ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US war crimes in Syria exposed

சிரியாவில் அமெரிக்க போர் குற்றங்கள் அம்பலமானது

Niles Niemuth
7 June 2018

சிரியாவின் றக்கா நகரம் மீதான அதன் நான்கு மாதகால முற்றுகையின் போது கடந்த ஆண்டு அமெரிக்கா மலைப்பூட்டும் அளவிற்கான போர் குற்றங்களை நடத்தியுள்ளது, அது இடைவிடாது குண்டுமழை பொழிந்தும் மற்றும் வெடிகுண்டுகளை வீசியும் அந்நகரத்தின் 80 சதவீதத்தை அழித்தது, அதில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

அமெரிக்க இராணுவம் மற்றும் அதன் பினாமி துருப்புகளான சிரிய ஜனநாயக படைகள் என்றழைக்கப்படுபவையால் செய்யப்பட்ட நாசங்களை, “நிர்மூலமாக்கும் போர்" என்ற பேரச்சமூட்டும் தலைப்பில் சர்வதேச பொதுமன்னிப்பு சபை (Amnesty International) இந்த வாரம் வெளியிட்ட ஓர் அதிர்ச்சியூட்டும் அறிக்கையில் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது. ஈராக் மற்றும் சிரியாவுக்கான இஸ்லாமிக் அரசிடம் (ISIS) இருந்து அந்நகரைக் கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சியைக் குறித்து விவரித்த போதெல்லாம் பாதுகாப்புத்துறை செயலர் "போர்வெறியர்" ஜேம்ஸ் மாட்டீஸ் வழமையாக அந்த வார்த்தையை பயன்படுத்தி இருந்தார்.

றக்கா நகரின் மீது அமெரிக்கா ஆயிரக் கணக்கான குண்டுகளைப் போட்டிருந்ததுடன், வெறும் ஐந்து மாதங்களில் 30,000 வெடிகுண்டுகளை சரம்சரமாக அந்நகரின் மீது வீசியிருந்தது. ரக்கா மற்றும் அதை சுற்றியிருந்த கிராமங்களில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை போருக்கு முன்னர் இருந்த மொத்தம் 340,000 என்பதிலிருந்து 100,000 க்கும் குறைவாக குறைந்து போயுள்ளது. அந்நகரின் பெரும்பாலான வீடுகளும் முக்கிய உள்கட்டமைப்பும் சேதமடைந்திருப்பதாலும் அல்லது அழிக்கப்பட்டிருப்பதாலும், அந்நகரிலிருந்து தப்பிப் பிழைத்து சென்றவர்களில் பெரும்பாலானவர்களால் மீண்டும் திரும்பி வர முடியவில்லை. அப்படியே திரும்பி வந்தவர்களும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளும் வீசியிருந்த வெடிக்காத குண்டுகள் மற்றும் ஏவுகணைகளால் அல்லது ISIS அமைத்திருந்த கண்ணிவெடிகளால் வெடித்து சிதறும் சாத்தியக்கூறை முகங்கொடுக்கின்றனர்.

அமெரிக்கா உத்தியோகபூர்வமாக ISIS ஐ தோற்கடிப்பதற்காக சிரியாவில் போர் தொடுத்திருப்பதாக இருந்தாலும், அக்குழுவின் ஆயிரக் கணக்கான உறுப்பினர்கள் அந்நகரை விட்டு வெளியேற அனுமதிக்கும் விதத்தில் ஓர் உடன்படிக்கை செய்யப்பட்டிருந்த போதும் கூட, பீரங்கி குண்டுகளும் விமானத்தாக்குதல்களும் தொடர்ந்து அப்பாவி மக்கள் வாழும் பகுதிகளில் வீசப்பட்டதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சிரியாவில் தற்போது குறைந்தபட்சம் 2,000 அமெரிக்க துருப்புகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கொண்டிருப்பதுடன், பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைத் தூக்கிவீசி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கு அதிகமாக சலாம் போடும் ஓர் ஆட்சியை நிறுவுவதே வாஷிங்டனின் இறுதி குறிக்கோளாகும்.

பொதுமன்னிப்பு சபை ஆய்வாளர்கள் தப்பிப் பிழைத்திருந்த 100 க்கும் அதிகமானவர்களை நேர்காணல் செய்தும், அந்நகரமெங்கிலும் 42 அமெரிக்க விமானத்தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடங்களை மேற்பார்வையிட்டும், கடந்த ஆண்டின் அப்படுகொலையால் ஏற்பட்டிருந்த உயிரிழப்புகள் மற்றும் சீரழிவுகளைக் குறித்த விபரங்களை வழங்கினர். நான்கு தனித்தனியான அமெரிக்க விமானத்தாக்குதல்களில், தாங்கள் பதுங்குவதற்கு இடத்தைத் தேடி அலைந்த போது, அவர்களின் குடும்பத்தில் 39 நபர்களை, பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை இழந்திருந்த ஒரு குடும்பமான பேட்ரன்களுடன் அந்த மனித உரிமைகள் குழு பேசியது.

அத்தாக்குதலுக்குப் பொறுப்பான தளபதி, ரக்கா மீதான தாக்குதல் "வரலாற்றிலேயே மிகவும் துல்லியமான விமானத் தாக்குதல் நடவடிக்கை" என்று அத்தாக்குதலை பெருமைப்பீற்றினார். 2017 இல் உலகெங்கிலுமான அதன் பல்வேறு அனைத்து இராணுவ நடவடிக்கைகளில் 500 க்கும் குறைவான அப்பாவி மக்களே கொல்லப்பட்டதாக பென்டகன் அபத்தமாக வாதிட்டதுடன், ரக்காவில் வெறும் 32 அப்பாவி மக்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக ஒப்புக் கொண்டது.

அந்த முற்றுகை முடிந்து பல மாதங்களுக்குப் பின்னர் இடிபாடுகளில் இருந்து அண்மித்து 500 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், நூற்றுக் கணக்கான உடல்கள் இன்னமும் அங்கே கண்டறிய முடியாமல் கிடப்பதாகவும் ஏப்ரலில் அசோசியேடெட் பிரஸ் அறிக்கை கண்டறிந்தது. சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் நடத்தும் விமானத் தாக்குதல்களை நெருக்கமாக கண்காணிக்கும் ஏர்வார்ஸ் (Airwars) அமைப்பு, ரக்காவில் அமெரிக்க விமானத் தாக்குதல்களில் 1,400 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஆவணப்படுத்தியது.

இந்தாண்டின் தொடக்கத்தில் டூமாவில் விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டதாக உருவாக்கப்பட்ட பொய்யான விஷமப்பிரச்சாரம் போலன்றி, ரக்காவில் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் நடத்திய பரந்த போர் குற்றங்கள் குறித்து வெளிவந்திருக்கும் செய்திகளும், அந்த தாக்குதலே கூட, பெருநிறுவன ஊடங்களால் ஏதோ நடந்திராத-சம்பவமாக கையாளப்படுகின்றன. நியூ யோர்க் டைம்ஸ் ஆகட்டும் அல்லது வாஷிங்டன் போஸ்ட் ஆகட்டும், அரசியல் ஸ்தாபகத்தின் இவ்விரு பிரதான பத்திரிகைகளது அச்சுப்பதிப்புகளில் பொதுமன்னிப்பு சபையின் அறிக்கை குறித்து எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவின் "மனிதாபிமான" தலையீட்டின் ஒரு தீவிரப்பாட்டை அலங்கரிப்பதற்காக, அசாத் ஆட்சி அல்லது ரஷ்ய படைகள் நடத்திய அட்டூழியங்கள் என்று குற்றஞ்சாட்டி உச்சபட்ச தார்மீக சீற்றத்துடன் அவற்றைக் கண்டிக்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாவி குதிக்கும், டைம்ஸ் கட்டுரையாளர்கள் நிக்கோலஸ் க்ரிஸ்டோஃப் மற்றும் தோமஸ் ப்ரீட்மன் இருவரும் வெளிப்படையாகவே எழுத்தாளரின் அணியில் ஒரு கூட்டு வழக்கைப் பிடித்திருந்தார்கள்.

அமெரிக்க ஊடகங்களில் தலையங்கம் எழுதுபவர்களும் மற்றும் விமர்சகர்களும், இன்னும் பெரும்பான்மையினரும், ட்ரம்ப் சிரியாவில் போதுமானளவுக்கு செல்லவில்லை என்றும், மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்திற்காக ரஷ்யா மற்றும் ஈரானின் எந்த சவாலையும் எதிர்கொள்ள 15 ஆண்டுகளுக்கும் அதிகமாக நீடித்திருக்கும் அமெரிக்க போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை விரிவாக்க வேண்டுமென வாதிடுகின்றனர்.

2016 தேர்தலை ஜெயிக்க ரஷ்யர்களுடன் ட்ரம்ப் கூட்டு வைத்திருந்தார் என்று கூறப்படுவதன் மீது முடிவின்றி சேற்றை வாரியிறைக்கும் மோதல்கள் நடந்து வந்தாலும், அப்பிராந்தியத்தின் எண்ணெய் வளங்கள் மீது முழு கட்டுப்பாட்டை எடுப்பதற்கான போர்கள் தொடர வேண்டும் என்பதிலும், சொல்லப்போனால் அப்பாவி மக்களின் உயிர்களை பொருட்படுத்தாது அவை விரிவாக்கப்பட வேண்டும் என்பதிலும் அனைத்து தரப்பும் உடன்படுகின்றன.

ரக்காவில் நடந்த அட்டூழியங்கள் குறித்து ஊடங்கள் செய்திகளை வெளியிடாமல் இருப்பதும், பொதுமன்னிப்பு சபையின் கண்டுபிடிப்புகளை அவை மூடிமறைப்பதும் இந்த குற்றங்களில் அவற்றையும் உடந்தையாக்குகின்றன. பரந்த போர்-எதிர்ப்புணர்வுகள் ஏகாதிபத்திய போருக்கு எதிராக அரசியல்ரீதியில் நனவுபூர்வமான இயக்கமாக அபிவிருத்தி அடைவதைத் தடுக்கும் ஒரு முயற்சியில், அமெரிக்க மக்களின் பெயரில் நடத்தப்பட்ட குற்றங்களின் அளவை அவர்களிடமிருந்தே மூடிமறைக்க, ஊடகங்கள் திட்டமிட்டு முடிவெடுத்துள்ளன.

இந்த முயற்சியில் முக்கிய பாத்திரம் வகித்திருப்பவை, ஏகாதிபத்திய தலையீட்டை நியாயப்படுத்த ஓய்வின்றி செயல்படும் "சோசலிஸ்ட்" என்று தங்களைக் கூறிக் கொள்ளும் அமைப்புகள் உட்பட, போலி-இடதுகளே ஆகும். சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு சிரியாவில் அமெரிக்க போரையும், வாஷிங்டனின் "கிளர்ச்சி" பினாமி படைகள் என்றழைக்கப்பட்டதையும் எதிர்த்தவர்களை வழமையாக தாக்கி வந்துள்ளது. அசாத் அரசாங்கத்தின் மீது ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் மீண்டும் நடத்திய சட்டவிரோத ஏவுகணை தாக்குதல்கள், இவை அணுஆயுதமேந்திய ரஷ்யாவுடன் ஒரு போரை தூண்டியிருக்கும் என்ற நிலையிலும், அவை போதுமானளவுக்கு இல்லை என்று கூறி அவர்கள் விடையிறுத்தனர், அதேவேளையில் சிரியா மீது கட்டவிழ்ந்து வந்த அல் கொய்தா தொடர்பு "கிளர்ச்சியாளர்களை" ஆயுதமேந்த செய்ய ஒபாமாவும் சரி ட்ரம்பும் சரி இருவருமே போதுமானளவுக்கு உதவ தவறிவிட்டதாக குறைகூறினர்.

இதேபோல, பப்லோவாத International Viewpoint சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரை புதுப்பிப்பதற்கு அழைப்பு விடுத்தும், அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும் "எழுச்சியின் ஜனநாயக கூறுகள் தங்களைப் பாதுகாத்து கொள்ள அனுமதிக்க மறுத்துவிட்டனர்" என்று வாதிட்டும் இவ்வாரம் ஓர் அறிக்கை வெளியிட்டது, இதன் அர்த்தம் என்னவென்றால் சிரியா மீது போதுமானளவுக்கு அமெரிக்கா குண்டுவீசவில்லை அல்லது அவர்களின் பினாமிப் படைகளுக்கு போதியளவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்பதேயாகும்.

உண்மையில் அப்பாவி மக்களின் சடலங்கள் தொடர்ந்து மலைபோல் குவிந்து கிடக்கின்ற நிலையில், பென்டகன் அதன் போர்களை துல்லியமாக குண்டுவீசி பயங்கரவாதிகளை மட்டுமே கொல்லும் இரத்தம் சிந்தாத துல்லியமான நடவடிக்கையாக பொய்யாக சித்தரிக்க, எப்போதும்-உடந்தையாய் இருக்கும் ஊடகங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஈராக்கிய குர்திஷ் உளவுத்துறையின் ஒரு மதிப்பீட்டின்படி, 2016 மற்றும் 2017 இல் ஈராக்கில் மொசூல் நகரை ISIS வசமிருந்து மீட்பதற்கான அமெரிக்க முயற்சியில் ஏறத்தாழ 40,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், அதேவேளையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்தனர். யேமனில், அங்கே தரைப்படையில் உள்ள அமெரிக்க சிறப்பு படைகளின் ஆதரவுடன், மூன்றாண்டு சவூதி தலைமையிலான போரில், 13,000 க்கும் அதிகமான அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளது, 18 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பட்டினியில் கிடக்க அச்சுறுத்துகிறது.

இப்போது ட்ரம்ப் நிர்வாகம் மிக நேரடியாக யேமன் போரில் இணைய பரிசீலித்து வருகின்ற அதேவேளையில், மில்லியன் கணக்கான அப்பாவி மக்களை மைய இலக்கில் வைக்கும் வகையில், ஈரானுடன் இன்னும் அதிக மிக அபாயகரமான இராணுவ மோதலுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது.