ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Social Democrats back conservative parties’ plan for concentration camps in Germany

சமூக ஜனநாயகக் கட்சியினர் ஜேர்மனியில் சித்திரவதை முகாம்களுக்கான பழமைவாத கட்சிகளின் திட்டத்தை ஆதரிக்கின்றனர்

By Johannes Stern
4 July 2018

செவ்வாயன்று, முன்னணி சமூக ஜனநாயகக் கட்சி (SPD) அரசியல்வாதிகள் ஜேர்மனியின் மாபெரும் கூட்டணியின் பழமைவாத கட்சிகளுக்கு இடையே எட்டப்பட்ட பிற்போக்குத்தனமான உடன்பாட்டை வரவேற்றனர், அது ஜேர்மனிய மண்ணில் அகதிகளுக்கான சித்திரவதை முகாம்கள் எழுப்புவதை முன்வைக்கிறது. கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) ஆகியவற்றுடன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) இந்த கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பாகமாகவுள்ளது.

SPD கட்சி தலைவர் அந்திரேயா நாலெஸ் செவ்வாய்கிழமை காலை கூறியதாவது: “இதை நாங்கள் நல்லதென காண்பதற்கான காரணம் என்னவென்றால், நாங்கள் மீண்டுமொருமுறை விவகாரங்களுக்குள் களமிறங்கும் கட்டத்தில் உள்ளோம். இது சமீப வாரங்களில் முற்றிலும் இல்லாமல் இருந்தது.”

சமூக ஜனநாயகக் கட்சியின் துணை சான்சிலரும் நிதி அமைச்சருமான ஓலஃப் ஸ்கோல்ஜ் (Olaf Scholz), “இப்போது நாம் உளவியலைக் கடந்து உண்மைகளை நோக்கி நகர்ந்துள்ளோம்,” என்று கூறி, கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் மற்றும் கிறிஸ்துவ சமூக ஒன்றியத்திற்கு இடையிலான உடன்படிக்கையைப் பாராட்டினார்.

மாபெரும் கூட்டணி, அரசாங்கத்தின் மூன்று கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டணி குழு ஓர் இறுதி உடன்பாட்டை எட்டாமல் அதன் செவ்வாய்கிழமை மாலை கூட்டத்தை வியாழக்கிழமை வரையில் தள்ளி வைத்த போதும், ஸ்கோல்ஜ் மற்றும் நாலெஸ் இருவருமே அந்த விவாதம் குறித்து நம்பிக்கையோடு பேசினர். நாலெஸைப் பொறுத்த வரையில், கூட்டணி சரியான பாதையில் செல்கிறது, மற்றும் எல்லா விடயங்களிலும் அது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாம். “ஆனால் நாம் போதுமானளவுக்கு முழுமையாக ஐக்கியப்பட்டு இல்லை,” என்று நாலெஸ் தெரிவித்தார். “ஒவ்வொன்றையும் சரி செய்ய நமக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது,” என்பதை ஸ்கோல்ஜ் சேர்த்துக் கொண்டார்.

இவ்விதமாக SPD தலைமை, ஜேர்மனியில் அகதிகளுக்கு சித்திரவதை முகாம்களை உருவாக்க முன்மொழிகின்ற CSU உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவரின் அகதிகள் கொள்கைக்கு அதன் மறைமுக ஆதரவை வழங்கியது. மற்ற ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே பதிவு செய்துள்ள அகதிகளை ஜேர்மன் எல்லையில் கைது செய்து அடைப்பதில் திங்களன்று மாலை CDU மற்றும் CSU உம் உடன்பட்டன.

உறுதியாக, எல்லைப்பகுதி "இடப்பெயர்வு குடியேற்ற மண்டலங்களை" (transit zones), அதாவது ஜேர்மனிக்கு வெளியில் இருப்பதாக கருதப்படும் பகுதிகளில் பத்தாயிரக் கணக்கான அகதிகளைத் தங்க வைக்க சிறைகள் மற்றும் முகாம்களை ஸ்தாபிப்பதே திட்டமாகும். அவர்கள் அவ்விதத்தில் குவாண்டனாமோ வளைகுடாவுக்கு இணையான, சட்டதிட்டங்கள் இல்லாத ஒரு பகுதியில் அடைக்கப்படுவார்கள்.

2015 இலையுதிர் காலத்தில், சமூக ஜனநாயகக் கட்சி அப்போது அமெரிக்க சிறைகளை முன்னுதாரணமாக காட்டி, அதுபோன்ற முகாம்கள் உருவாக்குவதை எதிர்த்து வந்தது. பழமைவாத கட்சிகளின் முன்மொழிவுகள் "சட்ட ஆட்சி அடிப்படையிலான ஓர் அரசுடன் சம்பந்தப்பட்டிருப்பதை விட குவாண்டனாமோ உடன் அதிகம் சம்பந்தப்பட்டுள்ளன,” என்று பேர்லின் SPD தலைவர் Jan Stöß அப்போது தெரிவித்தார்.

முன்னாள் நீதித்துறை அமைச்சரும் தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹெய்கோ மாஸ் இதே தொனியில் பேசினார். அவர் Süddeutsche Zeitung இல், “பத்தாயிரக் கணக்கான அகதிகளை எல்லையில் காவலில் அடைத்து வைப்பதற்கான ஒரு முயற்சி" குறித்து பேசினார். விமான நிலையங்களில் இருந்து நாட்டின் எல்லை வரையில் இடப்பெயர்வு குடியேற்ற மண்டலங்களுக்கான யோசனைக்கு மாற விரும்புகின்ற எவரொருவரும், “ஆள் நடமாட்டம் இல்லாத நிலத்தில் பாரிய பெருந்திரளான மக்களுக்கு தடுப்புக்காவல் முகாம்களை" உருவாக்குபவர் ஆவார் என்றார்.

ஆனால் இன்றோ சமூக ஜனநாயகக் கட்சி —ஜேர்மன் வரலாற்றிலேயே இருண்ட அத்தியாயங்களை நினைவுபடுத்தும்— அதே நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறது.

முன்னாள் SPD தலைவர் சிக்மார் காப்ரியேல் குறிப்பிடுகையில், பழமைவாத கட்சிகள் முன்மொழிந்த முகாம்களை, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் அவை முன்மொழிந்தபோது மதிப்பிட்டதை விட இப்போது வித்தியாசமாக மதிப்பிட வேண்டியுள்ளது என்றார். “2015 இடப்பெயர்வு குடியேற்ற மண்டலங்களை வைத்து பார்த்தால், நாம் நாளொன்றுக்கு சுமார் 3,000, 4,000, 5,000 அகதிகளைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்,” என்று பேர்லினில் SPD நாடாளுமன்ற குழுவின் ஓர் அவசர கூட்டத்திற்கு முன்னதாக காப்ரியேல் தெரிவித்தார். “நாம் அந்நேரத்தில், மக்களை அடைத்து வைக்க விளையாட்டு மைதானங்களை நிரப்ப விரும்பவில்லை என்பதை தெரிவித்தோம். இன்று, நாம் முற்றிலும் வேறு கோணத்தில் பேசிக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.

காப்ரியேலின் வாதம் எரிச்சலூட்டுவதுடன், முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. யதார்த்தத்தில், பத்தாயிரக் கணக்கான அகதிகள் அந்த முன்மொழிவின் கீழ் அடைக்கப்படுவார்கள். செய்திகளின்படி, இந்தாண்டின் ஜூன் வரையில், ஐரோப்பிய கைரேகை சேமிப்பு தரவுக்களஞ்சியமான யூரோடேக் (Eurodac) இல் முன்னதாக பதிவு செய்திருந்த 18,349 தஞ்சம் கோருவோரை ஜேர்மனி ஏற்றுக் கொண்டது. தற்போதைய புள்ளிவிபரங்களின்படி, நாளாந்தம் சராசரியாக 110 பேர் சிறை பிடிக்கப்பட்டு, இடப்பெயர்வு குடியேற்ற மண்டலங்கள் என்றழைக்கப்படுவதில் தங்க வைக்கப்படலாம்.

ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியினர், இடது கட்சி மற்றும் பசுமை கட்சியில் உள்ள அவர்களின் பக்கவாத்தியங்களுடன் சேர்ந்து, இந்த பழமைவாத கட்சிகளின் பிற்போக்குத்தனமான திட்டங்களை ஆதரித்துள்ளதுடன், ஆளும் உயரடுக்கின் அனைத்து கன்னைகளையும் அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் புலம்பெயர்வோர் கொள்கைகளுக்குப் பின்னால் கொண்டு வருகின்றனர்.

கடந்த வார புரூசெல்ஸ் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில், ஜேர்மனியின் மாபெரும் கூட்டணியும் ஏனைய அரசாங்கங்களும், சமூக ஜனநாயகத்தின் பங்கெடுப்புடன் சேர்ந்து, வட ஆபிரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய இடங்களிலும் இதேபோன்ற முகாம்களை ஸ்தாபிக்க உடன்பட்டன. அந்த மாநாட்டு அறிக்கையில், இந்த முகாம்கள் "தடுப்புத் தளங்கள்" என்றும், “மறுகுடியேற்றம் மற்றும் புதிய குடியேற்றத்திற்கான" “கட்டுப்பாட்டு மையங்கள்" என்றும் நாசூக்காக குறிப்பிடப்பட்டிருந்தன.

மாநாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்த, கிரீஸின் போலி இடது சிரிசா அரசாங்கமும் பல மாதங்களாக அகதிகளுக்கான "எல்லைப்புற அகதிகள் முகாம்கள்" (hotspots) என்றழைக்கப்படுவதை செயல்படுத்தி வருகிறது. லெஸ்போஸ் தீவில் 2015 இல் சிரிசா அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்ட மொரியா "எல்லைப்புற அகதிகள் முகாம்கள்" (Moria hotspot) குறித்து Frankfurter Allgemeine Sonntagszeitung பத்திரிகை வெளியிட்ட ஒரு கட்டுரை, அதை பெரிதும் பலப்படுத்தப்பட்ட "நரக" கோட்டை என்று வர்ணித்தது. வெளியிலிருந்து பார்க்கையில், 4 அல்லது 5 மீட்டர் உயரத்திற்கு பின்னிப்பிணைந்த கம்பி வடங்களோடு", அந்த மொரியா முகாம் ஒரு சித்திரவதை முகாம் போன்று தெரிவதாக அப்பத்திரிகை குறிப்பிட்டது.

அக்கட்டுரை தொடர்ந்து குறிப்பிட்டது: “சுருள்சுருளான கம்பி வடங்கள் வேலியைச் சுற்றி நீண்டுள்ளன, முகாமின் அனைத்து நுழைவாயில்களும் மார்பை ஒட்டி துப்பாக்கி ஏந்திய காவலர்களைக் கொண்ட கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளன. உள்நுழைய விரும்புகிறவர் யாராயினும் அவர் அடையாள அட்டை காண்பிக்க வேண்டும். குறிப்பாக, ஊடகங்கள் இந்த கதவுகளைக் கடந்து அவ்வளவு சுலபாக உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.”

மாபெரும் கூட்டணியினது திட்டங்களின்படி, இதேபோன்ற முகாம்கள் ஐரோப்பா எங்கிலும் அமைக்கப்பட உள்ளன. சீகோவரின் "தலையாய புலம்பெயர்வு திட்டம்" என்றழைக்கப்படுவதில், இது CDU மற்றும் CSU க்கு இடையிலான உடன்படிக்கையை தொடர்ந்து நடைமுறையளவில் உத்தியோகபூர்வ அரசாங்க கொள்கையாக மாறியுள்ள நிலையில், அதன் 22 ஆம் புள்ளி பின்வருமாறு குறிப்பிடுகிறது:

“புற எல்லைகளில் கட்டமைப்புகளைப் பலப்படுத்துதல்: உறுப்பு நாடுகளில் இருந்து போதுமான சிப்பாய்களுடன் கிரீஸ் மற்றும் இத்தாலியில் உள்ள எல்லைப்புற அகதிகள் முகாம்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல். இந்த எல்லைப்புற அகதிகள் முகாம்கள் எனும் கருத்துருவை இத்தாலியில் விரிவாக்குதல்.”

23 ஆம் புள்ளி குறிப்பிடுகிறது: “ஐரோப்பிய வரவேற்பு மையங்களுக்கான தரமுறைப்படுத்தப்பட்ட முன்மாதிரியை உருவாக்குதல்: தரமுறைப்படுத்தப்பட்ட எல்லைப்புற அகதிகள் முகாம்களின் முன்மாதிரியை அபிவிருத்தி செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவுக்கு ஜேர்மன் முன்மொழிவை வரைந்தளித்தல். அவ்விதத்தில் தேவைப்படும் போது மற்ற பிரதேசங்களுக்கும் மாற்றிக் கொள்வதை உறுதிப்படுத்தி வைத்தல்.”

ஐரோப்பாவில் இதுபோன்ற முகாம்களின் வலையமைப்பை உருவாக்குவது ஓர் எச்சரிக்கையாகும். பாசிச ஆட்சிகளின் கீழ் நடந்ததைப் போலவே, அவை அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் இறுதியில் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்.

கம்யூனிஸ்டுகளையும், தொழிற்சங்கவாதிகள் மற்றும் ஹிட்லரின் ஏனைய எதிர்ப்பாளர்களையும் சட்டத்திட்டங்களுக்கு உட்படாத பகுதிகளில் அடைத்து வைக்க, 1930 களில் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வந்த பின்னர் உடனடியாக, முதன்முதலில் சித்திரவதை முகாம்கள் ஸ்தாபிக்கப்பட்டன.

சீகோவரின் "தலையாய திட்டம்" இந்த பாசிசவாத பாரம்பரியத்தில் நிற்கிறது. 1930 களைப் போலவே, சமூக எதிர்ப்புரட்சி கொள்கைகள் மற்றும் போருக்கான தயாரிப்புகளைச் சர்வாதிகார முறைகளைப் பயன்படுத்தி மட்டுமே செய்ய முடியும்.

சீகோவர் திட்டத்தின் வரிகள், நாஜிக்களின் பயங்கர ஆட்சிக்கான அதிகாரத்துவ வரையறைகளைப் போல பேசுகின்றன. சான்றாக 36 வது புள்ளி, “குறிப்பாக தொற்று நோய்கள் விடயத்தில், ஏற்கனவே மருத்துவப் பரிசோதனைக்காக தற்போதிருக்கும் சட்ட கடமைப்பாடுகளை விரிவாக பயன்படுத்தவும், அத்துடன் வரவேற்பு மையங்களில் அல்லது ஜன சமூக இடங்களில் வாழ்வதற்கு தகுதி பெறாதவர்களைக் குறித்து மற்ற கட்டாய விசாரணைகளையும்" கோருகிறது.

“வெளிநாட்டினர் குறித்த மத்திய பதிவேட்டை வெளிநாட்டினர் குறித்த ஒரு சுதந்திரமான தரவுக்களஞ்சியமாக விரிவாக்குவதற்கு" புள்ளி 37 அழைப்புவிடுக்கிறது. இதற்கு கூடுதலாக, “கைரேகை எடுப்பதற்கான குறைந்தபட்ச வயதை, குழந்தைகளின் ஆறாவது ஆண்டு நிறைவாக [குறைக்க] வேண்டும்,” என்றும், “அடையாளங்களைப் பரிசோதிக்கவும் மற்றும் மீளாய்வு செய்யவும் ஒரு மத்திய ஐரோப்பிய தரவு அமைப்புமுறை ஏற்படுத்துவதை" தொடங்க வேண்டுமென்றும் குறிப்பிடப்படுகிறது.

“போலிஸ் வேலைகளில் சர்வதேச கூட்டுறவை விரிவாக்கி பலப்படுத்தவும்,” அத்துடன் "இடப்பெயர்வுக்கான நாடுகளிலும் மற்றும் எங்கிருந்து வருகிறார்களோ அந்த நாடுகளிலும் கூட்டாட்சி போலிஸ் படைகளின் அதிகாரிகளை இணைக்கும் வலையமைப்புகளை விரிவாக்குவதற்கும்" கோரி, 10 ஆம் புள்ளி ஒரு நடைமுறை போலிஸ் அரசை ஸ்தாபிக்க அழைப்பு விடுக்கிறது. இதற்கும் கூடுதலாக, “பாதிக்கப்பட்ட நாடுகளின் பாதுகாப்பு நிலைமைகளை ஸ்திரப்படுத்த, அகதிகள் உருவாகும் நாடுகளிலும் மற்றும் இடப்பெயர்வுக்கான நாடுகளிலும் படைத்துறைசாரா ஐக்கிய நாடுகள் சபையின் போலிஸ் திட்டங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய போலிஸ் திட்டங்களைக் கூடுதலாக அபிவிருத்தி" செய்ய வேண்டியிருப்பதாக குறிப்பிடுகிறது. இது "சர்வதேச போலிஸ் வேலை திட்டங்களில் ஜேர்மன் பங்களிப்பை விரிவாக்குவதற்கு சிப்பாய்களின் அணியை உருவாக்கி, அவ்விதத்தில் வெளிநாட்டு தலையீட்டு நிலைநிறுத்தல்களை எளிமையாக்கும்” என்கிறது.

ஐரோப்பிய கோட்டையை முற்றிலுமாக மூடி முத்திரையிடுவதும் மற்றும் மத்திய கிழக்கின் போர் பகுதிகளுக்கு பெருந்திரளான மக்களை நாடு கடத்துவதுமே "அரசியல் இலக்கு" என்று அது அறிவிக்கிறது. “வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என்று ஊர்ஜிதப்படுத்தப்படுபவர்கள், விரைவிலேயே நம் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்,” என்று "திருப்பி அனுப்புதல்" என்று தலைப்பிட்ட ஒரு பிரிவு குறிப்பிடுகிறது.

அது தொடர்ந்து குறிப்பிடுகிறது, “தஞ்சம் கோரும் ஒரு விண்ணப்பத்தை எதிர்மறையாக தீர்மானிக்கும், அந்த சமயத்திலேயே, நாடுகடத்தும் நடைமுறையின் தொடக்கமும் இருக்க வேண்டும். தானாக முன்வந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கையும் மற்றும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்பட வேண்டும்.”

மாபெரும் கூட்டணியின் "தலையாய திட்டமானது", பரந்த சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புக்கு எதிராக ஜேர்மனியின் புதிய இராணுவவாத வல்லரசு கொள்கையைத் திணிப்பதற்காக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கண்காணிப்பு மற்றும் போலிஸ் அரசு நடவடிக்கைகளைப் பயன்படுத்த திட்டமிடுகிறது என்பதில் எந்த சந்தேகமும் விட்டுவைக்கவில்லை. “உள்நாட்டில் நல்லிணக்கம் கொண்டிருந்தால் மட்டுமே, நமது நாடு வெளிநாடுகளில் அதன் கடமைப்பாடுகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற கருத்துருவின் அடிப்படையில் இந்த தலையாய திட்டம் அமைந்துள்ளது,” என்று அந்த முகப்புரை குறிப்பிடுகிறது.