ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

උතුරේ තරුනයන් සහ ශිෂ්‍යයන්ට එරෙහි දක්ෂිනාංශික උද්ඝෝෂනයක්

இலங்கை: வடக்கு இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக ஒரு வலதுசாரி பிரச்சாரம்

By Pani Wijesiriwardena 
2 June 2018

இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றை பற்றிக்கொண்டு தெற்கில் சிங்கள இனவாத கும்பலால் அந்த மாணவர்களுக்கு எதிராக தீவிர வலதுசாரி பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போரின் போது வடக்கில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூருவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்காலில் மே 18 அன்று நடத்தப்பட்ட நினைவுக் கூட்டம் பற்றியே மாணவர் ஒன்றியம் அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தது.

"என்ன காரணத்துக்காக தமிழினம் இந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் பேரிழப்பைச் சந்தித்ததோ அந்த உரிமையைப் பெறுவதற்கு அந்த புனித நாளில் எந்த களங்கமும் ஏற்பட்டுவிடடக்கூடாது" என்றும் "தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிகராக மக்களை ஒன்று திரட்ட மக்களைத் தலைமை தாங்க அதுவும் குறிப்பாக இந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஒழுங்கமைத்து நடத்தவோ, தலைமை தாங்கவோ நீங்கள் தகுதியுடயவர்களா என்று ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும் குறிப்பாக வடக்கு மாகாண சபை அங்கத்தவர்களும், உங்கள் மனச்சாட்சியைக் கேட்டுக்கொள்ளுங்கள்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிங்கள-பௌத்த அதிதீவிரவாத அமைப்பான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சவரை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, தமிழ் மக்களுக்கு எதிராக தானும் தனது அமைப்பும் நீண்ட காலமாக முன்னெடுத்து வரும் இனவாத பிரச்சாரத்தை புதிய சுற்றில் முன்னெடுப்பதற்காக உடனடியாக மேற்குறிப்பிட்ட அறிக்கையை பற்றிக்கொண்டது.

மே 23 அன்று மிரர் சிட்டிசன் ரணவக்கவின் அறிக்கையை பற்றி பின்வருமாறு செய்தி வெளியிட்டிருந்தது. "இளைஞர்களுக்கு தீவிர கருத்துக்கள் இருக்க முடியும். ஆனால் மற்றவர்களை கட்டுப்படுத்தவும் அவர்கள் மத்தியில் மீண்டும் ஒரு பிரபாகரனை உருவாக்க முயற்சிப்பதற்கும் அவர்களுக்கு உரிமை இல்லை. .... எனவே, அனைத்து சட்டத்தை மதிக்கும் இலங்கையர்களின் பொறுப்பு, மற்றொரு பிரபாகரனை மற்றும் வடக்கில் பயங்கரவாதத்தின் மறு தோற்றத்தை தடுப்பதே ஆகும்."

"பயங்கரவாத போக்குகள் கொண்ட குறித்த மாணவர் குழு ஒன்று" ஜனநாயக அரசியல் நிறுவனங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கின்ற சூழ்நிலையில், "வடக்கில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் மீண்டும் பயங்கரவாதத்தின் எழுச்சியை நிறுத்துவதற்கு,” உரிய நிர்வாகங்களால் தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ரணவக்க கூறியுள்ளார்.

மற்றொரு சிங்கள தீவிரவாத அமைப்பான தேசிய பல்கலைகழக ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் சன்ன ஜயசுமன, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஒரு கடிதம் எழுதி கூறியதாவது: "பேராசை அரசியல்வாதிகளால் தவறான பாதையில் திருப்பப்பட்ட இளைஞர்கள், மேலும் கண்முன் தெரியாத வேலைத் திட்டத்துக்குள் தள்ளிவிட்டப்பட்டுள்ளதையே நாம் அவதானிக்கின்றோம். மேலும், இலங்கை மக்களால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொன்னான வாய்ப்புகளை அவர்கள் கைவிட்டுள்ளதாக நாம் உணர்கிறோம். எங்கள் கடிதத்தை பாரதூரமானதாக கருதி, பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மற்றும் பொறுப்புள்ள மூத்த கல்வியாளர்களுடன் கலந்துரையாடி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு சரியான பாதயை காட்டுவீர்கள் என்றும், அவர்களுக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் மதிப்பை சொல்லிக்கொடுப்பீர்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்."

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் அதன் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாராட்டப்படும் புலிகளின் பிரிவினைவாத மற்றும் பிற்போக்கு அரசியலை முழுமையாக எதிர்க்கும் அதேவேளை, தாம் விரும்பும் அரசியலில் ஈடுபடுவதற்கு இந்த மாணவர் ஒன்றியத்திற்கு உள்ள ஜனநாயக உரிமையை பாதுகாக்கின்றது. வடக்கில் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக சிங்கள பேரினவாத கும்பல் முன்னெடுக்கும் இந்த வலதுசாரி பிரச்சாரத்திற்கு எதிராக முன்நிற்குமாறு ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவரிடமும் சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. வேண்டுகோள் விடுக்கின்றன.

ஒருபுறம், தமிழ் முதலாளித்துவ கட்சிகள் சம்பந்தமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் வெளிப்படுத்தியுள்ள எதிர்ப்பானது, தமது வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது இடைவிடாது தாக்குதல்களை நடத்தும் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு அந்தக் கட்சிகள் கொடுத்துவரும் ஆதரவு சம்பந்தமாக, வடக்கில் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பின் வெளிப்பாடாகும்.

மறு புறம், மாணவர் ஒன்றியத்தினால் புலிகளின் பிரிவினைவாத அரசியலுக்கு காட்டும் அனுதாபமானது, தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரே சாத்தியமான, சர்வதேச சோசலிச முன்னோக்கினை நிராகரிப்பதிலிருந்தே தோன்றுகிறது. புலிகளின் தோல்வியும், சர்வதேச சோசலிசத்திற்கு எதிராக அவர்கள் முன்னெடுத்த தேசியவாத மற்றும் பிரிவினைவாத அரசியலின் திவால்தன்மையின் விளைவே என்பதை இந்த மாணவர் ஒன்றியம் நிராகரிக்கின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தேசியவாத அரசியலுக்கு எதிரான போராட்டம், சர்வதேச சோசலிசத்திற்காக முன்னெடுக்கும் தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டமாகும். அந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரே இயக்கமான சோசலிச சமத்துவ கட்சி மற்றும் அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும், வடக்கில் தமிழ் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் இந்த அதி வலதுசாரி பிரச்சாரத்துக்கு முற்றிலும் எதிராக, அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க போராடுகின்றன.

ரணவக்க உட்பட கும்பலின் இந்த வலது சாரி பிரச்சாரத்தின் இலக்கு, வடக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக, குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கொடூரமான பொலிஸ்-இராணுவ பாய்ச்சலைத் தயாரிப்பதே ஆகும்.

தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய ஜனநாயக உரிமையை நசுக்கி, தமது ஆட்சியை ஆரம்பத்தில் இருந்தே முன்னெடுத்த சிங்கள இனவாத அரசியலை, தமிழர்களுக்கு எதிரான கொடூரமான இனவாத யுத்தமாக மாற்றிய கொழும்பு ஆளும் வர்க்கத்தின் கணிசமான பகுதியினர், தமிழர்களுக்கு எதிரான அத்தகைய பாய்ச்சலுக்கு கூட்டணி சேர்ந்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி இந்த கூட்டணியின் முன்னணியில் உள்ளது. சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சியினால் வடக்கில் "பாதுகாப்பு தளர்த்தப்படுவதால்" புலிகள் மீண்டும் தலை தூக்குகின்றனர் என்றும் உடனடியாக அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இராஜபக்ஷவும் அவரது சகாக்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து ஒன்பது மாதங்கள் கடந்தும், அத்தகைய "பாதுகாப்பு தளர்த்தல்" வடக்கில் நடக்கவில்லை. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் உளவுத்துறையின் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களின் நிலங்கள் இன்னும் அவர்களுக்கு விடுவிக்கப்படவில்லை.

"பாதுகாப்பைத் தளர்த்துவதற்குப்" பதிலாக, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் அடிப்படையில் தமது ஆட்சியினால் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் வறியவர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்புக்கு முகங்கொடுக்கும் சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க, அவற்றை கொடூரமாக ஒடுக்குவதைத் தவிர வேறு மாற்று இல்லமையால், வடக்கு மற்றும் தெற்கில் மேலும் மேலும் இராணுவத்தைச் சார்ந்து நிற்கின்றனர். இதனாலேயே சிறிசேன இராணுவத்தை எப்போதும் புகழ்ந்து வருகின்றார்.

பல பத்தாயிரக்கணக்கான பொது மக்களைக் கொன்றும் மேலும் இலட்சக்கணக்கானவர்களை இராணுவ முகாம்களுக்குள் அடைத்தும் 2009ல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஈவிரக்கமற்ற போரின் "வெற்றியை" கொண்டாடுவதற்காக கடந்த மாதம் நடந்த கொண்டாட்டத்தில், ஜனாதிபதி சிறிசேன இராணுவத்தை பாராட்டி பின்வருமாறு கூறினார்: "உன்னத போர்வீரர்கள் காரணமாக இன்று நாம் சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம். கொடூரமான புலி பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டின் ஐக்கியத்தை, பிராந்திய ஒருமைப்பாட்டை, ஜனநாயகம் மற்றும் தாய்நாட்டின் சுதந்திரத்தையும் பாதுகாக்க நேர்மையான இராணுவத்தினர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தனர்."

போர் முடிவுக்கு வந்தபின் "சுதந்திரம், சமாதானம் மற்றும் ஜனநாயகம்" கிடைத்துள்ளதாக கூறும் சிறிசேனவின் கருத்துக்கள் அப்பட்டமான பொய்யாகும். அதற்கு மாறாக, சிறிசேனவின் அரசாங்கம் வடக்கிலும் தெற்கிலும் ஒட்டுமொத்த தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.

இராஜபக்ஷவுக்கு எதிராக வளர்ந்து வந்த வெகுஜன அதிருப்தியை சுரண்டிக்கொண்டே, 2015 ஜனவரியில் வாஷிங்டன் திட்டமிட்ட நடவடிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றத்தில் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது. புதிய அரசாங்கத்தின் கீழ் வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, 2015 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவிற்கு எதிராக சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தது. தங்கள் நலன்கள் மற்றும் சலுகைகளைப் பாதுகாக்க, கொழும்புடன் ஏதாவதொரு சமரசத்தை ஏற்படுத்திக்கொள்ளும் பொருட்டு தலையீடு செய்யுமாறு தமிழ் கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றன.

இந்த நிலைமையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வலதுசாரி பிரச்சாரத்தின் பின்னணியில் உள்ள கொழும்பு ஆளும் வர்க்கத்தின் அக்கறைகளில் முதன்மையாக இருப்பது, அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களில் இன எல்லைகளைக் கடந்து வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையே ஆகும். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், மின்சாரம், தபால் மற்றும் தொலைத் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி நடத்திய சமீபத்திய போராட்டங்களில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொழிலாளர்கள் ஒற்றுமையாக பங்குபற்றினர்.

தெற்கு தொழிலாளர்களுடன் ஐக்கியப்படும் வடக்கு தொழிலாளர்கள், தமிழ் கூட்டமைப்பு உட்பட முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து பிரிந்து, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமாக அரசியல் இயக்கத்தை நோக்கி திரும்பும் என்றும், அந்த இயக்கத்தின் கீழ், வடக்கில் மற்றும் தெற்கில் இளைஞர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்கள் அணிதிரள்வர் என்றும் கொழும்பு ஆளும் வர்க்கத்தின் பிரிவினர் பீதியடைந்துள்ளனர்.

தொழிலாள வர்க்கத்தின் அத்தகைய சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க, இனவாதத்தை ஈவிரக்கமற்ற அளவுக்கு தூக்கி நிறுத்துவதே இந்த பிற்போக்கு பிரச்சாரத்தின் குறிக்கோளாகும்.