ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Slave labour working conditions and unions abandonment lead to attempted suicide by NLC contract workers

இந்தியா: அடிமை உழைப்பு வேலை நிலைமைகளும் தொழிற்சங்கங்களினால் கைவிடப்பட்ட நிலையும் NLC ஒப்பந்தத் தொழிலாளர்களின் தற்கொலை முயற்சிக்கு வழிவகுத்தன

By Sasi Kumar and Moses RajKumar,
15 June 2018

இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (என்.எல்.சி.) வேலை செய்யும் சுமார் 25 வறிய ஒப்பந்த தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களினால் கைவிடப்பட்டு மற்றும் அவை அனைத்தின்மீதும் நம்பிக்கை இழந்த நிலையில், அவர்கள் உட்படுத்தப்பட்ட தாங்க முடியாத அடிமை உழைப்பு நிலைமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மே மாத இறுதியில் ஒரு தீவிர நடவடிக்கையாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் நெய்வேலியை தளமாகக் கொண்ட பழுப்புக்கரி சுரங்க மற்றும் மின் உற்பத்தி நிறுவனமான, என்.எல்.சி, ஒப்பந்த தொழிலாளர்களைப் பயன்படுத்தி கொழுத்த இலாபத்தை ஈட்டும் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. நிறுவனம், இரண்டு அடுக்கு தொழிலாளர் முறையை பராமரித்து வருகிறது - ஒப்பந்த தொழிலாளர்களுடன் சேர்ந்து நிரந்தர தொழிலாளர்களையும் அதே வேலையை செய்வதற்கு பணியில் அமர்த்தியுள்ளது, ஆனால் நிறுவனத்தில் இயங்கும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் பின்னையதற்கு (நிரந்தர) வழங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை மட்டுமே முன்னையதற்கு (ஒப்பந்த) வழங்குகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். நிரந்தர வேலை, சமமான வேலைக்கு சமமான ஊதியங்கள் மற்றும் அவர்களது சக நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கும் நலன்களையும் வழங்கவேண்டும் என்று கோருகின்றனர். ஆனால் அவை அனைத்தும் தொழிற்சங்கங்களினால் காட்டிக் கொடுக்கப்பட்டன.

25 ஒப்பந்தத் தொழிலாளர்களை அவ்வாறான ஒரு ஆற்றொணா நிலைக்கு தூண்டியது எது என்றால், மாதத்திற்கு 26 நாட்களாக இருந்து வந்த வேலைநாட்களை, 18 முதல் 20 ஆக குறைக்கவும் மற்றும் அவர்கள் முன்பு வேலை செய்து வந்த பணியிடத்திலிருந்து வேறொரு பணியிடத்துக்கு அவர்களை மாற்றுவதற்குமாக என்.எல்.சி நிர்வாகம் எடுத்த கடும் கோபத்தை ஏற்படுத்தும் அந்த முடிவு தான். அவர்களது சக ஊழியர்களின் தலையீட்டின் விளைவாக, என்.எல்.சி வாயில் முன்னால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்ற 25 ஒப்பந்த தொழிலாளர்களில் பலர் தடுக்கப்பட்டனர். அவர்களில் சுமார் ஆறு பேர் விஷம் குடித்ததனால் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஒரு நாள் வேலைக்கு, ஒரு ஒப்பந்த தொழிலாளிக்கு மிகக் குறைந்த தொகையாக 530 ரூபாய் ($ US8) மட்டுமே வழங்கப்படுகிறது, அது மாதத்திற்கு சுமார் 10,000 ரூபாய்க்கு சற்று அதிகமானதாகும். எனினும், PF (எதிர்கால சேமிப்பு நிதியளிப்பு) மற்றும் ESI (மருத்துவ காப்பீடு) தொகை வெட்டப்பட்ட பின்னர், ஒரு ஒப்பந்த தொழிலாளிக்கு கையில் சுமார் 7,000 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. அதாவது ஒரு நிரந்தர தொழிலாளிக்கு கிடைக்கும் தொகையில் பத்தில் ஒரு பங்கு.

என்.எல்.சி, அதிக இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளதுடன், அதன் முதலீடுகளை மேலும் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது, அதற்கு காரணமாக இருப்பது மிகப் பெரும் எண்ணிக்கையில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் மிகவும் மலிந்த கூலிகளாக குரூரமாக சுரண்டப்படுவது தான். ஒரு தசாப்த காலத்திற்கும் மேலான காலத்தில் அதன் நிரந்தர தொழிலாளர் எண்ணிக்கையை 11,000 இலிருந்து சுமார் 4,000 ஆகவும், ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையை 11,000 இலிருந்து கிட்டத்தட்ட 7,000 ஆகவும் குறைத்துள்ளது. மேலும் 'சொசைட்டி' இல் சுமார் 3,900 தொழிலாளர்கள், உள்ளனர், (சொசைட்டி என்றழைக்கப்படும் இந்த இடைநிலை அமைப்பானது, இந்த வகை அமைப்புக்குள் சேர்க்கப்பட்ட தொழிலாளர்கள் விரைவில் நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என்று ஏமாற்றுவதற்கும் மற்றும் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்துவதற்குமாக என்.எல்.சி. இனால் உருவாக்கப்பட்டது.)

உச்சநீதிமன்றத்திற்கு NLC வாக்குறுதி அளித்தது போல் நிரந்தர ஊழியர்கள் ஓய்வு பெறுவதன் மூலம் உருவாக்கப்பட்ட காலியிடங்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களால் நிரப்பப்படவில்லை. ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு எதிராக போராட அனைத்து NLC நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களையும் அணிதிரட்ட மறுத்து, தொழிற்சங்கங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு முதலாளித்துவ நீதிமன்ற அமைப்பின் மீது பிரமைகளை உருவாக்கும் முயற்சியாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்றன. ஏப்ரல் 2013 இல், உச்ச நீதிமன்றம் ஒரு திட்டவட்டமான காலவரையை வரையறுக்காமல்,  அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஒரு தெளிவற்ற தீர்ப்பை வழங்கியது. எனவே, இவ்வாறாக உண்மையில் நீதிமன்ற தீர்ப்பு, அந்த  நிறுவனத்தின் மீது எந்தவிதமான சட்டரீதியான கட்டுப்பாட்டையும் உருவாக்கவில்லை.

இரண்டு பிரதான தமிழ்நாடு சார்ந்த போட்டி முதலாளித்துவக் கட்சிகள் - ஆளும் அஇஅதிமுக மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் இரண்டு பிரதான ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகள் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவை - என்.எல்.சி. தொழிலாளர்கள் மத்தியில் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இடையே பிளவுகளை ஏற்படுத்தி வைத்திருப்பதற்கான என்.எல்.சி. நிர்வாகத்தின் கொள்கையின்படி, அந்தக் கட்சிகளும் தனித் தனியாக தொழிற்சங்கங்களை வைத்திருக்கின்றன. மேலும் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பின் காரணமாக வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அந்த தொழிற்சங்கங்கள் அந்த நடவடிக்கைகளுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கின்றன, நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக அல்ல.

சில ஒப்பந்த தொழிலாளர்களின் சமீபத்திய தற்கொலை முயற்சியைத் தொடர்ந்து, WSWS நிருபர்கள் நெய்வேலிக்கு சென்று தொழிலாளர்களிடம் பேசினர்.

ஜகநாதன்

சொசைட்டி உறுப்பினரான, 39 வயதான ஜகநாதன் இவ்வாறு கூறினார்: "நான் 29 வருடங்கள் பணிபுரிந்து வருகிறேன். என் சம்பளம் 13,500 ரூபாய். ஆனால் PF மற்றும் ESI பங்களிப்புகளுக்கு 3,500 ரூபாய் கழிக்கப்படுகிறது. சமீபத்தில் தான் எனக்கு தொழிலாளர் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனக்கு வேறு எந்த நலன்திட்டங்களும் கிடையாது. சொசைட்டி தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது, என்.எல்.சி. அவர்களுக்கு பணிக்கொடையாக 2,25,000 ரூபாயும் இறப்பு உதவிப்படியாக 50,000 ரூபாயும் வழங்குகிறது!"

அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பற்றி கருத்துத் தெரிவிக்கையில்; "தொழிற்சங்கங்கள் எதுவுமே தொழிலாளர்களுக்காக போராடவில்லை. ஆளும் அஇஅதிமுக மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க. இரண்டுமே ஊழல் கட்சிகள். எனவே கம்யூனிச தொழிற்சங்கங்கள், சிஐடியு மற்றும் ஏஐடியுசி [சிபிஎம் மற்றும் சிபிஐ உடன் முறையே இணைந்தவை] ஆகியவை தங்களுக்காக போராடும் என்று தொழிலாளர்கள் ஆரம்பத்தில் நம்பினார்கள். ஆனால் அவர்கள் தொழிற்சங்கங்களின் தலைமை பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்தனர். இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிலாள வர்க்க விரோத சிக்கன நடவடிக்கைகளை ஆரம்பித்து மேலும் முன்னெடுத்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கங்களுக்கு ஆதரவு கொடுத்தன என்று நீங்கள் கூறுவதுடன் நான் உடன்படுகிறேன்.

“மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா வளரும் என்று பா.ஜ.க. கூறியது, ஆனால் வேலையின்மைதான் வளர்ந்து வருகிறது. பெரும் முதலாளிகள்  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை முடிந்தவரை அதிகபட்சமாக கொள்ளையடித்துள்ளனர். அவர்கள் கொள்ளையடித்த பணத்தை பாதுகாப்பாக வெளிநாட்டு வங்கிகளில் சேமித்து வைத்துள்ளனர், அத்துடன் அவர்கள் பாதுகாப்பாக வெளிநாட்டிலும் கூட தங்குகின்றனர். ஆனால், விஜய் மல்லையா மற்றும் நிராவ் மோடி போன்ற (கொள்ளைக்கார) மனிதர்களுக்கு எதிராக மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

"பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு அத்தியாவசியமான  பொருட்களின் விலைகளும் வானுயர அதிகரித்துள்ளன. ஆனால் உழைக்கும் மக்கள் சொல்லொணா துயரத்துக்குள் தள்ளப்பட்ட நிலையில், மோடி, அம்பானி போன்ற செல்வந்தர்களை ஆதரிக்கிறார்."

ஜெயராமன்

ஒரு ஓய்வுபெற்ற ஒப்பந்த ஊழியர், 58 வயதான ஜெயராமன் இவ்வாறு கூறினார்: "ஒவ்வொரு சொசைட்டி உறுப்பினரையும் நிரந்தர தொழிலாளியாக்குவதாக என்.எல்.சி. வாக்குறுதி அளித்தது. ஆனால் தொழிலாளர்கள் எவரும் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை."

பல ஆண்டுகளாக என்.எல்.சி. தொழிலாளர்கள் பற்றிய உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நிலைப்பாட்டை அறிந்திருந்த ஜெயராமன் கூறினார்: "உங்கள் நிலைப்பாடு ஊர்ஜிதமாகி உள்ளது. அதாவது தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் நலன்களுக்காக போராடவில்லை மற்றும் என்.எல்.சி, முடிந்தவரை ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தாமல் அப்படியே வைத்திருக்கும்."

"என்.எல்.சி.யில் ஓய்வு பெற்ற ஒவ்வொரு ஒப்பந்த ஊழியரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்திருக்கின்றார். ஆனாலும் அவர்கள் ஒரு நிரந்தர ஊழியராக இல்லாமல் ஒரு ஒப்பந்த ஊழியராகவே ஓய்வு பெறுகின்றார். அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 1500 ரூபாய் அற்ப ஓய்வூதியத்தை அறிவித்துள்ளது!"

அவர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்: "சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும், தொழிலாளர்களின் எரியும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரே வழி அதுதான்!

"எங்கள் குடும்பம் என் வருமானத்தை சார்ந்திருக்கிறது. இப்போது நான் ஓய்வு பெற்றுள்ளேன். என் மகன் என்.எல்.சி.இல் ஒரு ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்கிறார். முன்னதாக எங்கள் குடும்பத்தை என் மகன் மற்றும் எனது  வருமானத்தின் மூலம் நிர்வகிக்க முடிந்தது. ஆனால் இப்போது என் வருமானம் நிறுத்தப்பட்டு விட்டது, எனவே என் மனைவி விவசாய வேலைக்கு செல்கிறார் அதற்கு ஒரு நாளைக்கு 150 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். இது போதாது. ஆனால் என்ன செய்வது? நான் ஒரு இதய நோயாளியாக இருக்கிறேன். மற்றொரு கடின உழைப்பு செய்ய முடியவில்லை. சூடான கோடை காலத்தில், மோசமான நிலைமைகளால் எங்களது வீட்டில் வாழ முடியாது.

"நான் சொசைட்டி உறுப்பினராக ஓய்வு பெற்றபோது, ​​எனக்கு 200,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது, இதில் பணிக்கொடையும் இறப்புப்படியும் உள்ளடங்கும். என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் 30 வருடங்கள் பணியில் செலவிட்டேன், ஆனால் எனக்கு மிகக் குறைந்த அற்ப தொகைதான் கிடைத்துள்ளது."

அவரது பெயரை வெளியிட விரும்பாத ஒரு ஒப்பந்தத் தொழிலாளி கூறியதாவது: "தனது தொழிற்சங்கத்தின் போராட்டத்தின் காரணமாகத்தான், என்.எல்.சி. 5,000 பேரை சொசைட்டி உறுப்பினர்களாக்கி உள்ளது என்று ஏ.ஐ.டி.யு..சி தொழிற்சங்க தலைவர் சேகர் பெருமிதமாக கூறுகிறார், ஆனால் தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.”

அவர் மேலும் கூறினார்: "பல தொழிலாளர்கள் எந்த நன்மையையும் பெறாமலேயே ஓய்வு பெற்றனர். தொழிற்சங்கங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.”

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்கல் செய்ய அவர்கள் போராட மாட்டார்கள். அவர்கள் தொழிலாளர்களை விட என்.எல்.சி. நிர்வாகத்துடன்தான் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளனர். தொழிற்சங்கங்கள் சந்தாப் பணத்திற்காகவும் இதர நலன்களுக்காகவும் மட்டுமே தொழிலாளர்களை பயன்படுத்தப்படுகின்றன."

புரூஸ் மார்க்

52 வயதான புரூஸ் மார்க் கூறினார்: "நான் 34 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். எடப்பாடி [முதலமைச்சர்] தலைமையிலான தமிழ்நாடு அரசு என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்துவதில்லை. இது ஒரு மத்திய அரசு நிறுவனம் என்பதால் அவர்கள் தலையிட முடியாது என்று வாதிடுகின்றனர். எடப்பாடி, மோடி அரசாங்கத்துடன் நெருக்கமாக தொடர்பில் உள்ளார். அவர்களது பொலிசார் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்றனர். அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எந்தவொரு எதிர்ப்பையும் அவர்கள் அனுமதிக்க விரும்பவில்லை மற்றும் மக்கள் உரிமைகளுக்காக போராடுவதையும் விரும்பவில்லை. அவர்கள் மக்களின் எதிர்ப்பை கொடூரமாக நசுக்கி மௌனப்படுத்த விரும்புகின்றனர்."

ஒரு நிரந்தர தொழிலாளி கூறினார்: "என் சம்பளம் 60,000 ரூபாய்கள் ஆகும், ஆனால் நான் 30 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். ஆனால் நிர்வாக ஊழியர்களின் சம்பளம் 200,000 முதல் 300,000 ரூபாய் வரை இருக்கும், மேலும் அவர்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். இப்போது ஒவ்வொரு துறையிலும், 4 நபர்களின் வேலை ஒரு நிரந்தர ஊழியரால் செய்யப்படுகிறது. இப்போது பணிச்சுமை கனமாக உள்ளது. ஓய்வு நேரம் கிடையாது. நிரந்தர வேலை மற்றும் ஊதிய உயர்வு ஆகியவற்றிற்கான சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு நான் ஆதரவளிக்கிறேன். ஆனால் தொழிற்சங்கங்கள் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பிரிக்கின்றன. உங்கள் உலகக் கட்சியை நான் ஆதரிக்கிறேன், உங்கள் உலக சோசலிச வலைத் தளத்தை படிப்பேன்.