ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French rail workers strike at a crossroads

பிரெஞ்சு இரயில்வே தொழிலாளர்கள்’ வேலைநிறுத்தம் முடிவெடுக்க வேண்டியதொரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது

By Kumaran Ira and Alex Lantier
1 June 2018

பிரான்சின் இரயில்வே தொழிலாளர்கள் இரயில்வே சீர்திருத்தத்தை மிகப்பெரும் பெரும்பான்மையில் நிராகரித்ததன் பின்னர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தின் மையமாகத் திகழும் அவர்களது வேலைநிறுத்தம் முடிவெடுக்க வேண்டியதொரு முக்கியமான கட்டத்தில் நின்றுகொண்டிருக்கிறது. சிக்கன நடவடிக்கை அரசியலுக்கு, தொழிலாளர்கள் மத்தியில் ஆழமான எதிர்ப்பு நிலவுவதை பிரெஞ்சு தேசிய இரயில்வே (SNCF) தொழிலாளர்கள் எடுத்துக்காட்டி விட்டிருக்கும் நிலையில், தொழிற்சங்கங்கள், அவை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற மக்ரோனுக்கு எதிராய் தொழிலாளர்கள் போர்க்குணமிக்க எதிர்ப்பு காட்டுவதில் மிரட்சியடைந்து இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காய் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இரயில்வே தொழிலாளர்களுக்கு இரண்டு தெளிவான மாற்றீடுகள் திறந்துள்ளன. ஒன்று, தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்களின் கைகளில் இருந்து விடுவித்து மக்ரோனுக்கு எதிராய் போராடுவதற்கு தங்களை சுயாதீனமாக ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும், வேலைநிறுத்தம் செய்து வரும் மற்ற தொழிலாளர்களுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும், இல்லையேல், தொழிற்சங்கங்கள் மக்ரோனுடனான அவற்றின் பேச்சுவார்த்தைகளது கால அட்டவணைக்கேற்ப தொழிலாளர்களது போராட்டத்தை கழுத்தை நெரிக்கும். என்னவிலை கொடுத்தேனும் SNCF சீர்திருத்தத்தை திணிப்பதற்கும், இரயில்பாதைகளைத் தனியார்மயமாக்குவதற்கும், இரயில்வே தொழிலாளர்களின் சிறப்புச்சட்டப்பிரிவை நீக்குவதற்கும் நோக்கம் கொண்டிருப்பதை மக்ரோன் ஏற்கனவே தெளிவாக்கி விட்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலைமையில் தான், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாய் ஒழுங்கமைவதற்கும் போக்குவரத்துத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை, பொதுப் பணித் துறை, எரிசக்தித் துறை மற்றும் இன்னபிற துறைகளிலான போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதற்கும் நடவடிக்கைக் கமிட்டிகளை உருவாக்குவதற்கு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களுக்கு ஆலோசனை மொழிந்திருக்கிறது. மக்ரோனை -அவரது சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளும் மத்திய கிழக்குப் போர்களும் ஏற்கனவே தொழிலாள வர்க்கத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது- கீழிறக்குவதற்கான அரசியல் போராட்டமே முன்நோக்கிய அரசியல் பாதை ஆகும். பிரான்சிலும் மற்றும் சர்வதேச அளவிலும் நிலவுகின்ற கடுமையான சமூகக் கோபமும் போராட்டத்திற்கான ஆற்றலும் மக்ரோன் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிற்போக்குத்தனமான சூழ்ச்சிகளுக்கு எதிராக செலுத்தப்பட்டாக வேண்டும்.

ஜூன் 5 அன்று சீர்திருத்தத்தின் மீது செனட் வாக்களித்து அதன்பின் ஜூன் 13 அன்று தேசிய நாடாளுமன்ற வடிவத்துடன் அதன் மசோதாவை ஒத்திணங்கச் செய்து விட்டவுடன் வேலைநிறுத்தத்தை இரயில்வே தொழிலாளர்கள் முடித்துக் கொள்ளும்படி செய்வதற்கு பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) நெருக்கிக் கொண்டிருக்கிறது. வேலைநிறுத்தம் முடிவை நெருங்கிக் கொண்டிருப்பதாக CFDT இன் பொதுச் செயலரான லோரோன் பேர்ஜே Le Journal du Dimanche பத்திரிகைக்கு தெரிவித்தார்: “சீர்திருத்த நெடுந்தூர ஓட்டப் போட்டி ஒன்றில் அரசாங்கம் எங்களை ஈடுபடுத்தியது. நாங்கள் கடைசி 10 கிலோமீட்டரில் நிற்கிறோம்”. “முடிந்த அளவு சீக்கிரமாக வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு CFDT விரும்புகிறது” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

தன்னாட்சி தொழிற்சங்கங்களின் தேசிய ஒன்றியமும் (National Union of Autonomous Trade Unions - UNSA) வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர திட்டமிடுகிறது, அது தனது முடிவை “வெகு துரிதத்தில்” எடுக்கவிருப்பதாக UNSA-Rail தலைவரான ரோஜே டிலான்ஸேஜே தெரிவித்தார்.

இரயில்வே வேலைநிறுத்தத்தை கழுத்துநெரிக்க பிரெஞ்சு தொழிற்சங்க எந்திரத்தின் பரந்த பிரிவுகள் செய்கின்ற முயற்சியானது, தொழிலாளர்களது போராட்டங்களை அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட அரசியல் கட்சிகளது கூட்டணிக்கு கீழ்ப்படியச் செய்கின்ற ஒரு “புதிய மக்கள் முன்னணி”யை உருவாக்குவதற்கு ஜோன்-லூக் மெலோன்சோன் விடுத்த அழைப்புகளது திவால்நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதிக மறைப்பில்லாமல் மக்ரோனின் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாகப் பேசுகின்ற CFDT போன்ற அரசாங்க-ஆதரவு தொழிற்சங்கங்களின் திட்டநிரலுடன் இது தொழிலாளர்களை கட்டிப்போடுவதாக இருக்கும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக, தளபதி சார்ல்ஸ் டு கோலின் ஆட்சியைக் காப்பாற்றுவதற்கு கிறெனெல் உடன்படிக்கைகளை பேரம்பேசியதன் மூலமாக, ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) 1968 பொது வேலைநிறுத்தத்தைக் காட்டிக்கொடுத்தது. ஆனால் இப்போது, கிறெனெல் உடன்படிக்கை போன்று ஊதிய அதிகரிப்புகளுக்கு முன்மொழியாமல், தொழிற்சங்கங்கள், இருபதாம் நுற்றாண்டில் வென்றெடுக்கப்பட்டிருந்த சமூக தேட்டங்களை மோசமான முறையில் வெட்டுவதற்கு அரசுடன் பேரம்பேசிக் கொண்டிருக்கின்றன. எங்கெங்கிலும் தொழிலாளர்களது போராட்டங்கள் பெருகிக் கொண்டிருக்கிறதும், பல்கலைக்கழக சீர்திருத்தங்களுக்கு எதிராக மாணவர்கள் அணிதிரண்டுக் கொண்டிருக்கிறதுமான வேளையில், இவை மக்ரோன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான ஒரு முழு-வீச்சிலான அரசியல் போராட்டமாக தீவிரமடைவதில் இருந்து தடுப்பதற்கு, இப்போராட்டங்களை தனிமைப்படுத்தவும் கலைக்கவும் தொழிற்சங்கங்கள் முனைந்து வருகின்றன.

1917 அக்டோபர் புரட்சியில் விளாடிமிர் லெனினுக்கு இணைத் தலைவராய் இருந்த லியோன் ட்ரொட்ஸ்கி, 1935 இல், நடவடிக்கைக் குழுக்களுக்கான அழைப்பினை முன்னெடுத்தபோது விடுத்த எச்சரிக்கையின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

1936 பொது வேலைநிறுத்தத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவும், 1940 இல் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சிக்கு முழு அதிகாரங்களை அளிக்க தேசிய நாடாளுமன்றம் வாக்களிப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவும், சூழ்நிலையின் புரட்சிகர ஆற்றலையும், மரணகரமான அபாயங்களையும் குறித்து தொழிலாளர்களை எச்சரிப்பதற்காக ட்ரொட்ஸ்கி போராடினார். நடவடிக்கைக் குழுக்கள் “போராடும் பரந்த மக்களின் புரட்சிகரப் பிரதிநிதித்துவமாக” செயல்புரிவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

அவர் எழுதினார்: “பிரான்சில் மிகப்பெரும் அபாயம் என்னவென்றால், வெகுஜனங்களின் புரட்சிகர ஆற்றல் எல்லாம், துலோன், பிரெஸ்ட், மற்றும் லிமோஜ் போன்ற இடங்களில் தனிமைப்பட்ட வெடிப்புகளாக விரயப்படுத்தப்பட்டு, உத்வேகம்குறைகின்ற நிலைக்கு பாதை வகுத்து விடும். இப்போதைய சூழ்நிலையில் மக்கள் முன்னணி அரசாங்கத்திடம் இருந்து மேலிருந்தான ஆசி தங்களுக்குக் கிட்டும் அந்தத் தருணம் வரை வெகுஜனங்களை அணிதிரட்டாமலே வைத்திருப்பது என்பது சாத்தியமே என்று சிந்திப்பது நனவுடன் துரோகம் செய்பவர்களாலோ அல்லது மண்டையில் களிமண் கொண்ட நம்பிக்கையற்றவர்களாலோ தான் இயலும். இப்போதைய சூழ்நிலையில் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், வீதி மோதல்கள், நேரடிக் கிளர்ச்சிகள் ஆகியவை முழுக்க முழுக்க தவிர்க்கவியலாதவை ஆகும். பாட்டாளி வர்க்கக் கட்சியின் பணி இந்த இயக்கங்களை தடுப்பதோ அல்லது முடக்குவதோ அல்ல மாறாக அவற்றை ஒன்றிணைப்பதும் சாத்தியமான மிகப்பெரும் சக்தியை அவற்றுக்கு அளிப்பதுமே ஆகும்.”

இரயில்வே தொழிலாளர்களும் மற்ற தொழிலாளர்களும் போராட்டத்திற்குத் தலைமை கொடுக்க தொழிற்சங்கங்கள் மீதும் அவற்றின் கூட்டாளிகளின் மீதும் எந்த நம்பிக்கையும் கொள்ள முடியாது. மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில், ஒழுங்கமைத்துக் கொண்டிருக்கின்ற வேலைநிறுத்தங்களை காட்டிக்கொடுப்பதற்காக அவை தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன. அவர்களின் வார்த்தைகள் மாறியிருந்தாலும், CGT மற்றும் SUD போன்ற “வர்க்கப் போராட்ட” தொழிற்சங்கங்களது பாத்திரம் CFDT இன் பாத்திரத்தில் இருந்து எந்த அடிப்படையான மாறுபாட்டையும் கொண்டதல்ல. தொழிலாளர்களை விரக்தியடையச் செய்வதற்கும், மக்ரோனின் சிக்கன நடவடிக்கை அரசியலை குறித்து பிரமைகளை விதைப்பதற்கும், கையாலாகாத அடையாள நடவடிக்கைகள் மூலமாக தொழிலாளர்களது போர்க்குணத்தைக் கலைப்பதற்கும் அவை முனைகின்றன.

CGT இன் இரயில்வே தலைவரான லோரோன் பிறன் SNCF இன் கடன்களில் பகுதியை ஏற்றுக்கொள்ளும் அரசின் முடிவை பாராட்டியதன் மூலம் SNCF அரசில் இருந்து பிரிக்கப்பட்டு தனியார்மயமாக்கப்படுவதை கோட்பாட்டளவில் ஏற்றுக் கொண்டு விட்டிருந்தார். SUD அதன் சொந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்களது சிறப்பு சட்டப்பிரிவை பாதுகாப்பது மற்றும் SNCF இன் தனியார்மயமாக்கத்தை நிறுத்துவது ஆகிய மற்ற தொழிற்சங்கங்கள் கைவிட்டிருந்த கோரிக்கைகளை அது இன்னமும் கோரி வருகிறது என்பதாய் அது கூறிக் கொள்கிறது. ஆனால் இந்த சிறிய, சிறுபான்மை தொழிற்சங்கமானது அதன் கோரிக்கைகளை மக்ரோன் மீது திணிக்கும் திறனற்றது என்பதோடு அவருக்கு எதிரான ஒரு போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு இன்னும் அதிகமாய் திறனற்றதாய் இருக்கிறது.

1968 மே க்கு ஐம்பது ஆண்டுகளின் பின்னர், அரை நூற்றாண்டுகால சிக்கன நடவடிக்கைகள் மற்றும் செல்வந்தர்களுக்குக் கொடுக்கப்பட்ட வரிக் கையளிப்புகள் ஆகியவற்றில் களைத்து விட்டிருக்கும் பிரெஞ்சு முதலாளித்துவம், தொழிலாள வர்க்கத்திற்கு சலுகைகள் வழங்குமளவுக்கான ஆதாரவளங்களை இனியும் கொண்டிருக்கவில்லை. உலக முதலாளித்துவத்தின் பொருளாதார மற்றும் இராணுவ நெருக்கடி இதில் பிரதான காரணியாக இருக்கிறது. பிரான்சில் வர்க்க உறவுகளை மாற்ற முயலுவது, தொழிலாளர்களை வறுமையில் தள்ளி 2018க்கும் 2024க்கும் இடையில் 300 பில்லியன் யூரோக்கள் செலவிடும் வகையில் இராணுவ செலவினத்தை உயர்த்துவது ஆகியவற்றின் மூலமாக மக்ரோன் பதிலிறுத்துக் கொண்டிருக்கிறார். தொழிலாள வர்க்கத்திற்கு எந்த கிறெனெல் உடன்படிக்கைகளையும் அவர் வழங்கப் போவது கிடையாது.

ஆயினும், ஐரோப்பிய ஒன்றியத்துடனும் தொழிற்சங்கங்களுடனும் சேர்ந்து சதிசெய்து அவர் தீட்டுகின்ற சமூகப் பிற்போக்கான கொள்கைகள் தவிர்க்கவியலாமல் பிரான்சிலும் ஐரோப்பாவெங்கிலும் தொழிலாளர்கள் மத்தியில் ஆழமான எதிர்ப்பை சந்திக்கும். சிக்கன நடவடிக்கைகளுக்கும் போருக்கும் எதிரான போராட்டத்தில் நுழைகின்ற பரந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு ஒரு சுயாதீனமான, சோசலிச மற்றும் புரட்சிகர அமைப்பையும் முன்னோக்கையும் கொண்டுதருவதே தீர்மானகரமான பிரச்சினையாகும்.

நடப்புப் போராட்டங்கள் தொடர்பாகவும், தொழிற்சங்கங்கள் மற்றும் பாராம்பரிய கட்சிகள் தொடர்பாகவும், சோசலிச சமத்துவக் கட்சி (The Parti de l’égalité socialiste - PES) மற்றும் அதன் கட்சி வேலைத்திட்டம் முன்வைக்கின்ற மாற்றீடு குறித்தும் விவாதிப்பதற்கு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் PES ஊக்குவிக்கிறது. போராட்டத்திற்கான புரட்சிகர முன்னோக்குகளை விவாதிப்பதற்கும், 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்தின் 50வது ஆண்டு நிறைவை குறிக்கும் முகமாகவும் ஜூன் 3, மாலை 3 மணிக்கு பாரிஸில் நடைபெறவிருக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அவர்களை நாங்கள் அழைக்கிறோம்.