ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Nine million truck drivers across India strike over increasing fuel prices

எரிபொருள் விலை அதிகரித்து வருவது குறித்து இந்தியா எங்கிலும் ஒன்பது மில்லியன் சரக்கு ஊர்தி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்

By Wasantha Rupasinghe 
19 June 2018

எரிபொருள் விலை அதிகரிப்பு, மூன்றாம் தரப்பு காப்பீட்டு கட்டணத்தில் ஏற்பட்டுள்ள கூர்மையான உயர்வுகள் மற்றும் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சுங்கவரி அதிகரிப்பு ஆகியவை குறித்து நேற்று இந்தியா எங்கிலும் மில்லியன் கணக்கான சரக்கு ஊர்தி ஓட்டுநர்கள் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் அனைத்து இந்திய கூட்டமைப்பு (All India Confederation of Goods Vehicle Owners’ Associations – AICGVOA) இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது, இது, எட்டு மில்லியன் சரக்கு வாகனங்களை உள்ளடக்கிய 600 சரக்கூர்தி உரிமையாளர்கள் சங்கங்களுக்கான தில்லியை தளமாகக் கொண்ட ஒரு தேசிய குடை அமைப்பாகும்.

AICGVOA இன் தலைவர் சென்னா ரெட்டி, திங்களன்று, சுமார் ஒன்பது மில்லியன் சரக்கு ஊர்திகள் ஓடவில்லை என செய்தி ஊடகத்திற்கு தெரிவித்தார். மேலும், “இப்போதைக்கு,” “இந்தியா முழுவதிலுமாக 60 சதவிகிதத்திற்கும் அதிகமான சரக்கு ஊர்திகள் ஓடவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

Business Standard பத்திரிகையின் படி, வேலைநிறுத்தத்தின் விளைவாக, “திங்களன்று நாடெங்கிலுமான பெரும்பாலான மண்டிகளில் (கிராமப்புற சந்தைகள்) பகுதியளவிற்கு அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் பாதிப்புக்குள்ளாகியது” என செய்தி வெளியானது.

தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (National Horticultural Research & Development Foundation) தொகுக்கப்பட்ட தரவுகளை மேற்கோள் காட்டி, லேசல்கோன் மண்டியில் அளவீட்டின் படி வெங்காய விநியோகம் வெள்ளியன்று 1,717 டன்களாக இருந்தது, திங்களன்று 1,400 டன்களாக குறைந்திருந்ததையும், அதே போல, பிம்பால்கோன் மண்டியிலும், வெள்ளியன்று 2,510.5 டன்களாக இருந்த வெங்காய விநியோகம், திங்களன்று 1,980 டன்களாக சரிவு கண்டதையும் கட்டுரை சுட்டிக்காட்டியது.

“டீசல் மீது அசாதாரணமான வரிகளை அரசாங்கம் சுமத்தி வருவதுடன், அதனைச் செலுத்த வேண்டியதை அவசியமாக்குகிறது” என்று ரெட்டி தெரிவித்தார். “2013 இல், சர்வதேச கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 110 அமெரிக்க டாலராக இருந்த போது, ஒரு லிட்டர் டீசலின் விலை 53 ரூபாயாக இருந்தது. இருப்பினும், தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 70 டாலராக குறைந்துள்ளது என்றாலும், ஒரு லிட்டர் டீசலின் விலையோ 74 ரூபாயாக மேலும் அதிகரித்துள்ளது” என்றார்.

AICGVOA இன் பொதுச் செயலர் எஸ். ராஜிந்தர் சிங், மே 29 அன்று Hindu பத்திரிகையில், எரிபொருள் குறித்த தினசரி விலை மதிப்பீட்டு நடைமுறை “சரக்கு ஊர்தி உரிமையாளர்களை திவாலாக்குவதுடன், சரக்கு ஊர்தி தொழில்துறையை அழிக்கிறது என்றும், அதிலும் குறிப்பாக சிறிய சரக்கு ஊர்தி தொழிலாளர்கள் மீதான தாக்கங்கள் பற்றி உங்களால் பரிசீலிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றியும் நாம் உறுதியாக இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

மேலும், சிங் இவ்வாறு கூறினார்: “ஒரு வாகனம் நாளொன்றுக்கு சராசரியாக 50 முதல் 150 லிட்டர் வரையிலான டீசலை பயன்படுத்துகிறது என கருதினால், கிட்டத்தட்ட 970 மில்லியன் ரூபாய் [$US14,246,781] வரை நாளொன்றுக்கான செலவு [சரக்கு ஊர்தி தொழில்துறை முழுவதுமாக] அதிகரித்துள்ளது என அர்த்தமாகிறது.

AICGVOA இன் தலைவர் ரெட்டி, மூன்றாம் தரப்பு காப்பீட்டு கட்டணங்கள் “அடுத்தடுத்த ஆண்டுகளில் சீராக அதிகரித்துள்ளது” என்று புகார் செய்கிறார்.

கடந்த ஆண்டு முழுவதிலுமாக, இதே கோரிக்கையை முன்வைத்து பல மில்லியன் சரக்கூர்தி ஓட்டுநர்கள் அவ்வப்போது வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.

ஏப்ரல் 2017 ஆரம்பத்தில், காப்பீட்டு கட்டணங்களில் 50 சதவிகித உயர்வு, அதிகரிக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் மண்டல போக்குவரத்து அலுவலக (Regional Transport Office) கட்டணங்களில் நான்கு மடங்கு அதிகரிப்பு போன்றவற்றை எதிர்த்து தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட பாதியளவு வணிக வாகனங்கள் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும், அக்டோபர் 9, 2017 அன்று, சரக்கு மற்றும் சேவை வரி (GST), டீசல் விலைகள், சரக்கு ஊர்தி தொழிலாளர்களை துன்புறுத்துதல் மற்றும் சாலை மற்றும் சுங்கவரி கொள்கைகள் தொடர்பான இலஞ்ச ஊழல்கள் ஆகியவை குறித்து ஒரு இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை 9 மில்லியனுக்கும் அதிகமான சரக்கு ஊர்தி தொழிலாளர்கள் தொடங்கினர்.

அடுத்து, பிப்ரவரி 2018 இல், LPG டாங்கர்களை பயன்படுத்த வாடகை கட்டணத்தை நிர்ணயிக்க தேசிய பெட்ரோலிய அமைச்சகமும் மற்றும் முக்கிய எண்ணெய் நிறுவனங்களும் அறிமுகப்படுத்திய ஒரு புதிய தேசிய மட்டத்திலான ஒப்பந்தப்புள்ளி நடைமுறைக்கு எதிராக 4,500 க்கும் அதிகமான LPG டாங்கர் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மே மாதத்தில், இந்தியாவின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகமான, ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு (Jawaharlal Nehru Port Trust-JNPT) கொள்கலன்களை எடுத்துச்செல்லும் 4,000 க்கும் மேற்பட்ட போக்குவரத்துக்காரர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இறக்குமதி கொள்கலன்களை எடுத்துச்செல்ல நான்கு போக்குவரத்து இயக்குநர்களுக்கு மட்டும் பிரத்தியேக உரிமைகளை JNPT வழங்கியதற்கு –துறைமுகத்தில் சிறிய போக்குவரத்துக்காரர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக– எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

AICGVOA இன் பொதுச் செயலர் ஆர்.எஸ். பாஸின் செய்தி ஊடகத்தில், “சாலை கட்டமைப்புக்காக ஒரு லிட்டர் டீசலுக்கு செஸ் வரியாக 8 ரூபாயை அரசாங்கம் வசூலிப்பது, மேலும் நியாயமற்ற வகையில், பல-அச்சு வண்டிகள் சாலையை பயன்படுத்துவதற்கான வரியாக ஒரு லிட்டருக்கு மற்றொரு 8 ரூபாயை வசூலிப்பது என்ற வகையில் சரக்கு ஊர்தி தொழிலாளர்கள் பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்” என்று தெரிவித்தார்.

லாரி உரிமையாளர்களுக்கு, அதிலும் பெரும்பாலும் சிறியளவில் தொழில் புரிவோர்களுக்கு, சுங்கச் சாவடி கட்டணங்கள், டீசல் விலைகள் மற்றும் அவர்களின் இலாபத்தில் வெட்டுக்களை ஏற்படுத்தியுள்ள GST போன்றவை உயர்த்தப்படுவது தான் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. இருப்பினும், அதனால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் லாரி ஓட்டுநர்கள் தான், ஏனென்றால் அவர்கள், ஓய்வூதியம், சுகாதார பாதுகாப்பு அல்லது காப்புறுதி போன்ற எந்தவொரு சமூக பாதுகாப்பு திட்டங்களிலும் பயன்பெற முடியாதவர்களாக உள்ளனர்.

அடக்குமுறைக்குட்பட்ட மற்றும் சோர்வுற செய்யும் வேலை நிலைமைகளில் ஓட்டுநர்கள் பணிபுரிந்தாலும், அவர்களது ஊதியங்கள் மிகவும் தேக்கமடைந்த நிலையில் உள்ளன. அவர்கள் 100 ரூபாய் மதிப்புள்ள சுமைக்கு 15 பைசாவை (cents) கூலியாக பெறுகின்றனர், அது அவர்களது, மருத்துவ, உறைவிட மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்கு கூட போதுமானதாக இருப்பதில்லை.

சரக்கு ஊர்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் முக்கிய பிரச்சினையாக இருக்கும் எரிபொருள் விலை உயர்வு என்பது, உழைக்கும் மக்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளையும் கூட பாதிக்கிறது. ஆனால், எரிபொருள் விலை உயர்வுக்கும், மத்திய மற்றும் மாநில மட்டங்களில் அரசாங்கங்களால் திணிக்கப்படும் பிற சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு ஐக்கியப்பட்ட போராட்டத்தையும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் தடுக்கின்றனர்.

போக்குவரத்து துறை தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை பிளவுபடுத்தி வைத்துள்ளன. உதாரணமாக, அனைத்து இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (All India Motor Transport Congress – AIMTC), தற்போதைய வேலைநிறுத்தத்தில் பங்கெடுப்பதற்கு எதிராக முடிவு செய்துள்ளது. AIMTC இன் முக்கிய குழு தலைவர் பால் மால்கிட் சிங், இந்த வேலைநிறுத்தம் “ஒரு தோல்வியுறும் நிகழ்வாகும்”, ஏனென்றால் இது AIMTC இன் ஆதரவை பெறவில்லை என்று செய்தி ஊடகத்திற்கு தெரிவித்தார். அதற்கு மாறாக, AIMTC, அதன் இணைய தள அறிவிப்பின் படி, ஏறக்குறைய 9.3 மில்லியன் சரக்கு ஊர்தி தொழிலாளர்கள், ஐந்து மில்லியன் பேருந்து மற்றும் சுற்றுலா போக்குவரத்து இயக்குநர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, அதே பிரச்சினை குறித்து ஜூலை 20 அன்று ஒரு தனி வேலைநிறுத்தத்திற்கு அறிவித்துள்ளது.