ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Left Party supports anti-refugee policies of German government

இடது கட்சி, ஜேர்மன் அரசாங்கத்தின் அகதிகள்-விரோத கொள்கைகளை ஆதரிக்கிறது

By Johannes Stern
3 July 2018

ஐரோப்பிய ஒன்றியமும் அதன் தேசிய அரசாங்கங்களும், அகதிகளைக் காட்டுமிராண்டித்தனத்துடன் மனிதாபிமற்ற முறையில் கையாள்வது பலரையும் அதிர்ச்சியூட்டி உள்ளது. கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் விவாதிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நடவடிக்கைகள், ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய வரலாற்றின் இருண்ட காலங்களை நினைவூட்டுகின்றன. அவை வட ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கண்கூடாக சித்திரவதை முகாம்களைக் கட்டியமைப்பதில் இருந்து, இத்தாலியில் சிந்தி மற்றும் ரோமா மக்களைக் கணக்கெடுப்பது மற்றும் மத்திய கிழக்கின் போர் பகுதிகளுக்கு நூறாயிரக் கணக்கானவர்களைத் திருப்பி அனுப்புவது வரையில் நீள்கின்றன.

ஜேர்மனியில், மாபெரும் கூட்டணி அரசாங்கம் ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் தீவிர வலதுசாரி அகதிகள் கொள்கையை ஏற்றுள்ளது. கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்திற்கும் (CDU) மற்றும் பவேரியாவில் உள்ள அதன் சகோதர கட்சியான கிறிஸ்துவ சமூக ஒன்றியத்திற்கும் இடையிலான தற்போதைய கூட்டணி சர்ச்சை, அகதிகள்-விரோத நடவடிக்கைகளை எவ்வாறு சிறப்பாக ஒழுங்கமைத்து நடத்துவது என்பதன் மீது அக்கறை கொண்டுள்ளது. ஏற்கனவே ஜேர்மன் எல்லையில் பதிவு செய்துள்ள அகதிகளையும் திருப்பி அனுப்ப விரும்புகின்ற உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவரின் (CSU) “தேசிய தீர்வும்", அத்துடன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் (CDU) “ஐரோப்பிய தீர்வு" எனப்படுவதும், இரண்டுமே, பெருந்திரளான மக்களை நாடு கடத்துவதையும், அகதிகளை விடாப்பிடியாக நிராகரிப்பதையும் முன்னறிவிக்கின்றன.

வலதுசாரி தீவிரவாதம் மற்றும் பாசிசவாதத்திற்கு எதிரான பரந்த எதிர்ப்புக்கு இடையே, இத்தகைய கொள்கைகளை முன்னெடுக்க முடிகிறது என்றால் அதற்கு வலதை நோக்கிய திரும்பிய ஒட்டுமொத்த சிவப்பு-சிவப்பு-பச்சை சமூக தட்டுக்குத்தான் பிரதானமாக நன்றி கூற வேண்டியிருக்கும். சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆளும் கட்சியாக இருந்து அகதிகள்-விரோத போக்கை ஊக்குவித்தது, அதேவேளையில் பசுமை கட்சியினரோ மேர்க்கெல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பின்னால் நின்றனர், இடது கட்சியோ மாபெரும் கூட்டணியை வலதிலிருந்து தாக்க முடிந்தது.

CDU மற்றும் CSU க்கு இடையிலான மோதல் "வெறும் அடையாள அரசியல்" சம்பந்தப்பட்டது தானே ஒழிய, அகதிகள் பிரச்சினை மீது அக்கறை கொண்டதல்ல என்று இடது கட்சியின் நாடாளுமன்ற பிரிவு தலைவர் சாரா வாகன்கினெக்ட் அவரே செவ்வாயன்று ஜேர்மன் செய்தி தொலைக்காட்சி நிலையம் Phoenix உடனான ஒரு பேட்டியில் குறைகூறினார். “சீகோவர் என்ன முன்மொழிகிறாரோ அது ஒரு சிறிதும் பிரச்சினையை மாற்றப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். பதிவு செய்துள்ள அகதிகளைத் திரும்ப அனுப்ப போகிறோம் என்று ஜேர்மன் தன்னிச்சையாக அறிவித்தால், பின் மற்ற நாடுகளும் அவை அகதிகளை இனி பதிவு செய்யப் போவதில்லை மாறாக அவர்களுக்கு வேறு திசையை நோக்கி கைகாட்டுவோம் என்று தன்னிச்சையாக அறிவிக்கும். பின்னர் நாம் இன்று என்ன சூழலில் இருக்கிறோமோ துல்லியமாக அதே சூழலில் தான் இருப்போம்.” இரண்டு தரப்புமே "இந்த மத்திய பிரச்சினையால் முற்றிலுமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளன", மேலும் இது "ஜேர்மனியின் எதிர்காலத்திற்கு ஒரு நல்ல அறிகுறியல்ல,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

வாகன்கினெக்ட் இன் தேசியவாத மற்றும் அகதிகள்-விரோத வெறிப்பேச்சுக்கள் ஒன்றும் புதியதல்ல. 2016 இன் தொடக்கத்தில், அவர் அறிவித்தார், “எவரொருவர் எமது விருந்தோம்பலை துஷ்பிரயோகம் செய்தார்களோ, அவர்கள் நமது விருந்தினராக இருக்கும் உரிமையை இழந்துள்ளார்கள்," அவர் AfD தலைவர் அலெக்சாண்டர் கௌலான்ட் ஆல் பாராட்டப்பட்டார். இதற்கிடையே, ஒட்டுமொத்த கட்சியும் இதே போக்கைப் பிடித்துத் தொங்கி கொண்டிருக்கிறது. இது வெறுமனே வாய்வீச்சில் ஏற்பட்ட மாற்றமல்ல. சமூக ஜனநாயக கட்சி (SPD) மற்றும் பசுமை கட்சியினருடன் சேர்ந்து இக்கட்சி மாநில அளவில் எங்கெல்லாம் ஆட்சி செய்கிறதோ, அங்கே எல்லாம் இது, கூட்டாட்சி அரசாங்கத்தின் மாபெரும் கூட்டணி அல்லது பவேரியாவில் சீகோவரின் CSU ஆகியவை அகதிகளை எந்தளவுக்கு காட்டுமிராண்டித்தனமாக ஈவிரக்கமின்றி கையாள்கின்றனவோ குறைந்தபட்சம் அதேயளவில் அகதிகளைக் கையாள்கிறது.

கட்சி இதை தயக்கமின்றி ஒப்புக் கொள்கிறது. “துரிங்கியா மற்றும் பேர்லினில் இடதுசாரி தஞ்சம் வழங்கும் கொள்கை மீதான ஓர் இருப்புநிலை குறிப்பு,” என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரை தற்போது மார்க்ஸ்21 வலைத் தளத்தில் காணக்கிடைக்கிறது, அது குறிப்பிடுவதாவது: “நாடு கடத்தும் விவகாரத்தில் துரிங்கியா மாநிலம், சார்லாந்துக்கு அடுத்து இரண்டாவது மிகவும் விடாப்பிடியான மாநிலமாகும். 2017 இன் முதல் பாதியில், நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கையில் 45.5 சதவீத மக்கள் வெளியேற்றப்பட்டனர், இது பவேரியாவை விட ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகம்.”

ஒரு போலி-இடது குழுவான மார்க்ஸ்21, அக்கட்சியிலும் அதன் நாடாளுமன்ற பிரிவிலும் உயர் பதவிகளைக் கொண்டுள்ளது. அது அக்கட்டுரை குறிப்பிடும் கொள்கைகளில் எல்லா மட்டத்திலும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது. அக்கட்டுரை ஆசிரியர், இர்ம்கார்ட் வுர்டாக் (Irmgard Wurdack), அகதிகளை மூர்க்கமாக பீதியூட்டும் பகிரங்கமான வலதுசாரி குழுக்களுக்கு இணையான ஒரு கட்சியாக அதன் சித்திரத்தை வரைகிறார்.

“திரும்பி செல்வதற்கான கலந்தாலோசனைகளின் போது, அகதிகள் 'தானே முன்வந்து' வெளியேறும் வகையில் அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று அதிகரித்த செய்திகள் வருகின்றன.” துரிங்கியாவின் அகதிகள் கவுன்சில், “துரிங்கியாவில் நாடு கடத்துவதற்கான நடைமுறை" என்று தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. ஒருவர் "இங்கே முற்றிலும் புதிய கோணத்தில் கையாளப்படுகிறார்: பாரிய நாடு கடத்தல்கள் தெளிவாக சட்டவிரோதமாக கையாளப்படும் விடயங்களாக இருந்தாலும், துரிங்கியாவில் பாரிய நாடு கடத்தல்கள் நடக்கின்றன,” என்று அகதிகள் கவுன்சிலின் ஒரு செய்தி தொடர்பாளரை வுர்டாக் மேற்கோளிடுகிறது.

“இடது கட்சி செயலூக்கத்துடன் இருக்கும் ஓர் அரசாங்கமானது, இடதுசாரி தஞ்சம் வழங்கும் கொள்கையை ஏற்றிருக்கும் என்று அர்த்தமாகாது,” என்பது பேர்லினில் சமஅளவில் வெளிப்படையாக உள்ளதாக தொடர்ந்து வுர்டாக் எழுதுகிறார். உண்மையில், “சிவப்பு-சிவப்பு-பச்சை செனட்டில், இடது கட்சி அதுவே பொறுப்பேற்று கொண்ட கடன் தள்ளுபடியால், அங்கே புதிதாக வருபவர்களுக்கோ அல்லது ஏற்கனவே அங்கே வசிப்பவர்களுக்கோ கூடுதல் நிதிகள் வழங்க இடமில்லை.” இவ்விதத்தில், “ஆயிரக் கணக்கான அகதிகள், சரக்கு நிரப்பும் கொள்கலன்களிலும், இரண்டாந்தர நிலைமைகளிலும் மற்றும் Tempelhof Field பூங்கா உள்ளடங்கலாக பாரிய முகாம்களிலும் கூட அடைக்கப்படுவார்கள்.”

இதற்கு கூடுதலாக, சமூக சேவைகளுக்குப் பொறுப்பான இடது கட்சி செனட்டர் Elke Breitenbach, “எல்லா துறைகளிலும் பண வடிவில் சேவை வழங்குவதை மறுத்து, அதற்கு பதிலாக சலுகைகளை மறுஅறிமுகம் செய்து,” உள்ளார். மீள்ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ள “வருகை மையங்களில்”, "100 க்கும் அதிகமான [அகதிகள்] தொடர்ச்சியான இரைச்சலில் 20 மீட்டர் உயர விமான நிறுத்தி வைப்பு கொட்டகைகளில் இரவைக் கழிக்க வேண்டும் என்பதோடு, மேற்கூரை இல்லாத மற்றும் கதவுகள் இல்லாத திறந்தவெளி ஒதுக்கிடங்களில் உறங்க வேண்டும்.” இந்த "கொட்டகைகளில் உள்ள மனிதாபிமானமற்ற நிலைமைகளுக்கு" செனட்டர் Breitenbach முழு பொறுப்பாளியாவார்.

அவரது இருப்புநிலை கணக்கின் முடிவில், வுர்டாக் பின்வரும் வார்த்தைகளோடு அவரது கட்சியின் சமூக-விரோத மற்றும் அகதிகள்-விரோத கொள்கைகளை நியாயப்படுத்துகிறார்: “இடது கட்சி பங்கு வகிக்கும் அரசாங்கங்கள் உள்ள மாநிலங்களின் அகதிகள் கொள்கை கூட" “முக்கியமாக இந்த அரசியல் கட்டமைப்பின் வரம்புமுறைகளால், நமது சக-கூட்டாளிகள் எந்தளவுக்கு வலியோடு நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்,” என்பதைக் காட்டுகிறது.

யதார்த்தத்தில், இடது கட்சி அரசியல்வாதிகள் "நிர்பந்திக்கப்பட" வில்லை. சொல்லப்போனால் அவர்கள் ஆதரிக்கும் பிற்போக்குத்தனமான கொள்கைகளை அவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள், இது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் செல்வச் செழிப்பான நடுத்தர வர்க்க அடுக்குகளின் சமூக மற்றும் அரசியல் நலன்களை எடுத்துக்காட்டுகின்றன. அது முக்கியமாக இடது கட்சிக்குள் உள்ள அனைத்து போலி-இடது போக்குகளுக்கும் உண்மையாகப்படுகிறது. மார்க்ஸ்21 நீண்டகாலமாகவே சிவப்பு-சிவப்பு-பசுமை ஆளும் கூட்டணிக்காக முரசு கொட்டி வந்துள்ளதுடன், ஜேர்மன் இராணுவவாதத்தின் கட்டமைப்புக்குள் அது ஆழமாக ஒருங்கிணைந்துள்ளது. இப்போது இத்தகைய போக்குகள் அகதிகள் கொள்கையின் வலதுசாரி நிலைப்பாடுகளைப் பகிரங்கமாக ஆதரிக்கின்றன.

இது அக்கட்சி நிர்வாகத்தின் மற்றொரு போலி-இடது கன்னையான சோசலிச மாற்றீட்டிற்கும் (SAV) பொருந்தும். லைப்சிக் இல் நடந்த மிக சமீபத்திய இடது கட்சி மாநாட்டின் ஒரு புதிய பேட்டியில், தேசிய செய்தி தொடர்பாளர் Sascha Stanicic "எல்லைகளைத் திறந்துவிடுவதை" வெளிப்படையாக நிராகரித்தார். அதுபோன்றவொரு விடயம் "முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் நடத்த முடியாது,” “ஒரு சோசலிச உலகில் மட்டுமே" இருக்க முடியும் என்றார். “அதாவது ஒரு கோரிக்கையாக முன்வைக்கப்பட்ட அந்த உருவாக்கம் எதற்கும் உதவாது,” என்பதே இதன் அர்த்தம். அனைத்திற்கும் மேலாக, “இது தொழிலாள வர்க்கத்தின் பிரிவுகளுக்குகள் கொண்டு செல்ல கடினமான ஒரு கருத்துரு,” என்றார்.

யதார்த்தத்தில், அகதிகளை மூர்க்கமாக கையாள்வதற்கும் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் வலதுநோக்கி திரும்புவதற்கும் அங்கே தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே குறிப்பிடத்தக்க எதிர்ப்பு உள்ளது. அகதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட பயங்கரம் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தை நோக்கி திருப்பி விடப்படுகிறது என்பதும், இது ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய அரசியலை மேற்கொண்டும் வலதுக்குத் திருப்ப சேவையாற்றுகிறது என்பதும் மிகத் தெளிவாக உள்ளது. அரசு எந்திரத்தைக் கட்டமைக்கும், அகதிகளைத் துன்புறுத்தும் மற்றும் சமூக வெட்டுக்களை மேற்கொள்ளும், இராணுவவாதத்தை முன்னெடுக்கும் இந்த அரசியலுக்கு எதிராக போராடுவதற்கு, தொழிலாளர்களும் இளைஞர்களும் —ஜேர்மனிக்கான மாற்றீடு முதற்கொண்டு இடது கட்சிக்கு உள்ளேயும் மற்றும் அதைச் சுற்றியும் உள்ள போலி-இடதுகள் வரையில்— ஆளும் வர்க்கத்தின் அனைத்து கன்னைகளுக்கு எதிராகவும் போராடி, நனவுபூர்வமாக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

கட்டுரை ஆசிரியரின் ஏனைய பரிந்துரைகள்:

ஜேர்மன் அரசாங்க நெருக்கடி: அகதிகள்-விரோத கிளர்ச்சி, இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த மூலோபாயம் தேவை
[26 June 2018]