ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Merkel, Macron call for more EU militarism at Meseberg conference

மேஸபேர்க் சந்திப்பில் மேர்க்கெல் மற்றும் மக்ரோன் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூடுதலான இராணுவவாதத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர்

By Alex Lantier
20 June 2018

மாத இறுதியில் புரூசேல்ஸில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய (EU) மாநாட்டிற்கு முன்னதாக ஒரு பொதுவான கொள்கையை எட்டும் முயற்சியில் பேர்லினும் பாரிஸும் ஈடுபட்டிருக்கின்ற நிலையில், திங்களன்று மேஸபேர்க்கில் ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை வரவேற்றார்.

மேஸபேர்க் சந்திப்பானது ஒரு நெருக்கடிகால உச்சிமாநாட்டின் தன்மையைக் கொண்டிருந்தது. அமெரிக்காவுடனான ஜி7 பேச்சுவார்த்தைகள் முறிந்து, ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகள் மீது பத்து பில்லியன் கணக்கான டாலர்கள் வர்த்தகப் போர் சுங்கவரிகளை விதிப்பதை நோக்கி வாஷிங்டன் நகர்ந்து ஒரு வார காலமே கடந்திருந்த நிலையில் இது நடைபெற்றது. உள்துறை அமைச்சரான ஹோர்ஸ்ட் ஸீஹோஃபர், இத்தாலியிலும் ஆஸ்திரியாவிலும் உள்ள அதி-வலது அரசாங்கங்களின் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியதன் பின்னர், புலம்பெயர்வோரைக் குறிவைத்தான தேசிய எல்லைக் கட்டுப்படுத்தல்களை ஒருதரப்பாக மீண்டும் நிலைநிறுத்துவதற்கு மேர்கெலின் அதிகாரத்தையும் மீறிச் செயல்பட அச்சுறுத்திய நிலையில், மேர்கெல் அவரது அரசாங்கத்திற்குள்ளேயே ஒரு முன்கண்டிராத சவாலை முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில், வங்கிப் பிணையெடுப்புகளுக்கும் முதலீட்டுத் திட்டங்களுக்குமாய் நூறு பில்லியன் கணக்கான யூரோக்கள் கொண்ட நிதியாதாரத்தை உருவாக்க வேண்டும் என்று மக்ரோன் வைத்த கோரிக்கைகளை மேர்க்கெல் பெருமளவுக்கு நிராகரித்ததன் பின்னர், பேர்லினுக்கும் பாரிஸுக்கும் இடையில் பதட்டங்கள் பெருகிச் செல்கின்ற அறிகுறிகளும் இருந்தன. இது விடயத்தில் மக்ரோனுடனான மேர்க்கெலின் பேச்சுவார்த்தைகள் குறித்த ஒரு நீண்ட திறனாய்வை Le Monde பத்திரிகை வெளியிட்டது, “என்னுடைய பார்வையில், சரியானவையாக தென்படாதவை என்பதை அவர் நீண்ட காலமாக அறிந்து வைத்திருக்கின்ற” அதே ஆலோசனைகளையே தொடர்ந்தும் முன்வைக்கிறார் என ARD தொலைக்கட்சியில் மக்ரோன் மீது மேர்க்கெல் சமீபத்தில் வைத்த விமர்சனமும் அதில் இடம்பெற்றிருந்தது. இருவருக்கும் இடையே “ஈர்ப்பான மரியாதை என்பது நன்றாகவே தொலைந்து விட்டிருக்கிறது” என்று அந்தப் பத்திரிகை நிறைவு செய்திருந்தது.

மக்ரோனும் மேர்க்கெலும் சந்தித்துக் கொள்வதற்கு முன்பாக, பிரான்சின் பொருளாதார அமைச்சரான புரூனோ லு மேர் BFM TV இல் தோன்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு வல்லரசுக் கொள்கைக்காக விண்ணப்பித்தார். “அமெரிக்கா ஒரு பக்கமும், சீனா மறுபக்கமும், நாம் இரண்டிற்கும் இடையில் மாட்டிக் கொண்டிருப்பதுமான ஒரு உலகத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தை வலுப்படுத்துவதற்காக குடியேற்றப் பிரச்சினையில் ஒரு புதிய ஐரோப்பியத் திட்டத்தை, நமது ஜனாதிபதி செய்திருப்பதைப் போல, நாமும் முன்வைத்தாக வேண்டும்” என்றார் அவர். ஐரோப்பா “விரிசலுற்று” கொண்டிருக்கிறது என்று எச்சரித்த அவர், குடியேற்றம் மற்றும் “நிதி அபாயங்களுக்கு” எதிராக கூட்டான கொள்கைகளைக் கோரினார்.

இறுதியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவவாதம், சிக்கன நடவடிக்கைகள், மற்றும் இத்தாலிய மற்றும் ஆஸ்திரிய அரசாங்கங்களுடன் இணைந்து வேலைசெய்து புலம்பெயர்வோர் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் ஆகியவற்றில் ஒரு அதிரடியான விஸ்தரிப்பை வாக்குறுதியளிக்கின்ற ஒரு உடன்பாட்டை மக்ரோனும் மேர்க்கெலும் உறுதிப்படுத்திக் கொண்டனர். ரோம் இப்போது நூறாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை வெளியேற்றவும், இத்தாலியில் இருக்கும் ஒட்டுமொத்த ரோமா மக்களது கணக்கெடுப்பை நடத்தவும் சூளுரைப்பதின் மூலமாக, மேற்கு ஐரோப்பாவில் யூதப் படுகொலைக்குப் பின்னர் கண்டிராத ஒரு மட்டத்தில் பாரிய சுற்றிவளைப்புகளுக்கு பாதை அமைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியமானது வலதுபுறம் நோக்கிய ஒரு வெடிப்பான நகர்வுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது.

மேர்க்கெலும் மக்ரோனும் உடன்பட்டிருக்கும் மேஸபேர்க் பிரகடனமானது, கடல்கடந்து போர்கள் நடத்துவதற்கும் இணையத்தைத் தணிக்கை செய்வதற்குமான ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்திறனை ஊக்குவிப்பதற்கான ஒரு விண்ணப்பத்துடன் தொடங்குகிறது. ஐரோப்பிய ஒன்றிய இராணுவம் ஒன்றுக்கான நிரந்தரக் கட்டமைப்பு கூட்டுறவு முன்முயற்சியான “PESCO (Permanent Structured Co-operation initiative for an EU army) உடன் முடிந்த அளவுக்கு நெருக்கமாகப் பிணைக்கப்படக் கூடியதாக இருக்கும் ஐரோப்பியத் தலையீட்டு முன்முயற்சியின் (European Intervention Initiative) மூலமாக, ஒரு பகிர்ந்த மூலோபாயக் கலாச்சாரத்தை” கட்டியெழுப்புவதற்கு அது அழைப்புவிடுக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு கூட்டு டாங்கி மற்றும் போர் விமான அமைப்பை அபிவிருத்தி செய்வதை தொடர்வதற்கும், ரஷ்யா மற்றும் உக்ரேனுடன் பேச்சுவார்த்தைகளுக்கும், அத்துடன் “இணையத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்ற சட்டவிரோத உள்ளடக்கங்களுக்கு” எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டபூர்வமான நடவடிக்கைக்கும் கூட அது அழைப்பு விடுத்தது.

குடியேற்ற விடயத்தில், “(1) இப்போதிருக்கும் Frontex ஐ ஒரு உண்மையான ஐரோப்பிய எல்லை போலிசாகக் கட்டியமைப்பது மற்றும் (2) உறுப்பு நாடுகளில் தஞ்சம் புகும் நடைமுறைகளை ஒருமுகப்படுத்துகின்ற விதமாக ஒரு ஐரோப்பிய தஞ்ச அலுவலகம் ஒன்றை உருவாக்குவது” ஆகியவற்றின் மூலமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துவதற்கு அது அழைப்பு விடுக்கிறது.

இந்தப் பிரகடனம் சீஹோஃபர் மீதோ அல்லது இத்தாலிய அரசாங்கத்தின் ரோமா-விரோத பொறி வேட்டை மீதோ எந்த விமர்சனமும் செய்யவில்லை. ஆயினும் சீஹோஃபர் மீதான ஒரு குத்திக்காட்டலாய், அது எச்சரிக்கிறது: “ஒருதலைப்பட்சமான, ஒருங்கிணைப்பில்லாத நடவடிக்கையானது ஐரோப்பாவை உடைக்கும், அதன் மக்களைப் பிரிக்கும், ஷெங்கன் ஐ (ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளாக சுதந்திரமான நடமாற்றத்திற்கான உடன்படிக்கை) அபாயத்திற்குள்ளாக்கும். உறுப்பு நாடுகள் ஒருதலைப்பட்சமாக செயல்படத் தொடங்கினால், அது ஒட்டுமொத்தத்தில் ஐரோப்பாவுக்குள்ளாக குடியேற்றத்தின் அதிகரிப்பிலேயே சென்று முடியும்.”

அதாவது, மேர்க்கெலுக்கும் மக்ரோனுக்கும் சீஹோஃபர் மற்றும் ரோமுடன் இருக்கும் பேதங்கள் புலம்பெயர்வோர் துன்புறுத்தப்படுவது தொடர்பானவை அல்ல. மாறாக, இப்போதைய சூழ்நிலையில், அட்லாண்டிக்-கடந்த கூட்டு சிதறிக்கொண்டிருக்கின்ற நிலையிலும் சொந்த நாட்டில் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் பெருகிச் செல்கின்ற நிலையிலும், வெளிநாடுகளில் ஐரோப்பிய சக்திகளின் இராணுவ வேட்கைகளை திட்டவட்டம் செய்வதற்கும் சொந்தநாட்டில் ஒடுக்குமுறையை ஒழுங்கமைப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றியமே ஒரு மேம்பட்ட பொறிமுறையாகும் என்பதையே அவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

மக்ரோனுடனான தனது கூட்டான செய்தியாளர் சந்திப்பில் இந்த பிரகடனத்தை வழங்கிய மேர்க்கெல், ஐரோப்பிய இராணுவவாதத்தை பாராட்டித் தொடங்கினார்: “நாங்கள் ஐரோப்பாவின் நலன்களையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேஸபேர்க் பிரகடனத்தில் சில பதில்களை நாங்கள் வழங்கியிருக்கிறோம். நாம் வெளியுறவு விவகாரங்களில் நெருக்கமாக வேண்டும், பாதுகாப்பில் நெருக்கமாக வேண்டும். அதன் அர்த்தம் என்னவென்றால், நாம் ஒரு பொதுவான மூலோபாய கலாச்சாரத்தோடு மட்டுமன்றி ஒரு பொதுவான ஆயுதக்கிடங்கையும் கொண்டிருப்போம். நமது படையினர்களை நிலைநிறுத்துவதில் நாம் ஒத்துழைத்து செயல்பட வேண்டும்.”

குடியேற்ற விடயத்தில், ஒரு பொதுவான ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைக்கு விண்ணப்பம் செய்த மேர்க்கெல், ஆஸ்திரியாவிலும் இத்தாலியிலும் உள்ள சீஹோஃபரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து வேலை செய்வதற்கான தனது விருப்பங்களையும் சுட்டிக்காட்டினார்.

அவர் கூறினார், “நாடுகள் மேலும் பிளவுபடுவதைத் தவிர்க்க நாங்கள் விரும்புகிறோம். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளை வலுப்படுத்துவதற்கான ஆஸ்திரிய முன்முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இதன் பொருள் Frontex (ஐரோப்பிய எல்லை மற்றும் கரை பாதுகாப்பு முகமை) க்கு நாங்கள் கூடுதலாக அதிகாரமளிப்போம் என்பதாகும். தஞ்சம் புகல் நடவடிக்கைகளுக்கான நடைமுறைகள் ஒரேமாதிரியானவையாக்கப்பட வேண்டும், ஷெங்கன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் இதைச் செய்ய சாத்தியப்பட்டாக வேண்டும். உறுப்பு நாடுகளுடன் ஐக்கியம் பேண நாங்கள் விரும்புகிறோம். பிரான்சுக்கு அதன் ஆதரவுக்காக நாங்கள் நன்றி கூறுகிறோம். இத்தாலியின் ஜனாதிபதியுடன் நான் பேசினேன்; இத்தாலியின் எண்ணங்களையும் நாங்கள் கணக்கிலெடுத்துக் கொள்வோம்.”

“மிகக் கடினமான பிரிவு” என்று அவர் அழைத்த பொருளாதார விடயத்தில், இந்தப் பிரகடனமானது, வங்கிப் பிணையெடுப்புகள் மற்றும் பெருநிறுவன முதலீடு இரண்டுக்குமான ஐரோப்பிய ஸ்திரத்தன்மை பொறிமுறை (European Stability Mechanism - ESM) பிணையெடுப்பு நிதியைப் பயன்படுத்துவதற்கு அழைப்பு விடுப்பதை மேர்க்கெல் குறிப்பிட்டுக் காட்டினார். ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு பெருநிறுவன வரிக் கட்டமைப்புகளை ஒரேமாதிரியாக்குவது மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மூலதனச் சந்தைகளை ஒருங்கிணைப்பது ஆகியவை உள்ளிட்ட மற்ற வணிக-ஆதரவு நடவடிக்கைகளின் ஒரு வரிசையின் பகுதியாகும் இது.

இராணுவவாதத்தின் தீவிரப்படுத்தலும் குடியேற்ற மக்கள் மீதான நவ-பாசிசத் தாக்குதல்களும் பெரு வணிகங்களுக்கு சலுகைகளும் தொழிலாளர்களுக்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளை தொடர்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதையே இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2009 இல் கிரேக்கத்தில் நடந்தது போல, வங்கிப் பிணையெடுப்புகளுக்கு ESM ஐ பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய அரசுத் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சர்களது ஒப்புதல் அதற்கு இப்போதும் தேவையாக இருக்கிறது, கிரேக்கத்தில் அவர்கள் பிரதிபலனாக ஆழமான சிக்கன நடவடிக்கைகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

சூழ்நிலையானது “ஐரோப்பாவிலும், நமது ஒவ்வொரு நாட்டிலும் மற்றும் நமது கண்டத்திலும் உண்மையின் ஒரு தருணமாக” இருப்பதாக அழைத்து மேர்க்கெலின் கருத்துக்களுக்கு மக்ரோன் ஆதரவளித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் Frontex எல்லைப் படை எண்ணிக்கையை 10,000 பேர் கொண்டதாக அதிகரிப்பதற்கு அழைப்பு விடுத்த அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்: “எங்களது முடிவுகள் தெளிவானவை, அவை சூழ்நிலையின் தீவிரத்திற்கேற்ப எங்களை பதிலிறுக்க அனுமதிக்கின்றன.”

உண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழமைந்திருக்கும் ஜேர்மன்-பிரெஞ்சு அச்சு திவாலடைந்து இருக்கிறது. உழைக்கும் மக்களிடம் அதனை தீவிர குரோதத்திற்குரியதாக ஆக்கியிருப்பதும் உத்தியோகபூர்வ அரசியலை வலது நோக்கி வெகுதூரம் நகர்த்திச் சென்றிருப்பதுமான சிக்கன நடவடிக்கைகள், புலம்பெயர்வோர் விரோத பொறி-வேட்டை, மற்றும் ஏகாதிபத்தியப் போர் ஆகியவற்றின் கொள்கைகளை அது மேலும் தீவிரப்படுத்த இருக்கிறது என்பதையே மேஸபேர்க் பிரகடனம் காட்டுகிறது.

மேலும், இத்தாலியில் இருக்கின்ற மத்தேயோ சல்வீனியின் Lega போன்ற அதி-வலது கட்சிகள் அரசாங்கத்தில் தமது செல்வாக்கை வலுப்படுத்துகின்ற போதிலும் கூட, இத்தாலியில் கரையொதுங்கிய அக்வாரியஸ் கப்பலில் இருந்த 629 அகதிகளை உள்ளே விட ரோம் மறுத்தது போன்ற அவற்றின் மிக அட்டூழியமான மற்றும் மக்கள்-விரோதக் கொள்கைகள் மீது ஒரு சில விமர்சனங்களை செய்துகொண்டே, அதேநேரத்தில் அவற்றின் புலம்பெயர்வோர்-விரோத திட்டநிரலை கையிலெடுப்பதுதான், பேர்லின் மற்றும் பாரிஸிலான பதிலிறுப்பாக இருக்கிறது. மேர்கெலும் மக்ரோனும் -இவரது போலிஸ் பிரான்சில் அதன் புலம்பெயர்ந்தோர்-விரோத தேடுதல் வேட்டைகளை நடத்திக் கொண்டிருக்கிறது- இவ்வாறாக சல்வீனியின் புலம்பெயர்ந்தோர்-விரோத ஒடுக்குமுறை மற்றும் போலிஸ் கட்டியெழுப்பலில் தம்மையும் உடந்தையாக்கிக் கொண்டுள்ளனர்.

ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு மையமான பாத்திரத்தை ஆற்றுகிறது. லிபியாவில் உள்ள ஐரோப்பிய நிதியாதாரத்துடனான முகாம்களில் அகதிகள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அடிமைகளாக விற்கப்பட்டதாகவும், அத்துடன் கொலையும் கூட செய்யப்பட்டதாகவும் சென்ற ஆண்டில் CNN மற்றும் சர்வதேசப் பொதுமன்னிப்பு சபையில் இருந்து தகவல்கள் வெளியானதன் பின்னரும், ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவரான டொனால்ட் டஸ்க் இதுபோன்ற முகாம்களை இன்னும் அதிகமாக கட்டுவதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார், இவற்றை அவர் “பிராந்திய இறங்கு தளங்கள்” என்று பெயரிட்டு அழைத்தார். லிபியாவைத் தாண்டி, இந்த முகாம்கள் துனிசியா மற்றும் அல்பானியாவிலும் கட்டியெழுப்பப்படக் கூடும்.

இந்த சித்திரவதை முகாம்கள் கட்டியெழுப்பப்படுவதற்கான வரைவு வழிகாட்டல்கள் -பிரான்ஸ் மற்றும் இத்தாலி அரசாங்கங்கள் இதற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது- “எவ்வாறாயினும் கடலில் இறங்கி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் மீட்கப்படுகின்றவர்களை கையாளுவதற்கு ஒரு கூடுதலாய் எதிர்பார்க்கத்தக்க கட்டமைப்பை உருவாக்குவது” தான் இந்த முகாம்களது இலக்கு என்று தெரிவிக்கின்றன.

நடைபெற்று வருகின்ற போர் மற்றும் வர்த்தக மோதலை நோக்கிய உலகளாவிய முனைப்பின் இராணுவவாத மற்றும் பாசிசத் தாக்கங்களுக்கு, ஐரோப்பிய முதலாளித்துவம் தப்பிக்க முடியாது என்பதே இறுதிப் பகுப்பாய்வில் காணக் கூடியதாகும். அமெரிக்கா அல்லது சீனாவுக்கு எதிராய் ஒரு நம்பிக்கையான போட்டியாக செயலாற்றுவதற்கான முயற்சியில் நூற்றுக்கணக்கான யூரோக்களை இராணுவத்திற்குள் திருப்புகின்ற அவர்களது நடவடிக்கைகள் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்த மட்டுமே செய்யும். மக்ரோனின் சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் சல்வீனியின் புலம்பெயர்வோர்-விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றுடன், வெகுஜன எதிர்ப்பு பெருகுவதன் மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் அத்தனை அரசாங்கங்களுமே அதி-வலதை நோக்கி துரிதமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.