ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

EU backs anti-immigrant deal after Italy threatens to torpedo Brussels summit

இத்தாலி புரூசெல்ஸ் மாநாட்டை சிதறடிக்க அச்சுறுத்தியதும், ஐரோப்பிய ஒன்றியம் புலம்பெயர்ந்தோர்-விரோத உடன்படிக்கையை ஆதரிக்கிறது

By Alex Lantier
29 June 2018

இத்தாலியின் அதிவலது அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி அறிக்கையை வீட்டோ தடுப்பாணைக் கொண்டு தடுக்கவும், உச்சிமாநாட்டை சிதறடிக்கவும் அச்சுறுத்தி அசாதாரண அடியை எடுத்ததும், இன்று அதிகாலை 4.30 மணிக்கு, புரூசெல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் பேச்சுவார்த்தையாளர்கள் புலம்பெயர்வு நெருக்கடி மீது ஒரு பொதுவான நிலைப்பாட்டை எட்டினர். இத்தாலி, ஆஸ்திரியா மற்றும் இன்னும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அதிவலது அரசாங்கங்களது அகதிகள்-விரோத கோரிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கிறது என்பதே அந்த உடன்படிக்கையின் அடித்தளமாக இருந்தது.

துருக்கி மற்றும் வட ஆபிரிக்காவில் அகதிகள் சிறை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி வழங்குவது, தஞ்சம் கோருவோர்களுக்காக ஐரோப்பாவில் அடைக்கப்பட்ட தடுப்புக்காவல் முகாம்களைக் கட்டமைப்பது, “பிராந்திய தரையிறங்கும் தளங்கள்" என்ற பெயரில் புலம்பெயந்தோர் கப்பல்களுக்கான துறைமுக நிறுத்துமிடங்களுடன் சேர்ந்து, இன்னும் கூடுதலான முகாம்களைக் கட்டமைப்பது ஆகியவை அந்த உடன்படிக்கையில் உள்ளடங்கி இருப்பதாக செய்திகள் குறிப்பிட்டன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே அகதிகள் நகர்வதையும் ஐரோப்பிய ஒன்றியம் தடுக்கும். இறுதியாக, அகதிகள் எந்த நாட்டில் முதலில் தரையிறங்குகிறார்களோ அங்கேயே தஞ்சம் கோருவதற்கு அதிகாரமளிக்கும், ஐரோப்பிய ஒன்றிய தஞ்சம் கோருவோர் சட்டம் எனும் டப்ளின் உடன்படிக்கைகள் என்றழைக்கப்படுவதைத் திருத்தி எழுதுவதற்கும் அத்திட்டம் அழைப்புவிடுக்கிறது.

சிறை முகாம்கள் எங்கே, எந்த நிதியில் கட்டப்படும்? ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு அகதிகள் ஐரோப்பிய எல்லைகளைக் கடந்து வராதவாறு தடுக்கும்? டப்ளின் உடன்படிக்கைகள் எவ்வாறு திருத்தப்படும்? என்ற திட்டங்களின் விபரம் தெளிவின்றி உள்ளது. ஆனால் ஐரோப்பாவில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் போலிஸ்-அரசு நடவடிக்கைகளின் ஒரு கடுமையான தீவிரப்பாட்டை அது உள்ளடக்கி உள்ளது என்பது மட்டும் தெளிவாக உள்ளது.

எவ்வாறிருப்பினும், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அனைவரும் அந்த உடன்படிக்கையைப் பாராட்டினர். ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அதை ஆமோதித்தார், “வெவ்வேறு கண்ணோட்டங்களைச் சரி செய்ய நாம் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ட்வீட் செய்தார், “புலம்பெயர்வு மீது உடன்பாடு எட்டப்பட்டது: ஓர் ஐரோப்பிய அணுகுமுறை உறுதி செய்யப்பட்டது, ஒரு முழு திட்டநிரல் (வெளிப்புற நடவடிக்கை, எல்லை பாதுகாப்பு, ஐரோப்பிய ஐக்கியத்திற்கான கடமைப்பாடு) ஒப்புக் கொள்ளப்பட்டது. பிரெஞ்சு முன்மொழிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.”

இத்தாலிய பிரதம மந்திரி ஜியுசெப்ப கொன்டே அவர் அரசாங்கத்தின் திட்டநிரலை ஏற்றுக் கொண்டதற்காக அந்த ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கையைப் பாராட்டினார்: “நாங்கள் திருப்தியாக உள்ளோம். அதுவொரு நீண்ட பேச்சுவார்த்தை தான் ஆனால் இன்றிலிருந்து, இத்தாலி தனித்து இல்லை.”

ரோம் மண்ணில் உள்ள தடுப்புக்காவல் மையங்களில், வரையறைகளின்படி, அகதிகள் தஞ்சம் கோரலாம் என்பதை இதுவரையில் ஐரோப்பிய ஒன்றிய திட்டம் உள்ளடக்கி இருந்தால், அங்கே சிறை முகாம்களைக் கட்டடமைக்க ரோம் ஒப்புக் கொண்டிருக்காது என்பதை கொன்டே அச்சுறுத்தும்ரீதியில் சுட்டிக்காட்டினார். கொன்டே தெரிவித்தார், அதுபோன்ற முகாம்களைக் கட்டமைக்கையில், “அந்த முடிவை நாங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து முன்னெடுப்போம். அவ்வாறு செய்ய நிச்சயமாக அனைவரையும் நாங்கள் வலியுறுத்தவில்லை,” என்றார்.

அந்த மாநாட்டுக்கு முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டுஸ்க், ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகள் புலம்பெயர்வோர் வரவை 2015 இன் மட்டங்களில் இருந்து 96 சதவீத அளவுக்கு குறைத்திருப்பதாக பெருமைப்பீற்றி ஒரு அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். லிபியா மற்றும் வட ஆபிரிக்கா எங்கிலும் தொடர்ந்து தடுப்புகாவல் முகாம்கள் அமைப்பது மற்றும் புலம்பெயர்வோரைத் தடுக்க லிபிய கடல் ரோந்துப்படையுடன் இணைந்து செயல்படுவது ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு, டுஸ்க் அகதிகள் மீதான ஓர் ஒடுக்குமுறைக்கு நிதியளிப்பதற்கும் முன்மொழிந்தார். அவர் கடிதம், வெளிப்படையாகவே 6 பில்லியன் யூரோவை உள்ளடக்கி, "சட்டவிரோத புலம்பெயர்வை எதிர்கொள்வதை நோக்கி முடுக்கி விடப்பட்ட ஒரு பிரத்யேக நிதியியல் வசதியாக, பல ஆண்டுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவு திட்டக்கணக்கை உருவாக்குவதற்கு" அழைப்புவிடுத்தது.

அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், டுஸ்க் பாரிய சிறை முகாம்கள் கட்டமைப்பதற்கான மற்றும் தஞ்சம் கோரும் உரிமையைக் கைவிடுவதற்கான நகர்வுகளைப் பாதுகாத்தார்: “அச்சட்டத்தை அமுல்படுத்துவதும், அதனதன் பிராந்தியம் மற்றும் எல்லையைப் பாதுகாப்பதும், ஒவ்வொரு அரசியல் அதிகாரத்தின் வேலையாகும். மொத்தத்தில், எல்லைகளைப் பாதுகாப்பது தான் எல்லை பாதுகாப்புப்படைகளை உருவாக்கியதன் நோக்கம்,” என்றார்.

புலம்பெயர்வோருக்கு எதிரான அதிவலது கொள்கைகளை ஏற்பது அதிவலதுக்கு எதிராக ஐரோப்பாவில் ஜனநாயக ஆட்சியைக் காப்பாற்றுவதற்கு முக்கியமானது என்ற ஓர்வெல்லியன் பாணியிலான வாதத்தை டுஸ்க் முன்வைத்தார்: “வெளி எல்லையைப் பாதுகாப்பதில் நமது திறமையின்மையானது, ஐரோப்பிய ஒன்றியத்தின், அல்லது—இன்னும் பரந்த விதத்தில்—தாராளவாத ஜனநாயகத்தின் உள்ளார்ந்த அம்சம் என்று வாதிட்டு, ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் குரல்கள் ஒலிக்கின்றன,” என்றார்.

அனுமானிக்கத்தக்கவாறு, டுஸ்கின் பிற்போக்குத்தனமான புலம்பெயர்ந்தோர்-விரோத திட்டநிரலும் மற்றும் பாசாங்குத்தனமாக அவர் ஜனநாயகத்தைத் துணைக்கு இழுப்பதும், புலம்பெயர்வோர்-விரோத மிகவும் வன்முறையான நடவடிக்கைகளை வக்காலத்து வாங்குபவர்களை மட்டுமே பலப்படுத்துகிறது.

கொன்டே, நேற்றிரவு, ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டு அறிக்கையை —இதுவே கூட ஐரோப்பிய ஒன்றிய இராணுவ ஆயத்தப்படுத்தலைத் தீவிரப்படுத்துகின்ற, ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகளுக்கு எதிரான அமெரிக்க வர்த்தக வரிவிதிப்பைக் கண்டிக்கின்ற மற்றும் ஐரோப்பாவுக்கான அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு எதிராக பதில் வரிவிதிப்புகளை ஆதரிக்கின்ற ஒரு பிற்போக்குத்தனமான ஆவணம் என்ற நிலையில்— இதை வீட்டோ தடுப்பதிகாரம் கொண்டு தடுக்க அச்சுறுத்தியதன் மூலமாக திருப்தி அடைந்தார். “இந்த முறை மற்ற ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து நாம் ஒத்துழைப்பைப் பெறவில்லையானால்,” அவர் கூறினார், “நாம் ஒருமித்து பகிர்ந்து கொண்ட முடிவுகளை எட்டாமல் மாநாட்டை நிறைவு செய்ய வேண்டியிருக்கும். … நாம் மலிவான விடயத்தில் உடன்படிக்கைகளை ஏற்கவியலாது. இத்தாலி எப்போதுமே அதன் நல்லெண்ணத்தை காட்டி வந்துள்ளது,” என்றார்.

இந்த விளைபயன், அந்த மாநாட்டுக்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனமான பாத்திரம் குறித்து உலக சோசலிச வலைத் தளம் அளித்த எச்சரிக்கைகளை ஊர்ஜிதப்படுத்துகின்றன. “அகதிகளைத் துன்புறுத்துவதை ஆளும் உயரடுக்கின் அனைத்து கன்னைகளும் ஆதரிக்கின்ற நிலையில், ஆளும் உயரடுக்கின் இந்த அல்லது அந்த கன்னைக்குத் தார்மீக முறையீடு செய்வது, ஒன்றும் பிரயோஜனமற்றது … ஒரு சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் மீதான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக சர்வதேச அளவில் அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே இந்த பாசிசவாத தாக்குதலை எதிர்க்க முடியும்,” என்று அது எழுதியது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஆக்ரோஷமடைந்து வரும் கடுமையான மோதல்கள், அகதிகளைத் துன்புறுத்தலாமா வேண்டாமா என்பதன் மீதல்ல. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் அளித்த பல அறிக்கைகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஆளும் வட்டாரங்கள் லிபியாவில் இருப்பதை போன்ற, அகதிகள் அவமானங்களையும், கற்பழிப்புகள், அடிமைத்தனம் மற்றும் படுகொலைகளையும் முகங்கொடுக்கின்ற இவற்றைப் போன்ற, சிறை முகாம்களுக்காக பில்லியன் கணக்கான யூரோக்களை அவை செலவழித்து வருவதைக் குறித்து நன்கறிந்துள்ளன. ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் நடக்கும் இந்த மோதல்கள், பணம் மற்றும் மூலோபாய அனுகூலங் மீது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கடுமையான போட்டியாளர்களால் உந்தப்பட்டுள்ளன.

பைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி, மறுகட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஐரோப்பிய வங்கியில் (EBRD) ரஷ்யாவுக்கு கடன்கள் வழங்குவது மீதிருக்கும் தடையை நீக்க ரோம் பரிந்துரைக்கக்கூடும், வாஷிங்டன் மற்றும் பேர்லின் சார்பாக ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் தடையாணைகளைத் திணித்துள்ளதால் இப்போது இது சட்டவிரோதமாக உள்ளது.

குறிப்பாக இத்தாலி ரஷ்யாவுடன், குறிப்பிடத்தக்க விதத்தில் எரிசக்தி துறையில், நெருக்கமான பொருளாதார மற்றும் பெருநிறுவன உறவுகளைக் கொண்டுள்ளது. இத்தாலிய அரசாங்கம் அமைப்பது மீதான பேச்சுவார்த்தைகளின் போது, அதிவலது லெகா கட்சி மற்றும் ஐந்து நட்சத்திர இயக்கம் (M5S) இரண்டுமே இந்த தடையாணைகளுக்கு அவற்றின் எதிர்ப்பை சமிக்ஞை செய்தன, லெகா தலைவர் மத்தேயோ சல்வீனி "ஒரு நட்புரீதியிலான மற்றும் அண்டைஅயல் சந்தைக்கு எதிரான பைத்தியக்காரத்தனம்" என்று அவற்றை கண்டித்தார். இந்த ஐரோப்பிய ஒன்றிய தடையாணைகளை நீக்குவதற்கு பேர்லினுக்கு அழுத்தமளிக்க பிரெஞ்சு அதிகாரிகள் ரோமுடன் செயல்படக்கூடுமென ரஷ்ய ஊடகங்கள் அறிவித்தன.

இது வாஷிங்டனிடம் இருந்து ஒரு கூர்மையான எச்சரிக்கையைக் கொண்டு வந்தது. ஏப்ரல் 16 அன்று, உக்ரேனுக்கான அமெரிக்க தூதர் குர்ட் வோல்க்கர் இத்தாலிய நாளிதழ் La Stampa க்கு பின்வருமாறு கூறினார்: “ஐரோப்பிய ஒன்றியம் அந்த தடையாணைகளின் உள்ளடக்கம் மற்றும் கட்டமைப்பு மீது உடன்பட்டுள்ளது: அதாவது, இத்தாலி அவற்றை கடைபிடிக்காவிட்டால் அது அனைத்திற்கும் முதலாவதாக புரூசெல்ஸூடன் பிரச்சினையை உண்டாக்கும். லெகா கட்சி எடுக்கும் நிலைப்பாடுகளுக்கு இடையிலும், இது எனக்கு நம்பிக்கையூட்டுகிறது, ஏனென்றால் நடைமுறையளவில் ஆழ்ந்த விளைவுகள் இல்லாமல் இத்தாலியால் நடவடிக்கைகள் எடுக்க முடியாது.” வோல்க்கர் La Stampa க்கு இவ்வாறு பதிலளித்தார்: “மரணகதியிலான விளைவுகளை முகங்கொடுக்காமல் இத்தாலியால் ரஷ்யாவுக்கு எதிரான தடையாணைகளைத் தொடக்கூட முடியாது.”

புரூசெல்ஸின் அதிகார அரங்கில் சுழன்று கொண்டிருக்கும் சில கடுமையான நிதியியல் மற்றும் மூலோபாய பிரச்சினைகள் நேற்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அன்டோனியா தஜானியிடம் இத்தாலிய பத்திரிகையாளர் Giuseppe di Vittorio கேள்விகள் எழுப்பிய போது வெளிவந்தன. “ஆறு பில்லியன் யூரோ, இத்தாலிக்கு போகுமா? … பிரெஞ்சு மற்றும் மற்றவர்களுக்கும் பணம் போகுமா, அல்லது விடயங்கள் மாலி, சாட் மற்றும் சூடானுக்குச் போகுமா? பணம் எங்கே போகிறது?” என்று Di Vittorio கேள்வி எழுப்பினார்.

ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளுடன் ஜேர்மனியின் வர்த்தக உபரி இருப்பதன் மீது இத்தாலியின் ஆட்சேபங்களைக் குறித்தும், மற்றும் ஒரு புதிய நிதியியல் பொறிவு ஏற்படும் சமயத்தில் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய சக்திகளிடம் வங்கி பிணையெடுப்பு நிதிகளைக் கோருவதற்கான பிரெஞ்சு திட்டங்களைக் குறித்தும் தஜானியிடம் அவர் கேள்வி எழுப்பினார். அவர் கூறினார், “இது தவிர, சில நாடுகளில் பற்றாக்குறைகள் உள்ளன, ஜேர்மன் உபரிமதிப்பைக் கொண்டுள்ளது. நீங்களோ ஓர் ஐரோப்பிய நாணய நிதியம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இத்தாலி இதற்கு உடன்படுமா, ஏனென்றால் இத்தாலி இந்த தருணத்தில் அதன் கடனை மறுஒழுங்கு செய்யும் பணியை ஏற்குமா?”

தஜானி di Vittorio க்கு அளித்த பதிலில் ஒரு சில திட்டவட்டமான விபரங்களையே வழங்கினார், புலம்பெயர்வோர்-விரோத ஐரோப்பிய ஒன்றிய நிதியில் பில்லியன் கணக்கான யூரோக்களை எவ்வாறு ஒதுக்கீடு செய்வது என்பதில் ஆளும் வட்டாரங்களில் தொடர்ந்து சீற்றம் இருக்கும் என்பதில் அங்கே எந்த சந்தேகமும் இல்லை.

எவ்வாறிருப்பினும், என்ன தெளிவாக இருக்கிறது என்றால், அகதிகள் துன்புறுத்தப்படுவதையும், போலிஸ்-அரசை விடாப்பிடியாக தீவிரப்படுத்துவதையும் மற்றும் சிக்கன நடவடிக்கைகளையும் எதிர்ப்பதற்கான போராட்டத்தை, ஐரோப்பிய ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட இந்த பாசிசவாத கட்டமைப்புக்குள் இருந்து நடத்த முடியாது. இதற்கு ஆளும் உயரடுக்கின் அனைத்து கன்னைகளுக்கு எதிராகவும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டம் அவசியப்படுகிறது.