ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump threatens Iran with a catastrophic war

ட்ரம்ப் ஒரு பேரழிவுகரமான போர் கொண்டு ஈரானை அச்சுறுத்துகிறார்

Keith Jones
24 July 2018

ஞாயிறன்று நள்ளிரவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரத்தம் கொதிப்பேற்றும் விதத்தில் ஈரானுக்கு எதிராக ஒரு முழு போருக்கான எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாக, 25 மில்லியன் மக்கள் வாழும் ஒரு நாடான வட கொரியாவை நிர்மூலமாக்க அச்சுறுத்துவதற்கு அவர் பயன்படுத்திய அதேமாதிரியான மொழியைப் பயன்படுத்தி, அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி ட்வீட் செய்கையில், ஈரான் "இனி எப்போதேனும்" வாஷிங்டனை "மீண்டும்" “அச்சுறுத்த" துணிந்தால், வரலாறு நெடுகிலும் இதுவரையில் நடந்துள்ள ஒருசில பாதிப்புகளைப் போன்றதை அனுபவிக்கும்,” என்று குறிப்பிட்டார்.

அனைத்தும் தடித்த எழுத்துக்களில் விடுத்துள்ள ட்ரம்பின் ட்வீட் செய்தி வெற்று உளறல்கள் இல்லை. அவர் நிர்வாகம், ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான ஓர் ஆத்திரமூட்டும் மற்றும் ஈவிரக்கமற்ற முனைவைப் பின்தொடர்ந்து வருகிறது, இது ஒரு பேரழிவுகரமான போரைத் தூண்ட அச்சுறுத்துவதுடன், இத்தகைய ஒரு போர் ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் தீக்கிரையாக்கி, அமெரிக்கா மற்றும் பிற வல்லரசுகளுக்கு இடையே நேருக்கு நேர் ஒரு மோதலைத் தூண்டிவிடக்கூடிய சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது.

2015 ஈரானுடனான அணுஆயுத உடன்படிக்கையை கடந்த மே மாதம் முறித்துக் கொண்ட வாஷிங்டன், ஈரானுக்கு எதிராக முழு அளவிலான மோதல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியது — இது போருக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு சட்டவிரோத நடவடிக்கையாகும். அடுத்த மாத தடையாணைகள் ஈரானின் வாகனத்துறை மீதும், தங்கம் மற்றும் பிற உலோகங்களின் வர்த்தகம் மீதும் "திரும்ப பாயும்.” நவம்பரில் ஈரானின் எரிசக்தி, கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டு துறைகளையும் மற்றும் அதன் மத்திய வங்கி பரிவர்த்தனைகளையும் இலக்கு வைக்கும் தடையாணைகள் நடைமுறைக்கு வருகின்றன.

ஈரான் அரசின் வரவு-செலவு திட்டக்கணக்கிற்குப் பெரும்பான்மை நிதி வழங்கும் எண்ணெய் ஏற்றுமதிகளை, அண்மித்து பூஜ்ஜியத்திற்குக் குறைக்க வாஷிங்டன் சூளுரைத்துள்ளது. வெளிப்பார்வைக்கு அதன் ஐரோப்பிய மற்றும் ஆசிய கூட்டாளிகளுக்கும் கூட இதுவரையில் தடையிலிருந்து அது விலக்கீட்டுரிமை வழங்க மறுத்துள்ளதுடன், அதற்கு பதிலாக ஈரான் மீதான ஒருதலைபட்சமான அமெரிக்க தடைகளுக்கு அவை இணங்காவிட்டால், அமெரிக்க சந்தை மற்றும் நிதி அமைப்புகளிலிருந்து அவற்றை வெளியேற்ற வெளிப்படையாகவே அச்சுறுத்தியது.

பென்டகன் ஏற்கனவே ஈரானிய படைகளுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளது. ISIS ஐ எதிர்த்து போராடுகிறோம் என்னும் பெயரில் சிரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புகள், மீண்டும் மீண்டும் பஷர் அல்-அசாத் ஆட்சியை ஆதரிக்கும் ஈரானிய இஸ்லாமிக் பாதுகாப்பு படைகளை இலக்கில் வைத்துள்ளதுடன், யேமனில் ஈரானிய ஆதரவிலான ஹோதியருக்கு எதிரான சவூதி முடியாட்சியின் காட்டுமிராண்டித்தனமான போருக்கு வாஷிங்டன் அத்தியாவசியமான தளவாட மற்றும் தந்திரோபாய ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

நேற்று ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு நீண்டகாலமாக முன்மொழிந்து வருபவருமான ஜோன் போல்டன், “ஈரான் ஏதேனும் எதிர்மறையாக செய்தால், ஒருசில நாடுகளைப் போல முன்னொருபோதும் இல்லாத விலை கொடுக்க வேண்டியிருக்கும்,” என்று ஜனாதிபதி அவரிடம் கூறியதாக கூறி, ட்ரம்பின் அச்சுறுத்தலைக் கெக்களிப்புடன் பலமாக வலியுறுத்தினார்.

அமெரிக்கா விடாப்பிடியாக ஈரானின் பொருளாதாரத்தைச் சிதைக்கவும், தெஹ்ரானில் அமெரிக்க-சார்பு அரசாங்கத்தைத் திணிக்கவும் முனைந்தால், அது "அனைத்து போர்களுக்குமான தாய் போரை" கட்டவிழ்த்து விடும் அபாயத்தை ஏற்கிறது என்று ஈரானிய ஜனாதிபதி ஹசன் ருஹானியிடம் இருந்து வந்த ஓர் எச்சரிக்கைக்கு விடையிறுப்பாகவே, தாம் அச்சுறுத்தலான அந்த ஞாயிற்றுக்கிழமை ட்வீட் செய்தியை வெளியிட்டதாக ட்ரம்ப் சித்தரித்தார்.

ஐரோப்பிய சக்திகள் அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணியாது என்றும், ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையின் கீழ் அவர்களின் கடமைப்பாடுகளைக் கைவிடாது என்றும் ஒரு பொறுப்புறுதியை ருஹானி வென்றெடுப்பதில் தோல்வியடைந்து பதட்டமாகி, அவர் இம்மாத தொடக்கத்தில் கூறுகையில், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளுக்கான உரிமை மறுக்கப்பட்டால் அது ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிவிடக்கூடும் என்றார்.

அந்த ஜலசந்தி வழியாக "சுதந்திர கப்பல் போக்குவரத்து மற்றும் சுதந்திர வர்த்தக ஓட்டத்தை" உறுதிப்படுத்தி வைக்க சூளுரைத்து, பென்டகன் ஒருசில மணி நேரத்திலேயே ஓர் அறிக்கை வெளியிட்டது.

ஈரான் அமெரிக்காவை அச்சுறுத்துவதாக கூறும் ட்ரம்பின் வாதங்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை.

அமெரிக்க ஏகாதிபத்தியம்தான், ஒரு கால் நூற்றாண்டாக ஷாவின் கொடுங்கோன்மை சர்வாதிகாரத்திற்குப் பாதுகாப்பு அரணாக சேவையாற்றியது, அது ஈரானை மீண்டுமொருமுறை ஒரு நவ-காலனியாக குறைக்கும் நோக்கில், ஷாவைத் தூக்கிவீசிய மக்கள் புரட்சியைத் துஷ்பிரயோகமாக கைப்பற்றிய முதலாளித்துவ தேசியவாத ஆட்சியான அந்த இஸ்லாமிக் குடியரசுக்கு எதிராக நான்கு தசாப்த காலமாக தடையாணைகள், மிரட்டல்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்களைக் கொண்ட நடவடிக்கைகளை தொடுத்திருந்தது.

வாஷிங்டன்தான், ஈரானின் வடகிழக்கு அண்டைநாடான ஆப்கானிஸ்தான் மீது 2001 இல் மற்றும் அதன் மேற்கு அண்டை நாடான ஈராக் மீது 2003 இல் சட்டவிரோதமாக படையெடுத்தது. போல்டன் மற்றும் துணை ஜனாதிபதி டிக் செனே உட்பட உயர்மட்ட புஷ் நிர்வாக அதிகாரிகள் பகிரங்கமாக இதை தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு வெள்ளோட்டம் என்று பெருமைபீற்றினார்கள்.

அமெரிக்காதான், உலகின் பிரதான எண்ணெய் ஏற்றுமதி பிராந்தியத்தின் மீது தங்குத்தடையற்ற மேலாதிக்கத்தைப் பெறுவதற்காக மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் 1991 இல் இருந்து அடுத்தடுத்து அழிவுகரமான போர்களைத் தொடுத்துள்ளது, அவை மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழக்கவும், காயப்படவும், இடம் பெயரவும் செய்து ஒட்டுமொத்த சமூகங்களையே சீரழித்துள்ளன.

அமெரிக்காதான், 2011 மற்றும் 2015 க்கு இடையே ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளைப் பாதியாக குறைத்து அதன் பொருளாதாரத்தை முடமாக்கிய தடையாணைகளைத் திணிக்க முன்னணியில் நின்றது. ஈரான் அதன் படைத்துறைசாரா அணுசக்தி திட்டத்தைக் கலைக்க வேண்டுமென்ற வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு அது அடிபணியாவிட்டால் ஈரான் மீது போர் தொடுக்கப்படுமென மீண்டும் மீண்டும் அச்சுறுத்திக் கொண்டே, அதேவேளையில் பத்து பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான உயர்-தொழில்நுட்ப ஆயுத தளவாடங்களைக் கொண்டு இஸ்ரேல், சவூதி அரேபியா மற்றும் பிற பிராந்திய வாடிக்கை அரசுகளைத் தொடர்ந்து ஆயுதமயப்படுத்தி வந்ததுடன், அது அந்த தடையாணைகளைத் திணித்திருந்தது.

ட்ரம்ப் நிர்வாகம்தான், ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகி, இப்போது அதன் மீது முற்றுமுதலான பொருளாதார போர் தொடுத்து வருகிறது, ஆனால் சர்வதேச அணுசக்தி ஆணையமோ தெஹ்ரான் 2015 அணுசக்தி உடன்படிக்கைக்கு முழுமையாக ஒத்துழைத்திருப்பதாக மீண்டும் மீண்டும் கண்டறிந்துள்ளது.

நேற்று பல்வேறு ஜனநாயகக் கட்சியினரும் ஓய்வூபெற்ற பென்டகன் மற்றும் சிஐஏ அதிகாரிகளும் ட்ரம்பின் போர்நாடும் ட்வீட் சேதியை விமர்சித்தனர். பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி கொறடா ஸ்டெனி ஹோவர் (Steny Hoyer) கூறுகையில், ஹெல்சின்கியில் ஜூலை 16 அன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடனான ட்ரம்ப் சந்திப்பின் போது அவர் "குறிப்பாக அமெரிக்கர்-அல்லாதவரைப்" போல நடந்து கொண்டதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயன்று வருவதாக தெரிவித்தார். “அவர் புட்டின் விடயத்தில் பலவீனமாக உள்ளார், அவர் ருஹானி விடயத்தில் கடுமையாக இருப்பதாக காட்ட விரும்புகிறார்,” என்று ஹோவர் வாஷிங்டன் போஸ்ட் க்குத் தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் "அமெரிக்கா முதலில்" கொள்கையின் நோக்கத்தை — அதாவது, உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்தைப் பலப்படுத்தும் நோக்கத்தைப் பகிர்ந்து கொள்வதுடன், அவர்களும், குடியரசு கட்சியினருக்கு குறைவின்றி, ஒப்பீட்டளவில் அமெரிக்காவின் பொருளாதார பலம் மற்றும் உலகளாவிய அந்தஸ்தில் ஏற்பட்ட பாரிய அரிப்பை ஈடுகட்ட, 1991 இல் இருந்து, அதன் அளவுக்கு மிஞ்சிய இராணுவ பலத்தைப் பயன்படுத்தும் முனைவில் உடந்தையாய் இருந்துள்ளனர்.

ஆனால் இந்த மூலோபாயத்தை எவ்வாறு பின்தொடர்வது என்பதில்தான் ஆழ்ந்த மற்றும் வெடிப்பார்ந்த தந்திரோபாய கருத்து வேறுபாடுகள் உள்ளன. இது, புட்டின் விடயத்தில் ட்ரம்ப் முழுமையாக ஏமாந்தவர் இல்லை என்றாலும், “மென்மையாக" இருக்கிறார் என்பதை இலக்கு வைத்து, இராணுவ-பாதுகாப்பு எந்திரத்தின் பரந்த பிரிவுகள் மற்றும் சிஐஏ உடன் நெருக்கமாக இணைந்து, ஜனநாயகக் கட்சியினர் நடத்திய வெறித்தனமான பிரச்சாரத்தில் சான்றுகளோடு எடுத்துக்காட்டப்படுகிறது.

அமெரிக்க ஆளும் உயரடுக்கின் இந்த கன்னை, ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதலில் எந்த பின்னடைவையும் கடுமையாக எதிர்ப்பதுடன், ஈரானுடன் உடனடியாக முறித்துக் கொள்வதில் ட்ரம்ப் காட்டும் ஒருமுனைப்பை, அந்த மிகவும் பலமான மூலோபாய எதிரிக்கு எதிரான போராட்டத்திலிருந்து ஒரு திசைதிருப்பலாக பார்க்கிறது. அந்த கன்னை, சிரியாவில் ஒரு பாரிய இராணுவ தீவிரப்பாட்டை எடுக்க அமெரிக்கா சார்பில் பிரச்சாரம் செய்து வருவதுடன், இந்நடவடிக்கை ஈரான் மீது மூலோபாய அழுத்தத்தை அதிகரிக்கும் அதேவேளையில், ஒரேநேரத்தில் ரஷ்யாவுக்கும் ஒரு பலமான அடியை வழங்க அமெரிக்காவுக்குச் சந்தர்ப்பத்தை வழங்கும் என்று வாதிடுகிறது.

மறுபுறம், ரஷ்யாவுடன் ஒரு தற்காலிக ஏற்பாட்டை செய்வது அமெரிக்க நலன்களுக்கு சேவையாற்றுமென ட்ரம்ப் கணக்கிடுகிறார். முதலும் முக்கியமுமாக, ரஷ்யாவும் சீனாவும் மூலோபாயரீதியில் கூடுதலாக அணிசேர்வதை முன்கூட்டியே தடுப்பதானது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர்-முனைவு பாதையை இலகுவாக்குமென அவர் கணக்கிடுகிறார்.

ஏதேனுமொரு "சமாதான தீர்வின்" பாகமாக, சிரியாவில் ஈரானிய செல்வாக்கை நீக்குவதற்கு முன்நகருமாறு, அல்லது குறைந்தபட்சம் அதை கடுமையாக கட்டுப்படுத்துமாறு, புட்டினுக்கு அழுத்தமளிப்பது ஹெல்சின்கியில் ட்ரம்பின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. நடைமுறையளவில் சிரியாவில் ஈரானிய படைகளைத் தாக்குவதற்கு, ரஷ்யா சமீபத்திய மாதங்களில் இஸ்ரேலியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் கரங்களை சுதந்திரமாக விட்டு வைத்துள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

ஈரானுடன் ஒரு மோதலைத் தூண்டுவதற்கான ட்ரம்பின் ஆர்வம், சீனாவைத் தாமதிக்காமல் உடனடியாக எதிர்கொள்ள வேண்டும் என்ற அவரின் கணக்கீடுகளுடன் பிணைந்துள்ளது. ஈரானை மீண்டும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்காவுக்கு ஓர் இரும்புப்பிடியை வழங்கும், இவை சீனப் பொருளாதாரத்தில் அழுத்தத்தைக் கூட்டவும், அத்துடன் யூரேஷியாவை ஆழமாக ஒருங்கிணைப்பதற்கான சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை (One Belt, One Road - OBOR) மூலோபாயத்தில் ஒரு முக்கிய தொடர்பை அகற்றுவதற்கும் அத்தியாவசியமாக உள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் நோக்கங்களை எந்தளவுக்கு சிறப்பாக பின்தொடர்வது என்பதன் மீதான இந்த மோதலின் இறுதிவிளைவு என்னவாக இருந்தாலும், வாஷிங்டன் தவிர்க்கவியலாமல் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு எரிமலை வெடிப்பை நோக்கிய பாதை, மத்திய கிழக்கு மக்களையும் மற்றும் உலக மக்களையும் பேரழிவைக் கொண்டு அச்சுறுத்துகிறது.

ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளைப் பொறுத்த வரையில், ஈரானின் சந்தைகள் மற்றும் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதற்கான அவற்றின் திட்டங்கள் உட்பட, அவற்றின் சொந்த நலன்களை ட்ரம்பின் கொள்கைகள் அச்சுறுத்துகின்றன என்ற ஒரே காரணத்திற்காகவே அவை அவற்றை ஆட்சேபிக்கின்றன. 2008 உலக நிதியியல் வெடிப்பை அடுத்து அமெரிக்க ஏகாதிபத்திய வன்முறையின் கூடுதல் தீவிரப்பாட்டிற்கு, பேர்லின், இலண்டன் மற்றும் பாரீஸ் ஆகிய அனைத்தும் கோரப்பற்களுடன் தங்களைத்தாங்களே ஆயுதமயப்படுத்தி கொண்டதன் மூலமாக விடையிறுத்துள்ளன.

அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு உட்பட உலகெங்கிலும் வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியானது, ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணித்திரள்வின் மீதும் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் மீதும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அடிக்கோடிடுகிறது.