ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US-Europe conflicts erupt in run-up to NATO summit in Brussels

புரூசெல்ஸில் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன்பாக அமெரிக்க-ஐரோப்பிய மோதல்கள் வெடிக்கின்றன

By Alex Lantier
11 July 2018

வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் முன்கண்டிராத பதட்டங்கள் எழுந்துள்ளதற்கு மத்தியில் புரூசெல்ஸில் இன்று நேட்டோ உச்சிமாநாடு தொடங்குகிறது. ஜூன் 10 அன்றான ஜி7 உச்சிமாநாடு பொறிந்ததிற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தகப் போர் நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் விமர்சித்திருக்கும் நிலையில், நேட்டோ சக்திகள் தொடக்கிக் கொண்டிருக்கும் பாரிய இராணுவ கட்டியெழுப்பலை  ஒருங்கிணைப்பதற்கு முயற்சி செய்வது தொடர்பாக பிளவுகள் மீண்டும் வெடித்துக் கொண்டிருக்கின்றன.

இராணுவத்திற்காக போதுமான அளவு செலவு செய்யவில்லை என்று கூறி ஐரோப்பிய சக்திகளை, குறிப்பாக ஜேர்மனியை, சமீப நாட்களில் ட்ரம்ப் தொடர்ந்து அவமதித்து வந்திருந்த பின்னர், நேட்டோ அரசுத் தலைவர்கள் புரூசெல்ஸ் வந்துசேரும் முன்பாகவே மோதல்கள் வெடித்து விட்டன.

புரூசெல்ஸில் இருந்து பிரிட்டன் மற்றும் பின்லாந்து செல்லவிருக்கும் ட்ரம்ப் -அங்கு அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கிறார்- வாஷிங்டனை விட்டு கிளம்பிய சமயத்தில் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தை தாக்கினார். நேட்டோ உச்சிமாநாடு மற்றும் பிரிட்டனில் அரசாங்க நெருக்கடி என தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் சமாளிக்கக் கடினமான பிரச்சினைகள் இடம்பெற்றிருப்பதைக் குறித்து புகார் கூறிய ட்ரம்ப், ஊடகங்களிடம் கூறினார்: “எனக்கு நேட்டோ இருக்கிறது. சற்று குழப்பநிலையில் ஐக்கிய இராஜ்ஜியம் இருக்கிறது. எனக்கு புட்டின் இருக்கிறார். வெளிப்படையாகச் சொல்வதானால், புட்டின் தான் அவர்களில் எளிதான பிரச்சினையாக இருக்கக் கூடும். யார் அறிவார்?”

ஓரளவுக்கு கூட்டாளிகளாக கருதப்படுகின்ற ஐரோப்பிய நாடுகளை, வாஷிங்டன் அவ்வப்போது இராணுவ நடவடிக்கையைக் கொண்டு அச்சுறுத்திக்கொண்டு வந்திருக்கிற ரஷ்யா அல்லது சீனாவை விடவும் உகந்த விருப்பமாய் தான் காணும் அவசியமில்லை என்பதை அமெரிக்க ஜனாதிபதி தெளிவாக்கினார். ரஷ்யா மற்றும் சீனாவுடன் “இசைந்து” செல்வது “நல்ல விடயம்” என்று கூறியதோடு புட்டினை “எதிரி” என்று அழைக்க மறுத்து பதிலாக “போட்டியாளர்” என்று ட்ரம்ப் அழைத்த அதேநேரத்தில், ஐரோப்பா விடயத்தில் அவர் முற்றிலும் ஒரு மாறுபட்ட தொனியை காட்டினார். “ஐரோப்பா ஒன்றியம் எங்களை அனுகூலமாக பயன்படுத்திக் கொள்கிறது” என்ற ட்ரம்ப், நேட்டோவில் அமெரிக்காவின் செலவு “எங்களுக்கு உதவுவதைக் காட்டிலும் அவர்களுக்கே அதிகமாக உதவுகிறது” என்று மேலும் சேர்த்துக் கொண்டார்.

நேற்று நடந்த EU-NATO கூட்டம் ஒன்றின் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவரான டொனால்ட் டஸ்க் வெளிப்பட படபடப்புடன் நின்றிருந்த நேட்டோ பொதுச் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் முன்பாக ட்ரம்ப்புக்கு பதிலடி கொடுத்தார்.

டஸ்க் கூறினார், “அவருடைய கண்ணோட்டத்தில், பொதுவான பாதுகாப்பு செயல்திறன்களுக்கு போதுமான அளவில் பங்களிப்பு செய்யவில்லை என்றும் அமெரிக்காவின் செலவில் வாழ்வதற்காகவும், நீண்டநாள்களாக, கிட்டத்தட்ட தினந்தோறும், ஐரோப்பாவை விமர்சித்து வரும் ஜனாதிபதி ட்ரம்புக்கு, இங்கே புரூசெல்ஸில் நேட்டோ உச்சிமாநாட்டை ஒட்டி பேசுகையில், நேரடியாகவே பதில் கூற நான் விரும்புகிறேன். ஜனாதிபதி திரு. ட்ரம்ப் அவர்களே: அமெரிக்காவுக்கு ஐரோப்பாவை விடவும் ஒரு சிறந்த கூட்டாளி கிடையாது, இருக்கப் போவதுமில்லை. இன்று ஐரோப்பியர்கள் ரஷ்யாவை விடவும் பல மடங்கு அதிகமாக, அத்துடன் சீனாவின் அளவுக்கு, பாதுகாப்பில் செலவிடுகின்றனர்.” அவர் குறிப்பாக சேர்த்துக் கொண்டார், “உங்களது கூட்டாளிகளை மதியுங்கள். எப்படிப் பார்த்தாலும், உங்களுக்கு கூடுதலானவர்கள் கூட்டாளிகளாக இல்லை.”

ஐரோப்பிய இராணுவ செலவினத்தை “பொதுவான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தற்காப்பு மற்றும் பாதுகாப்பிலான ஒரு முதலீடு” என்று அழைத்த டஸ்க் ஆப்கானிஸ்தானிலான இரத்தம்பாய்ந்த அமெரிக்க-தலைமையிலான நேட்டோ ஆக்கிரமிப்பு குறித்து பெருமையடித்துக் கொண்டார். “அன்பிற்குரிய திரு.ஜனாதிபதி அவர்களே, நாளை நேட்டோ உச்சிமாநாட்டில் நாம் சந்திக்கும் சமயத்தில், ஆனாலும் எல்லாவற்றையும் விட, ஹேல்ஸின்கியில் ஜனாதிபதி புட்டினை சந்திக்கும் சமயத்தில், இதனை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதை தெரிந்து வைத்திருப்பது எப்போதும் நல்லது: உங்களது மூலோபாய நண்பர் யார்? உங்களது மூலோபாயப் பிரச்சினை யார்?” என்பதை.

வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் பரஸ்பரம் ஒவ்வொருவரினதும் தயாரிப்புப் பொருட்களுக்கு எதிராய் பத்து பில்லியன்கணக்கான டாலர்கள் சுங்கவரி விதிப்புகளைக் கொண்ட ஒரு வர்த்தகப் போரை தொடக்குகின்ற நிலையில், உலகின் மிக சக்திவாய்ந்த ஏகாதிபத்தியக் கூட்டுகளுக்கு இடையிலான உறவுகளின் அடிப்படை கட்டமைப்பு நொருங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், 1949 இல், ஐரோப்பிய-அமெரிக்க இராணுவக் கூட்டணியாக நேட்டோ ஸ்தாபிக்கப்பட்டது, எல்லாவற்றுக்கும் மேல் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக திருப்பப்பட்டதாக அது இருந்தது. ஆயினும் உலக முதலாளித்துவம் இன்னுமொரு உலகளாவிய போரை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில் நேட்டோ நார்நாராய் கிழிபட்டுக் கொண்டிருக்கிறது.

நேட்டோவுக்குள்ளான மோதல்கள் ஐரோப்பிய ஒன்றியம் குறைவாக இராணுவத்திற்கு செலவிடுவதால் விளைந்ததல்ல. உண்மையில், ஒபாமாவின் கீழ் தொடங்கி ஐரோப்பிய ஒன்றிய இராணுவச் செலவினங்கள் குறித்து அமெரிக்கா புகார்கள் கூறி வருகின்ற போதிலும், போர் எந்திரங்களை அதிகரிப்பதற்கு தொழிலாளர்களிடம் இருந்தும் அடிப்படை சமூக வேலைத்திட்டங்களில் இருந்தும் நூறு பில்லியன் கணக்கில் டாலர்களும் யூரோக்களும் கொள்ளையடிக்கப்பட்டாக வேண்டும் என்ற ஒரு விடயத்தில் கிட்டத்தட்ட அத்தனை நேட்டோ ஏகாதிபத்தியங்களுமே உடன்பட்டிருக்கின்றன. இதில், இராணுவ செலவின அதிகரிப்பு ஒரு பெரும் பாத்திரம் வகிப்பதற்கு அழைப்பு விடுக்க அவை நோக்கம் கொண்டிருக்கின்றன.

ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியமும் கூட, அனைத்துமே இந்த ஆண்டில் இராணுவச் செலவினத்தை பத்து பில்லியன் கணக்கான யூரோக்கள் வரை அதிகரிப்பதற்கு உறுதியெடுத்திருக்கின்றன. திங்களன்று பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வழங்கிய ஒரு தேசிய உரையில், அடிப்படை சமூக வேலைத்திட்டங்களை ஆழமாக வெட்டுவதன் அடிப்படையில் அமைந்த கட்டாய இராணுவ சேர்ப்புக்கு மறுபடியும் பிரான்ஸ் திரும்புவதற்கு மீண்டும் அழைப்பு விடுத்தார். அத்துடன் ஸ்வீடன் இந்த ஆண்டில், 1999 இல் பிறந்த இளைஞர்களில் ஒரு பகுதியை கட்டாயமாக இராணுவத்தில் சேர்ப்பதை தொடக்கியிருக்கிறது.

நேட்டோவுக்குள்ளான கைகலப்பில் நிதிஒதுக்கீடு விடயத்திலான கருத்துவேறுபாட்டைக் காட்டிலும் மிகவும் விரிந்த மோதல்கள் பணயத்தில் இருக்கின்றன என்பது முன்னெப்போதினும் இப்போது தெளிவாக இருக்கிறது. ட்ரம்ப் அவரது தேர்தல் பிரச்சாரத்தின் போது, நேட்டோவை “காலாவதி”யானது என்றும் அமெரிக்காவிற்கான ஜேர்மனியின் வாகன ஏற்றுமதிகளை “மோசமான விடயம்” என்றும் கண்டனம் செய்தமையானது அவரது தனிப்பட்ட தலைக்கனத்தின் ஒரு விளைபொருளல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர்ச்சியான, நீண்டகால பொருளாதார சரிவுக்கு மத்தியில், சந்தைகள், இலாபங்கள் மற்றும் மூலோபாய அனுகூலம் ஆகியவற்றை பங்குபோடுவதிலான ஒரு கடுமையான ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதலின் வெளிப்பாடாக அது இருந்தது, அந்த மோதல் இப்போது அபிவிருத்தி காண்கின்ற ஒரு வர்த்தகப் போராகவும் நேட்டோவுக்குள்ளான பகிரங்கமான பிளவுகளாகவும் தீவிரமடைந்திருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்து மார்க்சிஸ்டுகள் நன்கறிந்ததாக இருந்த இந்த மோதல்கள் இரண்டுமுறை உலகப் போராக வெடித்தன. இன்னும் கூறப் போனால், லெனின், முதலாம் உலகப் போரின் சமயத்தில் 1916 இல் எழுதப்பட்ட, ஏகாதிபத்தியம் என்ற தனது செவ்வியல் படைப்பில், முதலாளித்துவத்தின் கீழ் பொருளாதார மற்றும் இராணுவ மோதலின் தவிர்க்கவியலா தன்மை குறித்து பகுப்பாய்வு செய்கையில், நேட்டோ போன்ற ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கூட்டணிகளால் தொழிலாளர்கள் முன்நிறுத்தப்படுகின்ற அத்தியாவசியமான பிரச்சினைகளை இரத்தினச் சுருக்கமாக பின்வருமாறு கூறினார்: “அமைதியான கூட்டணிகள் போருக்கு களம் தயாரிக்கின்றன” என்று எச்சரித்த அவர், “அவை அவற்றின் சமயத்தில் போர்களில் இருந்தே எழுகின்றன” என்றார்.

இரண்டாம் உலகப் போரில் இருந்து எழுந்து வந்திருந்த நேட்டோவின் வெவ்வேறு போட்டிக் கன்னைகள் அனைத்துமே பல்வேறு வழிகளிலும் ஒரு புதிய உலகளாவிய மோதலுக்கே தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன. இவற்றில் எந்தக் கன்னைக்குமே தொழிலாள வர்க்கத்திற்கு வழங்குவதற்கு வேறெதுவுமில்லை. சர்வதேச முதலாளித்துவத்தின் கட்டமைப்பிலேயே வேரூன்றியிருக்கின்ற போர்களுக்கு எதிரான போராட்டமே, 1917 அக்டோபர் ரஷ்யப் புரட்சியின் சமயத்தில் போல, இப்போதும் உலகெங்கிலும் தொழிலாளர்கள் முன்நிற்கின்ற பிரச்சினையாகும். 

ஆயினும், அட்லாண்டிக்கின் இரண்டு பக்கங்களிலும் ஆளும் வர்க்கத்தின் கணிசமான பகுதிகள், தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரேயடியான தாக்குதல்கள் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போர் முனைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் என்றபோதும், நேட்டோவை உடையாமல் வைத்திருப்பதற்கே இப்போதும் நோக்கம் கொண்டிருக்கின்றன. கிழக்கு ஐரோப்பாவுக்குள்ளான நேட்டோவின் பொறுப்பற்ற விரிவாக்கம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. லாத்வியாவுக்கு நேற்று விஜயம் செய்த கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லாத்வியாவில் ரஷ்யாவின் எல்லைகளில் இருக்கக் கூடிய கனடாவின் துருப்புகள், அவற்றுக்கான இருப்புஉத்தரவு 2019 இல் முடிவடைகின்ற பின்னரும், இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு அங்கேயே இருக்கும் என்று அறிவித்தார்.

நேற்று தனது செய்தியாளர் சந்திப்பில் புரூசெல்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னோட்டம் வழங்கிய ஸ்டோல்டென்பேர்க், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் நடத்தப்படுகின்ற சவுதி பேச்சுவார்த்தைகளைப் பாராட்டியதோடு ஜோர்ஜியா மற்றும் உக்ரேன் ஆகிய முன்னாள் சோவியத் குடியரசுகளை நேட்டோவுக்குள் ஒருங்கிணைப்பதற்கான திட்டங்களையும் விவாதித்தார். இந்த பொறுப்பற்ற நடவடிக்கை பரந்த தாக்கத்தைக் கொண்டதாகும். ஜோர்ஜியா அல்லது உக்ரேனின் அதி-வலது ஆட்சிகள் ரஷ்யாவுடன் போர்களைத் தொடக்குமாயின் அல்லது ரஷ்ய எல்லைகளைத் தாக்குமாயின் (அவை முறையே 2008 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் செய்ததைப் போல) ஒட்டுமொத்த நேட்டோவும், ஒப்பந்தம் கடமையாக்குவதன்படி, அவற்றைப் பாதுகாக்க, ஒரு அணு ஆயுத சக்தியான ரஷ்யாவுடன் போருக்குச் செல்லும் நிலையில் தங்களைக் காணக் கூடிய அச்சுறுத்தலை இது முன்நிறுத்துகிறது.

அதேநேரத்தில், ஆளும் வர்க்கத்தின் மற்ற பிரிவுகள், ட்ரம்புக்கும் வெகுதூரம் தாண்டிச் சென்று, அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் விடயத்தில் ஒரு கூடுதல் மோதல் போக்கை கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றன. திங்களன்று, நேட்டோ உச்சிமாநாடு தொடங்குவதற்கு சற்று முன்பாக -ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா இரண்டின் தயாரிப்புகளுக்கு எதிராகவுமான ட்ரம்ப்பின் சுங்கவரி விதிப்புகள் குறித்து விமர்சனங்கள் பெருகிச் செல்வதன் மத்தியில்- ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெல், சீனாவின் பிரதமர் லி கீகியாங்கை சந்தித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்-சீனாவுக்கும் இடையில் பெருகும் பதட்டங்கள் அத்துடன் சீனாவின் உலோக ஏற்றுமதிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத் தடைகள் ஆகியவை எல்லாம் இருந்தபோதிலும், அமெரிக்காவின் வர்த்தகப் போர் நடவடிக்கைகள் மீது நிறைய விமர்சனங்கள் செய்வதில் பெய்ஜிங்கும் பேர்லினும் கைகோர்த்தன.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சீனத் தூதர் சாங் மிங் ஜேர்மன் நிதி தினசரியான Handelsblatt இடம் கூறினார், “அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் ஒரு வர்த்தகப் போராக தீவிரமடைவதை நிறுத்துவதற்காக சீனா மிக விரிந்த அளவில் முயன்றிருக்கிறது, ஆயினும் இரு கைகளும் தட்டினால் தான் ஓசை எழும்பும். ... சீனர்கள் அமைதியானவர்கள், ஐரோப்பியர்களும் அப்படிப்பட்டவர்கள் என்றே நான் நினைக்கிறேன், ஆயினும் வர்த்தகப் போருக்கு தொடக்கமளித்த நாட்டுக்கு அதன் நடவடிக்கை தவறு என்பதை நாம் விளங்கப்படுத்தியாக வேண்டும்.”

பேர்லினில் உள்ள உலக பொதுக் கொள்கை ஸ்தாபனத்தைச் (Global Public Policy Institute) சேர்ந்த கரிமா மோகன், சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகையிடம் கூறுகையில், அமெரிக்க-ஜேர்மன் வர்த்தக மோதலானது வாஷிங்டனுக்கு எதிராக “சீனாவும் ஜேர்மனியும் ஒன்றுபடுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்” என்றார், ஆயினும் சீன-ஜேர்மன் ஒத்துழைப்பு “நூலிழையில் தொங்குவதாகவும்” எளிதில் நொருங்கத்தக்கதாகவுமே இருக்கும் என்று அவர் எச்சரித்தார்.

நேட்டோ உச்சிமாநாட்டில் வரவிருக்கும் நாட்களில் அநேகமாக வெடிக்கவிருக்கும் பதட்டங்களின் கீழ், இந்த கையாளமுடியாத பிளவுகள் கீழமைந்திருக்கும் என்பதை உறுதியுடன் கூறக்கூடியதாக இருக்கும்.