ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump and Kim prepare for Tuesday’s unpredictable summit

ட்ரம்ப் மற்றும் கிம் இருவரும் செவ்வாயன்று நடைபெறவுள்ள முன்னூகிக்க முடியாத உச்சிமாநாட்டிற்கு தயாராகின்றனர்

By Ben McGrath 
11 June 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் அவர்களது முதல் உச்சிமாநாட்டை நாளை சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தைகளை ஒரு “சமாதானத்திற்கான நோக்கம்” என்று ட்ரம்ப் பாராட்டியுள்ள போதிலும், அதன் முடிவு என்னவாக இருந்தாலும் ஆசிய-பசிபிக்கில் பதட்டங்கள் தீவிரமடைவது மட்டும் மேலும் தொடரும்.

கிம் சிங்கப்பூர் சென்றடைந்து பல மணி நேரங்களுக்கு பின்னரே ட்ரம்ப் அங்கு சென்றார், பின்னர் இப்பேச்சுவார்த்தைகள் “மிகவும் நல்லது” என அவர் உணர்வதாக தெரிவித்தார். சீன ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட Air China 747 விமானம் மூலமாக கிம் அங்கு சென்றடைந்த பின்னர் சிங்கப்பூர் பிரதம மந்திரி லீ ஷைன் லூங்கை சந்தித்தார். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டை வழங்குவதற்கு லீ க்கு நன்றி கூறி, கிம் இவ்வாறு கூறினார்: “வட கொரியா (Democratic People’s Republic of Korea-DPRK) மற்றும் அமெரிக்கா இடையேயான இந்த வரலாற்று சிறப்புவாய்ந்த உச்சி மாநாட்டை ஒட்டுமொத்த உலகமும் அவதானித்துக் கொண்டிருக்கிறது.”  

இத்தகைய சிநேகிகபூர்வமான கருத்துக்களுக்கு மத்தியிலும், உச்சிமாநாட்டின் மூலமாக எத்தனை முடிவுகள் எட்டப்பட்டாலும், இந்த பிராந்தியத்தில் சீனாவை எதிர்ப்பதை முன்னிட்ட அமெரிக்க உந்துதலில் வேரூன்றியுள்ள அடிப்படை மோதல்களில் எதுவும் குறையப்போவதில்ல. அச்சுறுத்தும் வகையில், கசப்பான G7 உச்சி மாநாடு கனடாவில் இன்னும் தொடரும் அதே வேளையில், ஒரே “ஒரு சந்தர்ப்பத்தை” தான் கிம் கொண்டிருந்தார் என்றும், ஒரு நிமிடத்தில் கூட உச்சிமாநாட்டை அவர் முடிக்கக்கூடும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

கிம் உடனான எந்தவொரு ஒப்பந்தமும் அந்த “இந்த தருணத்திற்கான உந்துதலாக” மட்டும் இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியதுடன், “முதல் நிமிடத்திற்குள்ளாகவே நான் அறிந்துகொள்வேன் என நினைக்கிறேன். வெறும் எனது தொடுதல், எனது உணர்வு அதை புரியச் செய்யும். அதைத்தான் நான் செய்கிறேன். அது நடக்காது என்று நான் நினைத்தால், நான் எனது நேரத்தை வீணாக்கப் போவதில்லை என்பதுடன், அவரது நேரத்தையும் வீணாக்க விரும்பவில்லை” என்றும் சேர்த்துக் கூறினார்.

கிம்மிற்கு இறுதி எச்சரிக்கையாக மெல்லிய மறைமுக அச்சுறுத்தல் ஒன்றை ட்ரம்ப் வெறுமனே விடுக்க முடியும் என்பதோடு, கிம் அமெரிக்க கோரிக்கைகளுக்கு முற்றிலும் இணங்கவில்லையானால் அவர் வெளிநடப்பு செய்யக்கூடும். அது வட கொரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு அடித்தளம் அமைக்கும் என்பதுடன், வட கொரியாவுடன் எல்லைகளை கொண்டுள்ள சீனா, சாத்தியமானால் ரஷ்யா என இரண்டு நாடுகளுடனான ஒரு அணுஆயுத போரைத் தூண்டிவிடும். 25 மில்லியனுக்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு நாடான வட கொரியாவை அழிப்பதற்கு ட்ரம்ப் முன்னரே அச்சுறுத்தியுள்ளார்.

அனைத்திற்கும் மேலாக, பியோங்யாங், ஈராக் மற்றும் லிபியாவிற்கு ஏற்பட்ட முடிவைப் போல அதற்கும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு உத்திரவாதங்களை விரும்புகின்ற போதிலும், “ஊர்ஜிதமான மற்றும் திரும்ப பின்வாங்க முடியாத” வகையில் அணுஆயுதங்களை ஒழிக்க வட கொரியா முன்வர வேண்டுமென அமெரிக்கா கோருகிறது. அந்த இரண்டு நாடுகளுமே வாஷிங்டனுடன் ஒப்பந்தங்களை எட்டுவதற்கு முயன்றன என்றாலும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மூலமாக இறுதியில் அவை நாசமாக்கப்பட்டதோடு, அவற்றின் தலைவர்களும் கொல்லப்பட்டனர். வாஷிங்டனுக்கு நிலைமையை சாதகமாக்கிய வடக்கின் ஆக்கிரோஷமான பேச்சுக்கள் அனைத்திற்கும் காரணம், அதன் சொந்த உயிர்பிழைப்பை பாதுகாக்கும் முயற்சியில் அதன் ஆயுத திட்டங்கள் தான் பேரம்பேசுவதற்கான மூல ஆதாரமாக அதற்கு இருந்து வருகிறது, மேலும், 1950-1953 கொரியப் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவந்த ஒரு சமாதான உடன்படிக்கையும் அதற்கு உதவுகிறது.    

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பிராந்தியத்தை இராணுவமயமாக்குவதை நியாயப்படுத்த வாஷிங்டன், பியோங்யாங்கின் அணுவாயுத மற்றும் ஏவுகணை திட்டங்களை அரக்கத்தனமானதாக சித்தரித்துள்ளது. அமெரிக்கா, அதன் ஒப்பீட்டளவிலான பொருளாதார சரிவையும், சீனாவின் சொந்த பொருளாதார வலிமையின் வளர்ச்சியையும் எதிர்கொண்ட நிலையில், பெய்ஜிங்கை நோக்கி அதன் இராணுவ இலக்குகளை அது திருப்பியுள்ளது.   

வாஷிங்டன், எரிசக்தி மற்றும் பிற உதவிகளை வழங்குவதற்கான வாக்குறுதிகளுக்கு புத்துயிர்ப்பு வழங்க, பியோங்யாங்குடன் 1994 மற்றும் 2007 இல் எட்டப்பட்டிருந்த முந்தைய இரண்டு ஒப்பந்தங்களை தகர்த்துவிட்டது. சீனா மீது அழுத்தம் கொடுப்பதற்காக, அடுத்தடுத்த அமெரிக்க நிர்வாகங்கள், அணுவாயுத மற்றும் ஏவுகணை திட்டங்களை வட கொரியர்கள் அபிவிருத்தி செய்ய பெய்ஜிங் அனுமதித்ததற்காக அதனை குற்றம் சாட்டியுள்ளன.

ஒபாமா மற்றும் ட்ரம்ப் இருவரின் நிர்வாகங்களின் கீழ், பெரும் எண்ணிக்கையிலான இராணுவ பணியாளர்களையும், அணுசக்தி திறன் கொண்ட குண்டுவீசிகள், விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மற்றும் படுகொலைப் படைகள் ஆகியவை உள்ளிட்ட வன்பொருள்களையும் அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளமை, வட கொரிய அச்சுறுத்தல் எனக்கூறப்படுவதற்கு மிகவும் பொருத்தமற்ற விகிதத்தில் உள்ளது, மேலும் பதட்டங்களை தீவிரமாக அதிகரிக்கச் செய்வதோடு, போர் வெடிப்பதற்கான அபாயத்தையும் உருவாக்குகிறது.

ட்ரம்ப் கூறுவதை கிம் ஒத்துக்கொள்கிறார் என்றால், அது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலை கூர்மைப்படுத்துவதற்கு அடித்தளம் அமைக்கும். சீனாவை அடிபணிய செய்யவும், அத்துடன், புதிய சந்தைகள், தொழிலாளர் சக்தி மற்றும் மூலப்பொருட்கள் போன்றவற்றை அணுகுவதற்கு ஆசியாவை மறுபங்கீடு செய்யவும் அமெரிக்கா முயன்று வருகிறது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வட கொரியா ஒரு முக்கிய மூலோபாய இடமாக அமைந்துள்ளது என்பதுடன், 6 டிரில்லியன் டாலர் மதிப்பிலான நிலத்தடி கனிம இருப்பையும் அது கொண்டுள்ளது.

அதேபோல, வெளிநாட்டு முதலீட்டை நாடுவதை பொறுத்தமட்டில், அமெரிக்கா கோரிய ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகளுக்கு பெய்ஜிங் ஆதரவளித்தது குறித்து முன்னரே கோபத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், சீனாவின் நோக்கங்களைப் பற்றி பியோயாங் எச்சரிக்கையாக உள்ளது.

வாஷிங்டனை நோக்கி வட கொரியா நகரக்கூடுமோ என சீனத் தலைவர்கள் கவலையடைகின்றனர். கொரியப் போருக்கு பின்னர், பெய்ஜிங், தனக்கும், தென்கொரியாவிலும் ஜப்பானிலும் கிட்டத்தட்ட 80,000 துருப்பக்களை பராமரிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தாக்கத்தை குறைக்கும் ஒரு தாங்கியாக வட கொரியா இருப்பதாக பார்த்துள்ளது.

வாஷிங்டன் மற்றும் பியோங்யாங் இடையேயான ஒரு ஒப்பந்தம் இறுதியில் சீன எல்லையில் அமெரிக்க துருப்புக்களை கொண்டு நிறுத்தக்கூடும் என்பதுடன், அதன் முன்னாள் நட்பு நாட்டை நோக்கி வட கொரியாவின் துப்பாக்கிகள் குறிவைக்கவும் கூடும். மேலும், சீனாவின் ஒரே இணைப்பு ஒரே பாதை முன்முயற்சிக்கு சவாலாக, வட கொரியாவும் கூட புதிய ஆசிய-போக்குவரத்து வர்த்தக வழித்தடங்களுக்குள் கொண்டுவரப்படக் கூடும்.

கடந்த ஆண்டு பேர்லினில் ஒரு உரையில் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் இவ்வாறு தெரிவித்தார்: “துண்டிக்கப்பட்ட கொரிய-உள் இணைப்பு இரயில்வே பாதை மீண்டும் இணைக்கப்படும். (தென் கொரியாவில்) பூசான் மற்றும் மோக்போவிலிருந்து புறப்படும் ஒரு இரயில் பியோங்யாங் மற்றும் பெய்ஜிங் வழியாக இயக்கப்படும், மேலும் ரஷ்யா மற்றும் ஐரோப்பா நோக்கி தொடர்ந்து செலுத்தப்படும். மேலும், இரண்டு கொரியாக்களையும் ரஷ்யாவையும் இணைக்கும் எரிவாயு குழாய்வழி திட்டம் போன்ற வடகிழக்கு ஆசியாவில் உள்ள ஒத்துழைப்புத் திட்டங்களும் கூட அமுல்படுத்தப்படலாம்.”

அத்தகைய ஒரு ஏற்பாட்டிலிருந்து மொத்தமாக பெய்ஜிங்கை வெட்டிவிட வாஷிங்டன் நோக்கத்தை கொண்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அத்தகையதொரு ஒப்பந்தம், தற்போதைய அபராதக் கட்டணங்கள் உட்பட, சீனா மீது அமெரிக்கா கொண்டுவருகின்ற பொருளாதார அழுத்தத்திற்கு பங்களிப்பு செய்யும்.

அமெரிக்க-வட கொரிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட முடியுமானாலும் கூட, அது வட கொரிய மக்களுக்கு பயனளிக்காது. பியோங்யாங் ஒரு டசினுக்கும் அதிகமான சிறப்பு பொருளாதார மண்டலங்களை திறந்து வைத்துள்ளதோடு, அமெரிக்கா, தென் கொரியா மற்றும் பிற வெளி நாடுகளுக்கு தீவிர மலிவு உழைப்பின் ஆதாரமாக அதன் மக்கள்தொகையை வழங்கி வருகிறது.

குறுகிய காலத்தில், 2016 இல் பார்க் குன்-ஹை இன் முந்தைய நிர்வாகத்தின் கீழ் மூடப்பட்ட கைசோங் தொழில்துறை வளாகத்தின் மறு திறப்பு பற்றி சியோல் கற்பனை செய்கிறது. தென் கொரிய நிறுவனங்களால் அது சுரண்டப்பட்டது, மேலும், வட கொரிய தொழிலாளர்கள் மாதத்திற்கு வெறும் 180 டாலரை மட்டும் அங்கு சம்பாதித்தனர்.

வெளிநாட்டு முதலீட்டிற்கு வட கொரியா திறந்து வைக்கப்படும் அதே வேளையில், போட்டியின் பெயரால் தெற்கு தொழிலாளர்கள் அவர்களது ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான இன்னும் கூடுதலான தாக்குதல்களை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாலும் கூட, தெற்கிற்கு செல்ல வட கொரிய தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இதில் சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரு பொதுவான நலன்களைக் கொண்டுள்ளனர். கொரிய தீபகற்பம் மற்றும் ஆசிய-பசிபிக் முழுவதிலும் அதிகரித்துவரும் இராணுவ மற்றும் பொருளாதார பதட்டங்களுக்கான ஒரே தீர்வு என்பது, கொரியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவிலான தொழிலாள வர்க்க ஐக்கியத்தின் மூலமாக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதும், தேசிய அரசு மோதல் அமைப்பையும் முதலாளித்துவ சுரண்டலையும் முடிவுக்கு கொண்டு வருவதும் ஆகும்.