ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Spain’s Popular Party government falls after no-confidence vote

நம்பிக்கை வாக்கெடுப்பிற்குப் பின்னர் ஸ்பெயினின் மக்கள் கட்சி அரசாங்கம் கவிழ்கிறது

By Paul Mitchell
2 June 2018

நேற்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் மரியானோ ரஹோய் தோல்விகண்டதை அடுத்து -ஆதரவு 180 எதிர்ப்பு 169 ஒருவர் கலந்துகொள்ளவில்லை- அவரது சிறுபான்மை மக்கள்கட்சி அரசாங்கம் கவிழ்ந்தது. சோசலிஸ்ட் கட்சியின் (PSOE) தலைவரான பேதுரோ சான்சேஸ் (Pedro Sánchez) புதிய பிரதமரானார்.

PSOE இன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு போலி-இடது/ஸ்ராலினிச Unidos Podemos கூட்டணி மற்றும் பிராந்தியத்தின் தேசியவாதக் கட்சிகளான கட்டலோனியா குடியரசு இடது கட்சி (ERC), கட்டலோனியாவில் இருக்கும் கட்டலான் ஐரோப்பிய ஜனநாயகக் கட்சி (PDeCAT), பாஸ்க் தேசியவாத கட்சி (PNV) மற்றும் பாஸ்க் பிராந்திய EH Bildu, வலென்சியாவின் Compromís, மற்றும் New Canaries Islands கட்சி ஆகியவற்றின் ஆதரவு இருந்தது.

பிராங்கோ ஆட்சி முடிவுற்றதற்குப் பிந்தைய 40 ஆண்டுகால ஜனநாயக ஆட்சியில், இதற்கு முன்பாக எந்த ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானமும் வெற்றிபெற்றதில்லை. இதன் முன்கண்டிராத தன்மையானது நாடு முகம்கொடுக்கின்ற ஆழமான நெருக்கடியை சுட்டிக்காட்டுகிறது. 2011 இல், 45 சதவீத வாக்குகள் மற்றும் 186 ஆசனங்களுடன் பொதுத் தேர்தலில் மக்கள் கட்சி பிரம்மாண்டமான வெற்றி பெற்றது. ஆனால் 2016 அக்டோபரில், 10 மாத கால முட்டுக்கட்டையான நிலைக்குப் பின்னர், வலது-சாரி நவ-தாராளவாத குடிமக்கள் கட்சியின் (Ciudadanos) ஆதரவுடனும் PSOE பங்கேற்காத நிலையிலும் ஒரு சிறுபான்மை அரசாங்கமாக PP ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்படும்படியானது. 2015 டிசம்பரில் நடந்த தேர்தலிலோ அல்லது அதனைத் தொடர்ந்து 2016 ஜூனில் நடந்த ஒன்றிலோ எந்த ஒரு கட்சியும் முழுமுதலான வெற்றியைப் பெற முடியவில்லை.

PSOE இன் இற்றுப்போன உடன்பாட்டிற்குப் பின்னர் உலக சோசலிச வலைத் தளம் எழுதியது: “புதிய அரசாங்கமானது 1970களின் பிராங்கோ சர்வாதிகாரம் முடிவுக்கு வந்ததற்குப் பிந்தைய காலத்தின் மிகப் பலவீனமானதாகும் என்பதோடு, அதிகாரம் வலது-சாரி மக்கள் கட்சிக்கும் ‘மத்திய-இடது’ PSOEக்கும் இடையில் மாறி மாறி வந்த இருகட்சி ஏற்பாடுகள் இரண்டு கட்சிகளாலும் பின்பற்றப்பட்ட சிக்கன நடவடிக்கைகளது திட்டநிரலின் விளைவாக முழுமையாக அம்பலப்பட்டிருக்கும் நிலைமைகளின் கீழ் ஆட்சிசெய்யவிருக்கிறது.

இன்று, அதன் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் கட்டலோனியாவில் அது நடத்திய ஒடுக்குமுறையான தலையீடு ஆகியவற்றின் இணைந்த தாக்கத்தினால் வெறும் 20 சதவீத அளவுக்கே PP வாக்குகள் பெறும் நிலையில் உள்ளது.

சென்ற அக்டோபரில் பிரிவினைவாதக் கட்சிகள் ஒருதரப்பாக சுதந்திரப் பிரகடனம் செய்ததற்கு பதிலிறுப்பாக, ரஹோய் ஆயிரக்கணக்கில் கலகத் தடுப்பு போலிசாரை அனுப்பியதோடு, பிராந்தியத்தின் பிரதமர் கார்லெஸ் புய்க்டெமொன்ட்டையும் அவரது அரசாங்கத்தையும் நீக்குவதற்கும் கட்டலோனியாவின் நேரடிக் கட்டுப்பாட்டை ஏற்பதற்கும் முன்கண்டிராத வகையில் ஸ்பெயின் அரசியல்சட்டத்தின் 155வது பிரிவைப் பயன்படுத்தினார்.

தனது கட்சியின் மேலாதிக்கமான நிலையை திட்டவட்டம் செய்வதற்காக ஜனரஞ்சக வெளிநாட்டவர்வெறுப்பு அலை ஒன்றை தூண்டி அவர் ஆபத்தான விளையாட்டை ஆடினார். ஆனால், அவரது தாக்குதலுக்கு தொழிலாள வர்க்கத்தில் கணிசமான எதிர்ப்பு எழுந்த நிலையில் -இந்த எதிர்ப்பு எந்த அரசியல் வெளிப்பாட்டையும் காண முடியவில்லை என்றபோதும் கூட- அது அவரைத் திருப்பித் தாக்கியது.

டிசம்பர் 21 அன்று நடத்தப்பட ரஹோயால் அழைக்கப்பட்டிருந்த பிராந்தியத் தேர்தல்களில் பிரிவினைவாதக் கட்சிகள் வெற்றி பெற்றன, ஸ்பானிய ஐக்கியத்தின் பிரதான ஆதரவுக் கட்சியாகவும் குடிமக்கள் கட்சி வெறும் 4 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த PP ஐ விஞ்சி விட்டிருந்தது.

ஐரோப்பாவில் தஞ்சம் பெற முனையும் புய்க்டெமொன்ட் மற்றும் பிற அமைச்சர்களை திருப்பிக் கொண்டுவருவதற்கு ரஹோய் முயற்சி செய்கின்ற நிலையிலும், செயல்பாட்டாளர்கள் தொகைதொகையாய் கைது செய்யப்படுவதை கட்டலோனியா தொடர்ந்து கண்ணுற்று வரும் நிலையிலும் கூட, அவரது முயற்சி ஒரு தோல்வியாகவே அத்தனை தரப்புகளில் இருந்தும் பார்க்கப்படுகிறது.

பிரிவினைவாதிகளுடன் ஒரு தீர்க்கமான மோதலைக் கோருகின்ற ஆளும் உயரடுக்கின் பிராங்கோவாத பிரிவுகளை குடிமக்கள் கட்சி பிரதிநிதித்துவம் செய்கின்ற நிலையில், PSOE இன் சான்சேஸ் (Sánchez), முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கும் தொழிலாள வர்க்கத்தை சமாளிப்பதற்கு தயாரிப்பு செய்வதற்கும் பிரிவினைவாதிகளுடன் பேரம்பேசுவதற்கு முயற்சி செய்ய ஊக்குவிக்கப்பட்டிருக்கிறார்.

பிராந்தியத்தின் புதிய முதல்வர் கீம் டோரா (Quim Torra) தலைமையிலான கட்டலோனியாவின் சுதந்திரத்திற்கு-ஆதரவான அரசாங்கத்துடன் “பேச்சுவார்த்தை”யில் ஈடுபடுவதற்கு விருப்பம் கொண்டுள்ளதை சான்சேஸ் சமிக்கை செய்திருக்கிறார். “கட்டலோனியா தீர்க்கப்பட அவசியமுள்ள ஒரு அரசியல் பிரச்சினையாகும்” என்று கூறிய அவர், எந்த பேச்சுவார்த்தையாக இருந்தாலும் அது அரசியல் சட்டத்திற்கும் “ஸ்பானிய தேசத்தின் கலைக்கப்பட முடியாத ஐக்கியத்திற்கும்” கீழ்ப்படிந்ததாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

தனது புதிய நிர்வாகத்திற்கு புய்க்டெமொன்ட்டின் பிரதான அமைச்சரவையில் இருந்த சிறையிலடைக்கப்பட்ட அல்லது வெளிநாட்டில் அடைக்கலம் புகுந்திருக்கும் அங்கத்தவர்களை நியமிக்கின்ற முடிவை டோரா கைவிட்டதைத் தொடர்ந்து, மாட்ரிட்டில் இருந்தான நேரடியான ஆட்சி இன்றோடு முடிவடைகிறது. அவருடைய பிரதான அமைச்சரவை பதவியேற்றதும், 155வது ஷரத்தின் அமலாக்கம் காலாவதியாகி விடும்.

வலது-சாரி PNV இன் ஆதரவையும் சான்சேஸ் பெற்றுவிட்டிருக்கிறார், ரஹோயின் மிகவும் தாமதமான நிதிநிலை அறிக்கையுடன் உடன்பட்ட இதன் ஐந்து வாக்குகள் சென்ற வாரத்தில் தான் ரஹோயை பதவியில் வைத்திருந்தது. பிரதிபலனாக சான்சேஸ், ரஹோயின் நிதிநிலை அறிக்கைக்கு மதிப்பளிக்கும் விதமாக, PSOE, அதில் இடம்பெற்றவாறாக 540 மில்லியன் யூரோ முதலீட்டை பாஸ்க் நாடுகளுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

பிரிவினைவாதிகளுக்கு என்ன சலுகைகள் கொடுக்கப்பட்டாலும், பொய்யான சிக்கன-விரோத வாய்வீச்சுகளையும் தாண்டி, தொழிலாள வர்க்கம் விட்டுவைக்கப்படப் போவதில்லை.

PP இன் நிதிநிலை அறிக்கை முன்மொழிவுகளை அமல்படுத்தவிருப்பதையும், மதிப்பிழந்த PP நிர்வாகத்தை -சென்ற வாரத்தில் PP அதிகாரிகளுக்கு கையளிக்கப்பட்ட Gürtel ஊழல் வழக்கு தீர்ப்புகளை சாக்காகப் பயன்படுத்தி- வெளியேற்றுவது சிக்கன நடவடிக்கைகளை தொடர்வதற்கும் அதிகரித்துச் செல்லும் சமூக அதிருப்தியை ஒடுக்குவதற்குமான ஒரு வழிவகையே என்பதையும் ஆளும் வட்டாரங்களுக்கு சான்சேஸ் தெளிவாக்கி விட்டிருக்கிறார்.

அமசான் இல், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் மற்றும் எரிசக்தித் துறையிலான வேலைநிறுத்தங்களில் வெளிப்படுத்தப்பட்டவாறாக, வர்க்கப் போராட்டத்தின் கணிசமானதொரு வளர்ச்சியாலும் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான சமீபத்திய ஆர்ப்பாட்டங்கள் போன்ற சமூகப் போராட்டங்களாலும் இது இன்னும் அதிக அவசியமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது பேசுகையில், சான்சேஸ், புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்பாக அரசாங்கத்திற்கான தனது திட்டம், “ஸ்தாபன, நிதிநிலை, சமூக மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை” பராமரிப்பதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்தார். “இந்த அவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பொதுவான அரசு நிதிநிலை அறிக்கையை” தனது அரசாங்கம் பாதுகாக்கும் என்று PSOE இன் சான்சேஸ் வலியுறுத்தியபோது, அவரே ஆச்சரியப்பட்டுப் போகுமளவுக்கு PP இன் நாடாளுமன்றப் பிரிவிடம் இருந்து ஏற்பான ஆர்ப்பரிப்பு வந்தது.

இந்த நிதிநிலை அறிக்கையில் இராணுவம், போலிஸ் மற்றும் உளவுச் சேவைகளுக்கான செலவினங்கள் பெரும் அதிகரிப்பைக் கண்டிருக்கின்ற அதேசமயத்தில், மற்ற பொதுத்துறை செலவினங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. எட்டு வருடங்களுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் கல்விச் செலவினத்திற்கு 13 சதவீதம் குறைவாகவும், சுகாதாரத்திற்கு 8 சதவீதம் குறைவாகவும், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 27 சதவீதம் குறைவாகவும், வீட்டுவசதி அணுகலுக்கு 70 சதவீதம் குறைவாகவும், கலாச்சாரத்திற்கு 35 சதவீதம் குறைவாகவும், உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கு 58 சதவீதம் குறைவாகவும் அத்துடன் உள்நாட்டுப் போர் “வரலாற்று ஞாபக” திட்டங்களுக்கு பூச்சிய நிதியாதாரமும் ஒதுக்கப்படவிருக்கிறது என்பதே இதன் அர்த்தமாகும்.

PSOE ஐ பதவிக்குக் கொண்டுவந்ததில் பிரதான அரசியல் பாத்திரம் பொடெமோஸ் (Podemos) ஆல் வகிக்கப்பட்டது. அதன் தலைவரான பப்லோ இக்லெஸியாஸ், சென்ற ஆண்டில் கட்டலோனியாவில் ஒரு அரசியல் உடன்பாட்டிற்கு வலியுறுத்தியதன் மூலம் ஒரு கிங்மேக்கராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார், அதேவேளையில் PP இன் ஒடுக்குமுறைக்கு PSOE முழுமையாக ஆதரவளித்தபோதும் அதற்கு விசுவாசத்துடன் நோக்குநிலையமைத்துக் கொண்டார். பொடெமோஸ் மற்றும் தேசியவாதிகளுடன் ஒரு “முற்போக்குக் கூட்டணி”க்கு முன்முயற்சியெடுக்க சான்சேஸ் ஐ இக்லெஸியாஸ் வலியுறுத்தி வந்திருக்கிறார்.

விவாதத்தின் போது இக்லெஸியாஸ் பின்வருமாறு அறிவித்தார்: “நன்றி, திரு சான்சேஸ் அவர்களே, முதலில் உங்களது தொனிக்கு நன்றி, நீங்கள் சற்று துணிச்சலான ஒன்றைச் செய்திருக்கிறீர்கள்... நீங்கள் ஒரு PP அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருக்கவில்லை என்ற உண்மையும் உங்களுக்குப் பெருமையளிப்பதாக இருக்கிறது. ஐக்கிய இராச்சியத்தில் ஜெரெமி கோர்பின் [தொழிற் கட்சித் தலைவர்] அல்லது அமெரிக்காவில் பேர்னி சாண்டர்ஸ் என்ன ஆலோசனை சொல்கிறார்கள் என்பதைக் குறித்து நீங்கள் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்... பிராந்திய அரசாங்கங்களில் மற்றும் நகர கவுன்சில்களில் நாம் ஒன்றாகப் பணிபுரிந்திருக்கிறோம், நாம் நன்றாகவே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஒன்றாக அடுத்த பொதுத் தேர்தலை வெல்வதுதான் நாம் செய்ய வேண்டியதாகும் என்று நான் நினைக்கிறேன்.”

இத்தகையதொரு கூட்டணியில் எந்தவொரு முற்போக்கான அம்சமும் இருப்பதான எந்தவொரு கூற்றும் கிட்டத்தட்ட உடனடியாக மறுதலிக்கப்பட்டது, ‘எதையும் பேரம் பேசாமல்’ தீர்மானத்திற்கு “தாராளமான” ஆதரவளித்தமைக்காக இக்லெஸியாஸுக்கு நன்றி தெரிவித்த சான்சேஸ், அதன்பின், பொடெமோஸ் எதிர்த்ததாகக் கூறிக் கொண்ட PP இன் நிதிநிலை அறிக்கைக்கான உறுதிப்பாட்டை தனது முதல் அறிவிப்பாகச் செய்தார்! பொடெமோஸ் இப்போது வறுவலை கடித்துக் கொண்டு PP இன் நிதிநிலை அறிக்கையைத் தான் “சாப்பிட்டாக வேண்டும்” என்று ரஹோய் தெரிவித்தார்.

பொடெமோஸ் மற்றும் பிரிவினைவாதிகளது முட்டுக்கொடுப்புடன் ஒரு ஸ்திரமற்ற சிறுபான்மை ஆட்சிக்கு PSOE இப்போது தலைமையில் இருக்கிறது, துடைத்தழிக்கின்ற மற்றும் மக்கள்விரோத சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கான அதன் திட்டங்கள் தொடர்பாக தொழிலாள வர்க்கத்துடன் அது மோதலில் ஈடுபடுவது நிச்சயம்.