வமாக பாதுகாக்கப்பட்ட உரையை சர்வசாதாரணமாக தணிக்கை செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிடுவதற்கு அது அனுமதிக்கிறது. இரகசியங்களை வெளியிடுவோர் போன்ற தன்னை வெளியில் காட்ட விரும்பாத ஆதாரநபர்களை அடிப்படையாக கொண்ட எந்தவொரு கட்டுரையையும், நீதிபதிகள், இக்கட்டுரையில் உள்ள தகவல் "சரிபார்க்கத்தக்கதாக" இல்லை என்ற அடித்தளத்தில் தணிக்கைச் செய்ய உத்தரவிடுவதற்கும் இது அனுமதிக்கிறது.

இந்த மசோதா, “வெளிநாட்டு அரசால் கட்டுப்படுத்தப்படும் அல்லது அதன் செல்வாக்கின் கீழ் இருக்கும்" தொலைக்காட்சி நிலையங்களைத் தணிக்கை செய்யவும், இடைநிறுத்தம் செய்யவும் உயர்மட்ட ஒலி/ஒளி ஆணையத்திற்கு (CSA) அதிகாரமளிக்கிறது. இது ரஷ்ய அரசுசார் RT மற்றும் Sputnik போன்ற ஊடக அமைப்புகளுக்குத் தடைவிதிக்க வழிவகுக்கிறது.

இந்த மசோதா தேர்தல்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் செல்லுபடியானதாக இருக்கும் என்பது போல தெரிந்தாலும், இந்த அதிகாரங்களுக்கு எந்த கால வரம்பும் நிர்ணயிக்கக்கூடாதென கோரும் பத்திரிகை பிரச்சாரம் நடந்து வருகிறது. “20 Minutes” பத்திரிகை, சோர்போன் பேராசிரியர் பிரான்சுவா ஜோஸ்ட் இடம் அவர் இந்த சட்டமசோதாவை ஆதரிக்கிறாரா என்று கேட்டபோது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்: “இந்த சட்டம் தேர்தல் பிரச்சாரங்களின் போது மட்டும் ஏன் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதுதான் நிஜமான கேள்வி… ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் எந்தவொரு பழைய பொய்யையும் கூறலாம், மற்ற நேரங்களில் கூறக்கூடாது என்பது அபத்தமாக இருக்கிறது,” என்றார்.

பிரான்சில் உத்தியோகபூர்வ அரசியல் வட்டத்தில் உள்ள எதிர்கட்சிகள், அந்த தணிக்கை முறைக்கு மக்களிடையே செல்வாக்கில்லை என்பதால் மட்டுமல்ல, மாறாக மக்ரோன் அதை அவற்றிற்கு எதிராகவும் திருப்பக்கூடும் என்று அறிந்து வைத்திருப்பதாலேயே, மக்ரோனின் சட்டமசோதாவை விமர்சிக்கின்றன. நவ-பாசிசவாத தேசிய முன்னணியின் மரீன் லு பென் Causeur க்கு எழுதிய ஒரு கட்டுரையில் அந்த மசோதாவை "சுதந்திரத்திற்கே ஆபத்து" என்று குறிப்பிட்டார், அதேவேளையில் ஸ்ராலினிச சட்டமன்ற உறுப்பினர் Elsa Faucillon அது "உத்தியோகபூர்வமான உண்மை என்ற கருத்திற்கு இட்டுச்செல்லும்" என்று எச்சரித்தார். வலதுசாரி நாடாளுமன்றவாதி கிறிஸ்டியான் ஜாகோப் கூறுகையில் மக்ரோன் "போலிஸ் சிந்தனை" ஐ நிறுவி வருவதாக தெரிவித்தார்.

அந்த மசோதா, அரசு அதன் விருப்பம் போல் இணையத்தைத் தணிக்கை செய்வதற்கான ஒரு சூழலை நோக்கி பிரான்சை நகர்த்தி வருகிறது. அந்த மசோதாவுக்கு ஒரு பகுதியளவில் ஜனநாயக மூடுமறைப்பை வழங்கும் ஒரு முயற்சியில் மக்ரோனும் அவர் ஆதரவாளர்களும் முன்வைத்த நியாயப்பாடு என்னவென்றால், கடந்த ஆண்டின் இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலின் போது, மக்ரோனுக்கு எதிராக தேர்தல் போட்டியில் நின்றிருந்த லு பென் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் மக்ரோன் பஹாமாஸில் ஒரு இரகசிய வெளிநாட்டு வங்கி கணக்கு வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டிய போது, சகித்துக் கொள்ளவியலாதளவுக்கு மக்ரோனின் மதிப்பு பாதிக்கப்பட்டதாம். இதுவொரு எரிச்சலூட்டும் சாக்குபோக்கு மற்றும் அரசியல் பொய்யாகும்.

லு பென்னின் குற்றச்சாட்டால் மக்ரோனுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு ஒன்றும் ஆகவில்லை. வாக்காளர்கள் அதை உதாசீனப்படுத்தியதுடன், மக்ரோன் பெரும் வாக்கு வித்தியாசத்தில் அத்தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் இப்போதோ, பத்திரிகைகளின் பரந்த பிரிவுகள், ஒட்டுமொத்த மக்களது கருத்து சுதந்திரத்தின் மீது ஒரு தாக்குதலை நடத்துவதற்காக, ஒரு நவ-பாசிசவாதி ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறினார் என்ற உண்மை மீதான சீற்றத்தைத் தூண்டிவிட முயன்று வருகின்றன.

பொய் மற்றும் அவதூறு கருத்துக்கள் பிரசுரிப்பதைச் சட்டவிரோதமாக்க பிரான்சுக்கு புதிய சட்டமெதுவும் தேவையில்லை. ஏற்கனவே உள்ள 1881 சட்டம் ஒன்று அதுபோன்ற கருத்துக்கள் வெளியிடுவதற்கு பெரும் அபராதங்களை விதிக்கிறது.

இணையத்தைத் தணிக்கை செய்வதற்கான மக்ரோனின் நகர்வுகளை உந்தி வருவது என்னவென்றால் அது லு பென் அல்லது RT இன் ஒரு சில கருத்துக்கள் அல்ல, மாறாக சமூக கோபம் மற்றும் போர்-எதிர்ப்புணர்வின் வளர்ச்சி மீதான பயமாகும். பெருந்திரளான தொழிலாளர்கள் எந்த அரசியல் கண்ணோட்டங்களை அணுக வேண்டுமென்பதை ஆளும் வட்டாரங்கள் கட்டளையிட விரும்புகின்றன. சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்திலிருந்து எதிர்ப்பு தகவல்களையும் கருத்துக்களையும் நீக்குவதற்கான இந்த முனைவு, கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க அரசுடன் கூட்டு சேர்ந்ததில் அதன் மிகவும் அபாயகரமான வடிவத்தை எடுத்துள்ளன.

கூகுள் அதன் தேடல் முடிவுகளில் "போலி செய்திகளை" தவிர்க்க ஒரு மென்பொருள் வழிமுறை அல்காரிதத்தை ஏற்படுத்துமென்று கடந்தாண்டு ஏப்ரல் 25 இல் பகிரங்கமாக அறிவித்தது, பின்னர் உலக சோசலிச வலைத் தளம் உட்பட சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு வலைத் தளங்களை இருட்டடிப்பு செய்தது. கூகுள் தேடல் மூலமாக WSWS ஐ வந்தடைந்தவர்களின் எண்ணிக்கை சரிந்த நிலையில், அது திட்டமிட்டு WSWS ஐ இலக்கில் வைக்கிறதா என்று நியூ யோர்க் டைம்ஸ் உட்பட பத்திரிகைகளின் கேள்விகளுக்கு விடையிறுக்க அது மறுத்தது. ஆனால் அந்தாண்டின் இறுதியில் கூகுள் நிர்வாகிகள் பகிரங்கமாகவே, அவர்கள் RT மற்றும் Sputnik செய்திகளின் தகவல்களை முடக்கும் வகையில் தேடல் முடிவுகளை "மேம்படுத்துவதை" இலக்கில் வைத்திருப்பதாக பெருமை பீற்றினர்.

பேஸ்புக் அதன் பயனர்களது "தனிப்பட்ட முக்கியத்துவங்களுக்கு" ஏற்ப அவர்களின் செய்தி ஓடைகளில் அரசியல் செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதை நிறுத்துவதாக 2018 இன் தொடக்கத்தில் அறிவித்தது. இது "உங்கள் நல்வாழ்வுக்கும், சமூகத்திற்கும் [பேஸ்புக்கை] சிறப்பானதாக" ஆக்கும் என்றது தெரிவித்தது.

பிரெஞ்சு அதிகாரிகள் திட்டமிடும் பாரிய இணைய தணிக்கையும், பொதுமக்கள் கருத்தைப் பீதியூட்டுவதில் சற்றும் குறைந்ததில்லை. இந்தாண்டின் தொடக்கத்தில் மக்ரோன் அவர் தணிக்கை சட்டமசோதாவைத் தயாரித்துக் கொண்டிருந்த போது, பிரெஞ்சு மக்கள் "சூழ்ச்சி தத்துவங்களை" நம்புவதாகக் குறைகூறி ஒரு பத்திரிகை பிரச்சாரம் வெடித்தது. 2015 பாரீசிலும் அதற்கு பின்னர் இருந்து ஐரோப்பாவின் பல இடங்களிலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்திய இஸ்லாமிய வலையமைப்புகளுடன் பிரான்ஸ் உட்பட நேட்டோ அரசுகள் இணைந்து செயல்படுகின்றன என்ற அனேகமானவர்களின் நம்பிக்கைதான், பெரும்பான்மை ஊடகங்களை ஆத்திரப்படுத்திய அந்த "சூழ்ச்சி தத்துவம்" என்று அழைக்கப்படுபவையாகும்.

அமெரிக்காவும் ஐரோப்பிய உளவுத்துறை முகமைகளும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான தங்களின் போர்களில் பினாமிகளாக சேவையாற்றும் இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு ஆயுத உதவிகள் செய்ய பில்லியன் கணக்கிலான டாலர்களைப் பாய்ச்சி உள்ளன என்பது "கிரெம்ளினின் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்" உருவாக்கிய ஒரு சித்தபிரமையான "சூழ்ச்சி தத்துவமோ" அல்லது "போலி செய்திகளோ" இல்லை, மாறாக அவை பரவலாக செய்திகளில் அறிவிக்கப்பட்ட உண்மையாகும்.

பொதுமக்களில் பரந்த பரந்த அடுக்குகள் “பயங்கரவாதத்திற்கு எதிரான போரும்” மற்றும் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் திணிக்கப்பட்ட பிரெஞ்சு அரசின் அவசரகால நிலையும் பொய்களின் அடிப்படையில் செய்யப்பட்டதாக தீர்மானத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன என்பதைக் குறித்து அதிகார வட்டாரங்கள் கவலை கொண்டுள்ளன. பார்சிலோனாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சற்று பின்னர் கடந்த ஆண்டு அங்கே பெருந்திரளான மக்களின் போராட்டங்கள் வெடித்தன, அதில் ஆர்ப்பாட்டக்காரர்கள், பயங்கரவாதிகளுடன் மாட்ரிட் உடந்தையாய் இருந்ததாக அதைக் கண்டித்தனர்.

இணையத்தைத் தணிக்கை செய்வதற்கான மக்ரோனின் நகர்வுகள் நேரடியாக அரசியல் எதிர்ப்பின் இந்த வளர்ச்சி மற்றும் வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியுடன் பிணைந்துள்ளன. இரயில்வே துறை, விமானச்சேவை மற்றும் எரிசக்தித்துறை தொழிலாளர்களிடையே மக்ரோனின் செலவின குறைப்பு கொள்கைகளுக்கு எதிராக பாரிய வேலைநிறுத்தங்கள் வெடித்து வந்துள்ளதுடன், மக்ரோனுக்கு எதிரான ஒரு பொதுவான இயக்கத்தில் ஒருங்கிணைந்து வருவதில் இருந்து தங்களை விலக்கி வைக்க இந்த வெவ்வேறு போராட்டங்களில் தங்களை தனிமைப்படுத்தும் தொழிற்சங்கங்களின் முயற்சிகள் மீது வேலைநிறுத்தக்காரர்களிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் ஆசிரியர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் முதற்கொண்டு ஸ்பெயினில் விமானச்சேவை தொழிலாளர்கள், ஜேர்மனி மற்றும் துருக்கியில் உலோகத்துறை மற்றும் வாகனத்துறை தொழிலாளர்கள் வரையில் ஐரோப்பா எங்கிலும் வேலைநிறுத்தங்கள் வெடித்து வருகின்றன.

அமெரிக்காவோ ஆசிரியர்களின் வேலைநிறுத்த அலையைக் கண்டுள்ளதுடன், சாமானிய கல்வியாளர்கள் தொழிற்சங்கங்களை எதிர்த்து பெருமளவில் சுயாதீனமாக போராட்டங்களை ஒழுங்கமைத்தனர்.

மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தம் பிரெஞ்சு முதலாளித்துவத்தை பொறிவின் விளிம்பிற்கு கொண்டு வந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஆளும் வர்க்கம் மீண்டும் பயத்தில் வாழ தொடங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் "Generation What" கருத்துக்கணிப்பின் கண்டுபிடிப்புகள் குறித்து மக்ரோனுக்கு நன்கு தெரியும். சமூக செலவின குறைப்பு நடைமுறைகளின் ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், ஐரோப்பாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்கள், ஸ்தாபக ஒழுங்கமைப்பிற்கு எதிராக ஒரு "பாரிய மேலெழுச்சியில்" பங்கெடுக்க தயாராக இருப்பதை அது எடுத்துக்காட்டியது. அனைத்திற்கும் மேலாக, வர்க்க போராட்டமானது நாளாந்த வாழ்க்கை யதார்த்தமாகி உள்ளதாக பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தெரிவிக்கின்றனர்—இது 1968 பொது வேலைநிறுத்தத்திற்கு முன்பிருந்ததை விட 20 சதவீதம் அதிகம்.

இதுபோன்ற நிலைமைகளின் கீழ், ஏகாதிபத்திய கொள்கை வகுப்பாளர்களும் மூலோபாயவாதிகளும் மக்கள் கருத்தை அதிகரித்தளவில் இராணுவ நிலைப்பாட்டிலிருந்து பார்க்கின்றனர். நான்காண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய மூலோபாயவாதி ஒருவர் எழுதினார், “மக்களில் வறிய மற்றும் அதிருப்தி கொண்ட சதவீதத்தினர் தொடர்ந்து அதிகரிப்பார்கள், இந்த உலகிற்கும், உலக பணக்காரர்களுக்கும் இடையிலான பதட்டங்கள், அதற்கேற்ற விளைவுகளோடு, தொடர்ந்து அதிகரிக்கும். இந்த பிரச்சினையின் தோற்றுவாயை … அதாவது, சமூகம் இயங்கமுடியாதுள்ள குறைபாடுகளை நம்மால் தீர்க்க முடியாது என்பதால், நம்மைநாமே மிகவும் பலமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,” என்றார்.

ஆளும் உயரடுக்கு அதிகரித்து வரும் சமூகப் புரட்சி அச்சுறுத்தலில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்று வருகின்ற நிலையில், “போலி செய்திகளை" எதிர்த்து போராடுகிறோம் என்ற வேஷத்தில் இணைய தணிக்கைக்கான மக்ரோனின் முயற்சியானது, ஆளும் உயரடுக்கின் பெரும்பிரயத்தன, ஜனநாயக-விரோத சூழ்ச்சிகளின் ஒரு முக்கிய பாகமாக உள்ளது.

கட்டுரையாளரின் பரிந்துரைக்கும் பிற கட்டுரை:

Amid state censorship campaign, French media denounce “conspiracy theories”
[21 January 2018]