ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

After G7 summit, Merkel calls for European rearmament

ஜி7 மாநாட்டுக்குப் பின்னர், மேர்க்கெல் ஐரோப்பிய மீள்ஆயுதமயமாக்கலுக்கு அழைப்புவிடுக்கிறார்

By Johannes Stern
13 June 2018

கனடாவின் சார்லுவுவா இல்  நடந்த ஜி7 உச்சிமாநாடு தோல்வியடைந்த பின்னர், ஜேர்மன் அரசாங்கம் வர்த்தக போர் மற்றும் இராணுவ மீள்ஆயுதமயமாக்கலுக்கான அதன் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்வீட்டர் மூலமாக ஜி7 அறிக்கைக்கு உடன்பட அவரது மறுப்பை அறிவித்து வெறும் ஒரு சில மணி நேரங்களில், சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், CDU) ஞாயிறன்று மாலை Anne Will நடாத்தும் உரையாடல் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டார். ட்ரம்பின் முடிவை "ஐயத்திற்கிடமின்றி வருத்தத்திற்குரியது" என்று விவரித்த அவர், அதிக சுதந்திரமான ஒரு ஜேர்மன்-ஐரோப்பிய இராணுவ வல்லரசு கொள்கைக்கு பகிரங்கமாக முறையிட்டார்.

“நாம், ஐரோப்பியர்களாக, நம் தலைவிதியை நமது கரங்களில் எடுத்தாக வேண்டும்,” மேர்க்கெல் தெரிவித்தார். “இதை ஏற்கனவே அமெரிக்கா கவனித்துக் கொள்கிறது என்று பல பத்தாண்டுகளாக நாம் ஏதோவிதத்தில் கவனக்குறைவாக இருந்ததைப் போல இனியும் நம்பிக் கொண்டிருக்க முடியாது" என்றார். ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவைப் பொறுத்த வரையில், இதன் அர்த்தம் "சாத்தியமானளவுக்கு கனடா மற்றும் ஜப்பானுடன் கூட்டணி சேர்ந்து, ஐரோப்பாவில் நமது கோட்பாடுகளையும் நமது மதிப்புகளையும் முன்னெடுக்க வேண்டும்,” என்றார்.

“கோட்பாடுகள்" மற்றும் "மதிப்புகள்" குறித்த ஜேர்மன் அரசாங்கத்தின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரச்சாரத்திற்குப் பின்னால், உறுதியான பொருளாதார மற்றும் புவிசார்அரசியல் நலன்கள் உள்ளன. அமெரிக்காவின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்கு பேர்லினும் புரூசெல்ஸூம் ட்ரம்ப் அளவுக்கு நிச்சயமாக அதேயளவிலான தேசியவாத மற்றும் இராணுவவாத எதிர்ப்புடன் விடையிறுக்கும் என்பதில் மேர்க்கெல் எந்த சந்தேகமும் வைக்கவில்லை. “ஜேர்மனி மற்றும் ஐரோப்பா முதலில்" என்பது தான், ட்ரம்பின் "அமெரிக்கா முதலில்" சூத்திரத்திற்கு ஜேர்மன்-ஐரோப்பிய விடையிறுப்பாக உள்ளது.

அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான பங்காண்மையை இனியும் சார்ந்திருக்க முடியாது என்று மேர்க்கெல் குறிப்பிட்டார். இதற்கு பதிலாக, இந்த கேள்வியை முன்நிறுத்தலாம் என்றார், “தனியாக நம்மால் எங்கே தலையீடு செய்ய முடியும்?”, இதுவே "நிச்சயமாக ஐரோப்பாவுக்கான புதிய பணிகளைக் குறிக்கும்,” என்றார். “முதல் பற்றுறுதி" எப்போதுமே "ஒருவரின் சொந்த நாட்டை" சார்ந்திருக்கும், ஆனால் "இரண்டாவது, வெளியுறவு கொள்கை பிரச்சினைகள் உள்ளடங்கலாக, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்திருக்கும்,” என்றார்.

ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் அடையப்பட்ட "வெளியுறவு கொள்கை முடிவுகள்" வர்த்தக போர் சுழற்சியை மேற்கொண்டும் தீவிரப்படுத்தும் என்பதோடு ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு கண்கூடான இராணுவ ஒன்றியமாக மாற்றும். எஃகு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்க ஜனாதிபதி விதித்த "சட்டவிரோத" இறக்குமதி வரிவிதிப்புக்கு, ஜேர்மன் அரசாங்கம் ஏற்கனவே "நமது சொந்த எதிர்-நடவடிக்கைகளைத் தயார்" செய்துள்ளதாக மேர்க்கெல் பிரகடனபடுத்தினார். அமெரிக்க நடவடிக்கைகள் ஜூலை 1 அன்று உலக வர்த்தக அமைப்புக்கு அறிவிக்கப்பட உள்ளன. ட்ரம்ப் வரிவிதிப்புகளை விரிவுபடுத்தி விடையிறுத்தால், சான்றாக ஜேர்மன் கார்கள் மீதும் வரிவிதித்தால், “என்ன செய்வதென்று மீண்டும் நாங்கள் சிந்திப்போம்,” என்றார். ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவை "அச்சுறுத்த முடியாது, மாறாக நாங்களும் நடவடிக்கை எடுப்போம்,” என்பதையும் மேர்க்கெல் சேர்த்துக் கொண்டார்.

மேர்க்கெல் இந்தளவுக்கு வாஷிங்டனுக்கு எதிராக பகிரங்கமாக பேசுவது, போருக்குப் பிந்தைய அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான ஒழுங்கமைப்பின் முறிவு ஆழ்ந்த புறநிலை வேர்களைக் கொண்டிருப்பதையும், இது மிகவும் முன்னேறி இருப்பதையும் அடிக்கோடிடுகின்றன. வெறும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தான், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ் அவரது சட்டவிரோத ஈராக் படையெடுப்புக்குத் தயாரிப்பு செய்த போது, மேர்க்கெல், அப்போதைய சான்சிலர் ஹெகார்ட் ஷ்ரோடர் நிபந்தனையின்றி அமெரிக்காவை ஆதரிக்கவில்லை என்று விமர்சித்து, வாஷிங்டன் போஸ்டில் ஒரு கருத்துரை எழுதினார். ஜேர்மனியைப் பொறுத்த வரையில், அமெரிக்கா உடனான பங்காண்மையானது "ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே அதேயளவுக்கு ஒரு அடிப்படை கூறுபாடாகும்,” என்றவர் அப்போது எழுதினார்.

மேர்க்கெல் இப்போது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து சுதந்திரமாக, ஜேர்மன்-பிரெஞ்சு தலைமையின் கீழ் ஐரோப்பா ஓர் இராணுவ பலம் வாய்ந்த அணியாக ஸ்தாபிக்கப்பட வேண்டுமென அறிவுறுத்துகிறார். “பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் முன்மொழிந்த தலையீட்டு படையையும்" அவர் ஆதரிக்கிறார். “ஒரு பொதுவான மூலோபாய கலாச்சாரத்தை அபிவிருத்தி செய்யவும்,” மற்றும் "நமது சொந்த அணுகுமுறையை—அரசியல் தீர்வு, வளர்ச்சி உதவிகள், அத்துடன் இராணுவ நடவடிக்கையை—நாம் நடைமுறைப்படுத்த கூடிய வகையில் நமது சொந்த தகைமைகளைக் கட்டமைக்கவும்", இது இப்போது அவசியம் என்று மேர்க்கெல் தெரிவிக்கிறார். காலத்தின் நிர்பந்தம், ஆனால் ஏற்கனவே "குறிப்பிடத்தக்க வெற்றிகள்" உள்ளன என்றார். அவற்றுக்கு "பாதுகாப்பு ஒன்றியத்துடன் பாதுகாப்பு கொள்கையில் கூட்டுறவைத் தொடங்குவதற்கு ஓராண்டு மட்டுமே போதுமானது.”

மேர்க்கெல் அறிவித்தார், “ஐரோப்பிய ஒன்றியத்தால் கூட்டாக வெளியுறவு கொள்கை ஒன்றை முன்னெடுக்க முடியுமா? அல்லது ஒரு நாடு எப்போதும் அமெரிக்காவுடன் ஒன்று, சீனாவுடன் ஒன்று, இல்லையென்றால் ஏதோவொரு மூன்றாம் நாடு ஒன்றுடன் விவாதித்துக் கொண்டிருக்க முடியுமா? என்பது தான் முக்கிய பிரச்சினை. ஐரோப்பா “விசுவாசத்துடன் பலமான துருவமாக பிணைந்து" நிற்க தவறினால், அது "சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா என மிகவும் பலமான துருவங்கள் உள்ள உலகில் நசுக்கப்படும்,” என்றவர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தைப் போலவே, ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் கூறுவதானால், ஜேர்மனி ஐரோப்பாவை “ஒழுங்கமைத்தால்” மட்டுமே அதுவொரு சுதந்திரமான வல்லரசாக செயல்பட முடியும் என்பதை ஜேர்மன் முதலாளித்துவம் நன்கறிந்துள்ளது. அதேநேரத்தில், வெளியுறவு கொள்கை மற்றும் இராணுவ கொள்கையில் அமெரிக்காவிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அழுத்தமளிப்பது, ஐரோப்பாவுக்குள்ளே உள்ள மையவிலக்கு போக்குகளைத் தீவிரப்படுத்தி வருகிறது, இது தான் 20 ஆம் நூற்றாண்டின் போது அக்கண்டத்தை இரண்டு முறை இரத்தந்தோய்ந்த போர்களுக்குள் மூழ்கடித்தது.

இது செவ்வாய்கிழமை Frankfurter Allgemeine Zeitung இல் துணை-பதிப்பாசிரியர் பேர்தோல்ட் கோஹ்லர் பிரசுரித்த ஒரு தலைமை கட்டுரையில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது: “ஐரோப்பிய ஒன்றியம் உடைந்தால், உலகை விடுங்கள், நிச்சயமாக ஐரோப்பாவை ஜேர்மன் தனிச்சிறப்புகளைக் கொண்டு குணப்படுத்த முடியாது, ஏனென்றால் ஒரு நாடு மற்ற நாடுகளால் 'ஆளப்படுவதை' விரும்பாது, மற்றவர்கள் இனியும் 'தவிர்க்கப்படுவதை' விரும்ப மாட்டார்கள்,” என்றவர் எச்சரித்தார். இந்த "சீரழிவு நிகழ்வுபோக்கு" பிரிட்டன் வெளியேற்றத்துடன் ஏற்கனவே தொடங்கிவிட்டது. “ஐரோப்பிய ஒன்றித்தினுள்தான் சிறப்பாக வாழமுடியும் என்பதையும், இவ்வுலகில் ட்ரம்புகள் மற்றும் புட்டின்களை எதிர்கொள்கையில், தனியாக இருப்பதல்ல ஒருங்கிணைந்திருப்பது தான் பலம் என்பதை மக்கள் (மீண்டும்) உணரும் போது மட்டுமே நிறுத்த முடியும்.”

கடந்த முறை ஜேர்மன் முதலாளித்துவம் "ஜேர்மன் தனிச்சிறப்பு உலகை குணப்படுத்தும்,” என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி, அது ஹிட்லரின் ஜேர்மன் இராணுவம் (Wehrmacht) மூலமாக ஐரோப்பா மீது கட்டுப்பாட்டை எடுக்க முயன்றது. இப்போது அவர்கள் மீண்டுமொருமுறை ஜேர்மன் கட்டளைகளுக்கு அடிபணிய கோருகின்றனர். “சான்சிலர் குறிப்பிட்டவாறு, இதுபோன்றவொரு சமூகத்தில், குறைந்தபட்ச அளவிலான ஒற்றுமை மற்றும் விசுவாசமாவது அவசியப்படுகிறது, ஆனால் உடன்படிக்கைகள் மீதான விசுவாசமும், கோட்பாடுகள் மீதான பொறுப்புறுதியும் கூட அவசியமாகிறது,” என்று கோஹ்லர் எழுதினார். இது பேர்லின் மற்றும் புரூசெல்ஸின் ஆதரவுடனான சமூக செலவின குறைப்பு கொள்கைகளைக் குறிப்பிடும் ஒரு மேற்கோளாகும், இது ஐரோப்பா எங்கிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களையும் இளைஞர்களையும் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையில் மூழ்கடித்துள்ள அதேவேளையில் அக்கண்டம் எங்கிலும் ஜேர்மன் மேலாதிக்கத்தைப் பலப்படுத்தி வருகிறது.

மக்களின் முதுகுக்குப் பின்னால் போர்வெறியர்கள் என்ன விவாதித்து வருகிறார்கள், ட்ரம்புக்கான விடையிறுப்பு என்று கூறி எதை பகிரங்கமாக முன்வைத்து வருகிறார்கள் என்றால், தொழிலாள வர்க்கத்தால் கடந்து செல்ல அனுமதி முடியாத ஒரு கொடூரத்தை விவாதித்து முன்வைக்கிறார்கள். “ஐரோப்பிய சக்திகள், அணுஆயுத தகைமைகள் உட்பட பாதுகாப்பு பற்றாக்குறையைக் கடந்து வர அவர்களின் சொந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அதற்கான பழியிலிருந்து அவர்கள் முற்றிலும் சுதந்திரமாக இருக்க முடியாது,” என்று கோஹ்லர் எழுதினார்.

இடது கட்சியிலிருந்து அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு வரையில் நாடாளுமன்ற கட்சிகள் அனைத்தும் அமெரிக்காவுக்கு எதிராக ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தைப் பலப்படுத்துவை ஆதரிக்கின்ற நிலையில், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து இந்த நடவடிக்கைகளை எதிர்ப்பதுடன், சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக ஒரு சோசலிச மூலோபாயத்திற்காக போராடுகிறது. உலகெங்கிலும் உள்ள போர்வெறியர்களுக்கு எதிராக, SGP, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை எதிர்நிறுத்துகிறது. வர்த்தக போர்கள் மற்றும் இராணுவ மோதல்களின் ஒரு புதிய சகாப்தத்தில், இது மட்டுமே மூன்றாம் உலக போர் ஒன்று வெடிப்பதைத் தடுப்பதற்கான ஒரே சாத்தியமான முன்னோக்காகும்.