ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Extreme-right Italian government takes shape

தீவிர வலதுசாரி இத்தாலிய அரசாங்கம் முழுமையடைகின்றது

By Marianne Arens 
6 June 2018

இத்தாலிய பாராளுமன்றத்தில் புதனன்று நடைபெற்ற இறுதிக்கட்ட நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து, லெகாவும் (The League) ஐந்து நட்சத்திர இயக்கமும் (M5S) இணைந்த புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்துள்ளது. இந்த “மாற்றத்திற்கான அரசாங்கம்”, பெனிட்டோ முசோலினி ஆட்சிக்கு பிந்தைய ஜியுசெப்ப கொன்டே தலைமையிலான மிக வலதுசாரி அரசாங்கமாக உள்ளது.

சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவிக்கப்பட்ட வாய்வீச்சு உறுதிமொழிகள் ஒருபுறம் இருந்தாலும் கூட, நேற்று செனட்டிற்கும், புதனன்று பிரதிநிதிகள் சபைக்கும் தன்னை முன்நிறுத்தும் அமைச்சரவை, தொழிலாள வர்க்கத்தை மூர்க்கமாக தாக்கும் என்பதுடன், அகதிகளை துன்புறுத்துவதன் மூலம் சமூக எதிர்ப்பை திசைதிருப்ப முனையும். இது, அமைச்சர்கள் தேர்வு அத்துடன் அவர்களது முதல்கட்ட நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள் இரண்டின் மூலமாகவும் தெளிவாகியுள்ளது.

அமைச்சரவை மொத்தம் 20 உறுப்பினர்களை கொண்டுள்ளது: அமைச்சரவை செயலராக 53 வயதான பிரதம மந்திரி கொன்டே யும்  மற்றும் (ஐந்து பெண்கள் உட்பட) 18 அமைச்சர்களும் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த 20 பேரில், அரசாங்கத்தின் தலைமை உட்பட, ஐந்து நட்சத்திர இயக்கத்தைச் சேர்ந்த எட்டு பேர், லெகா கட்சியைச் சேர்ந்த ஆறு பேர், மேலும் கட்சி சாராத உறுப்பினர்கள் ஆறு உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர்.

லெகா மற்றும் ஐந்து நட்சத்திர இயக்கம் இரண்டு கூட்டணி கட்சிகளும் ஒரு துணை பிரதமரை நியமித்திருந்தாலும் கூட, லெகா தான் ஆளுமைக் கட்சியாக இருக்கிறது என்பது தெளிவாக உள்ளது. M5S ஐ போலல்லாமல், லெகா புதிதாக ஆட்சிக்கு வரும் கட்சியொன்றும் இல்லை. சில்வியோ பெர்லுஸ்கோனியின் கீழ் பலமுறை இது ஆட்சியில் இணைந்திருந்தது. கூடுதலாக, லெகா கட்சித் தலைவர் மத்தேயோ சல்வீனி, அவரது ஆதரவாளர் ஜியான்கார்லோ ஜியோர்ஜெட்டியை அமைச்சரவை செயலராக மேன்மை பெறச் செய்துள்ளார், அங்கு அவர் கொன்டே மீது தனது நேரடி செல்வாக்கை செலுத்த முடியும். ஜியோர்ஜெட்டி ஒரு நீண்டகால லெகா அரசியல்வாதி ஆவார் என்பதோடு, ஐந்து ஆண்டுகளாக பாராளுமன்ற வரவு-செலவுத் திட்ட குழுவின் தலைவராகவும் இருந்தார்.

45 வயது சல்வீனி, உள்துறை மந்திரியாக, ஒரு வலதுசாரி, அகதிகள் எதிர்ப்பு மற்றும் வணிக-சார்பு போக்கு கொண்ட அவரது பாத்திரத்தை ஏற்கவுள்ளார். வலதுசாரி தீவிரவாத லெகா ஐரோப்பிய ஒன்றியத்திற்குள், ஜேர்மனியின் ஜேர்மன் மாற்றீடு (Alternative for Germany-AfD), ஆஸ்திரிய சுதந்திரக் கட்சி (Austrian Freedom Party-AFP) மற்றும் பிரெஞ்சு தேசிய முன்னணி (Front National - FN) போன்ற ஏனைய அதிவலது தீவிரவாத கட்சிகளுடன் இணைந்து வேலை செய்வதுடன், வடக்கு இத்தாலியில் முக்கியமாக சிறியளவிலான தொழில்கள் மற்றும் சுய தொழில்கள் செய்பவர்களின் ஆதரவை இது ஈர்த்துள்ளது.

மேலும், 32 வயது லூய்கி டி மாயோ, தொழிலாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான புதிய மந்திரியாக பொறுப்பேற்க உள்ளார். அவரது கட்சியான M5S, வேலையில்லாத மற்றும் reddito di cittadinanza (குடிமக்கள் வருமானம்) என அறியப்படும் ஒரு வகை குறைந்த நிபந்தனையற்ற அடிப்படை வருமானத்தை கொண்ட இளைஞர்களுக்கு வாக்குறுதியளித்துள்ளது. கூடுதலாக, நாட்டின் வெறுக்கப்படும் ஓய்வூதிய சீர்திருத்தம் மீண்டும் அகற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

“இடது அல்லது வலது” எதுவுமல்லாததாக கூறப்படும் M5S, லெகாவை விட, குறிப்பாக நாட்டின் தெற்கில் ஒரு பரந்த ஆதரவாளர் அடித்தளத்தை கொண்டுள்ளது. இந்த கட்சி அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைக் கொண்டுள்ளதோடு, பாராளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மை கட்சியாக திகழும் லெகா கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு அத்தியாவசியமாக சேவையாற்றுகிறது.

இரண்டு அமைச்சர்கள் இராணுவ அமைப்பிலிருந்து வந்தவர்கள் என்பதுடன், அவர்கள் இருவரும் M5S ஆல் பரிந்துரைக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்கள், பாதுகாப்பு அமைச்சரான எலிசபெத்தா திரென்தாவும், சுற்றுச்சூழல் அமைச்சரான 59 வயது காராபானி ஜெனரல் செர்ஜியோ கொஸ்தாவும் ஆவர். கொஸ்தாவை டி மாயோ பரிந்துரைத்ததற்கான காரணம், அவர் சட்டவிரோத கழிவுப்பொருட்கள் தொடர்பாக மாஃபியா கும்பலை எதிர்த்து போராடுவதில் ஈடுபட்டார் என்பதாகும்.

பாதுகாப்பு அமைச்சகத்தை பொறுப்பேற்கும் திரென்தா, இத்தாலியின் ஏகாதிபத்திய நலன்களை மிக நெருக்கமாக பிரதிநிதித்துவம் செய்கிறார். அவர் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையின் பேராசிரியராகவும், ரிசர்வ் படையில் ஒரு கேப்டனாகவும் உள்ளார். மேலும் அவர், ஈராக் மற்றும் லெபனான் கடற்கரையோரப் பகுதியில் ஒரு இராணுவ ஆலோசகராகவும் சேவையாற்றியுள்ளார். மிக சமீபத்தில், இராணுவத்தில் இருந்து ஆராய்ச்சி ஒப்பந்தங்களை பெற்ற மற்றும் லிபியா மற்றும் மத்திய கிழக்கிற்காக கூலிப்படையினரை நியமித்துள்ளதாக கூறப்பட்ட SuggestAid குழுவிற்கு தலைமை வகித்தார்.

பொருளாதார மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் இரண்டு பேரும் குறிப்பாக முக்கிய அமைச்சர்களாவர்; இருவருமே அணிசாரா “தொழில்வல்லுனர்கள்” ஆவர். வெளிப்படையாக கூறுவதானால், வங்கிகள், இத்தாலிய மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் அரசு எந்திரம் ஆகிய இவற்றின் நலன்களுக்காகவே அவர்கள் முற்றிலும் கடமைப்பட்டுள்ளனர் என்பதைத் தவிர இந்த சொல்லுக்கு வேறெந்த அர்த்தமும் இல்லை.

64 வயது என்ஸோ மோவாவேரோ மிலனேசி ஐ அரசு செயலராக நியமித்திருப்பது என்பது நிதி சந்தைகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் சமாதானப்படுத்துவதையே வெளிப்படையாக நோக்கம் கொண்டுள்ளது. 2011 முதல் 2013 வரை இத்தாலிய பிரதம மந்திரியாக ஒரு கடுமையான சிக்கனத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவரான அணிசாரா மோவாவேரோ மிலனேசி, நீண்டகால ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளரான மாரியோ மோன்டியின் மிகுந்த ஆதரவாளராக இருப்பதாக கருதப்படுகிறது. மோவாவேரோ மிலனேசி ஐரோப்பிய ஒன்றிய போட்டி நிறுவனத்தில் மோன்டியின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றினார். பின்னர் அவர் ஐரோப்பிய மந்திரியாக நியமிக்கப்பட்டார், இந்த பதவியை அடுத்துவந்த எங்ரிகோ லெத்தா (ஜனநாயகக் கட்சி, PD) அரசாங்கத்திலும் அவர் தக்கவைத்துக் கொண்டார். மேலும், மோவாவேரோ மிலனேசி, கார்டியா டி ஃபினான்சா வில் ஒரு இராணுவ பதவியிலும் சேவையாற்றியிருந்தார்.

ஜியோவானி டிரியா, 69 வயது, பொருளாதார மற்றும் நிதித்துறை அமைச்சராக ஒரு சிறப்பு பாத்திரம் வகிக்கிறார். இந்த பதவிக்கான சர்ச்சைக்குரிய முதல் வேட்பாளரான, யூரோ அவநம்பிக்கை கொண்ட 81 வயது பாவோலோ சாவோனாவுக்கு பதிலாக இவர் பதவியேற்கிறார். சாவோனா ஐரோப்பிய விவகார அமைச்சகத்தை பதவி இலாகா இன்றி உருவாக்கினார், அதே வேளையில் கடுமையாக கடன்பட்டுள்ள நாட்டின் வரவு செலவுத் திட்டத்திற்கான ஒரு பொறுப்பான பதவியை டிரியா எடுத்துக் கொள்கிறார்.

பணியாளர்களின் இந்த தேர்வு நிதியச் சந்தையை உடனடியாக சற்று திருப்திப்படுத்தக்கூடியதாக இருந்தது. டிரியா ஒரு தெரியாத நபர் அல்ல; அவர், பெர்லுஸ்கோனி தலைமையிலான ஃபோர்ஸா இத்தாலியாவின் பொருளாதார வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஈடுபட்டிருந்தார். மேலும், அவர் ரோம் டோர் வெர்காட்டா பல்கலைக்கழகத்தில் பொருளியல் பிரிவு தலைவராக இருக்கிறார் என்பதுடன், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்புக்காகவும் மற்றும் ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்காகவும் பணியாற்றியுள்ளார். மேலும் அவர், முதலீட்டு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கும் சர்வதேச சிந்தனை குழாம் டெனியோ (Teneo) வில் ஒரு உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில், புதிய அரசாங்கம் அதன் கடன் சுமைகளை இன்னும் குறைக்கும் என்பதையும், ஐரோப்பிய ஒன்றிய கட்டளை விதிகளுக்கு ஒத்துப்போகும் என்பதையும் உறுதி செய்வதற்கான முதன்மை பொறுப்பு டிரியாவுக்கு இருக்கும்.

கூட்டணி திட்டங்களின் சர்ச்சைக்குரிய வாக்குறுதிகள் அம்பலமாவதற்கு முன்னதாகவே, டிரியா தனது வலைத் தளத்தில் அவை பற்றிய ஒரு கடுமையான விமர்சனத்தை வெளியிட்டார். எனவே அவரது நியமனம், ஐரோப்பிய நிதியச் சந்தைகளை சமரசம் செய்யும் வகையிலான ஒரு தெளிவான சமிக்ஞையாக உள்ளது.

ஒரு விமர்சனத்தில், டிரியா இவ்வாறு எழுதினார்: “அரசியல் பேச்சுவார்த்தை அட்டவணையைச் சுற்றி ஒருங்கிணைந்த தகுதிவாய்ந்த நபர்களுக்கான உரிய அனைத்து மரியாதைகளுடன்… உண்மையில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை பார்க்கையில், தெரியப்படுத்தப்படுள்ளவை பொதுவாக சிறியதாகவே தோன்றுகின்றன.” ஐரோப்பிய ஒன்றியம் அதன் விதிகளை மாற்றும் “சாத்தியமில்லை” என்றும், உறுதியளிக்கப்பட்ட திட்டங்களுக்கு பணம் எங்கிருந்து வர வேண்டும் என்பது பற்றி முற்றிலும் தெளிவாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்திற்கும் மேலாக, ஓய்வூதிய சீர்திருத்தத்தை தற்காலிக நிறுத்தம் செய்ய இது முறையிடுகிறது. பின்னர் அவர், ஒரு “அமைப்பு முறையின் ஒரு பகுதி உற்பத்தி செய்கிறது, மற்றொரு பகுதி அதை நுகர்கிறது” என்று விவரித்து, “குடிமக்களின் வருமானத்தை” செயலற்றது என கேலி செய்கிறார்.

மறுபுறம், டிரியா ஒரு நிலையான வரியை அறிமுகப்படுத்துவது பற்றி சிந்திக்க முற்றிலும் தயாராகவுள்ளார் என்பது, “குடிமக்களின் வருமானம்” மற்றும் ஓய்வூதிய சீர்திருத்தத்தை ஒட்டுமொத்தமாக திரும்பப் பெறுவது என்பனவற்றை விடவும், இத்தாலிய வரவு-செலவுத் திட்டத்தில் மிகப்பெரிய பற்றாக்குறை ஒன்றை இது உருவாக்கும். அத்தகைய குறைந்தபட்சமான 15 சதவிகித வரி தொழில்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என டிரியா விளக்குவதுடன், மிகவும் உயர்த்தப்பட்ட விலைகளின் மூலமாக உழைக்கும்-வர்க்கத்தினரின் பணப்பைகளை கடுமையாக தாக்கும் மதிப்பு-கூட்டு வரியை (Value-Added Tax-VAT) அதிகரிப்பதன் மூலம் நிதியளிக்கவும் விரும்புகிறார்.

திங்களன்று மாலை, பொருளாதார அமைச்சகத்தின் அரசு செயலர், அடுத்த ஆண்டில் இருந்து, தொழில்களுக்கு நிலையான வரி செயல்படுத்தப்படும், ஆனால் குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் அது பொருந்தாது என அறிவித்தார். பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை இது பாதிக்கக்கூடாது என்பதற்காக M5S இன் பிரதிநிதிகள் உடனடியாக இந்த அறிக்கையை மறுத்தனர். புதிய அரசாங்கம் இத்தாலிய மற்றும் ஐரோப்பிய பெரு வணிகங்களின் நலன்களுக்காக மேலும் செயலாற்றும் என்பதை இது ஏற்கனவே தெளிவுபடுத்துவதோடு, ஐரோப்பிய அரசு தலைவர்களும் இதை புரிந்து கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தின் பிரதான தலைவர்கள், கொன்டே நிர்வாகத்துடனான நல்ல ஒத்துழைப்புக்காக அவர்கள் நம்பிக்கையுடன் இருந்ததாக ஏற்கனவே தெரிவித்துள்ளனர். ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் பேர்லினுக்கு கொன்டே ஐ அழைத்திருப்பதுடன், கனடாவில் விரைவில் அவரை சந்திக்க எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். பிரிட்டிஷ் அரசு தலைவர் தெரசா மே, மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இருவரும் கூட தொலைபேசியில் கொன்டே க்கு வாழ்த்து தெரிவித்தனர். பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஆணையர் பியர் மொஸ்கோவிச்சி, “ரோமில் எடுக்கப்பட்ட முடிவுகள், பாரிஸ் அல்லது புரூசெல்ஸில் எடுக்கப்படவில்லை” என்று கூறியதுடன், ஐரோப்பிய ஒன்றியம், “இத்தாலியின் எதிர்ப்பாளர் இல்லை” என்றும் சேர்த்துக் கூறினார்.

இருப்பினும், மோதலின் மூலம் புதிய அரசாங்கம் சீர்குலைந்துள்ளதை சமீபத்திய சம்பவங்கள் காட்டுகின்றன. மார்ச் 4 தேர்தலுக்கு சற்று முன்பாக, பிரதிநிதிகள் சபையின் புதிய தலைவரான ரோபார்டோ ஃபிகோ (M5S), பின்வருமாறு சத்தமாக வலியுறுத்தினார்: “லெகாவுடன் ஒருபோதும் நாங்கள் கூட்டணி சேரமாட்டோம் என நான் உத்திரவாதமளிக்கிறேன்.” மேலும், ஐந்து நட்சத்திர இயக்கத்தில் இருந்து லெகா “மரபு ரீதியாக மாறுபட்டது” என்றும் கூறினார். தற்போது அவர்கள், ஒரு வலதுசாரி தீவிரவாத அமைச்சரவைக்காக ஒரு பாராளுமன்ற பெரும்பான்மையை பாதுகாக்கும் பொருட்டு லெகாவுடன் இணைந்து ஆட்சியில் அமர்கின்றனர் என்றும் சேர்த்துக் கூறினார்.

இது, அகதிகளுக்கு எதிரான ஆக்கிரோஷக் கொள்கைக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதையும் விளக்குகிறது. லெகா கட்சித் தலைவர் சல்வீனி, ஒவ்வொரு பிராந்தியத்திலும் தடுப்புக்காவல் முகாம்களை உடனடியாக நிர்மாணிப்பதற்கு அழைப்பு விடுத்து, கடந்த சில நாட்களாக, அகதிகளுக்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்துள்ளார். கடந்த வார இறுதியில் மத்தியதரைக் கடலில் பல டசின் கணக்கான மக்கள் மூழ்கியது பற்றிய அறிக்கைகள் வெளிவந்த போது, கடற்பகுதி முழுவதும் துனிசியா அதன் குற்றவாளிகளை ஏற்றுமதி செய்வதாக ஆத்திரமூட்டும் வகையில் அவர் கூறினார்.

தேசியவாதத்தின் வலியுறுத்தலுக்கான முக்கிய காரணம், “முதலில் இத்தாலியர்கள்” என்ற குறிக்கோளின் படி, தெளிவாக உள்ளது. அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் முடக்குவதற்கும் முனைகிறது. “மாற்றத்திற்கான அரசாங்கம்” அதற்கான ஆதரவை விரைவில் இழக்கும் என்பதையும் இது உணர்த்துகிறது. குடிமக்களின் வருவாய், ஓய்வூதியங்களின் மீள் அறிமுகம் மற்றும் அனைவருக்கும் குறைவான வரி போன்ற இதன் பிரபலமான திட்டங்களை இதனால் நிறைவேற்ற முடியாது. மாறாக, முன்னெப்போதையும் விட மிகக் கொடூரமான முறையில் தொழிலாளர்களை இது தாக்கும் என்பதுடன், பரந்த எதிர்ப்பையும் விரைவில் தூண்டிவிடும்.