ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

France wins football World Cup

பிரான்ஸ் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வென்றது

By Anthony Torres
16 July 2018

ஞாயிறன்று, பிரெஞ்சு கால்பந்து குழு ரஷ்யாவில் நடத்தப்பட்ட இந்தாண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியை வென்றது. இது பிரான்சுக்கான இரண்டாவது உலகக் கோப்பை வெற்றியாகும்.

முன்னணி குழுக்கள் பல ஆச்சரியமாக முன்னரே வெளியேறியதால் இந்த உலக போட்டியில் ஜெயிக்கக்கூடும் என கருதப்பட்டதிலிருந்து வெகுதூரத்தில் இருந்த பிரான்ஸ் மற்றும் குரோஷியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான போட்டியுடன் முடிவுற்றது.

இந்த உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக, மூன்று பாரம்பரிய கால்பந்தாட்ட ஜாம்பவான்களான பிரேசில், அர்ஜென்டினா மற்றும் ஜேர்மனி ஆகியவற்றில் எதுவும் அரையிறுதி போட்டிகளுக்குள் கூட வரவில்லை. நடப்பு சாம்பியன் ஜேர்மனி குறித்து பரவலாக பயமிருந்தது. பிரேசிலுக்கும் பலமான எதிர்பார்ப்பு இருந்தது, லியோனெல் மெஸ்சியின் தாக்குதலைக் கணக்கில் கொண்டு, அர்ஜென்டினா, முன்னணி போட்டியாளராக கருதப்பட்டது.

2018 இன் அரையிறுதிக்கு வந்த குழுக்களில் (பிரான்ஸ், குரோஷியா, பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து) எதுவுமே 2014 இன் அரையிறுதிக்கு வந்தவை கிடையாது, அப்போது ஜேர்மனி, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நெதர்லாந்து தான் கோப்பையை வெல்வதற்காக போராடின. இவ்வாறு சம்பவங்களின் தலைகீழாக மாற்றம் 1966 க்குப் பின்னர் இப்போது தான் நடந்திருந்தது.

நான்காம் இடத்தில் வந்த இங்கிலாந்து, 2002 க்குப் பின்னர் காலிறுதி வரை கூட வந்திராத நிலையில், இந்த உலகக் கோப்பையில் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. மூன்றாம் இடம் பிடித்த பெல்ஜியம், பிரான்சிடம் 1-0 என்று சிறிய வித்தியாசத்தில் தோற்பதற்கு முன்னதாக ஒரு ஆர்ப்பரிப்பான ஆட்டத்தில் பிரேசிலை வெளியேற்றி இருந்தது.

இந்த உலகக் கோப்பை முன்பில்லாத வகையில் பனாமாவின் முதல் கோலைக் கண்டது நினைவுக்கூரப்படும். மிகவும் கடுமையான ஏற்ற-இறக்கங்களைச் சந்தித்த பிரான்ஸ்-அர்ஜென்டினா போட்டியும் (4-3), மற்றும் சமநிலையில் முடிந்து பெனால்ட்டியில் முடிவு செய்ய வேண்டியிருந்த ரஷ்யா-குரோஷியா காலிறுதி போட்டியும் இந்த தொடரில் உள்ளடங்கி இருந்தன.

இறுதி போட்டி விறுவிறுப்பாகவும், தீவிரமாகவும் இருந்தது, விளையாட்டை நகர்த்தி சென்ற லூகாஸ் மோட்ரிச் தலைமையில் பலமான எதிர்தாக்குதலைக் செய்யக்கூடிய குரோஷியக் குழு பக்கவாட்டில் இருந்து தாக்குவதைச் சார்ந்திருந்தது. தமது ரியல் மாட்ரிட் குழுவுடன் நான்கு சாம்பியன் போட்டிகளில் கிண்ணத்தை வென்ற மோட்ரிச், இந்த போட்டி தொடரின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த போட்டித் தொடரில் குரோஷிய குழு பிரெஞ்சு குழுவை விட 90 நிமிடங்கள் கூடுதலாக விளையாடி இருந்தது, ஏனென்றால் அதன் மூன்று போட்டிகள் வழமையான 90 நிமிடத்தை தாண்டி கூடுதல் நேரத்திற்கு சென்றிருந்ததுடன், பெனால்ட்டி முறையில் வெற்றி-தோல்வி முடிவெடுக்கப்பட்டன.

பிரான்ஸ் அதன் தற்காப்பு முறையைச் சார்ந்திருந்தது, அரையிறுதி போட்டியில் பெல்ஜியத்தின் ஒரு பலமான சவாலைச் சமாளித்த அது, பாரீஸ்-செயிண்ட் ஜேர்மன் குழுவிற்காக விளையாடும் சுறுசுறுப்பான கிலியான் மெபாப்பே முன்நிலையில் இருக்க எதிர்தாக்குதல்களைத் தொடுத்தது. ஆனால் குரோஷியா தான் அதிக நேரம் பந்தைத் தக்க வைத்திருந்தது என்றாலும், பிரான்ஸ் ஓர் ஆக்ரோஷமான மற்றும் திறமையான குரோஷிய தரப்பை முகங்கொடுத்ததற்கு மத்தியிலும் அதன் வரலாற்றில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.

உயர்-மட்ட கால்பந்து போட்டிகளின் விடயத்தில் பெரும்பாலும் நடப்பதைப் போலவே, ஆரம்ப கோல்கள் (பிரான்ஸ் இரண்டு, குரோஷியா ஒன்று) ஃப்ரீ கிக் அல்லது பெனால்ட்டி மூலமாக வந்தன. அந்துவான் கிரீஸ்மான் பந்தை ஒதுக்கிக் கொடுக்க போல் போக்பா அடித்த பிரான்சின் மூன்றாவது கோல், குரோஷிய குழுவின் உத்வேகத்தை உடைத்தது, அதன் பின்னர் அது மெபாப்பே அடித்த நான்காவது கோலில் மிகவும் பாதிப்படைந்தது. 69 வது நிமிடத்தில் பிரெஞ்சு கோல்கீப்பர் ஒரு தவறினால், குரோஷியர்கள் கோல்களின் வித்தியாசத்தை 4-2 என்று குறைத்தனர்.

இந்த உலகக் கோப்பை ரஷ்யாவிற்கும் அதன் மக்களுக்கும் எதிரான சர்வதேச ஊடகங்களில் பிரச்சாரத்திற்கு ஓர் அடியாக இருந்தது. ரஷ்யாவை பூதாகரமாக சித்தரிப்பதற்கான சளைக்காத முயற்சி, சிரியா மற்றும் உக்ரேனில் ரஷ்ய-ஆதரவு அரசாங்கங்களை இலக்கில் வைத்த நேட்டோ தலையீடுகளுடன் பிணைந்துள்ளது. சிரியாவிற்கு எதிரான விடயம் இன்றுவரையில் வெற்றி பெறவில்லை, உக்ரேனில் பாசிச தலைமையில் 2014 ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடத்தி முடிக்கப்பட்டது.

உக்ரேனில் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியும், ரஷ்ய-மொழி பேசும் அந்நாட்டின் கிழக்கு பகுதியில் கலகத்தையும் உறுதிப்படுத்தியமை, ரஷ்ய எல்லைகளில் நேட்டோவின் பெரியளவிலான இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு சாக்குபோக்காக சேவையாற்றியது. இந்த இராணுவ நடவடிக்கைகள், ரஷ்யாவை ஓர் ஆக்ரோஷமான, வன்முறையான மற்றும் வெளிநாட்டவர் விரோத சக்தியாக முத்திரை குத்தும் ஓயாத பிரச்சாரத்துடன் கை கோர்த்து செல்கிறது.

மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து தொலைதூரத்தில் இருக்கும் சரன்ஸ்க் மற்றும் கிரஸ்னொடார் போன்ற மத்திய அளவு நகரங்கள் வரையில், ஒரு டஜனுக்கும் அதிகமான ரஷ்ய நகரங்களில் இந்த உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் உள்ளூர்வாசிகளுக்கும் வெளிநாட்டு ரசிகர்களுக்கும் இடையே எந்தவொரு மோதல் சம்பவமும் இருக்கவில்லை, பொதுவான நட்புறவுடன் நல்ல உற்சாகமான ஒரு சூழலில் இந்த போட்டி நடந்திருந்தது.

நூறாயிரக் கணக்கான தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இரசிகர்கள் குடும்பங்களோடு அல்லது தம்பதிகளாக தங்களின் தேசிய குழுக்கள் விளையாடுவதைப் பார்க்க சென்றிருந்தனர், அதில் பலரும் அந்த போட்டித் தொடரில் மற்ற குழுக்களின் விளையாட்டையும் தொடர்ந்து பார்க்க தங்கியிருந்தனர்.

"அதுவொரு மிகப்பெரிய கொண்டாட்டம்," என்று மெக்சிகோவின் சின்ஹூவாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஒரு வாரத்திற்கு வந்திருந்த Aracely தெரிவித்தார். தனது கணவர் ஜூவான், தங்களின் மகன், தனது சகோதரி மற்றும் சகோதரியின் கணவருடன், அப்பெண்மணி மாஸ்கோவில் இறங்குவதற்கு முன்னதாக, தென் கொரியாவுடன் மெக்சிகன் குழு விளையாடுவதைப் பார்க்க மெக்சிகோவிலிருந்து ரோஸ்டொவ் க்குப் பயணித்திருந்தார். “நாங்கள் பிரான்ஸ்-டென்மார்க் போட்டியைக் காண சென்றோம், ஏனென்றால் எங்களின் இளைய மகன் போக்பாவின் (Pogba) இரசிகன். அவன் ஒரு பிரெஞ்சு அணியின் சட்டையே வைத்திருந்தான்,” என்று Aracely தெரிவித்தார்.

இலண்டனின் ஆர்சனெல் கால்பந்தாட்ட மன்றத்தைச் சேர்ந்த பிரபல வலைப்பதிவாளர் Robbie Lyle கூறினார்: “நான் ரஷ்ய மக்களுக்கு நன்றி கூற விரும்புவேன், அவர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் மிகவும் உபசரிக்கக்கூடியவர்கள். நாங்கள் இங்கே வருவதற்கு முன்னதாக நிறைய விடயங்களைக் கேள்விப்பட்டோம். அவர்கள் சண்டையிடுவார்கள், அவர் அதிதீவிரத்தன்மையோடு இருக்கலாம், போலிஸ் உங்களை அடிக்கலாம், இதெல்லாம் வெறும் பிதற்றல்கள். ரஷ்யர்கள் மிகவும் உபசரிக்க கூடியவர்கள். இங்கே நான் நிறைய மிகவும் நல்ல மனிதர்களைக் கண்டேன். அந்த தொடர் போட்டியே கூட, மிகவும் சிறப்பாக இருந்தன. உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறைய பேர் இருந்தார்கள் என்பதே உண்மை. காலநிலையோ மிகவும் அருமை. இது இதுவரையிலான மிகச் சிறந்த உலகக் கோப்பைகளில் ஒன்றாக இருந்தது.”

2018 உலகக் கோப்பையை ரஷ்யா நடத்தலாம் என்று 2010 இல் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (FIFA) எடுத்த முடிவு நேட்டோ அதிகாரங்களிடையே சீற்றத்தைத் தூண்டியிருந்தது. அது 2018 உலகக் கோப்பையை மதிப்பிழக்க செய்வதற்கான பரந்த பிரச்சார தாக்குதலை இயக்கத்திற்குக் கொண்டு வந்திருந்ததுடன், வாஷிங்டன் மற்றும் பேர்லினின் உத்தரவுகளின்படி ரஷ்யா மீதான நேட்டோவின் இராணுவ சுற்றி வளைப்புக்கு அது உறுதுணையாக சேவையாற்றியது.

2015 இல் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை (FBI) ஊழல், கையூட்டு மற்றும் தேர்தல் மோசடி மீதான குற்றச்சாட்டுக்களை, 2018 மற்றும் 2022 போட்டிகளை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் முறையே ரஷ்யா மற்றும் கட்டாருக்கு ஒப்படைத்ததைத் தொடர்புபடுத்தி விசாரிக்க தொடங்கியது. இது FIFA இன் ஒன்பது உயர்மட்ட அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கும், மிரட்டி பணம் பறிப்பதில் இருந்து மின்னணு மோசடி மற்றும் பண மோசடி வரையில், ஐந்து தலைமை செயலதிகாரிகள் மீது அமெரிக்க நீதித்துறை-அடிப்படையிலான குற்றச்சாட்டுக்களை 47 குற்றகர நடவடிக்கைகளுடன் பிணைப்பதற்கும் இட்டுச் சென்றது.

உலகக் கோப்பை நடத்துவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர், சுவீடன் உட்பட பல நாடுகள் அந்நிகழ்வைப் புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்தன.

ஸ்கிரிபால் விவகாரத்தைத் தொடர்புபடுத்தி கடந்த மார்ச் ஆரம்பத்திலிருந்து ரஷ்ய-விரோத விஷமப் பிரச்சாரம் புதிய மட்டத்தை எட்டின. ஒரு முன்னாள் ரஷ்ய உளவாளியான செர்ஜி ஸ்கிரிபாலும் மற்றும் அவர் மகளும் மர்மமான சூழலில் இங்கிலாந்தில் விஷத் தாக்குதலுக்கு உள்ளானார்கள். எந்தவொரு ஆழமான அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஆதாரமும் வழங்காமல், பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே அந்த நஞ்சூட்டலுக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மீது பழிசுமத்தினார். அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்ய தூதர்களை வெளியேற்றின.

ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டதில் இருந்து எழுந்த ஓர் ஆட்சியின் தலைவர் புட்டினின் தனிமனிதயியல்பின் மீது எந்தவித பரந்த மக்கள் அனுதாபமும் எழாது. உண்மையில் கிரெம்ளின், ரஷ்ய தொழிலாள வர்க்கத்தைத் தாக்குகின்ற காலமறிந்த ஓய்வூதிய வெட்டுக்களைத் திணிப்பதற்கு, இந்த உலகக் கோப்பை மீதான ஊடக கவனத்தை பயன்படுத்த முயன்றது. ஆனால் உலகெங்கிலுமான பெருந்திரளான மக்களைப் பொறுத்த வரையில், நேட்டோவின் ரஷ்ய-விரோத விஷமப் பிரச்சாரத்தில் எந்தவொரு நிஜமான நம்பகத்தன்மையும் இல்லை.

கோப்பைக்கான நான்காம் இடத்தைப் பிடித்த பிரிட்டிஷ் குழு, “ஒவ்வொருவராலும் மிக சிறப்பாக கவனிக்கப்பட்டார்கள்,” என்று பயிற்சியாளர் Gareth Southgate குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நான் கடந்த கோடையில் கூட்டமைப்பு கோப்பைக்கான (Confederations Cup) போட்டிக்காக இங்கே இருந்தேன். அப்போதும் துல்லியமாக இது போல தான் இருந்தது, இத்தொடர் போட்டிகளைச் சுற்றி நிறைய கதைகள் இருந்தன, நான் அறிந்த வரையில் இங்கே நடப்பதை வைத்து பார்த்தால், அவையெல்லாம் உண்மை அல்ல,” என்றார்.

“எங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் பிரச்சினைகள் குறித்து நிறைய பேசுகிறார்கள், ஆனால் ஒருவரின் தனிப்பட்ட கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், இதை விட சிறப்பாக நாங்கள் வரவேற்கப்பட்டிருக்க முடியாது. எங்களுக்கு நல்லதொரு அனுபவம் கிடைத்தது, நமது ரசிகர்களுக்கும் அவ்வாறே இருந்திருக்குமென நான் நினைக்கிறேன்,” என்றார்.