ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

European Union warns of global trade war if US auto tariffs go ahead

அமெரிக்காவின் மோட்டார்வாகன இறக்குமதி வரிகள் முன்னெடுக்கப்பட்டால் உலக வர்த்தக யுத்தம் பற்றி ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

By Nick Beams
2 July 2018

ட்ரம்ப் நிர்வாகம் மோட்டார்வாகன உற்பத்திப் பொருட்கள் இறக்குமதி மீது அபராதத் தீர்வை விதிக்கும் அச்சுறுத்தலை முன்னெடுத்துச் சென்றால் அமெரிக்க ஏற்றுமதிகள் மீது 300 பில்லியன் டாலர்கள் வரை இறக்குமதி வரியை விதிக்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் அமெரிக்க வணிகத்துறைக்கு உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த எச்சரிக்கையானது, ஞாயிறன்று ஃபைனான்சியல் டைம்ஸால் மேற்கோள் காட்டப்பட்டது.

அமெரிக்காவானது “தேசிய பாதுகாப்பு” என்ற பேரில் வர்த்தக விரிவாக்கச் சட்டம் (Trade Expansion Act) 1962ன் பிரிவு 232 கீழ் 25 சதவிகித உயர்வுக்கு மோட்டார் வாகன இறக்குமதி வரியை அமல்படுத்தும் ஒரு திட்டத்தை கருத்தில்கொண்டுள்ளது. இதே மசோதா எஃகு மற்றும் அலுமினிய ஏற்றுமதிகளின் மீது வரி விதிக்கப் பயன்படுத்தப்பட்டது, இதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியமும் விதிவிலக்குப் பெறத் தவறிவிட்டது.

பைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின் படி, “வெளிநாட்டுக் கார்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கின்றதா என்ற அமெரிக்காவின் விசாரணைகள் உலகப் பொருளாதாரத்தை ஒரு முழுமையான வர்த்தக யுத்தத்தில் மூழ்கடிக்கக்கலாம் என்று புருஸெல்ஸ் கூறியது. இது அமெரிக்க மோட்டார் வாகனத்துறையில் 4 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்பு இழப்புடன் தீங்கு விளைக்கலாம்.”

அமெரிக்க இறக்குமதிவரி விதிப்பு பற்றிய அச்சுறுத்தல், மே மாதம் ட்ரம்ப்பால் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதிகள் புதிய தொழில்நுட்பங்களின் அபிவிருத்தியைத் தாக்கும் மற்றும் நாட்டின் தேர்ச்சிபெற்ற உழைப்புத் தொகுதியைக் குறைக்கும் நடவடிக்கையால் அவர்கள் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதும் புள்ளிவரைக்கும் அமெரிக்கத் தொழிற்துறையை அரிக்கின்றனவா என ஆய்வு செய்ய ஆணையிட்டதன் விளைவாகும்.

ஆய்வின் விதிமுறைகள் அடுத்த பிப்ரவரி வரையில் வரையறுக்கப்படலாம். நவம்பர்  இடைக்காலத் தேர்தல்களுக்கு இட்டுச்செல்லும் காலத்தில் பொருளாதார தேசியவாதப் பிரச்சாரத்திற்கு ஒரு அடித்தளத்தை வழங்கும்பொருட்டு, ட்ரம்ப் அதனை விரைவில் முடிக்க விரும்புகிறார் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. ட்ரம்ப் செய்தியாளர்களிடம் ஆய்வானது “மூன்று அல்லது நான்கு வாரங்களில்” முடிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து வந்த ஆவணம் குறிப்பிடப்பட்ட பதிலடி நடவடிக்கைகளைக் குறிப்பிடவில்லை மற்றும் அதிகாரிகள் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறுகிறது. ஆயினும், சமர்ப்பிப்பு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற பெரிய பொருளாதாரங்கள் அமெரிக்க பொருளாதாரத்தின் அனைத்து பிரிவிலும் “கணிசமான அளவு வர்த்தகத்தால்” பதிலடி கொடுக்க “விரும்பலாம்” என்று எச்சரித்தது.

ட்ரம்ப்பின் அச்சுறுத்தலைப் பின்னுக்குத் தள்ளும் முயற்சியில், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் வர்த்தக யுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கும் அதேவேளை, அந்த ஆவணமானது, சர்வதேச வர்த்தக ஒழுங்கிற்கு அடிப்படையான முழு விதிகளையும் “தேசிய பாதுகாப்பை” அச்சுறுத்துவதில் சம்பந்தப்பட்டுள்ளது எனும் அத்தகைய வாதங்கள் அச்சுறுத்துகின்றன என்று அவற்றை நிராகரிக்கிறது.

“இந்த நிகழ்வு அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் உள்ள வர்த்தகம், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு தீங்கிழைக்கும், கூட்டாளிகளுடனும் நண்பர்களுடனுமான பிணைப்புக்களைப் பலவீனப்படுத்துகின்றன மற்றும் சந்தையை அடிப்படையாகக் கொண்ட மேறகத்திய பொருளாதார மாதிரியை உண்மையில் அச்சுறுத்தும் மூலோபாய சவால்களைப் பகிர்ந்துகொள்வதிலிருந்து கவனத்தை திருப்புகின்றன” என ஆவணம் கூறுகிறது.

ஆனால் இந்த அணுகுமுறை ட்ரம்ப்பால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. நேற்று பாக்ஸ் செய்திக்கு அளித்த பேட்டியில், குறிப்பாக கார்கள் விஷயத்தை மேற்கோள்காட்டி, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றாய்ச் சேர்ந்து சீனப் பிரச்சினையை சமாளிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை அவர் நிராகரித்தார்.

“ஐரோப்பிய ஒன்றியமும் சீனாபோலவே மிக மோசமானது என்பது சாத்தியமே, சற்றுசிறியதுதான். அவர்கள் எமக்கு செய்வது மோசமானது. “கார்நிலைமையை எடுத்துக்கொள்ளவும். அவர்கள் மேர்சிடெஸ்ஸை உள்ளே அனுப்புகிறார்கள், நாம் நமது கார்களை உள்ளே அனுப்ப முடியாது. அவர்கள் எமது விவசாயிகளுக்கு செய்வதைப் பாருங்கள். அவர்கள் நமது பண்ணைவிவசாயப் பொருட்களை விரும்புவதில்லை.”

ரஷ்யாவில் விளையாடப்பட்டுவரும் உலகக் கோப்பைக் கால்பந்து குறித்து, இறக்குமதிப் பொருட்களுக்கு வரி என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை தனக்குத்தானே போடும் “சொந்தக் கோல்” ஆகும் மற்றும் 25 சவீத அபராதத் தொகை அமெரிக்கப் பொருளாதாரத்தை “14 பில்லியன் டாலர்கள் அளவில் தாக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது. ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் சொந்தமான கார் நிறுவனங்கள் நாடு முழுவதும் நிறுவனங்களைக் கொண்ட அமெரிக்க உற்பத்தியில் கால் பங்கிற்கும் அதிகமானது.

மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் மீதான இறக்குமதி வரிவிதிப்பிற்கான முன்மொழிவு அமெரிக்க உற்பத்தியாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க எதிர்ப்பை ஈர்த்தது. கடந்த வாரம் இறுதியில் வழங்கப்பட்ட வணிகத் துறைக்கான சமர்ப்பிப்பில், ஜெனரல் மோட்டார்ஸ் முக்கிய தொழில்துறைகளுக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் உள்ள தொடர்பைத் தான் பாராட்டுவதாகவும், ஆனால் மோட்டார் வாகன இறக்குமதி மீது வரி விதிப்பது இரண்டையும் சீர்குலைக்கும் என்றது.

மோட்டார் வாகன தொழிற்துறையில் உற்பத்தியின் உலகளாவிய தன்மையை மேலோட்டமாக குறிப்பிட்டு, GM இற்கான திறன் “எமது சிக்கலான மற்றும் உயர்வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட உலக வினியோக சங்கிலி, மற்றும் உலக மட்டத்திற்கான அளவில் வடிவமைக்க, பொறியமைக்க மற்றும் உற்பத்தி செய்வதற்கான எமது திறனில் இருந்து வந்தது. அவரது போட்டியாளரும் அதேவகையில்தான் நடவடிக்கை மேற்கொள்கின்றனர் என்று அது மேலும் குறிப்பிட்டது. போட்டிமிக்க முனையைப் பாரமரிப்பதற்கான GM இன் திறமை, எமது நடவடிக்கைகளின் பாதிப்பை உலக அளவில் பெரிதுபடுத்துவதற்கான திறமை மீது சார்ந்திருக்கிறது” என்று  நிறுவனம் அறிவித்தது.

மோட்டார் வாகன தொழிற்துறையை விடவும் மற்ற துறைகளையும் உள்ளடக்குவதற்கு GM, ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மீதான அதன் விமர்சனத்தை விரிவுபடுத்தியது. அது எழுதியது: “அமெரிக்க அரசாங்கத்தால் தற்போது பின்பற்றப்பட்டு வரும் இதர வர்த்தக நடவடிக்கைகள் —பெயர் குறிப்பிடுவதாயின் 232 எஃகு, அலுமினிய இறக்குமதி வரிவிதிப்புகள் மற்றும் சீன இறக்குமதிகளுக்கு எதிரான பிரிவு 301 இறக்குமதி வரிகளையும் சேர்த்து— மோட்டார் வாகன இறக்குமதிகள் மீதான கூடுதல் வரிவிதிப்பு பற்றிய அச்சுறுத்தல் எமது நிறுவனத்திற்கும் கேடு உண்டாக்குவன.” அவை அதிக வேலைவாய்ப்புகளுக்கு அல்ல, குறைந்த வேலைவாய்ப்புக்களுக்கே வழிவகுக்கும் என்று எச்சரித்தது.

மற்ற பெரிய மோட்டார் வாகன நிறுவனங்களும் அதே நிலைப்பாட்டை வைத்தன. ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா அமெரிக்க கொடியின் கீழ் தன்னைத் தொங்கவிட்டுக்கொள்ள முயன்றது. உற்பத்தி தொழிற்துறையில் சக்திபடைத்த அமெரிக்காவிற்கு ஒரு எடுத்துக்காட்டாக நாம் உள்ளோம் என்று அறிவித்தது மற்றும் அது எச்சரிக்கிறவாறு எமது Camry வாகன மாதிரியானது உற்பத்திச் செலவில் 1860 டாலர்களை அதிகரிக்கச் செய்யும். அச்சுறுத்தும் இறக்குமதி வரிகள் என்று அழைக்கப்படுபவை இந்த நேரம் அமெரிக்க மோட்டார் வாகன தொழிற்துறைக்கு மாபெரும் அச்சுறுத்தல் என்றார்.

ஃபோர்டும் ட்ரம்ப்பின் விசாரணை மற்றும் இறக்குமதி வரிவிதிப்புத் திட்டத்திற்கு, தான் “ஆதரவாக இல்லை” என்றது.

வெள்ளிக்கிழமை வணிகத் துறைக்கு சமர்ப்பிப்பில், அமெரிக்க வர்த்தக சபையும் கூட ட்ரம்ப்பின் திட்டத்திற்கு எதிராக நின்றது. “இந்த முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டால், அது அதே தொழிற்துறைக்கு தள்ளாடும் அடியாக இருக்கும், அது பாதுகாப்புக்கு நோக்கமானாலும் ஒரு உலக வர்த்தகப் போரைத் தூண்டும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது” என்று அது குறிப்பிட்டது.

ஃபைனான்சியல் டைம்ஸ் படி, சர்வதேசப் பொருளாதாரத்திற்கான பீட்டர்சன்  நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது, மோட்டார் வாகனம் மீதான இறக்குமதி வரிகள் முன்னெடுக்கப்படுமேயானால், அவை 195,000 அமெரிக்க வேலைகள் இழப்பை நேரடியாக உருவாக்கும், மற்றும் பிற நாடுகள் பதில் நடவடிக்கை எடுத்தால், 600,000 வேலைகள் வரை போகும் என்றது.

ஆனால் அமெரிக்க மோட்டார் வாகன நிறுவனங்கள் மற்றும் பிரதான வர்த்தக அமைப்புகளிடமிருந்து வரும் எதிர்ப்பும் எச்சரிக்கைகளும் ட்ரம்ப் நிர்வகத்தின் ஒரு முன்னணிப் பிரதிநிதியால் நிராகரிக்கட்டுள்ளன. GM சமர்ப்பிப்புக்கு பதிலளிக்கையில், வெள்ளைமாளிகை பொருளாதார ஆலோசகரும் பொருளாதார தேசியவாதத்தின் மிகவும் தீவிர ஆதரவாளர்களுள் ஒருவருமான பீட்டர் நவாரோ ஞாயிறன்று CNN க்கு அளித்த பேட்டியில் நிறுவனமானது பொதுமக்களை ஏமாற்ற “பொருத்தமற்ற தகவலுடன் உண்மையை மூடிமறைக்கிறது” என்றார். இறக்குமதி வரிகளால் GM கார் விலை மீதான தாக்கம் ஒரு “ஆடம்பர தரைவிரிப்பின்” செலவுக்கு ஈடாக இருக்கும் என்றார்.

“GM கார் இங்கு தயாரிக்கப்பட்டாலும், அதன் உதிரிப்பாகங்களில் பாதி வெளிநாட்டினதாக இருக்கிறது”, என அவர் சொன்னார். அமெரிக்க நிறுவனங்கள் எல்லா இடங்களிலும் செய்யப்படும் உள்ளடக்கப் பொருட்களை இணைத்து ஒன்றாகத் தைக்கும் “பொருத்தும் நிறுவனங்கள்” ஆக மாறியுள்ளன என்று மேலும் குறிப்பிட்டார்.

இந்த கருத்துக்கள் பற்றிய புள்ளி, ட்ரம்ப் நிர்வாகத்தின் பொருளாதார தேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படை உந்து சக்திகளுள் ஒன்றாக இருக்கிறது. பெருநிறுவனங்கள் மற்றும் பொருளாதார சிந்தனைக் குழாங்களிடமிருந்து வரும் அனைத்து ஆய்வுகளும் தெளிவாகக் கூறுகிறவாறு, உலக ரீதியான உற்பத்தி நிலைமையின் கீழ், இறக்குமதி வரிகள் பொருளாதார ரீதியில் அறிவுக்கொவ்வாதவை என்பதோடு சாத்தியமான வகையில் கடும் பாதிப்பையும் ஏற்படுத்த வல்லவை.

நிர்வாகத்தைப் பொறுத்தவரை, இது அத்தியாவசிய எண்ணிப்பார்த்தல் அல்ல. அது பொருளாதாரக் கொள்கையை வேறு நிலைப்பாட்டிலிருந்து – அதாவது, ஒரு இராணுவ முன்னோக்கிலிருந்து பார்க்கிறது. எனவே, பொருளாதார நடவடிக்கைகள் “தேசிய பாதுகாப்பு” என்ற கட்டமைப்பிற்குள்ளே இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இரண்டாம் உலக யுத்தத்தை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய பாத்திரத்தை ஆற்றிய 1930களின் வர்த்தக யுத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்கையில், லியோன் ட்ரொட்ஸ்கி பொருளாதார தேசியவாதத்தின் அடிப்படையிலான ஒருங்கிசைந்த பொருளாதார முன்னேற்றம் என்ற முன்னோக்கானது முதலாளித்துவ சொத்துடைமை உறவுகளின் கட்டமைப்புக்குள்ளே ஒரு “கற்பனையாக” வும் ஒரு “பொய்” ஆகவும் இருந்தது என்று குறிப்பிட்டார்.

ஆனால் ஒரு புதிய யுத்தத்தைத் தயாரிப்பதற்கான ஒரு தேசத்தின் அனைத்து பொருளாதார சக்திகளையும் ஒருங்கிணைப்பது ஒரு கேள்வியாக இருக்கும்வரை அது ஒரு “அச்சுறுத்தும் யதார்த்தம்” ஆக இருந்தது. எண்பதாண்டுகளாக, இந்த “அச்சுறுத்தும் யதார்த்தம்” அமெரிக்காவிலிருந்து வெளிப்படும் வெடிப்புமிக்க வர்த்தக யுத்தத்தின் அத்தியாவசிய உள்ளடக்கத்தை வடிவமைக்கிறது.

அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்துப் பகுதிகளும் பழைய மற்றும் புதிய பொருளாதாரப் போட்டியாளர்களின் எழுச்சி பற்றி கவலைப்படும் நிலைமைகளின் கீழ், இந்நடவடிக்கைகளுக்கான ஆதரவு ட்ரம்ப்பின் உள் வட்டங்களுக்கு அப்பாலும் நீளுகின்றன மற்றும் ஜனநாயக கட்சியின் கணிசமான பகுதிகளும் தொழிற்சங்க அமைப்புகளும் இதில் உள்ளடங்குகின்றன.